Friday 21 December 2012

கம்பனை ரசித்த ரசிகமணி

கம்பனை ரசித்த ரசிகமணி
ஆல்பர்ட் ஷ்வைட்ஸர் மாதிரி, பரந்த முகத்தில் ஒரு பெரிய மீசை. அதே மாதிரி மானுடத்தை நேசிக்கும் ஒரு பார்வை. மீசையின் உள்ளே மறைந்திருக்கும் ஒரு மிடுக்கான சபாஷ். யார் இந்த டி.கே.சி? என்ன சாதித்தார் என்று இவருக்கொரு நூற்றாண்டு விழா? ரஸிகமணி என்று ஒரு பட்டம். வெறும் ரசிகரா.. இதற்கா இப்படி ஒரு கொண்டாட்டம்?
பேரிகை கொட்டி, வெடிகுண்டு போட்டு ஓயாது அடித்து அடித்துப் பேசினால் தான் மெய் மெய்யாகும் என்ற கால நிலையில் இப்படிச் சில கேள்விகள். இதற்கு என்ன பதில்? ராஜாஜியைக் கேட்போம்.
“கம்பன் பாடிய ராம காதை இருபத்தி நான்கு மாற்று அபரஞ்சி, இந்தத் தங்கத்தை எடுத்துக்காட்டிய தங்க நிபுணர்களுக்குள் நம்முடைய டி.கே.சி. அவர் முதல் இடம் பெற்றுவிட்டார்.”
ஓ..கம்பனை ரசித்தவரோ.. ரசனை என்ன அப்படி ஒரு பெரிய விஷயமா? ஆம். இது அடுத்த கேள்வி. இதற்கு நம் பதில் ஆமாம்! ரசனை என்பது ஒரு தேசத்தின் இருப்பு நிதி. நல்ல ரசிகர்தான் ஒரு தேசத்தின், ஒரு மொழியின் உன்னதப் பண்புகளை உவந்து போற்றி அதன் கலாசாரத்தையும் பண்பாட்டையும் கிரகித்துக் காப்பாற்றி வைக்கிறார். காலக் காற்றில் பொய் எதுமெய் எது என்று வேறுபாடு மறைந்துவிடுமோ என்று எச்சரிக்கையுற்று, மெய்யைப் பத்திமாய்ச் சேமித்து வைக்கிறார். இதுதான் ரசிகமணியின் பணி.
கம்பர் ஒரு கவிச் சக்கரவர்த்தி, இதை ஒட்டு மொத்தமாக ஒப்புக் கொண்டு நாம் பாரம் விட்டதென்று நகர்ந்து விடுவோம். டி.கே.சி. கம்பரின் சாம்ராஜ்யத்தில் ஒவ்வொரு அங்குலமும் நின்று நிதானித்து அதன் அழகில் தோய்ந்து அதைத் துய்த்து முழுக்கவும் சுற்றிப் பார்த்தவர்.
கம்பரின் நாட்டு வளம், யுத்த கள வருணனை, பாத்திரப் பண்பு இப்படி ஒவ்வொரு அம்சத்திலும் தமிழ்மை இருந்ததை தரிசித்து சொன்னவர் ரசிகமணி.
காவிரி நா(டு) அன்ன
கழனி நா(டு) ஒரீ இ
என்று கம்பரில் ஒரு குறிப்பு வந்தால் போதும் ரசிகமணி நிமிர்ந்து உட்காருகிறார். கம்பருக்கு உள்ளே போய் அங்கு நிமிர்ந்து உட்காருகிறார். அங்கு நிலவிய தமிழ் மயக் கம்பரின் பொறிகள் அனுபவித்துணர்ந்த தமிழ்மையை நமக்கு அறிமுகமாக்குகிறார்.
கம்பருக்கும் ரசிகமணிக்கும் உள்ள உறவு எத்தகையது? மீண்டும் ராஜாஜி. “ஸ்ரீ ராமபிரான் எப்படிக் கம்பன் உள்ளத்தில் மற்றும் ஒருமுறை அவதரித்தானோ அவ்வாறே கம்பனும் டி.கே.சி.யின் உள்ளத்தில் மறுபடி அவதரித்தான். தற்காலத் தமிழருக்காக.”
எப்படி? ரசிகமணி வெறும் உரைகாரர் அல்ல கம்பனின் ஜீவரசத்தைத் தாம் அருந்தித் திளைக்கும் போக்கில் நம்மை அருந்தச் செய்துவிடும். ஒரு பெரிய விருந்துபகாரி. அந்த அறிமுகத்தில் பதவுரை, தெளிவுரை, விருத்தியுரை என்ற கடைவிரிப்பெல்லாம் இல்லை. அவை ரசிகமணியின் மாண்புக்கு ஒவ்வாதன.
ஒரு கவிதையில் அதன் உயிர் துடிக்கும் உட்கருவைத் தொட்டுக் காட்டுவார் ரசிகமணி. வேறு அதிகப் பிரசங்கம் துளியும் இராது. உடனே கவிதை தரப்படும். அரும்பொருள் விளக்கம், ரசிகமணியின் ‘கமெண்ட்’ எல்லாம் அடிக்குறிப்பில்தான். ஒரு சுட்டிக்காட்டல். ஒரு சிட்டிகை போடல். ஒரு மென்மையான பலே. உதாரணம் வேண்டுமா? சடாயு காண் படலம் சிறகிழந்த சடாயு தன் நண்பன் மாண்டது கேட்டு புரண்டு அழுகிறான். ரசிகமணியின் அறிமுகம் கேட்போம்.
“மேலும் புலம்புகிறான் சடாயு; மேலான சாவு எனக்குக் கிடைப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. இந்த க்ஷணமே புனிதமான தீயில் விழுந்து இறந்து ஒழிவதுதான். அப்படிச் செய்வதை விட்டு விட்டுப் பெண்களைப் போல் அல்லவா, நிலத்தில் விழுந்து அழுது கொண்டிருக்கிறேன். இது என் வீர வாழ்க்கைக்கு எந்த விதத்தில் தகுதி? அவ்வளவுதான். வேறு விளக்கமில்லை. பட்டென்று கவிதையைத் தந்து விடுகிறார்.
ரசிகமணி கம்பர் கவிதையைக் கண்ணுக்கு அடக்கமாக, அதன் சந்த நயம் செய்யும் சொல் நடனத்தின் சுவை வெளிப்படுமாறு சீர்பிரித்து வரிகளைத் தமக்கே உரிய முறையில் அடுக்கித் தருவார். எடுத்துக்காட்டு சந்தம் தான னன தன்ன னன தன்ன னன தன் ன அகத்தியப் படலம். சிவபெருமான் அகத்தியரைத் தெற்கே போகச் சொல்கிறார். ரசிகமணி கம்பர் கவிதையை வடிவமைக்கிறார்.
மூச ரவு
சூடும் முத
லோன், உரையில்
மூ வா
மாசில் தவ!
ஏ கெ ன
வி டாது திசை
மேல் நாள்.
அதிகம் படிக்காதவர் கூட இந்த எளிய வடிவமைப்பில் மனம் சொக்கிக் கம்பனிடம் ஒன்றி விடலாம். கம்பர் பாட்டைப் படிக்காதே, பாடு என்பது ரசிகமணியின் உத்தரவு. மேலே சொல்லும் சந்த அமைப்பும் பாட வராத நம்மையும் பாட வைத்து விடுகிறது. பயப்படாதீர்கள். பாடுங்கள் என்று ஊக்கி விடுகிறார். பயம் நீங்கிப் பாடுகிறார். அடடே கம்பரில் இவ்வளவு சுவையா? நம்மையறியாமல் மூழ்கித் திளைக்கிறோம். தூண்டுதல் யார்? ரசிகமணிதான்.
எல்லாவற்றையும் மகாகவிஞர்கள் விளக்கி விளக்கிச் சொல்வதில்லை. ஒரு கோடி காட்டி விடுகிறார்கள். கதையின் வேகத்தில் யாராவது நம்மைப் பிடித்து உலுக்கி இதைக் கவனித்தாயா என்று கேட்காவிட்டால் நம் வண்டி எங்கோ ஓடிவிடும் ஓர் உதாரணம்; மந்தரை சூழ்ச்சிப் படலம் ராமனின் முடிசூட்டு விழாக் கோலாகலம். மந்தரைக்கு ஆங்காரம் எல்லாவற்றையும் புரட்டிக் கவிழ்க்கும் வெறி அவள் மனசுக்கே தவறு உறுத்துகிறது. எப்படி? ரசிகமணி அறிமுகம் செய்கிறார்.
‘அக்கிரமம் பண்ண ஆரம்பிக்கும்போது, அதற்கு ஒரு காரணம் கற்பித்துக் கொண்டால் தான் மனசு திருப்திப்படுகிறது.”
என்ன ஒரு மனோ தத்துவ உட்காட்சி!
கம்ப ராமாயணத்தில் ஆறு காண்டங்கள் கான மயிலாட்டம் கண்ட வான்கோழி போன்று கம்பன் சுவையில் தலை கிறுக்க, படித்தவர் கை கிறுக்கியதெல்லாம் கவி ஆயிற்று. கவிதை என்று அதைத் தனியே வைத்தால் உயிர் வாழாது. எங்கே வைப்பது? இருக்கவே இருக்கிறது, கம்பரின் தோள், அதில் வைத்து விட்டால் பூவோடு தழையும் சேர்ந்து பொலியும் இந்தக் கருத்தில் கம்பர் தந்த பிரம்மாண்டமான வசதியால் பலர் தங்கள் கவியைக் கம்பரோடு செருகிவிட்டனர்.
ஆனால் என்ன செருகினாலும் ஊடு சரடு போன்ற கவிஞனின் ஆத்ம தரிசனம் தெரியாமலா போய்விடும்? அதன் மகோன்னதமும் கள்ளக் கலையின் புனமையும் தங்கத்தின் பக்கத்தில் பித்தளை போன்று அறியாமலா போய்விடும்?
அதைக் கண்டுபிடித்தது ரசிகமணியின் மகத்தான வாழ்க்கைப் பணி. அது வெறும் துப்பறியும் வேலையல்ல. கம்பனில் மூழ்கி, கம்பனில் திறைத்து கம்பன் என்ற ஜோதியில் இரண்டறக் கலந்து கம்பதரிசனம் என்ற சித்தியை எய்தியவர்கட்கே கிட்டும் வரம். அந்த சித்தியாளர் ரசிகமணி.
அவரது மனச் செவி தேர்ந்த சங்கீத ஞானியின் ரஸானுபவம் கண்டது. ஆனந்தம் உணர்ந்தது. கொஞ்சம் ரஸபேதம் தட்டினாலும் இது கம்பரல்ல என்று உணர்ந்து விடுவார். எடுத்துக்காட்டு ஒரு பாடல். நிறை மாண்புடைய தசரதச் சக்கரவர்த்தியின் கூற்றாக
நெடிது நான் உண்ட
எச்சிலை நுகர்வது
இன்பம் ஆகுமோ?
என்று வந்தால் தசரத அனுபவம் பெற்ற ரசிகமணிக்கு மனம் சுளிக்கும். இது தசரதன் வாயில் வராது என்று சட்டென்று உணர்ந்து இடை செருகல்காரனின் காதைப் பிடித்துத் தூக்கி எறிவார்.
12000 செய்யுளில் ரசிகமணியின் உரைகல்லில் நின்றவை 1510 பாடல்களே. இது என்ன அக்கிரமம் என்ற தமிழ்ப் புலவர்கள் சும்மா விடுவார்களா? பெரும்போர் நடந்தது.இறுதி வரையில் சத்தியத்தின் பக்கம் நிற்கும் மாவீரன் போன்று தாம் தேர்ந்தவை தவிர்த்து மற்றவை போலியே என்று தீரமாக நின்றார் ரசிகமணி. வெறும் பிடிவாதம் அன்று. தக்க காரணம் காட்டி பாத்திரப் படைப்பு, கம்பரின் மனப் பக்குவம் கம்பரின் மனப் பக்குவம். கம்பரின் சொல்லாட்சி என்ற தாம் அறிந்த சான்றுகள் காட்டி
இது எப்படி சாத்தியம்?
கம்பர் தம் பாத்திரம், தம் லட்சியங்கள் காரணமாக ராம கதையையும் அதன் போக்கையும் மாற்றினார். அவர் பாத்திரங்களுக்குத் தனி வேகம் காட்டினார். கதையில் வரும் கட்டங்களுக்குத் தனித்தெளிவு பிறப்பித்தார். இவையெல்லாம் உணர்ந்தாலன்றி வெறும் வரட்டு வாதத்தால் கம்பர் கவிதையில் இடைச் செருகல்களைக் கண்டுபிடிக்கும் தீரம் எப்படி வரும்? ஓர் உபாசகர் தம் தெய்வத்தை அறிந்து மாதிரி ஐக்கியமானால் ஒழிய இவற்றை அறிய முடியாது.
கம்பரின் ராகவனை கம்பரின் ஜானகியை, அனுமனை, குகனை ஏன் ராவணனையும் தம் பிரக்ஞை வெளியில் முப்பரிமாண எழிலோடு தரிசித்துத் தொட்டு உயிர்த் துடிப்புடன் பழகிக் கேட்டு உணர்ந்தவர் ரசிகமணி. அதனால்தான் கம்பரின் தசரதன் எப்படிப் பேசுவான் என்று அவரால் உணர்ந்து சொல்ல முடிந்தது.
ஒரு மகத்தான ரசிகன் ஒரு கவிதையை ஆகா ஊகூ என்று தலைமேல் வைத்து விதந்தோதி அமர்க்களம் செய்வதில்லை. அவன் அனுபவிக்கிற நேர்த்தியே நம்மைத் தொற்றிக் கொள்கிறது. கம்பரை நாம்தான் கண்டுபிடித்த தெம்பு நமக்கு ஏற்படுகிறது. கம்பருக்கும் நமக்குமிடையே ஒரு மின் தொடர்பு போன்று வேலை செய்து கம்பரை நமக்கும் பாய்ச்சி விடுகிறார் ரசிகமணி.
கவிதையால் என்ன பயன்? ரசனையால் என்ன பயன்?
‘ஓதி ஓதி உணரும் தோறும் உணர்ச்சி உதவும்’
டி.கே.சி.யின் கருவூலத்தின் உள்ள ஆரண்ய காண்ட கடவுள் வாழ்த்திலிருந்து வரும் சொக்கத் தங்கம் இது உணர்ச்சி இல்லையேல் உயிர் வாழ்வில்லை. எந்த மேன்மையும் இல்லை. வேறு விளக்கம் எதற்கு?
ரசிகமணி என்ன சாதித்தார்?
மீண்டும் ராஜாஜியைக் கேட்போம் ,
“டி.கே.சி அவர்களின் உரையை வைத்துக் கொண்டு படித்தால், கம்பனுடைய உள்ளத்தில் பிரவேசித்து விடலாம். ஏன்? ராமன் உள்ளத்திலேயே பிரவேசித்து விடலாம். குகன் உள்ளத்தில் பிரவேசித்து விடலாம். அனுமன் உள்ளத்தில் பிரவேசித்து விடலாம். இதற்குமேல் என்ன வேண்டும்?”
பொய்ம்மை என்னும் இருளரக்கரால் கவர்ந்து சூழப்பட்ட நமக்குக் கம்பரின் கவியமுதம் என்ற தரிசனத்தை ஒரு தூது வடிவில் காட்டும் முத்திரைக் கணையாழிதான் ரசிகமணியின் ரசனை கம்பரும் கம்பர் காட்டும் அந்த எந்தை ராமனும் அந்தக் கணையாழி சுட்டும் சத்தியம்.
இருந்து பசியால் இடர்
உழந்த வர்கள்எய் தும்
அருந்தும் அமுதாகிய (து)
அறத்த வரை அண்மும்
விருந்தும் எனலாகியது;
வீயும் உயிர் மீளும்
மருந்தும் என லாகியது
வாழி மணி ஆழி!

No comments:

Post a Comment