Friday 21 December 2012

எழுத்து என்பது ஆத்ம சம்பந்தம்.

(தொடர்ச்சி)
அதற்கும்.... எழுத்துக்கும் ... ...52 ஆண்டுகளாக எழுதி  அப்படியா ...வையவனா அப்படி ஒரு எழுத்தாளரா என்று இன்னும் கூட அப் பெயரையே கேட்டறியாதது போன்று  ... கேள்விப்படாத பாவனையில் பார்க்கும் பலருக்கு இடையில் நிற்கும் எனக்கும்... என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றும்.
எழுத்து என்பது ஆத்ம சம்பந்தம்.
 எழுத வந்தவர்கள் எல்லோருமே  அந்த ஆத்ம சம்பந்தத்தோடு எங்கோ ஏதோ ஒரு வகையில் சங்கிலிக் கரணையாகத் தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் அறிந்தாலும் அறியாவிட்டாலும் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் விரும்பினாலும்  விரும்பாவிட்டாலும் அமரத்துவம் பெற்றவர்கள்.
சினிமா நாடகம் இசை நடனம் ஓவியம் என்று மனசை மயக்கி இழுத்து எத்தனையோ கலைகள் இன்புறுத்தலாம்.
கிரிக்கெட் போல ஒரு விளையாட்டு கோடானுகோடிமக்களைப் பித்துப் பிடிக்கச் செய்யலாம்.
ஆயின் அவை யாவும் புலன்கள் என்ற ஒரு எல்லைக்குள் நின்றுவிடுகின்றன. கிளர்ச்சி அடையச் செய்து பின்பு மறைந்து போகின்றன. அதற்கு அப்பால் செல்ல அவைகளுக்கு அனுமதி இல்லை.  நோ அட்மிஷன் தான்.
ஆனால் எழுத்து அப்படியல்ல. அது வெறும் கலையல்ல.  கலைக்கும் மேலே.. எல்லாவற்றுக்கும் அப்பால் .
சரஸ்வதி நம ஸுப்யம்  வரதே காமரூபிணி. வித்யாரம்பம் கரிஷ்யாம் சித்திர் பவது மே ஸதா என்று தொடங்கி ஞானானந்த மயம் தேவம் நிர்மலா ஸ்படிகம் என்று வளர்வது அது .ஆத்ம விளக்கத்திற்கான ஞான சம்பந்தம்.
மகாகவி சொன்னார்.
எழுதுகோல் தெய்வம் . இந்த எழுத்தும் தெய்வம்.’இதை எழுதி எழுதி விளங்கிக் கொள்வதற்கு எனக்கு 50 ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. திரும்பிப் பார்க்கிறேன். 
 இந்தச் சமுதாயம் எனக்கு விதித்த எந்தப் பணியிலும் நான் எழுதிய எந்த எழுத்திலும் அந்தரங்க சுத்தியோடு என்னால் முடிந்த அளவு எனக்குக் கைவந்த அளவு கலைத்திறனோடு ,நான் உண்மையாக உழைத்திருக்கிறேன் என்று புலப்படுகிறது. 
வேலையை முடித்துக் கொண்டு கை கழுவுகிற உத்தியும் எனக்கு அந்த ஆத்ம சம்பந்தத்தால்  லபித்தது. இந்தப் புலப்பாடு  தான் நான் தேடிக் கொண்டிருக்கிற  ஆத்ம கௌரவ புரஸ்கார் விருது  
அலைகள் வரும் போகும். ஆனால் சமுத்திரம் என்றென்றும் இருக்கும்.அடுத்த காற்றோட்டத்தை, அடுத்த அலை வீச்சை எதிர்நோக்கியபடியே..

No comments:

Post a Comment