Sunday 23 December 2012

ஒவ்வொரு காற்றோட்டமும் புதிது

ஒவ்வொரு காற்றோட்டமும் புதிது

அது ஒரு குழந்தைகள் ரயில். ஆறேழு சின்னஞ்சிறு  பெட்டிகள். பொம்மை வண்டிகளுக்கு வண்ணந் தீட்டுவது மாதிரி பச்சையும் நீலமுமாய் வர்ணமடித்த சித்திரங்கள் வேறு. ஒரு சிறிய எஞ்சின், அரை மீட்டர் இடைவெளியில் சிறிய தண்டவாளங்கள். கோட்டையைச் சுற்றி, ஓர் அரைவட்டம் போட்டு விட்டுத் திரும்பும். அந்த ரயில் சவாரியின் வினோதத்தை அனுபவிக்க எத்தனையோ குழந்தைகள் ஓடிவந்து தேடி இடம் பிடிக்கின்றன.
வயது முதிர்ந்த குழந்தைகள், வயதுக்கு வந்தவை, வயது வராதவை, தேனிலவுக் குழந்தைகள், நிஜமாகவே குழந்தைகள், எல்லாக் குழந்தைகள் முகத்திலும் அனேகமாக ஒரு பரவசம். ஆள் சேரட்டும் என்று காத்திருக்கிற ஆட்டோ போல் ரயில் காத்திருக்கிறது. எப்போது வண்டி புறப்படும் என்று ஆவலில் வெளியே நிற்கின்ற பொம்மைக் கைகாட்டி மரத்தைக் குழந்தைகள் எட்டியெட்டிப் பார்க்கின்றன.
ஒரு வழியாக எஞ்சின் உறுமிற்று. குப்குப்பென்று ஒரு கரிமண்டியில் கோணிகளை உதறுவது போல் கரும்புகை. 
மெல்ல மெல்ல ரயில் ஓடுகிறது. ஒரு மனித ஓட்டத்திற்கு நிகர். நிஜக்குழந்தைகள் அந்த முதல் ஓட்டத்தில் ஆர்ப்பரித்துச் சிரிக்கின்றன. வயது மீறிய குழந்தைகளுக்கும் அந்த குதூகலம் ஒரு புன்முறுவலாகவேனும் தொற்றிக் கொள்கிறது. காலமும் வாழ்க்கையும் அந்த மினிரயிலில் கொஞ்ச நேரம் மறந்து போகிறது.
டிக்கெட் பரிசோதகர் கடைசிவேனிலிருந்து எஞ்சினைப் பார்த்துக் கத்துகிறார்.
“தகரால் இல்லியே?” வட்டார வழக்கு.
ஏதோ பதில் வருகிறது. வண்டிக்கு வெளியே வேலூர்க் காக்காத்தோப்பு மெல்லப் பின்வாங்குகிறது.
டி.ப.தன் கத்தலுக்கு பெட்டி முழுசுக்குமாய்ப் பொதுவில் சமாதானம் சொல்கிறார். அவர் கையில் ஒரு நீளத்தடி.
“தண்டவாளத்தில் கல்லை வச்சுடுதுங்க நாமர்தாப் பசங்க?”
திடீரென்று ஓர் ஊளை. ஓடுகின்ற நாயைத் துரத்துவது போல் ஊர்கின்ற ரயிலின் இரு புறங்களிலும் சிறுவர் பட்டாளம் துரத்தி வருகிறது.
“டாய்...” என்று டி.ப. தடியை உயர்த்துகிறார். வானத்தை நோக்கித் தடி ஆடுகிறது. மெல்லச் சிறுவர் படை பின்வாங்குகிறது. ரயில் கொஞ்ச தூரம் போயிருக்கும். எதிரில் உட்கார்ந்திருந்த தேனிலவுக் குழந்தைகளுக்கு அந்தச் சின்னப் பெட்டியின் சௌகரியமான நெருக்கம் ஒரு வசதி போலும். புஜமும் இடுப்பும் உராய அவர்கள் ஸ்பரிசத்தின் புது மயக்கில் இருந்தனர். ஊஞ்சலாட்டுவது போல் வண்டு ஆடுகிறது.
ஹோய்... ஹோய் என்று வெளியே கூக்குரல் கேட்டது. தெற்கே திரும்பினால் ஒரு குருவிக்கார முகாம். கன்னங்கரேலாய், மண் நிறமாய் செம்பட்டையாய், தாமிர நிறமாய் சிறிசும் பெரிசுமாக தண்டவாள ஓரத்தில் குருவிக்காரக் குழந்தைகள். திறந்த மேனியில், பாசிமணி மட்டும் அணிந்த நீள வரிசை.
குதூகலம் தாளாமல் சில குழந்தைகள் தக்கத்திமி என்று குதிக்கின்றன. ரயில் விநோதத்தை ரசிக்கிற ஆரவாரம், முகங்களில் நூறு விளக்கு எரிகிற பிரகாசம். சில குழந்தைகள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டன. ஓடிவருகின்ற குழந்தைகளை நோக்கி டி.ப.வின் எச்சரிக்கைத் தடி உயர்ந்து ஆடுகிறது.
ஓடிவந்த குழந்தைகள் சட்டென்று ஓட்டத்தை நிறுத்தித் திரும்பி திமுதிமுவென்று நிற்கும் குழந்தைகளை நோக்கித் திரும்பி ஓடின. குதூகலம் எங்கே கொப்பளித்தாலும் வேடிக்கை பார்க்கும் நான் வெளியே எட்டிப் பார்த்தேன்.
வண்டி அவர்களைக் கடந்தது. லேசான ஒரு வளைவு. இப்போது எல்லாக் குருவிக்காரக் குழந்தைகளும் நன்கு பார்வைக்குத் தென்பட்டார்கள். எல்லாக் குழந்தைகளும் ஸ்விட்ச் தட்டிய மாதிரி ஓர் யந்திர விசையோடு, முஸ்லீம்கள் நமாஸ் தொழுகைக்கு முழுந்தாளிடுவது போல் தண்டவாள ஓரத்தில் சற்றுத் தொலைவில் வரிசையாக முழந்தாளிட்டன. வண்டி மெதுவாக அவர்களை விட்டுத் தொலைவில் சென்று கொண்டிருக்கிறது. சட்டென்று யாவும் ஒருசேரத் தண்டவாளத்தின் மீது காதுகளை வைத்துக் கொண்டு படுத்தன. அவை கிணுகிணுப்பது தூரமானாலும் ஸ்பஷ்டமாகக் கேட்டது.
முதலில் எனக்குப் புரியவில்லை.
“என்ன செய்றாங்க?” என்று நிற்கின்ற டி.ப.வைக் கேட்டேன்.
“ரயிலு போவற சத்தம் தண்டவாளத்திலே கேக்கும், அதுக்காவ படுத்துணு கேக்குதுங்க சைத்தானுங்க!” என்று கோபமாகச் சொன்னார்.
எனக்கு ஒரு சிறு ஏக்கம் தோன்றியது. அந்தக் குழந்தைகள் ரயில் செல்ல வாய்ப்பில்லையே என்பதற்காக அல்ல! என்னால் அவ்விதம் தண்டவாளத்தில் ரயில் ஓடுகிற ஒலியைச் செவிநாய்த்துக் கேட்க முடியாதே என்றுதான். ஓடும் ரயிலின் நாதம் எவ்விதமான இசையாய் தண்டவாளத்தில் கேட்கும்? அதற்கு நிகர் இருக்குமா? இத்தனை குழந்தைகளை அது ஈர்க்குமளவு அதற்கு என்ன சிறப்பு?
வெளியே பார்த்துக் கொண்டேயிருந்தேன். எல்லாக் குழந்தைகளும் எழுந்து நின்று கைதட்டிச் சிரிக்கின்றன.
குருவிக்காரர்கள் தான் மண்ணின் மைந்தர்கள். புராதன ஹிப்பிகள். எவ்விதப் போர்வையுமற்று, திக்கற்று, நாகரிகத்தின் வேஷங்கள் அற்று, எந்த நாகரிகமுமற்று அவர்களே ஒரு நாகரிகமாய் வெய்யிலையும் மழையையும் காற்றையும் வானையும் வெகு சகஜமாக அவர்கள் அனுபவிக்கிறார்கள்.
தண்டவாளத்தில் ரயில் நாதத்தைக் கேட்க முடியாத என் ஏக்கத்தை குருவிக்காரக் குழந்தைகளின் குதூகலம் சிரிப்புக்காளாக்கிற்று - நான் எனக்குள் அந்தக் குழந்தைகளையும் என்னையும் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினேன்.
ஆம்! பல குழந்தைகள் மத்தியில் நானும் ஒரு குழந்தைகள் ரயிலில் போய்க் கொண்டிருக்கிறேனே... என்னை இவ்விதம் உந்தியது எதுவென்று யோசித்தேன்... எனக்கு இன்னொரு சம்பவம் நினைவு வந்தது.
இந்த வருஷக் கோடையில் என் கிராமத்தில் குண்டு மல்லைகைச் செடிகள் ஏராளமாய்ப் பூத்தன. வீடுகளில் படிப்படியாய்ப் பூக்களைக் கொட்டி பெண்கள் பூத்தொடுத்தார்கள். மட்டைப்பூ தைத்துக் கொள்ளும் எத்தனையோ ஆசைகள் இந்த வருஷம் அவை ஏகமாக நிறைவேறின. அந்த வீட்டில் ஒரு நாலு வயதுச் சிறுமி. பூவின் மீது அவளுக்குக் கொள்ளைப்பிரியம். அவளுக்கு இருப்பதோ ஒரு சாண் தலைமுடி அதில் ஒரு கூடையாய்ப் பூவைச் சுற்றினாலும் அவள் ஆசை அடங்காது நீளமாய்ச் சவுரி வைத்து குதிகாலில் இடிக்குமாறு ஜடைக் குச்சியோடு அவளும் இருமுறை மட்டைபூ தைத்துக் கொண்டாள். ஆசை தணிந்த பாடில்லை. அடுத்த வீட்டில் முடிவாங்கத் திருப்பதி போனார்கள். நிறையப் பெண்கள். அதற்கு முந்தின நாள் தலைமுடிக்குப் பிரிவுபசாரமாக அவர்கள் எல்லாம் மட்டைப் பூ தைத்துக் கொண்டார்கள். நாலு வயதுச் சிறுமிக்கும் ஏக்கம் பிறந்தது. எந்தச் சமாதானமும் அவளைத் தேற்ற முடியவில்லை.
அடுத்த நாளிலிருந்து, குண்டு மல்லிகைச் செடிகளில் பூக்கள் குறைந்தன. நாலு வயதுச் சிறுமியின் ஏக்கம் செடிகளுக்குப் புரியவில்லை. அவள் அழுது கொண்டேயிருந்தாள். அடுத்த வீட்டில் எல்லாப் பெண்களும் மட்டைப்பூ தைத்துக் கொண்டது அவளுக்கு மறக்கவேயில்லை. அவள் அழுது கொண்டேயிருந்தாள்.
மூன்றாம் நாள் அவர்கள் எல்லாரும் திரும்பி வந்தபின் அவள் சிரிக்கத் தொடங்கினாள். காரணம் எல்லாத் தலைகளும் மொட்டை சிறுமியின் தலையில் அவளுக்கே உரிய சாண்முடி பத்திரமாக இருந்தது. அதில் அவளுக்குக் களிப்பு. மட்டைப்பூ மறந்து போயிற்று.
வாழ்க்கை இந்த விதத்தில் விவேகத்தைப் போதிக்கிறது ரயில் சவாரி கிட்டவில்லையெனில் தண்டவாளத்தில் கேட்கும் ரயிலின் நாதம். மட்டைப்பூ இல்லையெனில் மொட்டைத் தலைகளைப் பார்த்து ஒரு பெருமிதம்.
குழந்தைகள் இனியவற்றைச் சீக்கிரம் தேர்ந்து கொள்கின்றன. துன்பங்களை மறக்கின்றன. கோபம், வருத்தம், பகை, வஞ்சம் எல்லாம் அந்த உள்ளங்களில் விரைவிலே மாறி விடுகின்றன. உயிர் வாழ்க்கை என்ற இடையறாத ஆனந்த அனுபவத்திற்கு எவையெல்லாம் தடையாகின்றனவோ அவற்றையெல்லாம் குழந்தைப் பருவம் எளிதிலே விலக்கி வைக்கிறது.
எனவே தான் ஏசுநாதர் சொன்னார்.“நீங்கள் குழந்தைகளைப் போல் மாறாவிட்டால் உங்களால் மோட்ச சாம்ராஜ்யத்தில் பிரவேசிக்க இயலாது.”
யந்திர நாகரிகம் மனத்திற்கு ஒரு தனி வாழ்க்கையும் உடம்புக்கு ஒரு தனி வாழ்க்கையுமாக பிரித்துவிட்டது. நமது துயரங்கள் வினோதமாய் விட்டன. நமது ஆசைகளும் அவற்றை நாம் அனுபவிக்க, ஓய்வு கிட்டாதவாறு விபரீதமாகி விட்டன. அனேகமாக நாம் ஓய்வு ஒழிவின்றி ஓடிக்கொண்டே வாழ்கிறோம.
மனப்புழுக்கமும், விரக்தியும் மிஞ்சும்போது நம்மை மறந்து போக ஏதாவது சாதனங்களைத் தேடுகிறோம். நமது தேட்டம் இப்போது மரிஜுவானாலும் பெதடினிலும் கொண்டு போய் விட்டிருக்கிறது. செயற்கையான துன்பங்களுக்கு, செயற்கையான மாற்றுக்கள்.
நவீன மனிதன் தன்னை எதிலாவது அமிழ்த்திக் கொஞ்சநேரம் தன்னை மறந்துபோகத் துடிக்கின்றான். இந்த செயற்கையான மாற்றங்கள் அவனுக்குப் புதிய துன்பங்களாகிய, பிரச்னையாகி பீதியளிக்கின்றன.
வாழ்க்கையோ எளிய மகிழ்ச்சியை ஏராளமாய் இலவசமாய் இரைத்து வைத்திருக்கிறது.
வானிலிருந்து சிதறும் வைரம் போன்ற கோடை மழையின் ஆலங்கட்டியில், பாக்டீரியா பயமற்று பௌர்ணமி நிலவில் தெருப் புழுதியில் ஆடும் பலீஞ்சடுகுடுவில், எங்கோ கூவும் குயிலின் குரலில், ஒரு குழந்தையின் குதூகலத்தில், பீடுடன் திரியும் கோயில் காளையின் மிடுக்கான நடையில் உலக்கை குத்தும் பெண்ணின் கைவளையல் போடும் இன்னிசைத் தாளத்தில்... எங்கெங்கோ எங்கெங்கோ...
இவையெல்லாம் குழந்தைகளாய் இருக்கும்போது நம்மை எவ்வளவு கவர்ந்தன! இன்னும் அவை குழந்தைகளைக் கவர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அவ்விதமே தான் இருக்கும்.
எதனாலும் நிறைவேற முடியாத வேட்கைகள் நம் மனத்தின் வாழ்க்கையாய் விட்டன. இரைந்திருக்கும் எளிய மகிழ்ச்சியின் நடுவில், நம் உடல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு கணம் குழந்தையாகிப் பார்க்கும்போது எந்த நிலையில் இருந்தாலும் வாழ்க்கை வாழத் தகுதி வாய்ந்ததாகவே தோன்றுகிறது.
ஓடுகின்ற கடிகாரகுதிரையின்  ஒவ்வொரு குளம்பொலியும் நமக்குச் சொல்வது இழப்பு.. இழப்பு.. என்பதே. இந்தக் கணம், இதற்கே உரியதாய் ஓசை, காட்சி, உணர்வு என்று இயற்கை சமைத்துத் தரும் அனுபவங்கள். மனம் எந்த ஓட்டப் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருப்பினும் இவற்றை ஏன் நான் இழக்க வேண்டும்? கடிகாரம் அதையே சொல்கிறது. இழப்பு.. இழப்பு.. நான் அதை மறுக்கிறேன். இல்லை, இல்லை, இல்லை. எந்த மூலையில் எங்கிருந்த போதிலும் அந்தக் கணத்தை நான் பூரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
அவை திரும்பாது என்று நான் அறிவேன். அவை திரும்ப வேண்டும் என்ற அச்சமோ ஆவலோ எனக்கில்லை. முடிவற்ற இந்த சித்த சமுத்திரத்தில் எத்தனையோ காற்றோட்டங்கள், ஓர் அனுபவம் உயர்ந்தது என்று மனம் அதை ஒரு சிமிழில் அடைத்தால், துன்பம் அன்று தொடங்குகிறது. ஒவ்வோர் அலையும் புதுமைதான். ஒவ்வொரு காற்றோட்டமும் புதிதுதான். எல்லாவற்றையும் வரவேற்று அந்தக் கணத்தை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
காலம் தன்னை இழந்து கொண்டிருக்கிறது. நாமோ புதிது புதிதாய் அனுபவங்களைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். இன்று என்பது எவ்வளவு நிஜம் என்று உணர்ந்தால் நம் வாழ்க்கை மலர்ச்சியோடு வளர்கிறது.

No comments:

Post a Comment