Monday 9 September 2019

எதற்காகப் படிக்கிறோம்?

எதற்காகப் படிக்கிறோம்?

எழுத்து ஒரு குறியீடுதான் (Symbol) பொதுவாகவும் சரி குறிப்பாகவும் சரி. எழுதுவதைப் பிறர் படிக்க வேண்டும்;பிறர் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பொறுப்புணர்வு அந்தக் குறியீட்டுக்கு உண்டு.
            நாலு பேருக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வருமுன் அதில் கேட்கிறவர் ரசிக்கும்படி, அவருக்குப் பயன்படும் படி என்ன இருக்கிறது என்று யோசித்துவிட்டு எழுதுகிற எழுத்து ஒரு நிறைவு தருகிறது. படிக்கிறவரைப் போலவே எழுதுகிறவருக்கும் ஒரு திருப்தி வருகிறது.
            அப்படிப் படிப்பில் இடைவிடாத ஈடுபாடு கொண்ட ஒரு வாசகர், ஒரு புத்தகத்தை மற்றொருவருக்குச் சிபாரிசு செய்கிறார். ஒரு சந்ததி மற்றொரு சந்ததிக்குச் சிபாரிசு செய்கிறது. இப்படிப் பல நூற்றாண்டுகள் ஓடுகின்றன. அப்புறமும் குறிப்பிட்ட அதே நூல் ஒருவரால் மற்றவருக்குச் சிபாரிசு செய்யப்பட்டே வருகிறது.
            அந்த எழுத்து காலத்தை வென்றது என்கிறோம். உதாரணமாக கம்பர், திருவள்ளுவர், ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், பாரதி, புதுமைப்பித்தன் இவர்கள் எழுதியது இலக்கியம். மற்றவை?
            இலக்கியமல்ல என்று ஒருவர் கூறுகிறார். அந்த வாசகர் ரசனைத் தேர்ச்சியுள்ளவர் என்று மக்கள் ஒரு மதிப்பு வைத்து ஏற்கிறார்கள்.முன் சொன்ன சில எழுத்துக்கள் மட்டுமின்றி மீதியுள்ள பலவும் இலக்கியம்தான் என்று மற்றொரு குரல் எழுகிறது. அது ஒரு விவகாரமாகி, ஒரு விவாதம் பிறக்கிறது.
            எழுதுவோர் படிப்போர் என்ற இருதரப்பினருக்கும் இடையே தோன்றும் மூன்றாவது நபர் ஒருவர் தன் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப ஒரு கட்சி கட்டுகிறார். இடையில் ஒரு சலனத்தை ஏற்படுத்தி மக்கள் பார்வையைத் தன்மீது விழச் செய்கிறார்.
     இன்று  இலக்கியத்தின் மீது ஈடுபாடு என்பது அதை வைத்துக்கொண்டு என்ன சம்பாதிக்கலாம், எப்படி புத்தகம் வெளியிட்டு நாலு காசு செலவுசெய்தாவது ஒரு மதிப்பை ஈட்டலாம் நோட்ஸ் போடலாம், சாஹித்ய அகாடெமி விருது அல்லது ஞானபீடம்,உச்சபட்சமாக நோபல் பரிசு,அடுத்து மேன் புக்கர் பரிசு, இவ்வளவு மட்டுமே!

தற்போது கவிதை அல்லது கதை எழுத வருவோரின் ஒரே குறிக்கோளும் கண்ணோட்டமுமே  சினிமா அல்லது சின்னத்திரையில் தலைகாட்டி புகழ் வாங்கலாம் என்பதே! எழுத வருகிறார்கள்; இலக்கிய மறுமலர்ச்சி செய்வதாகக் காலர் தூக்கிக்கொண்டு. சினிமாக்காரன் வசனம் எழுத வாய்ப்புக்கொடுத்தால் வாலை ஆட்டிக்கொண்டு ஒரே ஓட்டம் ஓடிவிடுகிறார்கள்.ஆற்றிலும் ஒரு கால் இருக்கவேண்டும்;சேற்றிலும் ஒரு கால் இருக்கவேண்டும். ஜெயித்தால் ஆறு. ஜெயிக்க முடியாவிட்டால் சேறு 
எப்படியும் நமக்கு ஒரு குழு வேண்டும்.ஒருவருக்கு ஒருவர் உதவியாக. நீ என்னைச் சொறிந்து விடு, நான் உன்னைச்சொறிந்துவிடுகிறேன். சொறிந்துகொள்வோர்களுக்கு நிதி உதவி செய்து பரிசு கொடுப்போரைக் கண்டுபிடிப்போம்.இந்த விரிநீர் வியனுலகத்தில் நிதிக்கு அலையும் வாலாட்டிகளுக்கா பஞ்சம்?வரிப்பேய் விழுங்குவதைக் காட்டிலும் அரிப்பு நீக்கும் சொரிப்பேய்களுக்கு  வழங்கி வள்ளல் ஆகலாமே என்று எண்ணும் காசுள்ள கும்பல் இருக்கவே இருக்கிறது !அவர்களைக் கைக்குள் போட ஒரு குழு வேண்டும்.
     இந்த மனப்போக்கு நிகழ்கால கமர்ஷியல் உலகில் தீவிரமாக நிலவும்போது உலகத்தோடு ஒட்ட ஒழுகிடவேண்டும். அப்படி இப்படி அட்ஜஸ்ட் செய்துகொள்ளவேண்டும் என்று காம்ப்ரமைஸ் செய்துகொண்டால்  இருதலைக்கொள்ளி எறும்பாகிவிடுவோம்   
            இதனால் எல்லாம் உண்மை எழுத்தும் நின்று விடுவதில்லை; உண்மைப் படிப்பும் நின்று போவதில்லை. இரண்டும் தொடர்கின்றன. ரசனைத் தேர்ச்சியுடையவர் என்று மதிக்கப்பட்டவர் சொன்ன கருத்துகளுக்கு ஒரு கருத்து மதிப்பு மட்டும் வைத்துவிட்டுச் சமுதாயம் தன்பாட்டுக்கு நடக்கிறது.
            அந்த மூன்றாவது நபர் சொன்ன அல்லது சொல்லாமல் விட்ட எழுத்துக்களை தலைமுறை தலைமுறையாகச் சிபாரிசு செய்துகொண்டே சமுதாயம் போகிறது. படிக்கிறவர்களும் தொடர்ந்து படிக்கிறார்கள்.
            அந்த மூன்றாவது நபர் விமர்சகர் என்று வைத்துக் கொள்வோம். அவர் இதுதான் இலக்கியம் என்று கொண்ட தீர்மானத்திற்கு என்ன அடிப்படை? அவர் நிராகரித்த பல புத்தகங்களை ஏன் மீண்டும் மீண்டும் ஒரு சமுதாயம் படித்துக் கொண்டிருக்கிறது?
            லோகோபின்ன ருசி.    உலகம் எத்தனை பிரிவினதோ, சுவைகள் அத்தனை பிரிவின.
            இந்தச் சுவைகளில் தான் தொட்டதே சிகரம்; தன் முடிவே இறுதித் தீர்ப்பு என்று எந்த விமர்சகரும் கூறிவிட முடியாது.
            முதன் முதலில் திருவல்லிக்கேணியில் குடியேறியவர் அதுவே உயர்வு; திருவல்லிக்கேணி வாசம் மைலாப்பூரிலோ, தி.நகரிலோ, மற்று எவ்விடத்திலோ கிட்டாது. திருவல்லிக்கேணியே உலக வாசஸ்தலங்களின் உன்னத லட்சியம் என்று அவர் அடித்து சாதித்தாலும்கூட ஒவ்வொரு பேட்டையின், ஊரின் இயல்பையும் சுவைத்த ஒருவர் ஒரு மௌனப் புன்னகையோடு அந்தக் கூற்றை ஒதுக்கிவிட்டு நகர்வார்.          எந்த விமர்சன அளவுகோலும் பெருமளவு தன் முகமானது(personal) (தன் சுவை; தன் விருப்பு வெறுப்பு இவை சார்ந்தது. மனிதனுக்கு இயற்கையான தன்முனைப்பு (ego ) ஓரளவேனும் கலந்தது.
            எனவே அந்த விமர்சகர் சொன்னதைச் சரியென முற்றிலும் ஏற்று ஒரு புத்தகத்தை அங்கீகரிப்பதோ நிராகரிப்பதோ சரியல்ல.
            ஆனால்-
            நல்ல இலக்கியத்தை ஒருவர் படிக்காமல் போவதால் ஏற்படும் அனுபவ நஷ்டத்தையும், கண்ட கண்ட புத்தகங்களைப் படிப்பதால் ஏற்படும் காலவிரயத்தையும் சோர்வையும் நீக்கவும் தரம் பிரித்துக் காட்டும் ஓர் அளவுகோல் அவசியம்.
            அந்த அளவுகோலும் கூடுமானவரை கட்டுறுதி)யின்றி இருப்பதே அனுபவப் பங்கீட்டுக்கு உதவும்.
            நல்ல இலக்கியத்தை சிபாரிசு செய்கிறபோது மேலெழுந்த வாரியாகவேனும் ஒரு வரையறைக்கு வருவது அனுபவங்களைப் பங்கிடத் துணைபுரியும்.  எந்த இலக்கியத்தையும் கூர்ந்து நோக்கினால் மனிதர்கள் தன் இயல்புகளோடும் இயற்கையோடும் நடத்தும் போராட்டமே அதன் கருப்பொருள் ஆயிருப்பதைக் காணலாம்.

எதற்காக எழுதுகிறார்கள்?


தற்காக  எழுதுகிறார்கள்?

     மகனோடு புணர்ச்சி கொள்ளும் தாய்,கைம்பெண்ணாக ஒரு பள்ளியில் பணிபுரியவந்து ஒருவனிடம் சிக்கி அவனைப் பித்துப்பிடிக்க வைத்துவிட்டு ஆள்மாற்றும் இப்பெண்களின் தாய்,பெண்ணுரிமை பேசி,உறுப்புப்பெயர்கள் எழுதி கவனம் கவரும் கவித்துவம், சிக்கினான் ஆண் என்று ஆணினத்தைக் கிழி கிழி -என்று கிழிக்கிற சாக்கில் ஆபாசங்களுக்கு இடம் தேடும் பெண்முழக்கம், பிள்ளை இல்லாக்குறையைபோக்கிக்கொள்ள  ஒரு குறிப்பிட்ட திருநாளில் கூடும் கும்பலில் எவனோ ஒருவனோடு வெளிப்படையாகக் கூடி, அதன் பின் ஏற்படும் மகத்தான சமூக மாற்றங்களை விவரித்து
வந்தவன் வந்துகொண்டே இருந்தான்,
போனவன் போய்க்கொண்டே இருந்தான்.
வந்தவன் நிழல் போனவன் நிழலைத்
துரத்திக்கொண்டே போகையில் புழல்..
நிழல் மறைந்து விட்டது
-என்ற ரீதியில் செங்கல் அடுக்கிக் காட்டி அதற்கு ஒரு இயத்தின் பெயர் சூட்டி இலக்கியம் எனக்கொண்டாடி, ஒரு குழு சேர்த்துக்கொண்டு அடிக்கும் தம்பட்டம், போதாக்குறைக்கு  ஒளி பரவ உதித்த ஒரு இலக்கிய ஏந்தல் நினைவைப்போற்றி புகழ ஒரு படக்கண்காட்சி, ஒரு போற்றித் திருவகவல்  என்ற கதிக்கு வந்து சேர்ந்திருக்கிற நவீன தமிழ்ப் புத்திலக்கியத்திற்கு என்ன நேர்ந்தது என்று கவலை உதிக்கிறது.      ஒருவேளை இலக்கியம் என்பதே இதற்காகத்தானோ என்று ஐயுறும் அளவு இவற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்போது நமக்கு அறிவிக்கப்பட்ட ஞானோபதேசம் குறுக்கிடுகிறது வாழ்க்கை எப்படிப் பல முகங்கள் கொண்டதோ அவ்வாறே வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இலக்கியமும் பல முகங்கள் கொண்டதாகிறது. இப்படி இப்படி சொல்லிக்கொண்டிருந்தோமே ! சிந்தித்தோமே!
            அறிவும் உணர்வும் கற்பனையும் பெறுகின்ற அனுபவங்கள் பல. இந்த அனுபவப் பங்கீட்டுக்கு இலக்கியமே ஒரு பிரதான வடிகால். என்று ஆசான்கள் வேறு கற்பித்தார்கள்! இப்போது இப்படி நடக்கிறதே! என்ன செய்வது?
            இலக்கியம் ஏன் படைக்கப்படுகிறது? எதற்காக எழுதுகிறார்கள்? இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டியது தான்.பல விடைகள் எழுத்தாளரின் மனப்போக்கிற்கேற்பக் கிடைக்கலாம்.
            சுருக்கமான பதில் ஒன்றுதான்.
            படிப்பதற்காக.
            எதற்காகப் படிக்கிறோம்?
            ஒரு கோணத்தில் இந்தக் கேள்வி அர்த்தமற்றது; மற்றொரு கோணத்தில் அர்த்த புஷ்டியானது. பல நினைவலைகளை எழுப்புவது. நமது பழக்கங்கள். சுவைகள் பற்றிய விவரங்களை நாமே அறிய வாய்ப்பளிப்பது.
            ஏன் வாழ்கிறோம் என்ற கேள்வி எழுந்தால் எத்தனை பதில்கள் வரும்?
            பிறந்து விட்டதற்காக-
            உயிர் வாழ்வு அடிப்படை உணர்வூக்கி-
            பிறர் வாழ்வதைப் பார்த்து-
            ஒரு நோக்கம் கருதி-
            ஒரு வேட்கை காரணமாய்-
            பதில்கள் வேறுபடலாம். அலசினால் மிஞ்சுவது ஒரே முடிவு. நாம் அனைவரும் வாழ்வதை நேகிச்சிறோம். இதே பதில் முந்தையக் கேள்விக்கும் பொருத்தம்.
            படிப்பதை நாம் நேசிக்கிறோம். படிக்கிறோம், இன்பம் அதில் உண்டு. ஒளியும் உண்டு.
            வாழ்வில் நாம் பெறும் துன்ப அனுபவங்களை-எண்ணற்ற தொல்லைகளை-வாழ்க்கை வழங்கும் இன்ற அனுபவங்களுக்காகச் சகித்துக் கொள்கிறோம்.
            இன்பமும் உண்டு. இன்பமும் வரும்; அப்போது குறைகள் தீர்ந்த ஒரு நிறைவு நிச்சயம். இந்த நம்பிக்கையில் தான் மனித குலத்தின் இடையறாத பயணம் தொடர்கிறது.
            அந்தப் பயண அனுபவங்களை ஒருவர் பங்கிட பிறர் கேட்பது ஓர் பேரனுபவமாகிறது. மக்கள் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். கல், சுவர், ஓலைச்சுவடி, காகிதம், திரை எதில் எழுதினாலும் படித்துக்கொண்டே வருகிறார்கள். காலம் காலமாக.