Tuesday 25 December 2012

மனக்கடலில் சிறு படகு

மனக்கடலில் சிறு படகு
மனசை வானம் என்பதா?
குகை என்பதா?
கடல் என்பதா?
எண்ணங்களை பெரும்பாலோர்  அலைகளுக்கே ஒப்பிடுகிறார்கள். நினைவலைகள் என்கிறார்கள். எண்ண அலைகள் என்கிறார்கள். வானத்தின் மேகங்களுக்கோ சிந்தும் தூறல்களுக்கோ ஒப்பிடுவதில்லை. சிலர் தான் குகைக்கு ஒப்பிடுகிறார்கள். புதுமைப் பித்தனின் மனக்குகை ஓவியங்கள் நினைவுக்கு வருகின்றன. குகைக்குள்ளும் ஓவியங்களை அழிக்கிற அலைகள் வந்து நிரம்புகின்றன.
மனம் எல்லையற்ற மகாசமுத்திரம் போன்றது என்று தோன்றுகிறது. அதன் வீச்சுக்கும் விசாலத்திற்கும் எல்லைகளே இல்லை. அதுவே படைக்கிறது. அதுவே காக்கிறது. அதுவே அழிக்கிறது.
இந்தச் சிறிய புத்தகத்தில் அதன் விசாலத்தையும் வீச்சையும் என் சக்திக்கேற்றவாறு காட்ட முயற்சித்திருக்கிறேன்.மனித மனத்தின் சக்தியை ஒப்பிடும்போது அவனது உடலின் சக்தி சிறு படகு தான். அதைக் கொண்டு தான் அந்த மனமெனும் மாகடலைக் கடந்து கடந்து அவன் லட்சிய எல்லைகளைத் தொட முயல்கிறான்
 மனம் ... பொதுவான மனித மனம் ஒரு மகாசமுத்திரம். என் சக்தி சிறியது. சிறு படகு போல.என் படகை வைத்து நான் எட்டித் தொட்ட துறைமுகங்களை சிறுசிறு எழுத்துச் சித்திரங்களாக்கித் தொகுத்திருக்கும் முயற்சி இது. நேர்மையான பணிவான முயற்சி. வாசிக்க நேரம் கிடைக்கும்போது அன்பு கூர்ந்து வாசிதது என் படகு லக்கு லகான் இல்லாமல் பயணம் போன வழியைச் சற்று பாருங்கள்.பிடிக்கும். பிடிக்காமல் போனாலும் உங்கள் மனப்படகு தன் பயணத்தில் உங்களை இழுத்துச் செல்லும்.

Sunday 23 December 2012

பிம்பங்களை நம்பிக் கொண்டு

பிம்பங்களை நம்பிக் கொண்டு
தத்துவச் சுரைக்காய்கள் ஏராளமாக விளைந்து படர்ந்திருக்கிற அந்தக் குடிசை வீட்டுக் கூரைப் பந்தலின் கீழே ஒரு குழந்தை, நாலு வயசு, விளையாடிக் கொண்டிருந்தது. கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துக் கொண்டு திருப்பித் திருப்பி தன் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தது. 
பெண் குழந்தை அல்லவா? பின்னே எப்படி இருக்கும்?
அது பார்க்கிற ஒவ்வொரு கோணத்திலும் ஒரு பிம்பம். மாறி மாறித் தெரிகிறது. அதைத் திருப்பித் திருப்பிப் பார்ப்பதில் ஒரு லயிப்பு. பார்த்துக் கொண்டே இருக்கிற கவனக் குறைவில் கை தவறிவிட்டது. மூலையில் இருந்த அம்மிக் கல்லில் விழுந்து கண்ணாடி நொறுங்கிச் சிதறிவிட்டது.
தரையில் பல நொறுங்கல்கள். விழுந்துவிட்ட கண்ணாடித் துண்டுகள். அவற்றில் அவள் முகம் பல முகங்களாகப் பிரதிபலித்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவில் ஒவ்வொரு தினுசில்.
பொங்கப் பொங்க சிதறல்களை ஒன்று சேர்த்து அது தேடியது. பழைய முகத்தை! இல்லை. அது தென்படவில்லை. அது உடைந்து போனதற்காக அதிகம் கோபித்துக் கொள்ளாத அப்பாவையும் அம்மாவையும் கூப்பிட்டுக் காட்டிக் கேட்டது.
எல்லாமே உன் முகம் போல் தான் இருக்கிறது என்றனர் இருவருமே.
அதற்கு நம்பிக்கை வரவில்லை. எந்த முகமும் தன் முகம் மாதிரி இல்லை என்று அது ஓவென்று அழத் தொடங்கியது. ஒரு சிறிய துண்டை அதன் முகத்திற்கு மிக அருகே கொண்டுவந்து காட்டிவிட்டு அவர்கள் இதோ பார் நீ உன் மாதிரியே தெரிகிறாய். என்று பலமுறை சொல்லிய பின்னும் நம்பாத அந்தக் குழந்தைக்கு சுற்றுப் பக்கத்திலிருந்த பலரைக் கூப்பிட்டு சமிக்ஞை செய்து அவ்வாறே கூற வைத்தார்கள்.
அப்புறம் தான் அது நம்பியது.
பிம்பங்களை நம்பி வாழ்கிற வாழ்க்கைக்கு இப்படி நாலுபேர் சொல்லும் அபிப்பிராயங்கள் தான் முக்கியம்.

அடிமாடுகளும் சினையாடுகளும்

அடிமாடுகளும் சினையாடுகளும்

மாநகரங்களை நோக்கி லாரி லாரியாக மாடுகள் போகின்றன. ஆடுகள் போகின்றன. சினையாடுகளும் கூட 
நான்கு வழிச்சாலைகள் உள்ள எந்த தேசீய நெடுஞ்சாலையிலும் அன்றாடம் நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை நின்று, உட்கார்ந்து கவனித்துப் பார்த்தால் அவை தென்படும். மலங்க மலங்க விழிக்கும் கண்கள். ஆடுகளாகவும் மாடுகளாகவும் பிறக்க நேர்ந்த அவலத்தை அவை மௌனமாக முறையிடுவது போல் தென்படும் காட்சி அது.
அவை எங்கே போகின்றன?
முன்பின் அறியாத கசாப்புக் கடைகளில் தொடங்கி அவற்றின் பயணம் அறுசுவை விரும்பிகளின் அடிவயிற்றில் முடியப் போகின்றது.
ஆனால் அவை எந்தெந்த சூழ்நிலைகளில் எப்படி எப்படி வளர்க்கப்பட்டன? எந்த மலைக்காற்றை சுவாசித்து  எந்தக் குளம், அருவி அல்லது குழாய் நீரைப் பருகி எந்த செடி கொடிகளை உண்டு ஆளாகி இன்று மரண யாத்திரையிர் எங்கெங்கே போய்க் கொண்டிருக்கின்றன? யாராலும் சொல்ல இயலாது.
அவை விட்டுப் பிரிந்து வந்த கிராமப்புறங்கள் அவை ஏற்படுத்திய சூன்யத்தால் என்ன வகை வெறுமையை அனுபவிக்கின்றன?
எதைக் கவனிக்கவும் நேரமில்லாது பணங்காசு பார்க்கிற அவசர ஓட்டத்தில் அதை யார் பொருட்படுத்துகிறார்கள்?
எல்லோருக்கும் பணம் வேண்டும். பணம், பணம், பணம்.
அந்த மாடுகளின் கத்தும் ஓசையோ ஆடுகளின் பிளிறல்களோ அவற்றின் நடமாட்டம் உயிர் வாழ்விற்கு வழங்கும் துள்ளலும் துடிப்புமோ அவற்றின் கழிவுகளுக்கு ஏங்கும்மண்ணின் பசியோ எதுவும் யாருக்கும் கேட்பதில்லை.கொடுக்கத் துணை நின்று அவர்களை மலை விழுங்கி மகாதேவனாகி வருகிற கார்ப்பொரேட் கம்பெனிகளுக்குப் பறிகொடுத்தவர். அந்தக் கூரை வீடு மாடி வீடாகியது. மாட்டுக் கொட்டகை மண் மேடாகியது. இத்தனை நடந்தும் அவரது மூதாதையர் இழுத்துக் கட்டிய மாடுகளும் மேய்த்து வந்த ஆடுகளும் அவர் மனத்தின் அடிவாரத்திலிருந்து மறையவில்லை.
உடல் நிலை அவ்வளவாக ஒத்துழைக்கவில்லை என்றாலும் அவர் வசதி வந்த பிறகு நல்ல சிமெண்ட் தளம் போட்டு மாட்டுக் கொட்டகை கட்டி இருக்கிற ஓரிரு மாடுகளை மேய்த்துக் கொண்டு அவற்றிற்குத் தீவனம் வைத்து அவை கன்று ஈனும் போதும் குட்டி போடும்போதும் உள்ளூர மகிழ்ந்து குதூகலித்துக் கொண்டிருக்கிறார்.
சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்று நண்பர்கள் விமர்சிக்கிறார்கள், விடுமுறைகளில் வீட்டிற்கு வரும் பிள்ளைகள் சலித்துக் கொள்கிறார்கள். மலையடிவாரத்தின் கீழே ஹோவென்று வீசும் காற்றின் தனிமையோடு தன் தனிமையைப் பகிர்ந்து கொண்டு உடன் வாழ்கிற மனைவி வருத்தப்படுகிறார்.
அவர் விட்டுக் கொடுப்பதாக இல்லை.
எந்தப் பைத்தியக்காரத்தனத்தை யார் சொல்லி யார் விட்டு விட்டிருக் கிறார்கள்? இதுநாள் வரை.
ஒரு மாடு... ஒரே ஒரு மாடாவது... அவரது இடைவிடாத கர்மயோகத்திற்கு உதவி செய்ய ஒரே ஒரு மாடாவது என்று அலைபாயும் அவர் மனசிற்கு எப்படியாவது ஒரு மாடு கிடைத்து விடுகிறது. அது கன்று ஈன்று வம்சம் பெருக்கி விடுகிறது. அவர் தர்ம கைங்கரியமாக இதைச் செய்யவில்லை.
உயிர்களோடு உயிராக ஒன்றி வளர்ந்துவிட்ட பாந்தத்திற்காக அவற்றை வளர்க்கிறார். வயதுக்கு அவை வந்ததும் விற்று விடுகிறார். அவற்றின் பாலை வீட்டுக்குத் தேவைப்பட்டது போக விற்கவும் செய்கிறார். ஆனால் எதுவும் பணத்தை உத்தேசித்து அல்ல.
எண்ணிக்கையற்ற அடிமாடுகளையும் சினையாடுகளையும் பிரியாணிகளுக்கு அனுப்பியதால் வெறிச்சோடிப் போன கிராமத்தில் இன்னும் இந்தியாவும் கலாச்சாரம் கலாச்சாரம் என்று நாக்கு நுனியில் பேச உதவுகிற அந்த மர்மமான சரக்கின் உட்பொருள் அழிந்து போகாமல் அவர் உணர்ந்து கொண்ட அர்த்தத்தைப் போற்றிக் கொண்டிருக்கத் தான்.
அப்படி அனேகர் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். நம்பலாம் நகரம் என்ற மகாமசானத்தை நோக்கி எத்தனை அடிமாட்டு லாரிகள் போன போதிலும் கிராமம் என்றென்றும் உயிர் வாழும்.
எத்தனை ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியிலும் மிஞ்சியிருக்கிற இந்தியாவைப் போல.

எனது வாசகர்

எனது வாசகர்
தொடர்ந்து நாட்குறிப்பு எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால் எல்லாரையும் போல நாட்குறிப்பு எழுதலாமென அடிக்கடி தோன்றிவிடும்.
ரொம்பச் சோம்பல் வாழ்க்கை நடத்துகிறோம் என்ற வெட்கம் ஏற்படும். புத்தாண்டாக இருந்தால் ஒரு நாட்குறிப்பு வாங்கி வருவேன். இல்லையென்றால் பேசாது ஒரு ‘பைண்ட் நோட்’ வாங்கி, தேதி குறித்து எழுதத் தொடங்கி விடுவேன்.
இப்படி அடிக்கடி தோன்றும்; அடிக்கடி எழுதுவேன். இந்த ‘அடிக்கடி’யிலேயே ஓர் எகத்தாளக் குறிப்பு உள்ளதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
தொடர்ந்து எழுத முடியாத குட்டு வெளியாகி இருப்பதே அது! சரி, தொடர்ந்து எழுத முடியாது போய்விட்டாலும், எப்போதாவது எழுதி வைத்த குறிப்புக்களைப் புரட்டிப் பார்க்கத் தோன்றும்.
அப்படி சமீபத்தில் 1974ம் ஆண்டு நான் எழுதி வைத்த நாட்குறிப்பைப் புரட்டினேன். அதில் அந்தரங்க விவகாரம் எதுவுமில்லை. அதனால் அதை அப்படியே கீழே தந்திருந்தேன்.
“எனது வாசகரை நான் ஒரு ‘கனவான் தன் நெருக்கமான நண்பனையோ, பிரியமான உறவினரையோ எப்படி பாவிப்பாரோ அவ்விதமே கருதி அவருக்காக நான் எழுதும் கதை கவிதை கட்டுரைகளில் அந்த பாவனையைக் கடைப்பிடிப்பேன்.
அவர் தப்பித் தவறியும் சிறுமை உணர்வு கொள்ளவோ, அவரைச் சாணம் மி தித்தது போன்ற உணர்வு பெறச் செய்யவோ அவர் முகத்தில் அறையவோ, அவர் தலையில் நறுக்கென்று குட்டவோ மாட்டேன்.
அவரைக் கிள்ளி அழவைக்கவோ, கிச்சு கிச்சு மூட்டி மரியாதைக் குறைவாக சிரிக்கச் செய்யவோ, ஏதேனும் ஓர் ஆபாசமான ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளும் பாத்திரமாகவோ அவரைக் கருதவோ மாட்டேன்.
அவரிடம் நான் தான் சுக்ராச்சாரியர் போலவும் அவர் வெறும் ஒரு சிஷ்யர் போலவும் நான்  ஒரு தோரணை காட்ட மாட்டேன்.
அவரைப் பயமுறுத்துவது, குரூரக் கதைகளைச் சொல்லி அவரைக் கிலி பிடிக்கச் செய்து அதிர்ச்சியூட்டுவது நான் முற்றிலும் தவிர்க்க வேண்டிய முதலாவது விவகாரம்.
எனது வாசகரிடம் நான் என் அசிங்கமான ஆசைகளையோ அபத்தமான கருத்துக்களையோ வெளியிடுவது அற்பத்தனமாகும்.”
குறிப்பு இத்தோடு நின்று வேறு தேதியில் வேறு மொழியான ஆங்கிலத்துக்குத் தாவியது .
எனது வாசகரை, நான் நேருக்கு நேர் இதுவரை சந்திக்க நேர்ந்ததில்லை. அம்பலங்களுக்கு வந்து மேடை வெளிச்சம் பெற்று சுமை எதற்கு என்று ஒதுங்கியே பழகிவிட்டேன்.
அவரை நேருக்கு நேர் சந்திக்க முடிந்ததில்லையே தவிர, பேனாவைத் திறந்தவுடன் மானசீகமாக அவர் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்வார்.
அவர் பக்கத்தில் இருக்கிற பொறுப்புணர்வுடன் நான் என்றோ எழுதி வைத்த குறிப்பின்படி நான் எழுதிச் செல்வேன். கூடுமானவரை எனக்கு நானே விதித்துக் கொண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முயலுவேன்.
அதில் எவ்வளவு வெற்றியடைந்தேன்?
தெரியாது.
நான் விளையாட்டாகவும் .பொழுது போக்காகவும், பொழுது போக்குவிப்பதற்கும் தான் எழுதத் தொடங்கினேன். எனவே இன்னின்ன பத்திரிகைகளின் வாசகரை என் வாசகர் என்று உரிமை கொண்டாட வழியில்லாமல் போயிற்று.
போகப் போக, என் மனப்போக்கு எழுத்து என்பது வெறும் பொழுது போக்கு விவகாரம் அல்ல என்று உணர்ந்து கொண்டது.
பொழுதுபோக்காக எழுதுவது தவறு என்றோ, குற்றம் என்றோ நான் கருதவில்லை.
ஆனால் எழுத்தே, எழுதுவதே  பொழுது போக்கிற்காகத்தான் என்ற கருத்து எனக்கு மாறுபட்டது.
எழுத்து மனங்களை உருவாக்குகிறது. ஒரு பண்பாட்டை வழி நடத்திச் செல்கிறது; மனித சிந்தனையை ஒரு கால கட்டத்தின் சீரான வார்ப்பில் இயக்குகிறது. என்றெல்லாம் பெரியவர்கள் எழுதிய பெரிய பெரிய வார்த்தைகளைப் படித்து நான் பயந்திருக்கிறேன்.
ஒருவேளை அந்த அச்சம்தான் என் பாதையில் சில திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கலாம்.
மேலும் ஒன்று முகம் தெரியாத, ஆனால் மானசீகமாக என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிற வாசகர்தான், இப்போது நான் போகும் பாதையில் என்னை நடத்திச் செல்கிறவர்.
என் வாசகரைத் திருப்தி செய்யும் நோக்கம் எனக்கு எப்போதும் இல்லை. அதனாலேயே எழுதி முடித்த எந்தப் படைப்பின் மீதும் எனக்கு முழு நிறைவு வருவதில்லை. ஆனால் என் வாசகரோடு, நான் பல செய்திகளை ஒளிவு மறைவின்றி, அதே சமயம் நாகரீகமாகப் பகிர்ந்து கொள்ள முனைந்திருக்கிறேன்.
கூடுமானவரை கண்ணியமாக அவரிடம் நடந்து கொள்ள முயற்சித்திருக்கிறேன். அவர் ஒரு தனி நபர் அல்ல; அவர் ஒரு பெரிய கூட்டுத் தொகுதி (Amalgamation) என்பது போன்ற உணர்வு அடிக்கடி எனக்கு வரும்.
எழுத முடியாத சமயங்களில், எழுத விரும்பினாலும் நேரம் கிடையாத சந்தர்ப்பங்களில், மிக மிக நெருக்கமான அவரை, சந்திக்கத் தவறிட்ட வேதனை மனசைக் குதறும்.
அதே சமயம் ரயிலிலோ, பஸ்ஸிலோ எவரோ ஒருவர் நான் எழுதியதைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க நேரும் என் முதுகு நெளியும். நீங்கள் எழுதிய இதை நான் படித்திருக்கிறேன் என்று எவராவது முகத்திற்கு நேரே சொல்வார்.
இந்த இரண்டும் சொல்ல வராத ஒரு கூச்சத்தை ஏற்படுத்தும். ஏதாவது பேசி அவர் கவனத்தை மாற்றி விடவே முயலுவேன். இதெல்லாம் கூட என் வாசகர் மீது நான் வைத்திருக்கும் ஆழ்ந்த மரியாதையின் விளைவுதான் என்ற உணர்வு எனக்குள் வலுப்படுகிறது.

ஒவ்வொரு காற்றோட்டமும் புதிது

ஒவ்வொரு காற்றோட்டமும் புதிது

அது ஒரு குழந்தைகள் ரயில். ஆறேழு சின்னஞ்சிறு  பெட்டிகள். பொம்மை வண்டிகளுக்கு வண்ணந் தீட்டுவது மாதிரி பச்சையும் நீலமுமாய் வர்ணமடித்த சித்திரங்கள் வேறு. ஒரு சிறிய எஞ்சின், அரை மீட்டர் இடைவெளியில் சிறிய தண்டவாளங்கள். கோட்டையைச் சுற்றி, ஓர் அரைவட்டம் போட்டு விட்டுத் திரும்பும். அந்த ரயில் சவாரியின் வினோதத்தை அனுபவிக்க எத்தனையோ குழந்தைகள் ஓடிவந்து தேடி இடம் பிடிக்கின்றன.
வயது முதிர்ந்த குழந்தைகள், வயதுக்கு வந்தவை, வயது வராதவை, தேனிலவுக் குழந்தைகள், நிஜமாகவே குழந்தைகள், எல்லாக் குழந்தைகள் முகத்திலும் அனேகமாக ஒரு பரவசம். ஆள் சேரட்டும் என்று காத்திருக்கிற ஆட்டோ போல் ரயில் காத்திருக்கிறது. எப்போது வண்டி புறப்படும் என்று ஆவலில் வெளியே நிற்கின்ற பொம்மைக் கைகாட்டி மரத்தைக் குழந்தைகள் எட்டியெட்டிப் பார்க்கின்றன.
ஒரு வழியாக எஞ்சின் உறுமிற்று. குப்குப்பென்று ஒரு கரிமண்டியில் கோணிகளை உதறுவது போல் கரும்புகை. 
மெல்ல மெல்ல ரயில் ஓடுகிறது. ஒரு மனித ஓட்டத்திற்கு நிகர். நிஜக்குழந்தைகள் அந்த முதல் ஓட்டத்தில் ஆர்ப்பரித்துச் சிரிக்கின்றன. வயது மீறிய குழந்தைகளுக்கும் அந்த குதூகலம் ஒரு புன்முறுவலாகவேனும் தொற்றிக் கொள்கிறது. காலமும் வாழ்க்கையும் அந்த மினிரயிலில் கொஞ்ச நேரம் மறந்து போகிறது.
டிக்கெட் பரிசோதகர் கடைசிவேனிலிருந்து எஞ்சினைப் பார்த்துக் கத்துகிறார்.
“தகரால் இல்லியே?” வட்டார வழக்கு.
ஏதோ பதில் வருகிறது. வண்டிக்கு வெளியே வேலூர்க் காக்காத்தோப்பு மெல்லப் பின்வாங்குகிறது.
டி.ப.தன் கத்தலுக்கு பெட்டி முழுசுக்குமாய்ப் பொதுவில் சமாதானம் சொல்கிறார். அவர் கையில் ஒரு நீளத்தடி.
“தண்டவாளத்தில் கல்லை வச்சுடுதுங்க நாமர்தாப் பசங்க?”
திடீரென்று ஓர் ஊளை. ஓடுகின்ற நாயைத் துரத்துவது போல் ஊர்கின்ற ரயிலின் இரு புறங்களிலும் சிறுவர் பட்டாளம் துரத்தி வருகிறது.
“டாய்...” என்று டி.ப. தடியை உயர்த்துகிறார். வானத்தை நோக்கித் தடி ஆடுகிறது. மெல்லச் சிறுவர் படை பின்வாங்குகிறது. ரயில் கொஞ்ச தூரம் போயிருக்கும். எதிரில் உட்கார்ந்திருந்த தேனிலவுக் குழந்தைகளுக்கு அந்தச் சின்னப் பெட்டியின் சௌகரியமான நெருக்கம் ஒரு வசதி போலும். புஜமும் இடுப்பும் உராய அவர்கள் ஸ்பரிசத்தின் புது மயக்கில் இருந்தனர். ஊஞ்சலாட்டுவது போல் வண்டு ஆடுகிறது.
ஹோய்... ஹோய் என்று வெளியே கூக்குரல் கேட்டது. தெற்கே திரும்பினால் ஒரு குருவிக்கார முகாம். கன்னங்கரேலாய், மண் நிறமாய் செம்பட்டையாய், தாமிர நிறமாய் சிறிசும் பெரிசுமாக தண்டவாள ஓரத்தில் குருவிக்காரக் குழந்தைகள். திறந்த மேனியில், பாசிமணி மட்டும் அணிந்த நீள வரிசை.
குதூகலம் தாளாமல் சில குழந்தைகள் தக்கத்திமி என்று குதிக்கின்றன. ரயில் விநோதத்தை ரசிக்கிற ஆரவாரம், முகங்களில் நூறு விளக்கு எரிகிற பிரகாசம். சில குழந்தைகள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டன. ஓடிவருகின்ற குழந்தைகளை நோக்கி டி.ப.வின் எச்சரிக்கைத் தடி உயர்ந்து ஆடுகிறது.
ஓடிவந்த குழந்தைகள் சட்டென்று ஓட்டத்தை நிறுத்தித் திரும்பி திமுதிமுவென்று நிற்கும் குழந்தைகளை நோக்கித் திரும்பி ஓடின. குதூகலம் எங்கே கொப்பளித்தாலும் வேடிக்கை பார்க்கும் நான் வெளியே எட்டிப் பார்த்தேன்.
வண்டி அவர்களைக் கடந்தது. லேசான ஒரு வளைவு. இப்போது எல்லாக் குருவிக்காரக் குழந்தைகளும் நன்கு பார்வைக்குத் தென்பட்டார்கள். எல்லாக் குழந்தைகளும் ஸ்விட்ச் தட்டிய மாதிரி ஓர் யந்திர விசையோடு, முஸ்லீம்கள் நமாஸ் தொழுகைக்கு முழுந்தாளிடுவது போல் தண்டவாள ஓரத்தில் சற்றுத் தொலைவில் வரிசையாக முழந்தாளிட்டன. வண்டி மெதுவாக அவர்களை விட்டுத் தொலைவில் சென்று கொண்டிருக்கிறது. சட்டென்று யாவும் ஒருசேரத் தண்டவாளத்தின் மீது காதுகளை வைத்துக் கொண்டு படுத்தன. அவை கிணுகிணுப்பது தூரமானாலும் ஸ்பஷ்டமாகக் கேட்டது.
முதலில் எனக்குப் புரியவில்லை.
“என்ன செய்றாங்க?” என்று நிற்கின்ற டி.ப.வைக் கேட்டேன்.
“ரயிலு போவற சத்தம் தண்டவாளத்திலே கேக்கும், அதுக்காவ படுத்துணு கேக்குதுங்க சைத்தானுங்க!” என்று கோபமாகச் சொன்னார்.
எனக்கு ஒரு சிறு ஏக்கம் தோன்றியது. அந்தக் குழந்தைகள் ரயில் செல்ல வாய்ப்பில்லையே என்பதற்காக அல்ல! என்னால் அவ்விதம் தண்டவாளத்தில் ரயில் ஓடுகிற ஒலியைச் செவிநாய்த்துக் கேட்க முடியாதே என்றுதான். ஓடும் ரயிலின் நாதம் எவ்விதமான இசையாய் தண்டவாளத்தில் கேட்கும்? அதற்கு நிகர் இருக்குமா? இத்தனை குழந்தைகளை அது ஈர்க்குமளவு அதற்கு என்ன சிறப்பு?
வெளியே பார்த்துக் கொண்டேயிருந்தேன். எல்லாக் குழந்தைகளும் எழுந்து நின்று கைதட்டிச் சிரிக்கின்றன.
குருவிக்காரர்கள் தான் மண்ணின் மைந்தர்கள். புராதன ஹிப்பிகள். எவ்விதப் போர்வையுமற்று, திக்கற்று, நாகரிகத்தின் வேஷங்கள் அற்று, எந்த நாகரிகமுமற்று அவர்களே ஒரு நாகரிகமாய் வெய்யிலையும் மழையையும் காற்றையும் வானையும் வெகு சகஜமாக அவர்கள் அனுபவிக்கிறார்கள்.
தண்டவாளத்தில் ரயில் நாதத்தைக் கேட்க முடியாத என் ஏக்கத்தை குருவிக்காரக் குழந்தைகளின் குதூகலம் சிரிப்புக்காளாக்கிற்று - நான் எனக்குள் அந்தக் குழந்தைகளையும் என்னையும் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினேன்.
ஆம்! பல குழந்தைகள் மத்தியில் நானும் ஒரு குழந்தைகள் ரயிலில் போய்க் கொண்டிருக்கிறேனே... என்னை இவ்விதம் உந்தியது எதுவென்று யோசித்தேன்... எனக்கு இன்னொரு சம்பவம் நினைவு வந்தது.
இந்த வருஷக் கோடையில் என் கிராமத்தில் குண்டு மல்லைகைச் செடிகள் ஏராளமாய்ப் பூத்தன. வீடுகளில் படிப்படியாய்ப் பூக்களைக் கொட்டி பெண்கள் பூத்தொடுத்தார்கள். மட்டைப்பூ தைத்துக் கொள்ளும் எத்தனையோ ஆசைகள் இந்த வருஷம் அவை ஏகமாக நிறைவேறின. அந்த வீட்டில் ஒரு நாலு வயதுச் சிறுமி. பூவின் மீது அவளுக்குக் கொள்ளைப்பிரியம். அவளுக்கு இருப்பதோ ஒரு சாண் தலைமுடி அதில் ஒரு கூடையாய்ப் பூவைச் சுற்றினாலும் அவள் ஆசை அடங்காது நீளமாய்ச் சவுரி வைத்து குதிகாலில் இடிக்குமாறு ஜடைக் குச்சியோடு அவளும் இருமுறை மட்டைபூ தைத்துக் கொண்டாள். ஆசை தணிந்த பாடில்லை. அடுத்த வீட்டில் முடிவாங்கத் திருப்பதி போனார்கள். நிறையப் பெண்கள். அதற்கு முந்தின நாள் தலைமுடிக்குப் பிரிவுபசாரமாக அவர்கள் எல்லாம் மட்டைப் பூ தைத்துக் கொண்டார்கள். நாலு வயதுச் சிறுமிக்கும் ஏக்கம் பிறந்தது. எந்தச் சமாதானமும் அவளைத் தேற்ற முடியவில்லை.
அடுத்த நாளிலிருந்து, குண்டு மல்லிகைச் செடிகளில் பூக்கள் குறைந்தன. நாலு வயதுச் சிறுமியின் ஏக்கம் செடிகளுக்குப் புரியவில்லை. அவள் அழுது கொண்டேயிருந்தாள். அடுத்த வீட்டில் எல்லாப் பெண்களும் மட்டைப்பூ தைத்துக் கொண்டது அவளுக்கு மறக்கவேயில்லை. அவள் அழுது கொண்டேயிருந்தாள்.
மூன்றாம் நாள் அவர்கள் எல்லாரும் திரும்பி வந்தபின் அவள் சிரிக்கத் தொடங்கினாள். காரணம் எல்லாத் தலைகளும் மொட்டை சிறுமியின் தலையில் அவளுக்கே உரிய சாண்முடி பத்திரமாக இருந்தது. அதில் அவளுக்குக் களிப்பு. மட்டைப்பூ மறந்து போயிற்று.
வாழ்க்கை இந்த விதத்தில் விவேகத்தைப் போதிக்கிறது ரயில் சவாரி கிட்டவில்லையெனில் தண்டவாளத்தில் கேட்கும் ரயிலின் நாதம். மட்டைப்பூ இல்லையெனில் மொட்டைத் தலைகளைப் பார்த்து ஒரு பெருமிதம்.
குழந்தைகள் இனியவற்றைச் சீக்கிரம் தேர்ந்து கொள்கின்றன. துன்பங்களை மறக்கின்றன. கோபம், வருத்தம், பகை, வஞ்சம் எல்லாம் அந்த உள்ளங்களில் விரைவிலே மாறி விடுகின்றன. உயிர் வாழ்க்கை என்ற இடையறாத ஆனந்த அனுபவத்திற்கு எவையெல்லாம் தடையாகின்றனவோ அவற்றையெல்லாம் குழந்தைப் பருவம் எளிதிலே விலக்கி வைக்கிறது.
எனவே தான் ஏசுநாதர் சொன்னார்.“நீங்கள் குழந்தைகளைப் போல் மாறாவிட்டால் உங்களால் மோட்ச சாம்ராஜ்யத்தில் பிரவேசிக்க இயலாது.”
யந்திர நாகரிகம் மனத்திற்கு ஒரு தனி வாழ்க்கையும் உடம்புக்கு ஒரு தனி வாழ்க்கையுமாக பிரித்துவிட்டது. நமது துயரங்கள் வினோதமாய் விட்டன. நமது ஆசைகளும் அவற்றை நாம் அனுபவிக்க, ஓய்வு கிட்டாதவாறு விபரீதமாகி விட்டன. அனேகமாக நாம் ஓய்வு ஒழிவின்றி ஓடிக்கொண்டே வாழ்கிறோம.
மனப்புழுக்கமும், விரக்தியும் மிஞ்சும்போது நம்மை மறந்து போக ஏதாவது சாதனங்களைத் தேடுகிறோம். நமது தேட்டம் இப்போது மரிஜுவானாலும் பெதடினிலும் கொண்டு போய் விட்டிருக்கிறது. செயற்கையான துன்பங்களுக்கு, செயற்கையான மாற்றுக்கள்.
நவீன மனிதன் தன்னை எதிலாவது அமிழ்த்திக் கொஞ்சநேரம் தன்னை மறந்துபோகத் துடிக்கின்றான். இந்த செயற்கையான மாற்றங்கள் அவனுக்குப் புதிய துன்பங்களாகிய, பிரச்னையாகி பீதியளிக்கின்றன.
வாழ்க்கையோ எளிய மகிழ்ச்சியை ஏராளமாய் இலவசமாய் இரைத்து வைத்திருக்கிறது.
வானிலிருந்து சிதறும் வைரம் போன்ற கோடை மழையின் ஆலங்கட்டியில், பாக்டீரியா பயமற்று பௌர்ணமி நிலவில் தெருப் புழுதியில் ஆடும் பலீஞ்சடுகுடுவில், எங்கோ கூவும் குயிலின் குரலில், ஒரு குழந்தையின் குதூகலத்தில், பீடுடன் திரியும் கோயில் காளையின் மிடுக்கான நடையில் உலக்கை குத்தும் பெண்ணின் கைவளையல் போடும் இன்னிசைத் தாளத்தில்... எங்கெங்கோ எங்கெங்கோ...
இவையெல்லாம் குழந்தைகளாய் இருக்கும்போது நம்மை எவ்வளவு கவர்ந்தன! இன்னும் அவை குழந்தைகளைக் கவர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அவ்விதமே தான் இருக்கும்.
எதனாலும் நிறைவேற முடியாத வேட்கைகள் நம் மனத்தின் வாழ்க்கையாய் விட்டன. இரைந்திருக்கும் எளிய மகிழ்ச்சியின் நடுவில், நம் உடல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு கணம் குழந்தையாகிப் பார்க்கும்போது எந்த நிலையில் இருந்தாலும் வாழ்க்கை வாழத் தகுதி வாய்ந்ததாகவே தோன்றுகிறது.
ஓடுகின்ற கடிகாரகுதிரையின்  ஒவ்வொரு குளம்பொலியும் நமக்குச் சொல்வது இழப்பு.. இழப்பு.. என்பதே. இந்தக் கணம், இதற்கே உரியதாய் ஓசை, காட்சி, உணர்வு என்று இயற்கை சமைத்துத் தரும் அனுபவங்கள். மனம் எந்த ஓட்டப் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருப்பினும் இவற்றை ஏன் நான் இழக்க வேண்டும்? கடிகாரம் அதையே சொல்கிறது. இழப்பு.. இழப்பு.. நான் அதை மறுக்கிறேன். இல்லை, இல்லை, இல்லை. எந்த மூலையில் எங்கிருந்த போதிலும் அந்தக் கணத்தை நான் பூரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
அவை திரும்பாது என்று நான் அறிவேன். அவை திரும்ப வேண்டும் என்ற அச்சமோ ஆவலோ எனக்கில்லை. முடிவற்ற இந்த சித்த சமுத்திரத்தில் எத்தனையோ காற்றோட்டங்கள், ஓர் அனுபவம் உயர்ந்தது என்று மனம் அதை ஒரு சிமிழில் அடைத்தால், துன்பம் அன்று தொடங்குகிறது. ஒவ்வோர் அலையும் புதுமைதான். ஒவ்வொரு காற்றோட்டமும் புதிதுதான். எல்லாவற்றையும் வரவேற்று அந்தக் கணத்தை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
காலம் தன்னை இழந்து கொண்டிருக்கிறது. நாமோ புதிது புதிதாய் அனுபவங்களைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். இன்று என்பது எவ்வளவு நிஜம் என்று உணர்ந்தால் நம் வாழ்க்கை மலர்ச்சியோடு வளர்கிறது.

எல்லைகள் இல்லாத விண்வெளி விமானி.

[தொடர்ச்சி]
எல்லைகள் இல்லாத விண்வெளி விமானி
நம் அன்னையர் கன்னியராகி நிலவினிலாடி இன்னுயிர் தந்து நமை ஈன்று வளர்த்த கதை நடந்த நாடு நமது பாரத நாடு என்று தமிழில் முதலில் சொன்னவன் பாரதி. 
சிந்துநதியின் மிசை தோணியில் அவன் சிந்தனை செய்த யாத்திரையும், மன்னும் இமயமலை எங்கள் மலையென்று அவன் வந்தனை செய்த மாட்சிமையும் நொறுங்கித் தகர்ந்த தமிழின் எல்லைகள்.
அவன் எந்த எல்லைகளுக்கும் கட்டுப்படாது வேண்டுமடி எப்போதும் விடுதலை என்று விரும்பியவன். வேறு எந்த நாடு எங்கே மண்டையை உடைத்துக் கொண்டு மாண்டாலும் கவலையில்லை, என் பாரத தேசம் எனக்குப் போதும் என்று ஒதுங்கியவன் அல்ல. பெல்ஜியம் தோற்றால் அவனது கவியுளம் பதைத்தது. யுகசூரியன் போன்று ரஷ்யாவில் புரட்சி உதித்தால் அவன் மனவிலாசம் ஆர்ப்பரித்தது.
இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்து விட்டான்
ஜாரரசன் இவனைச் சூழ்ந்து
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்.
என்று ஆரவாரித்த பாரதிக்கு புதிய ரஷ்யாவின் எழுச்சியில் புலப்பட்ட வெளிச்சம் என்ன? எல்லையொன்றின்மையின் புறவெளிப்பாடான விடுதலைதான்.
அடிமைக்குத் தளை யில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்பது இத்தாலியின் ஐக்கியத்திற்கு மாஜினி செய்த புரட்சி, ஏதோ இவன் செய்கிற புரட்சி போன்று சபதம் செய்ய வைத்தது. எல்லா உலக இயக்கங்களையும் தன் தாய் நாட்டு விடுதலை ஆர்வத்தை வெளியிடும் உருவகமாகவே அவன் கற்பித்துக் கொண்டான். ஆனால் சொந்த நாட்டின் துயர்களைப் பிற நாட்டின் துயர்களோடு அடையாளம் காணக்கூடிய மன விரிவு, பிற நாட்டின் வெற்றி தோல்விகளால் பாதித்த உணர்ச்சிப் பெருக்கு இவையெல்லாம் நமது மகாகவியின் எல்லையொன்றின்மை என்ற விசேஷ முத்திரைகள்.
பாரதியின் கவிதை சத்ரபதி சிவாஜியாகித் தன் சைனியத்துடன் பேசியதுண்டு. கள்ளர் பயமிருக்கும் காட்டு வழிதனில் வண்டியோட்டிச் செல்கையில்,
‘நிறுத்து வண்டியென்றே - கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே’
என்ன செய்வது என்ற வண்டிக்காரனின் கவலையாகவும் மாறியதுண்டு.
‘மண்வெட்டிக் கூலிதின்ன லாச்சே! எங்கள்
வாள் வலியும் வேல் வலியும் போச்சே’
என்று நிலைதாழ்ந்து போன போர் மறவனின் துயர்களைப் பங்கிட்டுக் கொண்டதுண்டு.
‘பூ மண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக; துன்பமும், மிடிமையும் நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் இன்புற்று வாழ்க’ என்று ‘ஸர்வே ஜனா சுகினோ பவந்து’ என உலக சமாதானத்திற்குக் குரல் கொடுத்தது முண்டு.
இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!
யந்திரங்கள் வகுத்திடுஆயிரந் தொழில் செய்திடுவீரே
என்று வியர்வைத் துளிகளின் வெற்றியை வாழ்த்தி வரவேற்றது முண்டு.
செம்புக்கும் கொம்பும் அஞ்சி - மக்கள்
சிற்றடிமைப் படலாமோ
என்று வீர உரை ஆற்றியது முண்டு.
பாரதியின் கவிப்பொருள் எந்த எல்லைக்குள்ளும் சிக்காதது. குடுகுடுப்பாண்டி, பண்டாரம், அம்மாக்கண்ணு என்று சாமான்ய மனிதர் முதல் வேல்ஸ் இளவரசர் வரை அது பாகுபாடின்றி விரிந்தது.
தெய்வங்களைத் தோழன், குரு, சேவகன், சீடன், காதலி என்று இந்திய பக்திச் சிந்தனையின் எல்லைகளை நொறுக்கி புதிய உணர்வு முறைகளில் தெய்வத் தன்மையை தரிசிக்கும் துணிச்சல் பாரதிக்கு இருந்தது.
எல்லைகளை விஸ்தரிக்கும் முயற்சியில் பெண் விடுதலைக்கு பாரதி உயர்த்திய போர்க் கொடியை இந்திய இலக்கியத்தில் அதற்கு முன்னும் ஏன் இன்றும் கூட அவ்வளவு உணர்ச்சிக் கொதிப்புடன் ஏந்திப் பிடித்தவர் உண்டா என்று நமக்கு ஐயம் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கும் பாரதி பாட்டு சொன்னான். யோகி, போகி, ஞானி என்ற மூவகை மனப் போக்கினரின் வாழ்க்கை நெறியையும் பாட்டுக்களாக்கினான்.
‘தேசுறு விவேகானந்தப் பெருஞ்சோதி’ என்று விவேகானந்தரை நினைத்து மெய் சிலிர்த்தான்.
சிறிய திட்டையிலே உளதோர் தென்னஞ் சிறுதோப்பு, வறியவனுடைமை அதனை வாயு பொடிக்கவில்லை என்று புயலில் தப்பிய ஓர் ஏழையின் சிறிய தென்னந் தோப்பிற்கு மகிழ்ந்து மிருக்கிறான்.
ஊழிக்கூற்று கவிதையில் பாரதி எட்டிய சிகரங்கள் உலகக் கவிதைக் கற்பனை எட்டிய உச்ச கட்டங்கள்தானே!
ஐந்துறு பூதம் சிந்திப் போயொன்றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப்போக
என்று எண்ணத்தின் எல்லைகளை தகர்க்கும் முயற்சி.
‘எத்திக்கினிலும் நின்வழியனல் போய் எட்டித் தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்’ - என்ற வரிகளிலும் ‘பாழாம் வெளியும் பதறிப் போய் மெய் குலையச் சலனம் பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலையக யுக முடிவிற்கு அப்பால் நின்றும் கற்பனையின் அனுமான வேகத்தில் அவன் காட்டிய பேராற்றல் பிரபஞ்சம் முழுமையும் தழுவும்போது.
‘காயிலே புளிப்பதென்னே, கனியிலே இனிப்பதென்னே, சேற்றிலே குழம்பலென்னே, திக்கிலே தெளிந்ததென்னே’ என்று இயற்கையின் மாறுபாட்டு அமைப்புக்களில் எந்தக் குழப்பமுமின்றி நீந்தித் தெளிவு பெறும்போது
காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்
என்று உலக இலக்கிய ஏடுகளில் கண்டறிய முடியாத ஓர் அபேத பாவத்தை எட்டும் போதும் எல்லையொன்றின்மை என்றால் என்னவென்று பாரதி நிரூபிக்கிறான்.
ஈசன், ஏசு, அல்லா, குரு கோவிந்த சிங், புத்தர் என சகல மதங்களையும் சம திருஷ்டியில் காண்கின்ற பாரதிக்கு மாயாவாதத்திற்கு மகத்தான அதிரடி கொடுத்து மண்ணிலே நிறுத்தம் வல்லமையும் உண்டு.
‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம் சொற்பனந்தானோ - பல தோற்ற மயக்கங்களோ?’ என்று உலுக்கிக் கேட்ட பாரதி.
‘காண்ப வெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?’ என்று எதிர்வாதம் செய்து நடத்திக் காண்பதுவே உறுதி கண்டோம். ‘காண்பதல்லால் உறுதியில்லை. காண்பது சத்தியமாம். இந்தக் காட்சி நித்தியமாம்’ என்று உலக வாழ்வின் நிஜத் தன்மைக்கு உறுதியுரைக்கின்றான்.
பாரதியின் வசனத்தேர், உருண்டோடிய எல்லைகளை இடவிரிவுக்கு அஞ்சி முற்றிலும் ஒதுக்க வேண்டி வருகிறது. ஜப்பான் தொழிற் கல்வி, ரஷ்யாவில் விவாக விதிகள், பெல்ஜியத்தில் நடந்த தொழிலாளர் கிளர்ச்சி, அயர்லாந்துக்கு சுதந்திரம் மறுத்தது குறித்து சீற்றம் என்று சமகாலத்தில் நடந்த சர்வதேச விவகாரங்களில் நுட்பமான ஈடுபாட்டோடு அவன் பார்வை விரிவு பெற்றிருந்தது.
பெண் விடுதலை, விதவா விவாகம், தேசீயக் கல்வி, சங்கீத விஷயம், நூலாசிரியர் படும்பாடு என்று எத்தனை விஷயங்களை அவன் தொட்டிருக்கிறான்! என்ன கிண்டல்! என்ன ஒரு மேதைமை! எவ்வளவு இதய பரிசுத்தம்! உண்மையின் மீதும் நேர்மையின் அணியிலும் எத்தனை பேரன்பு கொண்டு அவன் நின்றிருக்கிறான்!
பாரதிக்கு அனைத்தையும் அணைத்துக் கொள்ளும் அகன்ற கரம் உண்டு. தீமையை, கொடுங்கோன்மையை, சுரண்டலை, அடிமைத்தனத்தை அவன் வரிக்கு வரி எதிர்த்திருக்கிறான். அச்சத்தையும் அறியாமையையும் சீறிச் சாடியிருக்கிறான். எல்லைகளை நிறுவியவை அவையே என்பது அவனது உட்கிடக்கையாக இருந்திருக்கும் போலும்.
பழமையும் புதுமையும் வேதாந்த சிந்தனையும் யந்திர நாகரீகம் சந்திக்கும் முக்கியமான காலகட்டத்தில் பாரதியின் பணி நடந்தது. இரு துருவங்கள் போன்று எதிர் எதிர் நின்ற சிந்தனைப் போக்குகளுக்கு மத்தியிலே பாலமிடுகின்ற மகத்தான பணி பாரதியின் பணி.
அவன் செய்த யாத்திரை பெரியது. உலகு தழுவிய மனித சமுதாயம் முழுவதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அந்த மனிதனுக்கு எல்லை எப்படி இருக்க முடியும்? பாரதியிடம் முரண்பாடுகள் காண்போர் அவன் எல்லை கடந்தவன் என்பதை உணர்வது தான் நியாயமாகும்.
அவனது வாக்கின்படி அவன்
‘மூன்றிலில் ஓடுமோர் வண்டியை போலன்று
மூன்றுலகுஞ் சூழ்ந்தே
நன்று திரியும் விமானத்தைப் போலொரு
நல்ல மனம் படைத்தோன்.
பாரதி  எல்லைகள் இல்லாத விண்வெளி விமானி.




எல்லையொன்றின்மை

எல்லையொன்றின்மை
அந்த மனிதன் பிறந்தது இந்தியாவின் தென்கோடி மூலையில், நூற்றுக்கணக்கான சிதறுண்டிருந்த குட்டி சமஸ்தானங்களில் ஒன்றான எட்டயபுரத்தில் அவ்வூரின் சிறுபான்மை சமூகமான பிராமணர் குலத்தில் ஓர் ஓட்டு வீட்டில், அந்த மனிதன் பிறந்தான். முறையான பள்ளிப் படிப்போ பத்தாவது கூட இல்லை. உடலோ மிகவும் பூஞ்சை.
அவன் உலக நாடுகளைச் சுற்றிப் பார்த்தவன் அல்ல. கடல் கடந்தவனே அல்ல. மிச்சம் மிச்சமாக அவன் போக முடிந்தது வடக்கே காசி வரையில். அவன் உலவித் திரிந்து அனுபவங்களை நுகர்ந்த ஒரே ஒரு பெருநகரம் சென்னை மட்டுமே. மீதி இடங்கள் அந்த அளவிற்குக் கூட அனுபவ விரிவு கிடைக்க முடியாத நகரங்கள். திருநெல்வேலி, மதுரை, புதுச்சேரி, காசி இப்படி வாழ்வின் அந்திமகாலம் வரை அவன் அனுபவித்தது வறுமை மட்டுமே. செய்த தொழிலோ கொஞ்ச காலம் சமஸ்தானப் புலவர். கொஞ்சகாலம் தமிழாசிரியர் கொஞ்ச காலம் பத்திரிகையாளர். சொந்த நூல்களை வெளியிடப் பண வசதியற்ற பதிப்பாளர். பெரும்பாலான காலம் புத்தகங்களோ பத்திரிகையோ மிகவும் சிறு அளவில் விற்பனையான ஒரு காலத்தில் தமிழில் வெறும் எழுத்தை மட்டுமே நம்பிய சுயேச்சைக் கவிஞன், எழுத்தாளன்.
வாழ்ந்த காலமோ பிரிட்டிஷ் அடக்கு முறைக்கு அஞ்சி எந்தச் சிறுமையையும் ஏற்று உயிர் பிழைத்தால் போதும் என்ற மனோபாவமுள்ளோர் பெரும்பான்மையாக இருந்த காலம். நண்பர்களோ கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, அராஜகவாதியென வங்காளத்தில் முத்திரை குத்தப்பட்டு அரசியல் புகலிடத்திற்காக ப் புதுச்சேரிக்கு  வந்த அரவிந்தகோஷ். இருவர் தவிரப் பெரும் புகழ் பெற்றோர் எவருமில்லை. மற்றவர் பலர் இளையவர்கள் சிலர் புரட்சிக்காரர்கள். அவர்களில் வ.வெ.ஸு ஐயர் ஒருவர் தவிர வேறெவரும் கடல் கடந்து அன்னிய நாடுகளைச் சென்று அறியாதவர்கள். அவருக்கு விவேகாந்தரைப் போன்று முறையான குரு என்று எவருமில்லை. உயிர் வாழ்ந்த காலமோ வெறும் 39 ஆண்டுகள்.
இப்படி எல்லா வகையிலும் அந்த மனிதரின் விதி அவருக்கு எதிராக இருந்தது. மனித உள்ளம் விரிவடைவதற்குப் பௌதீகத் தேவையான புறக்காரணங்கள் என்று எதையெல்லாம் நாகரீக உலகம் வற்புறுத்துகின்றதோ அவற்றில் பெரும்பாலானவை அவருக்குக் கிடைக்கவில்லை.அவரை தேச விடுதலை இயக்கம் உருவாக்கியது என்று முழு உரிமை கொண்டாடுவதில்லை. அந்த இயக்கத்தின் வரையறைகளை அவர் பரந்துபட்ட அளவில் கடந்திருந்தார். அவர் உலகு தழுவிய மனித விடுதலையை, அதற்கு மேலே சென்று பஞ்ச பூதங்களின் கட்டமைப்பை நொறுக்கிய ஆன்மீக விடுதலையை அவர் கவிதைகள் பாடின. அவரே ஓர் இயக்கமாயிருந்தார். ஒரு மொழியின் இயக்கம் என்ற எல்லையை மீறி மானுட சிந்தனையின் இயக்கம் என்று விரிவடைந்தார்.
இத்தனைக்கும் அவர் வேலை வெறும் பேனாவால் நடந்த வேலை. அவர் செய்ததெல்லாம் கவிதை, கதை, கட்டுரை என்ற இலக்கிய முயற்சிகள்தான்.
தமது தாய்மொழி குறித்து என்னதான் (யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்) என்று அவர் அடித்துச் சொன்ன போதிலும், தமிழிலேயே பேசுவேன், தமிழிலேயே எழுதுவேன் என்று அசைக்க முடியாத மொழிப் பற்றோடு அவர் முரசறைந்த போதிலும், அவர் ஒரு மொழிக்கு மட்டுமே சொந்தமென்ற நிலையை மகத்தான முறையில் கடந்து நின்றார். இதற்கு வலிந்து சான்று தேடத் தேவையில்லை. நூற்றாண்டு விழா போதும்.
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. மாஸ்கோ, பாரீஸ், லண்டன், நியூயார்க் இப்படி ஒரு பட்டியல் போடலாம். எல்லா உலக நாடுகளின் பல முக்கிய நகரங்களில் பாரதிக்கு நூற்றாண்டு விழா நடந்தது.
இங்கெல்லாம் குடியிருக்கிற தமிழர்கள் திட்டமிட்டு முனைந்து தமது அருமந்தச் செல்வமான பாரதியின் விழாவைக் கொண்டாடியே தீர்க்க வேண்டுமென்ற ஆவேசத்தின் விளைவே இவ்விழாக்கள் என்றே கூட வைத்துக் கொள்வோம். 
எங்கே பாரதி கொண்டாடப்படுகிறானோ அந்த இடத்துக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தத்தை கருதி அந்தத் தமிழர்கள் இத்தகைய விழாக்களை ஏற்பாடு செய்ய முடியும்?
அது மாஸ்கோவோ, பாரிஸோ, கல்கத்தாவோ, ஜெய்ப்பூரோ, குக்கிராமமோ, மாநகரமோ எதுவானால் என்ன? அந்த இடங்களில் எங்கே மனிதன் வசிக்கிறானோ எங்கே உயிர்கள் துடித்து இயங்கி இன்புற்றுக் குலாவி மகிழ்ந்து துன்பத்தோடு சமர் செய்து கொடுங்கோன்மைக்கு எதிரே கொடி பிடித்து எந்தச் சிமிழ் தன்னை அடைத்து வைக்கிறதோ அதனோடு உதைத்துப் போராடி விடுதலைக்கு முயல்கின்றதோ அங்கெல்லாம் பாரதிக்கு ஏற்கெனவே ஓர் உறவு உண்டு. அவற்றோடு மனிதநேயமும் ஆழ்ந்த பற்றும் உண்டு.
இந்த பகைப்புலம் தான் புவியெங்கும் சிதறியுள்ள தமிழ் கூறும் நல்லுலகிற்கு தாங்கள் வாழ்கின்ற இடங்களில் எல்லாம் நமது மகாகவியின் நூற்றாண்டைக் கொண்டாடுகின்ற ஒரு தார்மீக பலத்தை அளித்திருக்கிறது. எல்லைகளைக் கடக்க வைத்திருக்கிறது.
பாரதி ஒருவனைத் தவிரவேறு எவருக்கு இவ்வளவு ஏகோபித்த மனத்தீயுடன் உலகெல்லாம் விழாக் கொண்டாட முடியும்?
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று தொடங்கிய ஒரு நாகரிகத்தின் சிந்தனைக் களத்தில் ஆழ்ந்து வேரோடிய ஒரு பெரும் மரம் தான் பாரதி. எல்லையொன்றின்மை என்ற திகட்டாத் தீஞ்சுவைக் கனிதான், பாரதி உலகிற்கு வழங்கிய மன விகாசம்.
சாதி, மதம், இனம், மொழி, நாடு, வர்க்கம் என்று நூறு கூறுகளாக மனித குலம் சிதறுண்டு சின்னச் சின்னத் துண்டுகளாக்கி, அப்படிக் குறுகி விடுவதிலே ஒரு பாதுகாப்பு இருப்பதாக துரதிர்ஷ்டவசமாக நம்பி முரண்பட்டுப் போர் செய்து ஒன்றையொன்று அழித்து விடுவதனால் தான் நாம் நிலை நிற்க முடியும் என்ற பரிதாபமான அறியாமையில் எப்போதும் போல மூழ்கியிருக்கின்ற இந்தக் காலத்திற்கு எப்போதையும் விடப் பெரிய அளவில் அதன் தேவை இருப்பதைத் தான் ஆண்டாண்டு தோறும் நாம் கொண்டாடும் பாரதி விழா நமக்கு உணர்த்துகிறது.
அவனது விழா எவ்வாறு எல்லைகளைக் கடந்ததோ அதைவிடப் பன்மடங்கு பேரளவில் அவன் மனம் எல்லைகளைக் கடந்திருக்கிறது. எல்லையொன்றின்மை என்ற சொற் புழக்கமே (coinage) பாரதி பிரபலமாக்கியது.
“எல்லையொன் றின்மை எனும் பொருள் அதனைக் கம்பன்
குறிகளாற் காட்டிட முயலும்...”
ஒரு ஞானப்பாடலாகத் தோற்றமளிக்கும் ‘நான்’ பாடல் அமானுஷ்யக் குறியீடுகள் (Mystic Symbols) கொண்டது. வானில் பறக்கும் புள், மண்ணில் திரியும் விலங்கு, கானில் வளரும் மரம், காற்று, புனல், கடல், விண்மீன், புழு, உயிர் என்று ஒவ்வொரு பொருளிலும் தான் இருப்பதாக அடையாளம் கண்டு கொண்டே வந்த பாரதி குறிப்பிட்ட ஒரு கவியின் பெயர் சொல்லி ஒரு சொற்றொடர் இசைக்கிறான். அந்தப் பாடலில் அந்த ஒரு பெயர் தவிர வேறு பெயர்கள் அல்லது பொருள்கள் திட்டவட்டமாகக் குறிக்கப்படவில்லை.
கம்பனிசைத்த கவியெலாம் நான்.
இப்படி இரண்டு முறை கம்பன் பெயரைக் குறிப்பிடும்பொழுது, எல்லையொன்றின்மை என்ற ஞானம் கவிச்சக்கரவர்த்தியின் வாயிலாக பாரதியை எட்டியிருக்கிறது என்பது நமக்கு ஊர்ஜிதமாகிறது.மனிதகுலம் மட்டுமின்றி சகல உயிர்க் குலத்தையும் மேலே சென்று பிரபஞ்சம் காலம் விண்வெளி என்ற பிரம்மாண்ட அளவுகளையும் தழுவி அணைக்கின்ற அவனது மனோ விசாலத்தை, ஏதோ நாம் தமிழராய்ப் பிறந்திருகிறோமே என்ப தற்காக நாம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.
நம்மிடையே அவன் மகாகவியா இல்லையா, உலக மகா கவிகளுள் ஒருவனா இல்லையா என்ற தர்க்கம் நிலவி வந்ததுண்டு.
ஹோமர், தாந்தே, கதே, புஷ்கின் ஷேக்ஸ்பியர், மில்டன், வால்மீகி, வியாசர் என்ற எந்த உலக மகாகவிகளும் தொட்டறிந்திராத உணர்வுகளின், உண்மைகளின் உச்சத்தை பாரதி தொட்டிருக்கிறான். அவன் உலக மகாகவியல்ல. 
அதற்கும் மேலே அவன் அண்டப் பிரபஞ்சங்களின் மகாகவி.
எவன் கவியோ, எவனது கவித்துவம் மொழி, இனம், நாடு, கண்டம், உலகம், உயிர்த்துவம், சடத்துவம், விண்வெளி, காலம் என்று எல்லாவற்றையும் கடந்ததோ எல்லாவற்றையும் நேசித்து எதிலும் பந்தமுறாமல் அந்தந்த எல்லைகளைக் கிழித்துக் கொண்டு சகலத்திற்கும் தன் அன்பை வழங்கியவாறு கடந்து செல்கிறதோ,
 கவிதை என்ற தொழில் ஏற்பட்டதன் உத்தம நோக்கம் எதுவோ அதுதான் அவன்! 
அதுதான் நம் பாரதி.
அவன் தாய்மொழி உணர்வு பெற்றிருந்தான், தாய்நாடு என்ற தவிர்க்கவியலாத காதல் கொண்டிருந்தான். இவை அவனுக்கு எல்லைகள் அல்ல, 
 மரத்தின் எல்லை வேர்களில் இல்லை. பிரதேச எல்லைகளைப் பெயர் சொல்லிக் கடந்து அறிந்திராத தமிழ் மொழியில் எங்கள் பாரத நாடு என்று புதிய எல்லையை முதலில் சிருஷ்டித்தவன் பாரதி.[தொடரும்]

வழிபாடுகள்

வழிபாடுகள்
நமது தேசீய குணங்களில் ஒன்று எதையும் வழிபாடு செய்தல் அது ஒரு தலைவராயினும் சரி; ஒரு சிந்தனையாளராயினும் சரி; எந்தத் துறையிலோ, எப்படியோ புகழ்பெற்ற நடிகரோ விளையாட்டு வீரரோ வேறு ஒருவராயினும் சரி. அவரை வழிபாட்டிற்குரிய மகானாக்கி விடுவது நம் நடைமுறை. மகான் மட்டுமல்ல மாமேதை; யுகத்திற்கு இப்பாலும் அப்பாலும் பிறக்கவோ  பிறந்திருக்கவோ முடியாத உன்னத புருஷராக்கி ஒருவரை வழிபடுவதில் நமக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.
மனிதர்களை விட்டு விடுவோம். மொழி, தேசம், கல்வி, கலை ஆகிய அமைப்புகளையும் கருவிகளையும் கூட, பூஜித்து உணர்ச்சி வசத்திற்குரிய புனித விஷயங்களாக்கி  மதிப்பவர்கள் நாம் .
இவற்றைப் பற்றிப் பேசும் போதெல்லாம் தெய்வ சன்னதம் கொண்ட சாமியாடிகள் மாதிரி தான் நாம் சிந்திக்கிறோம்.
இந்த வழிபாட்டு உணர்வு, கேள்வி கேட்க முடியாத அந்தஸ்திற்கு ஒன்றை அல்லது ஒருவரை உயர்த்தி விடுகிறது. நிறை குறைகளை ஆராய்ந்து உண்மையை உணர்ந்து கொள்வதிலிருந்து இந்தப் போக்கு நம்மைத் தொலை தூரத்திற்கு அப்புறப்படுத்துகிறது.
நம்மை உணர்ச்சி வசப்படுத்துவதற்கு ஒரு பம்ப் மாதிரி, ஏதோ ஒன்றின் மீதான வழிபாடு மாறுகிறது. உண்மை நிலைகளை விட்டு ஒதுங்கிப் போன நாம் பலஹீனர்களாகிறோம். யாரையாவது எதையாவது வழிபட்டுக் கொண்டிருப்பதே நம் தன்மையான பிறகு, நாம் தன்னம்பிக்கை அற்றவர்களாகிறோம்.
வழிபாடுகளில் புதிய வெளிச்சம் கிடைக்கும் என்று வீணாய் நாம் நம்பத் தொடங்குகிறோம்.
உதாரணமாக, இந்த தேசத்தில் அரசியல் தனி மனித வழிவாட்டினாலேயே நடைபெறும். மதம், கலாசாரம் எதுவாயினும் அதற்கு ஒரு தலைவனும் (ஹீரோ) அதன்மீது ஒரு வழிபாடும் இங்கே அவசியம்.
இந்த வழிபாட்டுக் குணம், ஏன் நம் தேசத்தில் மட்டும் இவ்வளவு விசேஷமாக வேரூன்றியிருக்கிறது?
நாம் மானுடத்தின் பெருமையை மரணத்தின் முன்னே ஒப்பிட்டு, மனிதனை அற்ப மானிடப் பூச்சியாக்கினோம். நமது சித்தாந்தங்களும் தத்துவங்களும் தலைமுறை தலைமுறையாக நமக்கு நீ எளியவன்; நீ அண்ட கோளங்களின் முன்னே அற்பமானவன் என்ற கருத்தை நமக்குப் போதித்திருக்கின்றன. நமது வம்சத்தின் ரத்தத்தில் அது ஊறி நிற்கிறது.
இந்தியாவிற்கு வெளியே மனிதன், தான் சாதாரணமானவன்; பிரம்மாண்டத்தின் முன்னே அற்பத்துளி என்ற சித்தாந்தச் சிறைகளின் சிக்கிக் கொள்ளவில்லை. இயற்கையை ஆராய்வதும் வெல்வதும் அவன் இயல்பாயிற்று. அவன் தங்கு தடையற்ற ஆத்ம விசாலத்தோடு தனது மானுடப் பெருமையை நிரூபித்தவாறே வளர்ந்தான்.
உயர்ந்தவை எத்தனையோ என்ற கற்பனையில் நாம் அடிமைகளாய் வழிபாட்டில் இறங்கினோம். நூற்றுக் கணக்கான அந்நியர்கள், உருவிய வாளோடு நம் தலை மீது குதிரைகளை ஓட்டிச் சென்றார்கள். நாம் அனைவரையும் வழிபட்டோம். எல்லோரிடமும் சமரசம் செய்து கொண்டோம். அது நம் பெருமை என்று வெட்கமின்றிக் கொண்டாடிக் கொண்டுமிருக்கிறோம்.
தன்னை அடிமையாக்கிக் கொண்டவர்களுக்கு, வழிபடுவதற்கு அனுபவங்களை ஞானமாக்கியோ, வேதாந்தமாக்கியோ, கவிதையாக்கியோ, கதையாக்கியோ அதில் ஓர் இன்பம் காண்கிறான்.
இருக்கட்டுமே! எல்லாம் இருக்கட்டும். எதுவும் பிரயாணத்தின் போக்கைத் தடுக்காமல் காலை இடறாமல் இருந்தால் சரி. அணை விழுந்து தேங்காமல் இருந்தால் சரி.
எங்கள் ஊரில் காய்கறிகள், குறிப்பாகத் தக்காளி அதிகம் பயிராகிறது. இங்கே பாறைகள் அதிகம். கரும்பு நிறைய விளைகிறது. இது பெரிய கிராமம். ஜீவனம் விவசாயம். மனிதனது ஆதித் தொழில்களில் ஒன்று.
ராக்கெட்டுகளும் விண்வெளிப் பயணமும் புளிக்கிற அளவு பழைய கதையாய் விட்டன. இந்தியாவே ராக்கெட் விட்டு ஏவுகணை அனுப்பிவிட்டது.
என் கிராம மக்கள், எதற்கும் அசையாமல் பழைய ஜீவனத்தில், பழகிய சௌகரியமான பாதையில் பஞ்சம் வந்தாலும் இடைவிடாமல் பிறந்து வாழ்ந்து மாண்டு கொண்டிருக்கிறார்கள்.தொழிற் புரட்சியாம்.. யந்திர நாகரீகமாம். என்னென்னவோ சொல்கிறார்களே.. என் கிராமம் அசையவில்லை.
காரணம் தொழில்கள்... விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாயினும் தொழில்கள் செய்ய கிராமம் பயிற்றுவிக்கப்படவில்லை நான் நினைப்பதுண்டு தக்காளியை வைத்து தக்காளி ஜூஸ் கெட்ச் அப்.. பாறைகளை உடைத்து ஜல்லிக் கற்கள்.. கரும்பைப் பிழிந்து அச்சு வெல்லங்கள்.. இவ்வாறு கிடைக்கும் பொருளை உருமாற்றித் தொழில்களை ஏற்படுத்தினால் கிராமம் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலைமாறுமே என்று.
மக்கள் அரசாங்கத்தையும், அரசாங்கம் மக்களையும் திருப்பித் திருப்பி ஒருவரையொருவர் சுட்டிக் காட்டுவதே எந்த முன்னேற்றத்திற்கும் இடைஞ்சல் தருகிறது.
கிராமத்தில் பட்டதாரிகள், வேலை தேடுவோர் கூட்டம் பெருகுகிறது. வெள்ளைச் சட்டையணிந்து மேஜை எதிரில் பைல்களைக் கட்டியழும் பாடாவதி அனுபவத்தை மட்டுமே வேலை என்று நம்பிக் கொண்டு கிராமத்தின் கல்வியறிவு பெற்ற ஜனத்தொகை குறைந்து செல்கிறது.
தன்னம்பிக்கையோடு சொந்தத் தொழில் செய்வதற்கு எவரும் முன்வரத் தயாராய் இல்லை.
கல்வி முறையைக் குற்றம் சாட்டுகிறார்கள். சமூகச் சூழ்நிலையைக் குறை சொல்கிறார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறித்துச் சீறுகிறார்கள். எதன் மீதாவது பழிபோட்டு, எதையாவது விமரிசித்து எந்த நிழலோடாவது போராடுவதை விடக் காரியம் செய்வது மேல்.
எந்த முன்னேற்றமும் தன்னிடமிருந்து, தான் இருக்கும் இடத்திலிருந்துதான் மலர முடியும். அது சுலபமானது. இயற்கையானது. காரியம் செய்ய வேண்டியவன்தானே, என்பதை மறப்பவன் அல்லது தான் உழைக்கத் தயாராய் இல்லாதவன்தான் தேசத்தைக் குறை சொல்கிறான்.
ஒவ்வொருவனின் தேசமும் முதலில் அவனிடமிருந்து தான் ஆரம்பமாகிறது. தன்னை நிறைவு செய்து கொள்வோன் தேசத்தின் 120 கோடி குறைகளில் குறைந்தபட்சம் ஒன்றை நிவர்த்திக்கிறான் அதற்குப் போராட வேண்டுமே; ஆயிரம் இன்னல்களையும் துன்பங்களையும் சுமக்க வேண்டுமே! ஆமாம்.. அதுதான் வாழ்க்கை. அவற்றை வெல்ல நமக்குள் உள்ள மானுடம் எவ்வளவு வெளிப்படுகிறதோ, அந்த அளவே நாம் மனிதர்கள். யாவற்றிலும் முக்கியமானது ஆழ்ந்த விருப்பம். அவா அல்ல விருப்பம்.
அவா வேறு, விருப்பம் வேறு. அவாவில் நம்பிக்கை குறைவு விருப்பத்தில் நம்பிக்கை சேர்கிறது.
தொழுது கும்பிடுவதற்கு, எஜமானர்கள் தேவையாயினர். எஜமானத்துவத்தின் பிம்பங்களாக எண்ணி வாழ்வில் சௌகரியங்களுக்காக ஏற்பட்ட அமைப்புகளை நாம் தொழுது கொண்டாடி வழிபடத் தொடங்கினோம்.
வழிபாடு, அறிவிற்கும் சிந்தனைக்கும் என்றுமே பகையாக இருந்து வந்திருக்கிறது. நம் அடிமைத்தனம் நமது உயர்ந்த குணங்களை அழித்தது. நாம் பொறாமைக்காரர்களானோம். குருட்டு நம்பிக்கைகளைக் கொலுவேற்றி ஆளுக்கு ஒரு ஹீரோவைப் பிடித்துக் கொண்டு நமக்குள்ளே உயர்வு தாழ்வுகளைக் கற்பித்துக் கொண்டோம். சச்சரவு செய்து நமது ஐக்கியத்தைச் சிதைத்துக் கொண்டோம்.
எதை அல்லது யாரை, எதற்காக நாம் வழிபாட்டுப் பொருள் ஆக்கினோமோ அதற்கும் நம் வழிபாட்டிற்கும் சம்பந்தமில்லாமல் போயிற்று ஒன்றை வழிபடுவதன் மூலம் அதன் உயர்ந்த நிலைகளை நாம் அடைவோம் என்று நமது சித்தாந்தங்கள் பிரசாரம் செய்தன. ஆனால் நடந்தது என்ன?
அதற்கும் நமக்குமிடையே எந்த கருத்துப் பரிமாற்றமும்  ஏற்படாது சடங்கும் சச்சரவும் மிச்சமாயிற்று.
வழிபாடுகளை எதிர்த்துக் கலகம் செய்கிறவர்கள் வந்தார்கள். அவர்கள் சமூக சீர்திருத்தக்காரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அந்தக் கலகங்களின் அற்ப வெற்றி கூட, அவர்களும் வழிபாட்டிற்குரிய தனி நபரானதாலேயே சாத்தியமாயிற்று.
இந்த வழிபாட்டு உணர்வு, நம்மை எளிய  விஷயங்களிலும் நிரட்சரகுட்சியாக்கி வைத்திருக்கிறது. ‘ஜிம் கார்பெட்’ என்ற புகழ்பெற்ற வேட்டைக்கார எழுத்தாளர்  ‘Jungle Lore’ என்ற புத்தகத்தில் பாம்புகள் நிறைந்த இந்தியாவில் எவை விஷம் நிறைந்தவை. எவை விஷமில்லாதவை என்று கூட இந்தியர்கள் தெரிந்து கொள்ளாதது ஆச்சரியம் என்று நாம் வெட்கும்படியாக வியந்து கொள்கிறார். நாம் பாம்புகளை வழிபடுகிறவர்கள். ஆகவே அதற்கு அஞ்சுவோர்.
எனவே அதைப் போய் ஆராய்வோமோ?
இங்கே அதிகமாக விஞ்ஞானிகள் தோன்றவில்லை. ஆராய்ச்சியாளர்கள் தோன்றவில்லை. செயல்வீரர்கள் தோன்றவில்லை. மனித குலம் என்னென்ன அற்புதங்களைச் சாதித்திருக்கிறதோ அவற்றை ஈன்றெடுத்தவர் தோன்றவில்லை. இங்கே வேதாந்திகளும் மகான்களும் தோன்றினார்கள். அவர்கள் மரணத்திற்கு அப்புறம், பிறவிக்கு முன்பு என்று யோசிக்கப் பழகினார்கள். நம்மை பழக்கினார்கள்.
வாழ்க்கையை நாம் மறுத்தோம் ஒருபுறம் சந்நியாசிகளைப் பற்றிய வழிபாடு இன்னொருபுறம் கண்டதையெல்லாம் கைதூக்கி வானளாவ உயர்த்தும் வழிபாடு இந்த கற்பனைகளில் தான் நமது மூதாதையர் ரத்தம் சிந்தினர். இதற்குள் கண்ட வேறுபாடுகளில் கழுவேறினர்; சிரமறுத்தனர். காது மூக்குகளை அறுத்து ஜெயஸ்தம்பம் நாட்டிக் கொண்டனர்.
பிரிட்டிஷ்காரர்கள் தனது சாம்ராஜ்யத்தின் காரியாலயங்களுக்கு குமாஸ்தாப் பட்டாளம் தேவை என்பதற்காக நமக்கு ஒரு அடிமைக் கல்வி முறையை அமைத்துக் கொடுத்தார்கள். அதை உதறிவிட்டு நமக்கு உகந்த கல்வி முறையை தேர்ந்தெடுக்கக் கூட அறுபத்தைந்து வருஷங்களாக நாம் யோசிக்கிறோம். அந்தக் கல்வி முறையை வழிபட்டு வழிபட்டு அது பழகிவிட்டதே; அதை எப்படி அவ்வளவு சலபத்தில் தூக்கி எறிவோம்?
நமக்கு வயிறார உணவில்லை. மானம் மறையப் போதுமான துணி கிடையாது. நவீன சிந்தனை மனிதனுக்கு என்னென்ன வசதிகளை வழங்கியிருக்கிறதோ அவற்றில் பல நமக்கு கிடையாது. மலஜலம் கழிக்கத்தக்க சுகாதார வசதிகள் கூடக் கிடையாது என்று மனம் கொதித்துப் போன ஒரு விஞ்ஞானப் பேராசிரியர் எழுதியிருக்கிறார்.
ஏன்? ஏன்? இந்தத் தேசம் வறுமை நிறைந்தது என்பதாலா? அல்லவே அல்ல. நம்மைவிட வசதிக் குறைவான தேசங்கள்;
இயற்கைத் தொல்லைகளுக்கும் துயர்களுக்கும் அடிக்கடி இரையாகும் ஜப்பான்; ஆகிய இவை புரிந்துள்ள மகத்தான சாதனைகள் எப்படி சாத்தியமாயின?
தன்னை அற்பமானவனாகச் சபித்துக் கொண்டவன். பல்வேறு வழிபாடுகளுக்கு அடிமையாக தன்னை நிலை தாழ்த்திக் கொண்டவன். இயற்கையோடு நடக்கும் வாழ்க்கை என்ற ஈவிரக்கமற்ற போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவது எப்படி சாத்தியம்? தேசத்தின் வறுமை என்பது அந்தத் தேச மனிதனின் மனசில் இருக்கும் தரித்திரம் தானே!
அது மொழியானால் என்ன தேசமானால் என்ன? கலையானால் என்ன கலாசாரமானால் என்ன? மகானானால் என்ன மேதையானால் என்ன? ஒன்றை ஏன் மனிதன் வழிபட வேண்டும்?
எதை வளர்த்துச் செழிக்க வைக்க வேண்டுமோ அதன் பேரில் எதற்கு வழிபாடு? இது நம் அடையாளம் என்ற பற்றும் பிரியமும் வழிபாட்டின் பேரால் சாமியாடுவதால் சாதிக்கப் போவதென்ன?
கல்வியறிவற்றவர்கள் தான் இங்கே வழிபாட்டின் பலிபீடத்தில் வீழ்ந்தவர்களோ? இல்லையில்லை. மெத்தப்படித்த மேதைகளும் பட்டங்கள் பெற்ற பெரியோர்களும் இதற்கு இரையானோம்.
இந்த தேசீய பலவீனத்தைப் புரிந்து கொண்டு சில சாமர்த்தியசாலிகள் வழிபாட்டிற்குப் புதிய ஹீரோக்களை சிருஷ்டிக்கிறார்கள். புதிய ஸ்லோகங்களை இயற்றுகிறார்கள. புதிய லட்சியங்களை ஆலய பீடத்தில் ஏற்றுகிறார்கள். நமக்குள் குரோதங்களையும் பிளவுகளையும் விசிறி விட்டு நடுவில் நுழைந்து சுய லாபங்கள் தேடிக் கொள்கிறார்கள்.
நமது வாழ்க்கை இந்த வெற்று ஆரவாரத்தின் பின்னே ஓடி வியர்த்தத்தை அறுவடை செய்து வழக்கமான துயர்களில் முடிகிறது.
வழிபாடு என்பதே ஓர் ஆதிமனித பலவீனம். அது பயத்திலே ஜனித்தது. பழக்கத்திலே வளர்ந்தது. மன்னர்களின் கொலைவாளும் நிலப் பிரபுவின் சவுக்கும் மதத்தின் மிரட்டலும் இணைந்த எதிர்மறை அணுகலால் (Nஞுஞ்ச்tடிதிஞு அணீணீணூணிச்ஞிட) நமது ரத்தத்தில் திரடு கட்டி நிற்பது.
உலகில் மனிதன் வழிபடுவதற்கு எதுவும் இல்லை. அவனது கம்பீரமும் பிரகாசமும் நிறைந்த ஆத்மா கண்டு நடுங்கும் ஆற்றல் பெற்ற எதுவும் இந்தப் பூமியின் மேலே இல்லை. மனித குலத்தின் வரலாறு இடைவிடாது நடத்திவரும் போராட்டத்தில் இன்றளவு அது பெற்றிருக்கும் வெற்றியும், வழிபாட்டின் பேரால் வந்ததில்லை. வழிபாடுகளை உதறிவிட்டு ஒவ்வொன்றோடும் முரண்பட்டு முரண்பட்டு உண்மையைத் தேடி ஆராய்ந்து போரிட்டு வென்றால்தான் சாத்தியமாகி இருக்கிறது.
மனிதர்கள் பேணிக்காக்க வேண்டிய நெறிகளை வழிபடுவதனால் கைக்கொள்ள முடியாது. தனது பொறுப்பையும் கடமையையும் எதிரிட்டுதான் சுமக்கப் பயந்தவனே, தனது சுதர்மத்தை வகித்து செயலாற்றுச் சோம்புவோனே எதையாவது வழிபட்டு தன்னை உணர்ச்சிவயம் (குஞுணண்ச்tடிணிணச்டூ) ஆக்கிக் கொண்டு அதில் ஒரு சுகம் கண்டு தான் அதற்காக வாழ்ந்தவன் என்று குருட்டு பிரமைக்கு ஆளாவான்.
மாறுதல்களில் கொந்தளித்து உருவாகி வரும் புதிய இந்தியா, புதிய தமிழகம் நீண்ட அனுபவங்களில் ஒன்றைப் பெறப் போகிறது. எவற்றை நேசிக்கிறதோ அதை வழிபடுவதை அது நிறுத்திக் கொள்ளும். அது கேள்விகள் கேட்கும். ஆராயும், சித்திக்கும், தனது குறைகளை வழிபாட்டு வேள்வியின் ஆரவாரத்தில் மறைத்துக் கொள்ளாது. தனது குறைகளை குறையென்று அங்கீகரித்து நிறைவுகளை நோக்கித் தன் சலியாத பயணத்தைத் தொடரும்.
நமது பங்காக, நாமும் நம்மை முறுக்கேற்றிக் கொள்ளும் வழிபாடுகளிலிருந்து விடுபடுவோம். எதை நேசிக்கிறோமோ அதற்காக நாம் செய்யும் மெய்யான பணியின் மூலம் திருப்தியுறுவோம். நாம் எவ்வளவு உயர்ந்த மனிதர்களாயினும் நாம் சார்ந்து நிற்கும் துறை எவ்வளவு விழுமியதாயினும் வழிபாடுகளின் சுமை நம் மீது விழாதவாறு ஒதுங்கி நிற்போம்.
வழிபாடுகளை எவன் வெட்கமில்லாமல் பெற்றுக் கொள்கிறானோ, அவன் தனக்கு உரிய நியாயமான மரியாதைக்கும் அருகதை இழந்தவன். சுயமரியாதை இல்லாதவன். அவனே வழிபாடு என்ற விஷச் சக்கரத்தை சுதந்திர மனித சிந்தனைக்குக் குறுக்கே உருட்டுகிறவன். நம்மை  எவரும் வழிபட அனுமதியோம். நாமும் எந்த வழிபாடுகளாக்கும் இரையாக மாட்டோம்.நவீன மனிதன் உருவாக இதுவே நாம் செலுத்தும் முதல் பங்கு.

மனம் என்ற மகாசமுத்திரம்

மனம் என்ற மகாசமுத்திரம்

அது ஒரு மாலை நேரம். சூரிய கோளம் செம்பரிதியாகி மேற்குத் திசையில் சிறுகச் சிறுக அமிழ்கிறது. விடை பெறுவது மாதிரி, அவள் எருமைகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அவளை எனக்குத் தெரியும். ஒரு சமீபத்திய மணமகள். அவள் சிரிக்கும்போது தான் அவள் எவ்வளவு கறுப்பு என்று தெரியும். எப்போது சிரித்தாலும் அவள் கண்கள் இணைந்து சிரிக்கும். அதுதானே நிஜமான சிரிப்பு கூட ஒரு சோகமும் உண்டு. பளீரென்று எரியும் தீபத்தின் கீழே, அதைத் தாங்கும் பீடத்தின் பக்கத்தில் அதன் நிழல் படிவது மாதிரி.
அவள் வரும் பாதையில் நிழல்கள் மறைந்துவிட்டன. அந்தி வேளை. கருவேலங்காடு மாதிரி, ஏரியில் நட்ட மரங்கள். அங்கங்கே குட்டையில் நீர் தேங்கி, நீலமான வானவெளியை, நீர்க்கோலப் பூச்சி போடும் வட்டங்களில் நெளியும் திரையாகப் பிரதிபலிக்கிறது. சிள்வண்டுகள் தங்கள் ராக்காலப் பாராயணத்தைத் தொடங்கி இருந்தன. எப்போதோ பறக்கும் காகத்தின் குரல் கேட்டு அவை திடுக்குற்று ஒரு கணம் மௌனமாயின. மீண்டும் தொடர்ந்தன.
நான் சாயந்திர உபாதை நீக்க வந்தவன், அவள் முன் எதிர்ப்பட்டேன். என்னை அவள் கவனிக்கவில்லை. காட்டோரமாக எருமை மேய்த்துத் திரும்புகிறாள். உச்சிக்குப் பின் போயிருப்பாள். காலையெல்லாம் வீட்டு வேலை. பிறகு காட்டோரம் இந்த வேலை.
அவள் கணவன் ஒரு விறகு வெட்டி செருக்கான இளமை திடகாத்திரமான உடம்பு. அவன் கைகள் காய்ப்புக் காய்த்திருக்கும். வீட்டிற்கு விறகு வாங்கிச் சில்லறை தரும்போது அந்தக் கையைப் ஸ்பரிசித்திருக்கிறேன்.
நிலா உதைக்கப்பட்ட பந்து போல் கிழக்கே தோன்றுவதை அவள் கவனித்தேன். அவள் உதடுகள் நெகிழ்ந்து ஒரு தினத்தின் உழைப்பால், களைத்திருந்த முகத்தின் இருள் போனது போல் புன்னகை செய்தாள். அவள் எதை நினைக்கிறாள்? வந்திருக்கும் இரவையா... சென்றுபோன இரவையோ... அவள் சமீபத்திய மணமகள். ஓ! இந்நேரம் அவள் கணவன் வீடு திரும்பி இருப்பான். ஒரு தினத்தின் உழைப்பை மற்றொரு தினத்திற்குப் பிரஷ்டம் செய்துவிட்டு அவளது விறகு வெட்டியின் கரடு முரடான கரங்களில் ஒரு நிலவெரியும் இரவில், கண்துயில அவள் போய்க் கொண்டிருக்கிறாள்.
கவலைகள்...உழைப்பு... களைப்பு... இவற்றின் அர்த்தம் சொற்ப நேரமாவது அவளுக்கு மறந்துபோகும். அதற்காக நான் மனப்பூர்வமாக மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சியில் நான் ஒரு ஆங்கிலக் கவிதை எழுதினேன். “A Recent bridehood” என்று பெயரிட்டேன்.
Reflections of a recent bride- hood
It’s a mirror of rare
reflections, the lake brimming.
and the lantern’s wick flame
from  a recent bride's hand,
dancing down below
the furling sheets
wipes off a
a little corner
of darkness in water.

     She homes her buffaloes
     back from the freedom
     of the mountain
     and adjoining woods

It’s little late;
just enough to
swell the impatience
of her woodcutter.

      A smile succulent
      reviewed by her
      own profile’s reflection,
     how she has been
      trapped!

Lost something
to attain something,
to respond, to revolt
to yield, to possess,
 how many new cares!.

      A wedlock is a lock
      of  lost keys
      chased on forever.

Her anklets jingle
as her paces
grow faster,
throwing  echoes,
on the route
to silence.
எழுதி முடித்தபின் தோன்றிற்று. இதுவே இந்த மெத்தப் பழைய உலகம் சுழலும் வகைப்பாடு என்று.
எனக்குள் ஒருவேதாந்தி இருக்கிறான். அனேகமாக நம் எல்லோருள்ளும் அவன் இருப்பானே! சற்று நிதானமாகக் கவனித்தால், அவன் குரல் கேட்கும் எந்த அனுபவங்களையும் அவன் உற்றுக் கவனித்து ஒரு மூதறிஞன் போல் சமயங்களில் ஒரு முத்தாய்ப்பு வைப்பான். இப்போது அவன் அப்படி வைத்தான்.
அட போடா வேதாந்தம் என்ற அவனை அதட்டி விட்டு நான் சித்தவெளியில் மேலே நடந்தேன். துயரமும் சோகமும்தான், வேதாந்திக்கு விருந்தாகின்றன. காரணம் என்னவென்று யோசிக்கலானேன்.
நான் திரும்புகையில் ஏரிக்கரை ஓரத்துப் பாதை தெரியாதவாறு ஓர் இருட்டு. சந்திரனுக்கு இன்னும் பிரகாசம் அதிகமாகவில்லை. பாதையோரத்து காரைச் செடிகளில் மின்மினிப் பூச்சிகள் மின்னலாயின. காற்று ஒரு சல்லாத்துணி மாதிரி என் உடம்பை வருடியது. மனம் தெளிந்த குளம் போல்அமைதியாய் இருந்தது. பலர் நடந்து பாதை மண் நடைச் சுகத்திற்கு ஏற்றபடி மிருதுப்பட்டிருந்தது. நடை ஒரு சுகம். காற்று ஓர் ஆனந்தம். கருவேல மரங்களின் கிளைகளினூடே சிறைப்பட்டிருந்த நிலா ஓர் அழகு. மின்மினி சௌந்தர்யம்.
உலகம் கலப்பற்ற ஆனந்தமாக இருக்கிறதே என்று வியந்தேன். வேதாந்தி பேசினான். ‘யாவும் மாயை. பஞ்ச பூதச் சேர்க்கையின் விளைவாய் மனம் வெளியிடும் நினைவுச் சலாகை’ என்றான், நல்லது என்றேன்.
அப்போது தோன்றிற்று. மனிதனுக்கு இன்பம் போதாததால் அவன் துன்பத்தைத் தேடுகிறான் என்று வாழ்க்கை, நிறைந்த கடலாக இருக்கையில் கைகளால் முகந்து அள்ளியோர், தங்கள் கையின் அளவு குறைந்திருப்பது கண்டு, ஐயோ குறைந்திருக்கிறதே என்று ஏங்குகின்றனர்.
ஞானி கையளவு நீரிலும் கடலைக் காண்கிறான். ஒரு துளி நீரிலும் கடலைக் காண்கிறான். குறை, கையினால் அள்ளுவதில் இல்லை. கையையும் கடலையும் ஒப்பிடுவதால் வருகிறது. அள்ளினால் வருத்தம் பெறுவோர் அள்ள வேண்டாம். ஆனந்தமாக வாழ்க்கையில் இறங்கி மூழ்கட்டும்.
விவேகானந்தர் சொன்னார். “இன்பத்தை வரவேற்போர் அது துன்பமாகிய மகுடத்தை அணிந்து வருவதையும் ஏற்க வேண்டும்” என்று.
தேட வேண்டும். ‘அலைய வேண்டாம். ஒன்று தேடியலைவோர், கிடைப்பதில், இருப்பதில் தாம் தேடுவதைக் கூர்ந்து கண்டால் அது இரப்பதைக் காண்பார். எருமை மேய்த்த புது மணப்பெண் பகலின் துன்பங்களை இரவில் இன்பத்தில் மறந்து போகிறாளே அதுபோல்.
எதுவும் நீடிப்பதில்லை. நீடிக்கின்ற எதுவும் துன்பமாகிறது. இன்பம் நீடித்தால் துன்பம் ஆகிறது. துன்பம் நீடித்தாலோ அது பழகிப் போய் மறந்து போகிறது.
எனது சித்தக் கடலில் ஞானி ஒருவனும் உண்டு. அவனும் இப்படி ஏதாவது முணுமுணுப்பான். நனைசுவர்க் கூரையின் கனை குரல் பல்லி அவன். “ஞானியே உன் உபதேசங்களுக்கு வணக்கம்” என்று அவன் வாயை அடைத்தேன்.
மனிதனுக்கு எதுவும் போதுவதில்லை, இன்பம் போதாமல் துன்பம் தேடுகிறான். துன்புறுவதில், துன்புறுத்துவதில் ஓர் இன்பம் தேடுகிறான். அனுபவங்களை ஞானமாக்கியோ, வேதாந்தமாக்கியோ, கவிதையாக்கியோ, கதையாக்கியோ, அதில் ஓர்இன்பம் காண்கிறான்.
இருக்கட்டுமே! எல்லாம் இருக்கட்டும். எதுவும் பிரயாணத்தின் போக்கைத் தடுக்காமல் ,காலை இடறாமல் இருந்தால் சரி. அணை விழுந்து தேங்காமல்இருந்தால் சரி.
எங்கள் ஊரில் காய்கறிகள், குறிப்பாகத் தக்காளி அதிகம் பயிராகிறது. இங்கே பாறைகள் அதிகம். கரும்பு நிறைய விளைகிறது. இது பெரிய கிராமம். ஜீவனம் விவசாயம். மனிதனது ஆதித் தொழில்களில் ஒன்று.
ராக்கெட்டுகளும் விண்வெளிப் பயணமும் புளிக்கிற அளவு பழைய கதையாய் விட்டன. இந்தியாவே ராக்கெட் விட்டு, ஏவுகணை அனுப்பிவிட்டது.
என் கிராம மக்கள், எதற்கும் அசையாமல் பழைய ஜீவனத்தில், பழகிய சௌகரியமான பாதையில் பஞ்சம் வந்தாலும் இடைவிடாமல் பிறந்து வாழ்ந்து மாண்டு கொண்டிருக்கிறார்கள். தொழிற் புரட்சியாம்.. யந்திர நாகரீகமாம்.. என்னென்னவோ சொல்கிறார்களே.. என் கிராமம் அசையவில்லை.
காரணம் தொழில்கள்... விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாயினும் தொழில்கள் செய்ய கிராமம் பயிற்றுவிக்கப்படவில்லை நான் நினைப்பதுண்டு தக்காளியை வைத்து தக்காளி ஜூஸ் கெட்ச் அப்.. பாறைகளை உடைத்து ஜல்லிக் கற்கள்.. கரும்பைப் பிழிந்து அச்சு வெல்லங்கள்.. இவ்வாறு கிடைக்கும் பொருளை உருமாற்றித் தொழில்களை ஏற்படுத்தினால் கிராமம் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலைமாறுமே என்று.
மக்கள் அரசாங்கத்தையும் அரசாங்கம் மக்களையும் திருப்பித் திருப்பி ஒருவரையொருவர் சுட்டிக் காட்டுவதே எந்த முன்னேற்றத்திற்கும் இடைஞ்சல் தருகிறது.
கிராமத்தில் பட்டதாரிகள், வேலை தேடுவோர் கூட்டம் பெருகுகிறது. வெள்ளைச் சட்டையணிந்து மேஜை எதிரில் பைல்களைக் கட்டியழும் பாடாவதி அனுபவத்தை மட்டுமே வேலை என்று நம்பிக் கொண்டு கிராமத்தின் கல்வியறிவு பெற்ற ஜனத்தொகை குறைந்து செல்கிறது.
தன்னம்பிக்கையோடு சொந்தத் தொழில் செய்வதற்கு எவரும் முன்வரத் தயாராய் இல்லை.
கல்வி முறையைக் குற்றம் சாட்டுகிறார்கள். சமூகச் சூழ்நிலையைக் குறை சொல்கிறார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறித்துச் சீறுகிறார்கள். எதன் மீதாவது பழிபோட்டு, எதையாவது விமரிசித்து எந்த நிழலோடாவது போராடுவதை விடக் காரியம் செய்வது மேல்.
எந்த முன்னேற்றமும் தன்னிடமிருந்து, தான் இருக்கும் இடத்திலிருந்துதான் மலர முடியும். அது சுலபமானது. இயற்கையானது. காரியம் செய்ய வேண்டியவன் தானே, என்பதை மறப்பவன் அல்லது தான் உழைக்கத் தயாராய் இல்லாதவன்தான் தேசத்தைக் குறை சொல்கிறான்.
ஒவ்வொருவனின் தேசமும் முதலில் அவனிடமிருந்து தான் ஆரம்பமாகிறது. தன்னை நிறைவு செய்து கொள்வோன் தேசத்தின் 120 கோடி குறைகளில் குறைந்தபட்சம் ஒன்றை நிவர்த்திக்கிறான். அதற்குப் போராட வேண்டுமே; ஆயிரம் இன்னல்களையும் துன்பங்களையும் சுமக்க வேண்டுமே! ஆமாம்.. அதுதான் வாழ்க்கை.. அவற்றை வெல்ல நமக்குள் உள்ள மானுடம் எவ்வளவு வெளிப்படுகிறதோ, அந்த அளவே நாம் மனிதர்கள். யாவற்றிலும் முக்கியமானது ஆழ்ந்த விருப்பம். அவா அல்ல விருப்பம்.
அவா வேறு, விருப்பம் வேறு. அவாவில் நம்பிக்கை குறைவு. விருப்பத்தில் நம்பிக்கை சேர்கிறது.
ஆழ்ந்த விருப்பம் விதை போல் நிலம் பிளந்து இறங்கி வேரூன்றுகிறது. ஆழ்ந்த விருப்பமும் எல்லாப் பயிற்சியும் போல ஒரு பயிற்சியே. ஆழ்ந்து விரும்பினால் விருப்பம் நிறைவேறும்.





கடலும் கிழவனும்

கடலும் கிழவனும்
எர்னெஸ்ட் ஹெமிங்வேவுக்கு, நோபல் பரிசையும், புலிட்ஸர் பரிசையும் வாங்கித் தந்த இந்தச் சிறிய நாவலில் கதை அம்சம் குறைவு. எழுபது வயதுச் செம்படவன் சாந்தியாகோ, 84 தினங்கள் மீன்கள் கிடைக்காமல் அவஸ்தைப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசமும் மதிப்பும் உடைய சிறுவன் ஒருவனால் பராமரிக்கப்படுகிறான். எண்பத்தைந்தாம் நாள், தன் சிறிய படகில் தனியாக மீன் பிடிக்கச் சென்று, 18 அடி நீளமும் 1500 பவுண்ட் எடையுமுள்ள மீனைப் பிடிக்கிறான். அது லேசில் அவன் வசப்படுவதில்லை. மூன்று தினங்கள் அன்ன ஆகாரமின்றி நடுக்கடலில் கிழவனுடன் மல்லுக்கு நின்றுதான் அது தோற்கிறது. கடலில் அலைகின்ற, பசித்த சுறாக்கள் அதைக் கவ்வித் தின்கின்றன. தனது லட்சிய சித்தியைப் பறிகொடாவண்ணம், அக்கிழவன் வீராவேசத்துடன் போராடுகிறான். ஆனாலும், வென்றவனுக்கு ஒன்றும் மிஞ்சவில்லை. மீனின் எலும்புக் கூடும் படகுமாய்க் கரை சேருகிறான்.
இதுதான் கதை.
கலைக்கு ஒரு உள் நோக்கம் உண்டு என்னதான் அது பிரசாரத்துக்கு அப்பாற்பட்டது என்று தந்தகோபுரத்தில் ஏறித் தனி நர்த்தனமாடத் துடித்தாலும் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடைய ஏதோ ஒரு இலட்சியத்தை மறைமுகமாக நாடித்தான் உயிர்த்திருக்கிறது.மனிதனின் அறிவையும் இதயத்தையும் உயர்த்துவதில், கிணற்றின் அடியில் சுரக்கும் ரகசியமான ஊற்றைப் போல்தான் அதன் பங்கு. ஒவ்வொரு உணர்ச்சி அல்லது கொள்கையின் பிரசாரம்தான். அந்தப் பிரசாரம் பளிச்சென்று (எச்தஞீதூ) தெரியாத வரையில் தான் அதன் வெற்றி. இது ஒரு மனிதனைப் பற்றிய பிரசாரம். குறைந்த பாத்திரங்கள், குறைந்த கதை, குறைவான பக்கங்கள். இவற்றில் ஒரு லட்சிய மனிதனையே சித்தரிக்கும் கஷ்டத்தைக் கலையழகுடன் அபாரமாகச் சாதித்திருக்கிறார் ஹெமிங்வே.
கதை நெடுக மனத்தில் பிரமிக்கத் தக்க நம்பிக்கை ஒளியும், தோல்வியை இறுதி வரை ஒப்புக் கொள்ளாத வீர உணர்ச்சியும், சகல ஜீவராசிகள் மீதும் எல்லையில்லா அன்பும் கொண்ட ஒரு மனிதனின் சித்திரத்தைக் கவனமாக அநாயாசமான மேதையோடு தீட்டியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக சாதனை, லட்சிய சித்தி இவற்றை எய்துவதில் இறுதிக் கோடு வரை நிமிர்ந்தே நிற்கும் மனிதனின் ஆத்ம காம்பீர்யம்தான் இந்தக் கதையின் சங்கதி (Mஞுண்ண்ச்ஞ்ஞு).
மீனுடன் அக்கிழவன் நடுக்கடலில் மாட்டிக் கொள்கிறான். படகு மீனை இழுக்கிறதா மீன்தான் படகை இழுக்கிறதா என்ற சந்தேகமான நிலை. மூன்று தினங்கள் சரியான உறக்கமில்லை, உண்ண உணவுமில்லை. பச்சை மீன்களைப் பிடித்துக் கூறு போட்டுத் தின்கிறான். வலது கையில் மீன் துள்ளும்போது பலத்த காயம் ஏற்படுகிறது. அந்த மீன், அவனை விட, அவன் படகை விடப் பெரியது. அபாயகரமான எதிரி. அவன் அஞ்சவில்லை, ஒருமுறை கூட அவன் நடுங்கவில்லை.
எஃகு போன்ற உள்ளம் அவனுடையது. இருந்தாலும் கடலில் வழியறியாது சுற்றிப் பாய்மரத்தில் தங்கும் சிறிய கரிக்குருவியின் மீதும் அவன் அன்பு தாவுகிறது.
“சின்னஞ் சிறிய பறவைச் சிறுமியே, இளைப்பாறு! பிறகு வாழ்க்கை உனக்குத் தரும் சந்தர்ப்பத்தை, மனிதனைப் போலும், பறவையைப் போலும், மீன்களைப் போலும் தைரியமாய் ஏற்றுக் கொள்.”
மீன்கள், பருந்துகள், ஆமைகள், மனிதர்கள், பறவைகள், அவன் இதயம் எல்லாவற்றையும் அள்ளித் தழுவுகிறது. அவன் ஒரு கவிஞனைப் போல், காதலனைப் போல் வாழ்க்கையை நேசிக்கிறான்.
கிழவனுக்குக் கர்வம் இல்லை; தலைக்குனிவும் இல்லை. நடுக்கடலில், தன்னந் தனியாக அவனை விடப் பத்து மடங்கு பெரிய மீனுடன், அவன் போரில் ஈடுபட்டிருக்கும் போது அவன் உள்ளம் ‘பேஸ் பால்’ சாம்பியன் டிமேக்கியோ தன் காலில் குதிமுள் தரித்து ஆடும் ஆட்டத்திற்குச் சமானம் ஆகாது இது என்று கருதுகிறான்.
மீனும் பெரியது; அவனும் பெரியவன். இருவரும் கனவான்கள்தாம். இவர்களிடையில் ஓடும் உறவு அல்லது பகையின் நிகாச்சிகள் இரண்டு ‘கேரக்டர்’களின் மோதல்தான்.
“மீனே! உன் மேல் எனக்குப் பிரியமே; உன்னை நான் கௌரவிக்கிறேன். ஆனால், அஸ்தமனத்திற்குள் உன்னைக் கொன்றே தீருவேன்” என்கிறான் கிழவன். இதன் பெருந்தன்மையையும் கம்பீரத்தையும் பார்க்கும்போது, இதைத் தின்ப போகிறவர்களுக்கு தின்னும் தகுதி இல்லை என்று உருகுகிறான்.
மூன்று நாள் தன்னோடு அந்த மீனும் பட்டினி கிடப்பதற்காக அவன் வேதனையே படுகிறான். மீன் போராடத் தொடங்குகிறது.
“உன்னைவிடப் பெரிய, அழகிய, அற்புதமான, சாந்தமான, உயர்வான, பெருந்தன்மை மிகுந்த மீனை நான் கண்டதேயில்லை. வா, என்னைக் கொல், நமக்குள் யார் யாரைக் கொன்றாலும் எனக்கு அக்கறையில்லை” என்று அழைக்கிறான். போர் முடிகிறது. இறுதிவரை வீரனாகவே, அதைவிடப் பெரிய வீரன் கையில் அடிபட்டு அந்த மீன் மாள்கிறது.
கடலில் கொஞ்ச நேரம் பொழுது செல்கிறது. எறிந்த தூண்டிலையும் எடுக்காமல், படகைவிடப் பெரிய மீனை அப்படியே கடலில் இழுத்துச் செல்கிறான் சாந்தயகோ, பசித்த சுறாக்கள் மாண்ட மீனைக் கவ்வித் தின்கின்றன. அடக்க முடியாத வெறியுடன், வேதனை ததும்ப சுறாக்களை அவன் தன்னால் முடிந்த அளவு கொல்கிறான். அந்தச் சுறாக்களின் மீதும் அவனுடைய அன்பு தாவுகிறது.
“சுறாவைக் கொல்வதில் உனக்கென்ன ஆனந்தம்? அதுவும் மற்ற மீன்களைச் சாப்பிடுகிறது. அது பயமற்றது. அழகானது” என்ற கருதுகிறான்.
ஒன்று ஒன்றுக்கு மேல் ஒன்று; எத்தனையோ சுறாக்கள், அவனது வெற்றியை, நடுக்கடலில் சூறையாடுகின்றன.
“சாகும் வரை சண்டையிடத் தயார்” என்கிறான். கடைசியில் அவனுக்குச் சொல்ல முடியாத வருத்தம் உண்டாகிறது.
கடற்கரையில் அந்த மாபெரும் மீனின் எலும்புக் கூடு அவனது வெற்றியாய், அல்லது வெற்றியின் தோல்வியாய், நிற்கிறது. கிழவனுக்கு அதைக் கண்டும் நம்பிக்கை பிறக்கிறது. புதிய பெரிய மீன்களுக்காக, அவன் மீண்டும் செல்லத் தயார்! எந்தத் தோல்வியும், எவனை வீழ்ச்சியடையச் செய்யவில்லையோ, அவனே மனிதன். வென்றவனுக்கு ஒன்றுமில்லாமல் போகலாம். ஆனால் அவன் பெறும் வெற்றி இருக்கிறதே, அதுதான் வாழ்க்கை. கதை முடியும்போது, குருக்ஷேத்திரமும் கீதையும் ஞாபகம் வருகிறது. ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே!’
மீண்டும் ஒரு தரம் சொல்கிறேன். 
இது வெறும் கதையல்ல. 
தலைவணங்காத, அன்புமிக்க, லட்சிய வீறுள்ள ஒரு மனிதனின் சித்திரம். எர்னெஸ்ட் மில்லர் ஹெமிங்வேயின் ஜல்லிக் கட்டுக் காளை போன்ற கருத்தும் வாக்கும் திமிறியடித்து ஓடும் நடையில் அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 
கிழவன் சாகலாம், மீன்கள் சாகலாம். 
மனிதனும் பிரபஞ்சமும், மனிதனும் இயற்கையும், மனிதனும் சமூகமும் - இந்த ஓயாத போராட்டம் என்றைக்கும் இருக்கும். இந்த யுத்தத்தில் பங்கேற்க விரும்புவோர் எல்லாம், சாந்தியாகோவின் இதயத் துடிப்பை, அதன் அடிநாதத்தை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.



புதுமையின் சிற்பி.

 [தொடர்ச்சி ]
புதுமையின் சிற்பி.
இவ்வாறு பாரதியின் கவிதை, தமிழ் இலக்கியத்திற்கு உலகளந்த பெருபிரிவு, நுட்பம், ஓசை இன்பம், உயிரில் சுடும உவமைச் சுகம் எனப் பல பரிசோதனைகளைச் செய்து உருவம் உள்ளடக்கம் என இரண்டிலும் மகத்தான சாதனை புரிந்துள்ளது.
தமிழில் சக்திமிக்க ரசமான சிந்தனையைக் கிளர்கின்ற சூடும் சுவையுமுள்ள வேகமும் விறுவிறுப்புமுள்ள வசனம் பாரதியிடம் தான் ஆரம்பித்தது. 18, 19 ஆகிய இரு நூற்றாண்டுகளிலும் பைபிள் மொழிபெயர்ப்பு இராமலிங்க சுவாமிகள் வசனம், ராஜமையரின் உரைநடை வேத நாயகம் பிள்ளையின் நடை, விநோத ரச மஞ்சரியின் வசனம் எனப் பல நீரோட்டங்கள் இருந்தன.
எனினும் பாரதி தான் தமிழ் நடைக்கு அராபியக் குதிரைகளின் வேகத்தைக் கொடுத்தார். சிறு சிறு வாக்கியங்கள் வலிமை வாய்ந்த வினை முற்றுக்கள், கருத்தையும் காட்சியையும் குணச்ணீ குடணிt வடிவமாக்கும் முயற்சிகள் என இவற்றுக்கும் பாரதியே தலைமகன்.
பாரதியின் வசனம் கங்கு கரையற்ற காட்டாற்று வெள்ளம் போல் புதிய பூமிகளில் பாய்ந்திருக்கிறது. சிறுகதைகளை எழுதியிருக்கிறது. புதிய நாவல் முயற்சிகளைச் செய்திருக்கிறது.
பொருளாதாரம், உலக சரித்திரம், தார்மீக நெறி, பெண் விடுதலை சமூக சீர்திருத்தம், தமிழ் நாடகம் அன்றாட உலக நடப்பு இப்படி எந்த விஷயங்களையும் தமிழ் வசனத்தில் சுவைபட, நெஞ்சில் உயிரோவியச் சித்திரம் போல் பதியுமாறு எழுத முடியும் என்று முதன் முதலில் எழுதிக் காட்டி நிரூபித்தவர் பாரதியார்.
யூடோபியா எனப்படும் கனவுலக நிலையை பாரதியின் ஞான ரதம் சித்தரித்தது போல் அதற்கு முன்னும் பின்னும் தமிழ் இலக்கியம் சாதித்ததில்லை.
கவிதை பாரதியின் உணர்வுக்கு வடிகால், வசனம் பாரதியின் சிந்தனைப் போக்குக்கு வடிகால்.
பாரதியின் வசனம் தமிழிலக்கியத்திற்குப் புதிய திசைகளைக் காட்டிற்று. இன்று கதை, கட்டுரை நாவல் என எந்த உரைநடை முயற்சியையும் மேற்கொள்வோர் தம்மை அறியாமலேயே பாரதி போட்ட உரைநடைப் பாதையில் தான் பயணம் செய்கிறார்கள்.இதை யாரும் மறுப்பதற்கில்லை.
பாரதி தான் தமிழ் மொழியின் எல்லா நவீன சிந்தனைக்கும் தந்தை வசன கவிதை மட்டும் அவர் பார்வையில் படாதிருக்குமா? வசன கவிதையில் புதுக்கவிதையின் வித்து தூவப்பட்டது கவிதையின் கட்டுக்கோப்பிலிருந்தும் வசனத்தின் ஆயாசத்திலிருந்தும் நீங்கி ஒரு நிர்ப்பளுவான நிம்மதியோடு அவரது வசன கவிதை, சிட்டுக் குருவியை நிகர்த்துச் சிறகடிக்கிறது.
‘இளமை இனிது; முதுமை நன்று
உயிர் நன்று: சாதல் இனிது.
மூடன், புலவன்
இரும்பு, வெட்டுக்கிளி
இவை ஒரு பொருள்.
மழை பெய்கிறது;
ஊர்முழுதும் ஈரமாகிவிட்டது.
“தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே உட்காருகிறார்கள். ஈரத்திலேயே நடக்கிறார்கள். ஈரத்திலேயே படுக்கிறார்கள். உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்பட மாட்டான்.”
இப்படி வசனத்தில் புதிய ரஸம் சேர்த்த கவித்வத்தைப் பாரதி சிறைப்பிடிக்கிறார். இதிலும் பாரதியின் காம்பீர்யம் எள்ளளவும் குறையக் காணோம்.
பாரதி, பத்திரிகைகளில் உதவியாசிரியராய் இருந்தவர். தாமே சில சொந்தப் பத்திரிகைகளும் நடத்தியவர். சிறு பிரசுரங்கள் வெளியீடு என்ற துறைக்கும் தலைமை வகித்து அதைத் தொடங்கியவர் அவர் ஒரு கை தேர்ந்த ஜர்னலிஸ்ட் கார்ட்டூன்களைத் தமிழில் முதன் முதல் கையாண்டவரும் கவிதைகளுக்கும் கதைகளுக்கும் சித்திரம் வரைய வேண்டும் என்று உத்தேசித்தவரும் அவர்தான்.
தமிழின் 20ம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு என்பதே தமிழ் ஜர்னலிஸத்தின் வரலாறு தான். எவ்வளவு பெரிய எழுத்தாளரும் ஏதேனும் ஒரு பத்திரிகையில் எழுதியவர்களே. பாரதியே கூட ஒரு பத்திரிகை எழுத்தாளர் தான்.
இத்துறையில் ரஸத்திரட்டு, குறிப்புக்கள், ஹாஸ்யம், மணித்திரன், உலக விநோதங்கள், விநோதக் கொத்து, விநோத விஷயங்கள் என்று அவர் இன்றைய ஜர்னலிஸ மாதிரிகளை அன்றே உயர்வான முறையில் கடைப்பிடித்தார். துணுக்குச் செய்திகள் எழுதுவதிலும் அவரே முன்னணியில் நின்றார். குடிப்பாங்கு எளிதாய் சமஸ்கிருதம் படிக்கும் வழி, குணமது கைவிடேல் என அறிவுக் கட்டுரைகள் எழுதும் கலையை அவரே ஆரம்பித்தார். ஆக இன்றைய பத்திரிகைக் கலைக்கும் பாதை போட்டவருள் பாரதி முதல்வர்.
முடிவாக பாரதி தமிழ் இலக்கியத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் வாரி வழங்கியதை எடை போடுவது எந்தத் தராசிற்கும் இயலாது. சுருக்கமாகச் சில வார்த்தைகளைச் சொல்லலாம்.
அவர் நவீன சிந்தனையைத் தமிழுக்கு அறிமுகம் செய்தார். கடுமையின் சிறையிலிருந்து தமிழை விடுவித்தார். அரண்மனையின் உப்பரிகையிலிருந்து தமிழைக் குடிசையின் கதவருகே கொண்டு போனார். உலகு தழுவிய மனித சமுதாயம் நடத்தி வரும் ஆத்மபரிசோதனைக்கான சகல இலக்கிய சோதனைகளிலும் தமிழை ஈடுபடுத்தினார். புதுமைக்கு அஸ்திவாரமிட்டார். எது புதுமை என்று செதுக்கிநிலை  நிறுத்திக் காட்டினார்.
அவரே புதுமையின் சிற்பி.

நவீன தமிழின் பிதாமகன்

நவீன தமிழின் பிதாமகன்

காலம் ஒரு சக்தி வாய்ந்த படைப்பாளி பிறந்ததும் ஒரு கோடு கிழிக்கிறது. அந்தப் படைப்பாளி காலமானதும் மீண்டும் மறுகோடு கிழிக்கிறது இந்த இரு கோடுகளுக்கும் இடைப்பட்ட சித்திரமே அவன் சாதனை.
பாரதி என்ற மனிதர் பிறந்தது டிசம்பர் 1882. பாரதி என்ற படைப்பாளி, உலகிற்கு வெளியானது ஜூலை 1904ல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தான் பாரதியின் படைப்பாற்றலுக்கான கொதி நிலை உருவாகிறது. பாரதிக்கு முன்னே காலம் கிழித்த கோட்டுக்கு அப்பால் தெரியும் முக்கியப் படைப்பாளிகளை அறிவது, பாரதி எங்கே தொடங்கித் தமிழ் இலக்கியத்தை எந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினார் என்று தெளிவாக்கும்.
யமகம், திரிபு, சில்லறைப் பிரபந்தம் கொலைச் சிந்து ஆகிய பல்வேறு இலக்கிய (?) முயற்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்தன, ஓர் உயிர் வாழும் மொழி என்றும் ஓய்வதில்லை. பெரிய ஓட்டப்பந்தயங்களிலும், போராட்டத்திலும் ஈடுபட்டுக் களைத்து போய் அசமந்தப் (க்ணண்ஞுணூடிணிதண்) போக்கில் ஈடுபடும் ஒரு கால கட்டம் அதற்கு நேரும். எல்லா மாபெரும் மொழிகளுக்கும் அது நேர்ந்திருக்கிறது. அப்படி ஒரு கால கட்டம்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
தமிழிலக்கியத் தராசிற்கு நிற்கும் கனம் வாய்ந்த படைப்பாளிகள் அப்போதும் இருந்தனர். வடலூர் ராமலிங்க சுவாமிகள் கோபால கிருஷ்ண பாரதியார். சுந்தரம் பிள்ளை, பி.ஆர். ராஜமையர், அருணாசலக் கவிராயர், முன்சீப் வேதநாயகம் பிள்ளை ஆகியோரே இதில் முக்கியமானவர்கள். தமிழில் முதலாவது இலக்கிய அமைதி வாய்ந்த சிறுகதை எழுதிய வ.வெ.சு. ஐயரும் இவர்களில் ஒருவர்.
மேற்குறித்த எழுவருமே பூரண இலக்கியப் படைப்பாளிகள் என்ற மதிப்பீட்டுக்கு உரியோர். இவர்களுள் ராஜமையர், வேதநாயகம் பிள்ளை, சுந்தரம் பிள்ளை ஆகிய மூவரும் ஐரோப்பிய இலக்கியம் படித்தவர்கள். அதன் வடிவங்களையும் உள்ளோட்டங்களையும் தமிழ் மண்ணில் விளைவிக்க முயன்றவர்கள். இந்த முயற்சிகளைப் பாரதி கிரகித்துக் கொண்டார்.
வடலூரார், கோபாலகிருஷ்ண பாரதியார். அருணாசலக் கவிராயர் ஆகியோர் தொன்று தொட்டு வரும் தமிழிலக்கிய மரபின் புதிய தொடர்ச்சிகள். ஆக இவர்களும் பாரதியின் உருவாக்கத்திற்குத் துணை புரிந்தனர். அவரது பாடல்களை ஊன்றிப் படிப்போர் இதை உணர்வர்.
பாரதியின் எழுத்து உத்வேகம் பீறிட்டெழுகின்ற கால கட்டத்தில் மூன்று தேசீய சர்வ தேசீய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. (1) சுதந்திரப்போராட்டம் (2) முதலாவது உலக மகாயுத்தம் (3) ரஷ்யப் புரட்சி. இந்த மூன்று நிகழ்ச்சிகளுக்கும் பாரதி என்ற படைப்பாளியை மும்முனைகளில் தாக்கின. அந்தத் தாக்குதலை ஏற்று, இந்திய மண்ணின் ஆணிவேர் போன்ற ஆன்மீகப் பார்வையிலிருந்து சற்றும் பிடிவிடாது பாரதி நடத்திய போராட்டே அந்தக் காலத்தின் தமிழ் இலக்கிய வரலாறும் வளர்ச்சியும் ஆகும்.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பாரதியின் நன்கொடை என்ன என்பதுதான் நமது கேள்வி. சில நம்பிக்கை நட்சத்திரங்களுக்குப் பின் ஒரு சூரியன் போன்று உதித்த பாரதியின் பேராற்றலை, நான்கு பிரிவுகளில் பார்ப்பதே அதற்குரிய மரியாதையைச் செய்வதாகும். மிகக் குறுகிய (1904 முதல் 1921 வரை) காலமான சுமார் 18 ஆண்டுகளில் கவிதை, வசனம், வசன கவிதை, ஜர்னலிஸம் ஆகிய நான்கு துறைகளில் பாரதி ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்திருக்கிறார். ஒவ்வொன்றாக அத்துறைகளைப் பார்க்கும்போது, பாரதி நடத்திய மஹாயக்ஞமும் அதன் விளைவும் நமக்குத் தெளிவாகும்.
பாரதியின் முக்கியமான வெளியீடு கவிதையே. அதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். “நமக்குத் தொழில் கவிதை” என்று நிலை நாட்டிச் சொன்னார், பாரதியின் கவிதைகளில் கருப்பொருள், உருவம் இரண்டிலும் அவர் காலம் தொடங்குவது வரை, தமிழ் கண்டிராத புதுமைகள் பல உண்டு.
இதில் கருப்பொருள் தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம். அன்று வரை, தமிழ்க் கவிதை பாரத நாடு முழுவதும் தழுவிய தேச பக்தியை பிரதிபலித்ததில்லை. நாம் அனைவரும் பாரதத்தின் மக்கள் அதன் மீது பக்தி கொண்ட புதல்வர் என்ற வெளியீட்டையே தமிழிலக்கியம் முதன் முறையாகப் பாரதி மூலம் தான் அனுபவித்தது.
அதே போன்று சேர, சோழ, பாண்டியன் என்ற குறுநில மனப்பான்மையை விடுத்து நாம் அனைவரும் தமிழர், நம் நாடு தமிழ் நாடு என்ற பிரக்ஞையை தமிழிலக்கியத்தில் ஆணித்தரமாக வலியுறுத்திய முதல் படைப்பாளியும் பாரதியே.
தமிழ் மொழியின் மீது பண்டிதர்களும் தமிழ் அறிஞரும் கொண்டிருந்த மூர்க்கமான உடமைப் பற்றினைப் பாரதி ஒரு காதலன் போன்று விடுவித்து இணையிலாத நேசத்துடன், அதை எளியோருடன் பேசும் மொழியிபாரதி பல மொழிகளைப் பயின்றவர். அவற்றில் தோய்ந்து ஈடுபட்டவர். தமிழ் மொழியே எல்லாவற்றிலும் இனியது என்றும்
வள்ளுவர், இளங்கோ, கம்பன் போன்ற புலவர் எங்கணும் பிறந்ததில்லை என்றும் முரசறைந்து சொன்னவர்.
இது தமிழிலக்கியத்தில் கேட்ட தீரமான முதலாவது குரல். நமது தன்னம்பிக்கை, தமிழ்ப் பற்று ஏன் தமிழ் வெறி கூடப் பிறந்தது அந்த குரல் கொடுத்த தெம்பிலேதான்.
தமிழின் மீது ஆழ்ந்த காதல் ஒரு புறம். அதன் தாழ்ந்த நிலைமை குறித்து அடங்காத சோகம் ஒருபுறம் இவற்றைப் பிரதிபலிக்கும். விழிப்புணர்ச்சிப் பாடல்கள் பாரதிக்கு முன்னே இல்லை. இந்த விழிப்புணர்ச்சியைத் தொடங்கி வைக்கும் வீரவிளக்கு பாரதிதாசன்.
என்னதான், தமிழையும் தமிழ் நாட்டையும் ஆறாத காதலோடு நேசித்த போதிலும், ஒருபோதும் பாரதி அது பாரத நாட்டின் அங்கம் என்பதை மறந்தவரில்லை. அவருக்கு முன்னே பிற மாநில மக்களை வென்ற பெருமிதம்; அவர்கள் இழிந்தவர்கள் என்று இகழ்ந்த சான்றுகள் தமிழிலக்கியத்தில் உண்டு. ஆனால் பாரதியே முதல் முதலாகப் பாரத தேசத்தின் பிற மாநில மக்களை தன் அகன்ற கரம் விரித்து ஆரத்தழுவிய முதலாவது படைப்பாளி.
பாரதிக்கு கவிதை ஒரு கைவாள் மட்டுமில்லை. கவிதை ஒரு கோடரி. கவிதை ஒரு கலப்பை, புன்மை கண்டு போரிட்டுத் தமிழிலக்கியத்தில் படைப்பாளிகளின் கால்படாத காடுகளை வெட்டி அழித்துக் கை தொடாத கன்னி நிலங்களை உழுது பெரு விளைச்சல் காட்டியிருக்கிறது பாரதியின் கவிதை.
ஒரு லட்சிய அயோத்தியைக் கம்பன் கற்பனை செய்ததுண்டு. போகத்தில் புரளும் புகாரைப் பட்டினப்பாலையும் சிலப்பதிகாரமும் சித்தரித்ததுண்டு. ஆனால் மனித முயற்சிகளைக் குறித்துத் தமிழிலக்கியம் அதற்கு முன்பு திட்டமிட்ட இலக்குகளோடு கனவு கண்டதில்லை.
கனவு காண்பதன் மூலமாக வெள்ளிப் பனிமலையில் உலவுவோம். மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம். சிங்களத் தீவுக்கு பாலம் அமைப்போம். ஆயுதம், காகிதம், குடை, உழுபடை, கோணி, வண்டிகள், ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள், காவியம் ஓவியம் ஏன் ஊசிகள் கூடச் செய்வோம் என்று பிறந்த பிரகடனம், மூத்து முதிர்ந்த தமிழில் ஒரு புதிய குரல்.
மனிதனின் பௌதீக உலக முயற்சிகள் குறித்து வாழ்த்தி, அதை வரவேற்று, அதற்குக் கனவு கண்ட பாரதி, தமது காலத்தை, தம் படைப்பில் அப்பட்டமாகப் பிரதிபலித்தார்.
விடுதலைப் போராட்டம், அந்தக் காலத்தின் இதயத் துடிப்பு சுதந்திரத்தின் அருமை, தேசீயத் தலைவர் பெருமை இவற்றைக் குறித்துப் பாரதி பாடல்கள் 23 ஆகும். இவை தமிழிலக்கியத்தில் புத்தம் புதிய கருப்பொருள்கள்.
அடுத்து பாரதி தமது கவிதையை, சர்வ தேசியத் தன்மை வாய்ந்ததாக்கினார். தமிழிலக்கியத்தின் பழைய கரைகளையும் எல்லைகளையும் இடித்து விசாலப்படுத்தினார். மாஜினியின் பிரதிக்கினை, பெல்ஜியத்திற்கு வாழ்த்து, புதிய ருஷ்யா இவை தமிழிலக்கியத்திற்கு புதிய பார்வைகள். தமிழிலக்கியம் பாரதியால் வென்றவர்களுக்குப் பரணி பாடிப் பழகியது தமிழிலக்கியம். பாரதி புது மரபு செய்தார். தோற்ற பெல்ஜியத்தை வாழ்த்தினார்.
பாரதி பாடிய தோத்திரப் பாடல்கள் 98. இவற்றுள் சக்தி, கண்ணன் ஆகிய தெய்வங்களைப் பற்றிய பாடல்களே பெரும்பான்மை. துதிக் கவிதை தமிழுக்கு மிகவும் பழகிய ரதம். அதில் ஏறிய பாரதி, புதிய பாதைகளில் செய்த சாரத்தியம் நமக்குத் தெய்வத்தை மிகவும் நெருக்கமான உறவாக்கிற்று.
தாயிலும், தந்தையிலும், குருவிலும், குழந்தையிலும், நாயகனிலும் மட்டும் தெய்வத்தைத் தரிசித்தது தமிழ் மரபு. மன்னன், மந்திரி, காதலி, சேவகன், சீடன் என்று பல உறவுகளில் தெய்வத்தைக் கண்டு, அதை நம் உயிரில் கலந்தவர் பாரதி. ஒரு தெய்வ நாயகியான வள்ளியைத் தானே தெய்வ முருகனாகியப் பேருணர்வு கொண்டு புணர்ந்து கூடிக் களித்து அந்த சிருங்கார ரஸத்தில் சற்றேனும் விகார பாவம் தோன்றாதவாறு சித்தரித்த பெருமை தமிழில் ஒரு புதிய மைல்கல்.
மதப்போர்களுக்குக் களமாயிருந்த தமிழிலக்கியத்தை, தான் இம்மியளவும் நெறி பிறழாத ஹிந்துவாய் வாழ்ந்த போதிலும் கிறிஸ்தவம், இஸ்லாம், பார்ஸி என்று பெயர் சொல்லி வணங்கி மூச்சு முட்டி நின்ற தமிழிலக்கியத்தின் பரப்பை விரிவு செய்த முதலாவது தமிழ்க் கவிஞரும் பாரதிதான்.
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் என்னும் தைரியம் பாரதிக்கே இருந்தது.
பாரதி எழுதிய ஞானப் பாடல்கள் 34, அத்வைத சாகரத்தில் திளைத்து வேதாந்த சிகரங்களை இதில் தொட்டிருக்கிறார். “காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்கடலும் மலையு மெங்கள் கூட்டம் நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை” இந்தப் பார்வையில் எல்லையொன்றின்மை என்ற கருத்தின் உட்பொருளுக்கு வடிவம் தந்தார்.வண்டிக்காரன், ஒரு பாமர அம்மாக்கண்ணு, சிட்டுக் குருவி, குடுகுடுப்பாண்டி, பண்டாரம் இவர்கள் வாயிலே பாரதி ஞானங்களைப் பேச வைத்தார். கவிதைகளிலே ஒளி, தெளிவு, குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டும் என்று சொல்லி அதைச் செயல் வடிவாக்கினார் பாரதி. இலக்கண மரபு அந்த மூன்று லட்சணங்களுக்கும் தடை போட்டால் அதைத் தீரத்தோடு உடைத்து அவர் கவி செய்தார். சாதிக் கொடுமை, சமூகக் கொடுமை, சோற்றுப் பஞ்சம் இவை அவரால் முதல் முதலில் கவிதையாயின.
பாரதி சங்கீத ஞானமுள்ளவர் கவிதைக்கும் சங்கீதத்துக்கும் உள்ள சம்பந்தம் உணர்ந்தவர். தாம் எழுதிய பல கவிதைகளை ராகம், தாளம் என்று இசைக் குறிப்புத் தந்து பல்லவி, சரணங்கள் எனக் கீர்த்தனை பாணியில் எழுதித் தமது முன்னோடிகளான கோபாலகிருஷ்ண பாரதி, அருணாசலக் கவிராயர் முதலியோரின் பாதையை இன்னும் பெரிதாக்கினார்.
சுயசரிதை, தமிழ்க் கவிதைக்குப் புதியது. அதற்கும் பாரதியே முன்னோடியானார் அதே போன்று குழந்தைகளை முன் நிறுத்தி அவர்களுக்காக வென்றே தமிழில் எவரும் கவிதை செய்ததில்லை. ஔவையாரின் ஆத்திசூடி அறநெறிகளை குழந்தைகளை உத்தேசித்துப் புகட்டுவது போல் தோன்றினாலும், அது குழந்தைகளுக்காக மட்டும் ஆக்கப்பட்டதல்ல.
குழந்தை இலக்கியத்தின் பிதாமகன் பாரதியே வெள்ளை நிறப்பசு, கொத்தித் திரியும் காக்கை, வண்டி இழுக்கும் குதிரை, அண்டிப் பிழைக்கும் ஆடு என்று குழந்தை புரிந்து கொள்ளும் மொழியிலே அதனோடு பேசிய முதலாவது தமிழ்க் கவி பாரதியே.
பெண் விடுதலையே, தமிழுக்குப் புதிய கருத்து, பெண்ணடிமை பாரதிக்கு முன் போற்றப்பட்டு வந்தது. சங்க இலக்கியம் சமுதாயத்தில் பெண்ணுக்கு இருந்த பெருமை பேசியது. பெண்ணின் அவலம் குறித்து அங்கே குரல்கள் இல்லை. பெண் விடுதலைக்குக் கவிதைக் கைவாளை முதலிலே உயர்த்திய வீர மறவன் பாரதியே. 
அநீதிகளை சகித்து, சமுதாய மதிப்பிற்காக அதைச் சிலுவையாக ஏற்றுக் கொள் என்று தான் தமிழிலக்கியம் பெண்ணை நிர்ப்பந்தித்து வந்தது. எழுந்து நில், உன் உரிமைக்குப் போராடு என்று பெண்மைக்கு வீரம் வழங்கிய முதலாவது தமிழிலக்கிய படைப்பாளி பாரதியே மேலும் விஞ்ஞானம், நவீன அறிவியல், சங்கீதம் எனப் பல விஷயங்களைப் பாரதியின் கவிதை தொட்டது.
பாரதியின் இரு பெரும் (Masterpieces) படைப்புக்கள் பாஞ்சாலி சபதமும் குயில் பாட்டும், ஸ்தல புராணங்களைத் தவிர வேறு நெடிய கவிதை முயற்சிகள் செய்தறியாத தமிழில், காவிய மரபு அழியவில்லை; பாஞ்சாலி சபதம் இதில் பாரதியின் ஆளுமை முழுதும் வெளிப்பட்டிருக்கிறது. ஞானம், வீரம், பக்தி, காதல், நகைச்சுவை, சோகம், கொந்தளிப்பு என்ற பல சுவைகளில் தமிழிலக்கியத்தின் ஜீவநிதி சேமித்து வந்த சகல நீரோட்டங்களின் சாராம்சமும், கம்பீரமான காவியதரிசனமும் பாஞ்சாலி சபதத்தில் உண்டு. பாஞ்சாலியைப் பலர் பாரத மாதாவாகக் காணுமளவு சித்தரித்து நிகழ் காலத்தோடு ஒரு மானசீக இயைபு செய்தார்.
குயில்பாட்டு, தமிழில் அதற்கு முன்னும் அதற்குப் பின்னும் தமிழிலக்கியம் எட்டாத ஒரு புதிய சிகரம். முற்றிலும் மாறுபட்ட கவி முயற்சி. வேதாந்த அர்த்தம். ஒரு விநோதக் கதை, இசையின்பம் உலகின் ஓசைகள் குறித்து ஒலிச்சுவை இவை கலந்த ஒரு ஜீவ ரஸாமிர்தம் குயில் பாட்டு, மீண்டும் மீண்டும் படித்து லயித்துத் திளைக்கச் செய்யும். மந்திர சக்தி வாய்ந்தது இப்பாட்டு. உருவம், உள்ளடக்கம், கவிஞனின் மொழி இம்மூன்றிலும் இது உலக இலக்கியத்திற்கே ஒரு புதிய முயற்சி.
புதிய சந்தங்கள் புதிய படிமங்கள், புதிய கற்பனைகள், புதிய ஒலிச் சித்திரங்கள் இவை தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பாரதி வழங்கிய நன்கொடை, கலிங்கத்துப்பரணியைச் சற்றே நினைவூட்டி ஆனால் பரணி எட்டித் தொடாத உயரங்களில் விளையாடியது. ஊழிக்கூத்து எனும் பாரதி கவிதை. காலத்தின் மரணம் (Death of Time) பஞ்ச பூதங்கள் சிதறி ஒரு மித்தல். அண்டவெளி வெடிப்பது இவை தமிழிலக்கியத்தில் கற்பனை எட்டிப் பிடித்த புதிய குறிகள்.
சட்ட சடசட சட்டென்றுடைபடுதாளம் தாம்தரிகிட, தாம் தரிகிட, தீம்தரிகிட தித்தோம் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம், தகத்தகத்தக தக வென்றாடோமோ, என்ற இந்த ஒலிப் பிரயோகங்களில் தமிழ் ஓசை ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்றது. ஓர் உணர்ச்சி நிலையை ஓர் ஒலி வடிவில் வடிக்கின்ற புதிய முயற்சியையும் பாரதியே தொடங்கி வைக்கிறார். அர்த்தங்களின் உள்ளர்த்தம் போன்ற ஒரு ரஸத்திற்குச் சொல் எனும் படிக்கல் போட்டுப் பாரதி எட்டிய நுட்பம் இது.
அக்கினிக்குஞ்சு,
 மணிவெளுக்கும் சாணை, 
சேற்றிலே குழம்பல் என்ன திக்கிலே தெளிதல் என்ன...பேசும் பொற்சித்திரம், பிள்ளைக்கனியமுது, உயிர்த் தீயினிலே வளர்சோதி, ஆடி வரும் தேன் இப்படி பளிச் பளிச்சென்று மின்னும் பல படிமங்களைத் தமிழுக்கு பாரதி அறிமுகப்படுத்தினார்.[தொடரும்]

Friday 21 December 2012

கம்பனை ரசித்த ரசிகமணி

கம்பனை ரசித்த ரசிகமணி
ஆல்பர்ட் ஷ்வைட்ஸர் மாதிரி, பரந்த முகத்தில் ஒரு பெரிய மீசை. அதே மாதிரி மானுடத்தை நேசிக்கும் ஒரு பார்வை. மீசையின் உள்ளே மறைந்திருக்கும் ஒரு மிடுக்கான சபாஷ். யார் இந்த டி.கே.சி? என்ன சாதித்தார் என்று இவருக்கொரு நூற்றாண்டு விழா? ரஸிகமணி என்று ஒரு பட்டம். வெறும் ரசிகரா.. இதற்கா இப்படி ஒரு கொண்டாட்டம்?
பேரிகை கொட்டி, வெடிகுண்டு போட்டு ஓயாது அடித்து அடித்துப் பேசினால் தான் மெய் மெய்யாகும் என்ற கால நிலையில் இப்படிச் சில கேள்விகள். இதற்கு என்ன பதில்? ராஜாஜியைக் கேட்போம்.
“கம்பன் பாடிய ராம காதை இருபத்தி நான்கு மாற்று அபரஞ்சி, இந்தத் தங்கத்தை எடுத்துக்காட்டிய தங்க நிபுணர்களுக்குள் நம்முடைய டி.கே.சி. அவர் முதல் இடம் பெற்றுவிட்டார்.”
ஓ..கம்பனை ரசித்தவரோ.. ரசனை என்ன அப்படி ஒரு பெரிய விஷயமா? ஆம். இது அடுத்த கேள்வி. இதற்கு நம் பதில் ஆமாம்! ரசனை என்பது ஒரு தேசத்தின் இருப்பு நிதி. நல்ல ரசிகர்தான் ஒரு தேசத்தின், ஒரு மொழியின் உன்னதப் பண்புகளை உவந்து போற்றி அதன் கலாசாரத்தையும் பண்பாட்டையும் கிரகித்துக் காப்பாற்றி வைக்கிறார். காலக் காற்றில் பொய் எதுமெய் எது என்று வேறுபாடு மறைந்துவிடுமோ என்று எச்சரிக்கையுற்று, மெய்யைப் பத்திமாய்ச் சேமித்து வைக்கிறார். இதுதான் ரசிகமணியின் பணி.
கம்பர் ஒரு கவிச் சக்கரவர்த்தி, இதை ஒட்டு மொத்தமாக ஒப்புக் கொண்டு நாம் பாரம் விட்டதென்று நகர்ந்து விடுவோம். டி.கே.சி. கம்பரின் சாம்ராஜ்யத்தில் ஒவ்வொரு அங்குலமும் நின்று நிதானித்து அதன் அழகில் தோய்ந்து அதைத் துய்த்து முழுக்கவும் சுற்றிப் பார்த்தவர்.
கம்பரின் நாட்டு வளம், யுத்த கள வருணனை, பாத்திரப் பண்பு இப்படி ஒவ்வொரு அம்சத்திலும் தமிழ்மை இருந்ததை தரிசித்து சொன்னவர் ரசிகமணி.
காவிரி நா(டு) அன்ன
கழனி நா(டு) ஒரீ இ
என்று கம்பரில் ஒரு குறிப்பு வந்தால் போதும் ரசிகமணி நிமிர்ந்து உட்காருகிறார். கம்பருக்கு உள்ளே போய் அங்கு நிமிர்ந்து உட்காருகிறார். அங்கு நிலவிய தமிழ் மயக் கம்பரின் பொறிகள் அனுபவித்துணர்ந்த தமிழ்மையை நமக்கு அறிமுகமாக்குகிறார்.
கம்பருக்கும் ரசிகமணிக்கும் உள்ள உறவு எத்தகையது? மீண்டும் ராஜாஜி. “ஸ்ரீ ராமபிரான் எப்படிக் கம்பன் உள்ளத்தில் மற்றும் ஒருமுறை அவதரித்தானோ அவ்வாறே கம்பனும் டி.கே.சி.யின் உள்ளத்தில் மறுபடி அவதரித்தான். தற்காலத் தமிழருக்காக.”
எப்படி? ரசிகமணி வெறும் உரைகாரர் அல்ல கம்பனின் ஜீவரசத்தைத் தாம் அருந்தித் திளைக்கும் போக்கில் நம்மை அருந்தச் செய்துவிடும். ஒரு பெரிய விருந்துபகாரி. அந்த அறிமுகத்தில் பதவுரை, தெளிவுரை, விருத்தியுரை என்ற கடைவிரிப்பெல்லாம் இல்லை. அவை ரசிகமணியின் மாண்புக்கு ஒவ்வாதன.
ஒரு கவிதையில் அதன் உயிர் துடிக்கும் உட்கருவைத் தொட்டுக் காட்டுவார் ரசிகமணி. வேறு அதிகப் பிரசங்கம் துளியும் இராது. உடனே கவிதை தரப்படும். அரும்பொருள் விளக்கம், ரசிகமணியின் ‘கமெண்ட்’ எல்லாம் அடிக்குறிப்பில்தான். ஒரு சுட்டிக்காட்டல். ஒரு சிட்டிகை போடல். ஒரு மென்மையான பலே. உதாரணம் வேண்டுமா? சடாயு காண் படலம் சிறகிழந்த சடாயு தன் நண்பன் மாண்டது கேட்டு புரண்டு அழுகிறான். ரசிகமணியின் அறிமுகம் கேட்போம்.
“மேலும் புலம்புகிறான் சடாயு; மேலான சாவு எனக்குக் கிடைப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. இந்த க்ஷணமே புனிதமான தீயில் விழுந்து இறந்து ஒழிவதுதான். அப்படிச் செய்வதை விட்டு விட்டுப் பெண்களைப் போல் அல்லவா, நிலத்தில் விழுந்து அழுது கொண்டிருக்கிறேன். இது என் வீர வாழ்க்கைக்கு எந்த விதத்தில் தகுதி? அவ்வளவுதான். வேறு விளக்கமில்லை. பட்டென்று கவிதையைத் தந்து விடுகிறார்.
ரசிகமணி கம்பர் கவிதையைக் கண்ணுக்கு அடக்கமாக, அதன் சந்த நயம் செய்யும் சொல் நடனத்தின் சுவை வெளிப்படுமாறு சீர்பிரித்து வரிகளைத் தமக்கே உரிய முறையில் அடுக்கித் தருவார். எடுத்துக்காட்டு சந்தம் தான னன தன்ன னன தன்ன னன தன் ன அகத்தியப் படலம். சிவபெருமான் அகத்தியரைத் தெற்கே போகச் சொல்கிறார். ரசிகமணி கம்பர் கவிதையை வடிவமைக்கிறார்.
மூச ரவு
சூடும் முத
லோன், உரையில்
மூ வா
மாசில் தவ!
ஏ கெ ன
வி டாது திசை
மேல் நாள்.
அதிகம் படிக்காதவர் கூட இந்த எளிய வடிவமைப்பில் மனம் சொக்கிக் கம்பனிடம் ஒன்றி விடலாம். கம்பர் பாட்டைப் படிக்காதே, பாடு என்பது ரசிகமணியின் உத்தரவு. மேலே சொல்லும் சந்த அமைப்பும் பாட வராத நம்மையும் பாட வைத்து விடுகிறது. பயப்படாதீர்கள். பாடுங்கள் என்று ஊக்கி விடுகிறார். பயம் நீங்கிப் பாடுகிறார். அடடே கம்பரில் இவ்வளவு சுவையா? நம்மையறியாமல் மூழ்கித் திளைக்கிறோம். தூண்டுதல் யார்? ரசிகமணிதான்.
எல்லாவற்றையும் மகாகவிஞர்கள் விளக்கி விளக்கிச் சொல்வதில்லை. ஒரு கோடி காட்டி விடுகிறார்கள். கதையின் வேகத்தில் யாராவது நம்மைப் பிடித்து உலுக்கி இதைக் கவனித்தாயா என்று கேட்காவிட்டால் நம் வண்டி எங்கோ ஓடிவிடும் ஓர் உதாரணம்; மந்தரை சூழ்ச்சிப் படலம் ராமனின் முடிசூட்டு விழாக் கோலாகலம். மந்தரைக்கு ஆங்காரம் எல்லாவற்றையும் புரட்டிக் கவிழ்க்கும் வெறி அவள் மனசுக்கே தவறு உறுத்துகிறது. எப்படி? ரசிகமணி அறிமுகம் செய்கிறார்.
‘அக்கிரமம் பண்ண ஆரம்பிக்கும்போது, அதற்கு ஒரு காரணம் கற்பித்துக் கொண்டால் தான் மனசு திருப்திப்படுகிறது.”
என்ன ஒரு மனோ தத்துவ உட்காட்சி!
கம்ப ராமாயணத்தில் ஆறு காண்டங்கள் கான மயிலாட்டம் கண்ட வான்கோழி போன்று கம்பன் சுவையில் தலை கிறுக்க, படித்தவர் கை கிறுக்கியதெல்லாம் கவி ஆயிற்று. கவிதை என்று அதைத் தனியே வைத்தால் உயிர் வாழாது. எங்கே வைப்பது? இருக்கவே இருக்கிறது, கம்பரின் தோள், அதில் வைத்து விட்டால் பூவோடு தழையும் சேர்ந்து பொலியும் இந்தக் கருத்தில் கம்பர் தந்த பிரம்மாண்டமான வசதியால் பலர் தங்கள் கவியைக் கம்பரோடு செருகிவிட்டனர்.
ஆனால் என்ன செருகினாலும் ஊடு சரடு போன்ற கவிஞனின் ஆத்ம தரிசனம் தெரியாமலா போய்விடும்? அதன் மகோன்னதமும் கள்ளக் கலையின் புனமையும் தங்கத்தின் பக்கத்தில் பித்தளை போன்று அறியாமலா போய்விடும்?
அதைக் கண்டுபிடித்தது ரசிகமணியின் மகத்தான வாழ்க்கைப் பணி. அது வெறும் துப்பறியும் வேலையல்ல. கம்பனில் மூழ்கி, கம்பனில் திறைத்து கம்பன் என்ற ஜோதியில் இரண்டறக் கலந்து கம்பதரிசனம் என்ற சித்தியை எய்தியவர்கட்கே கிட்டும் வரம். அந்த சித்தியாளர் ரசிகமணி.
அவரது மனச் செவி தேர்ந்த சங்கீத ஞானியின் ரஸானுபவம் கண்டது. ஆனந்தம் உணர்ந்தது. கொஞ்சம் ரஸபேதம் தட்டினாலும் இது கம்பரல்ல என்று உணர்ந்து விடுவார். எடுத்துக்காட்டு ஒரு பாடல். நிறை மாண்புடைய தசரதச் சக்கரவர்த்தியின் கூற்றாக
நெடிது நான் உண்ட
எச்சிலை நுகர்வது
இன்பம் ஆகுமோ?
என்று வந்தால் தசரத அனுபவம் பெற்ற ரசிகமணிக்கு மனம் சுளிக்கும். இது தசரதன் வாயில் வராது என்று சட்டென்று உணர்ந்து இடை செருகல்காரனின் காதைப் பிடித்துத் தூக்கி எறிவார்.
12000 செய்யுளில் ரசிகமணியின் உரைகல்லில் நின்றவை 1510 பாடல்களே. இது என்ன அக்கிரமம் என்ற தமிழ்ப் புலவர்கள் சும்மா விடுவார்களா? பெரும்போர் நடந்தது.இறுதி வரையில் சத்தியத்தின் பக்கம் நிற்கும் மாவீரன் போன்று தாம் தேர்ந்தவை தவிர்த்து மற்றவை போலியே என்று தீரமாக நின்றார் ரசிகமணி. வெறும் பிடிவாதம் அன்று. தக்க காரணம் காட்டி பாத்திரப் படைப்பு, கம்பரின் மனப் பக்குவம் கம்பரின் மனப் பக்குவம். கம்பரின் சொல்லாட்சி என்ற தாம் அறிந்த சான்றுகள் காட்டி
இது எப்படி சாத்தியம்?
கம்பர் தம் பாத்திரம், தம் லட்சியங்கள் காரணமாக ராம கதையையும் அதன் போக்கையும் மாற்றினார். அவர் பாத்திரங்களுக்குத் தனி வேகம் காட்டினார். கதையில் வரும் கட்டங்களுக்குத் தனித்தெளிவு பிறப்பித்தார். இவையெல்லாம் உணர்ந்தாலன்றி வெறும் வரட்டு வாதத்தால் கம்பர் கவிதையில் இடைச் செருகல்களைக் கண்டுபிடிக்கும் தீரம் எப்படி வரும்? ஓர் உபாசகர் தம் தெய்வத்தை அறிந்து மாதிரி ஐக்கியமானால் ஒழிய இவற்றை அறிய முடியாது.
கம்பரின் ராகவனை கம்பரின் ஜானகியை, அனுமனை, குகனை ஏன் ராவணனையும் தம் பிரக்ஞை வெளியில் முப்பரிமாண எழிலோடு தரிசித்துத் தொட்டு உயிர்த் துடிப்புடன் பழகிக் கேட்டு உணர்ந்தவர் ரசிகமணி. அதனால்தான் கம்பரின் தசரதன் எப்படிப் பேசுவான் என்று அவரால் உணர்ந்து சொல்ல முடிந்தது.
ஒரு மகத்தான ரசிகன் ஒரு கவிதையை ஆகா ஊகூ என்று தலைமேல் வைத்து விதந்தோதி அமர்க்களம் செய்வதில்லை. அவன் அனுபவிக்கிற நேர்த்தியே நம்மைத் தொற்றிக் கொள்கிறது. கம்பரை நாம்தான் கண்டுபிடித்த தெம்பு நமக்கு ஏற்படுகிறது. கம்பருக்கும் நமக்குமிடையே ஒரு மின் தொடர்பு போன்று வேலை செய்து கம்பரை நமக்கும் பாய்ச்சி விடுகிறார் ரசிகமணி.
கவிதையால் என்ன பயன்? ரசனையால் என்ன பயன்?
‘ஓதி ஓதி உணரும் தோறும் உணர்ச்சி உதவும்’
டி.கே.சி.யின் கருவூலத்தின் உள்ள ஆரண்ய காண்ட கடவுள் வாழ்த்திலிருந்து வரும் சொக்கத் தங்கம் இது உணர்ச்சி இல்லையேல் உயிர் வாழ்வில்லை. எந்த மேன்மையும் இல்லை. வேறு விளக்கம் எதற்கு?
ரசிகமணி என்ன சாதித்தார்?
மீண்டும் ராஜாஜியைக் கேட்போம் ,
“டி.கே.சி அவர்களின் உரையை வைத்துக் கொண்டு படித்தால், கம்பனுடைய உள்ளத்தில் பிரவேசித்து விடலாம். ஏன்? ராமன் உள்ளத்திலேயே பிரவேசித்து விடலாம். குகன் உள்ளத்தில் பிரவேசித்து விடலாம். அனுமன் உள்ளத்தில் பிரவேசித்து விடலாம். இதற்குமேல் என்ன வேண்டும்?”
பொய்ம்மை என்னும் இருளரக்கரால் கவர்ந்து சூழப்பட்ட நமக்குக் கம்பரின் கவியமுதம் என்ற தரிசனத்தை ஒரு தூது வடிவில் காட்டும் முத்திரைக் கணையாழிதான் ரசிகமணியின் ரசனை கம்பரும் கம்பர் காட்டும் அந்த எந்தை ராமனும் அந்தக் கணையாழி சுட்டும் சத்தியம்.
இருந்து பசியால் இடர்
உழந்த வர்கள்எய் தும்
அருந்தும் அமுதாகிய (து)
அறத்த வரை அண்மும்
விருந்தும் எனலாகியது;
வீயும் உயிர் மீளும்
மருந்தும் என லாகியது
வாழி மணி ஆழி!

ஒரு விற்பனையாளனின் மரணம்

ஒரு விற்பனையாளனின் மரணம்

அமெரிக்கா, அதிநவீனமானவற்றின் தாயகம். எல்லையற்ற சுதந்திரத்தின் இருப்பிடம், ஓய்வு ஒழிவின்றித் தோன்றும் புதுப்புதுப் பரிசோதனைகள் பலவற்றின் பிறப்பிடம்.
அங்கே போட்டியும் தர நிர்ணயமும் எப்போதும் உச்சகட்டத்தில் தான் இருக்கும் பழமையின் பெருமைக்கோ, கலாசாரத்தைக் கட்டிக் காத்த அதன் நெடிய உழைப்பிற்கோஅங்கே பெரிய மதிப்புக்கள் ஏதுமில்லை. ஒன்று பழம் பெருமை வாய்ந்தது என்பதற்காக அதைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு சிரமப்பட அமெரிக்க மனோபாவம் இடம் தராது.
போட்டியும் மனிதாபிமானமும் மோதும் யுத்த களத்தில், என்ன நடக்கும் என்பதை நிரூபிக்கும் நாவல்களும் நாடகங்களும் அமெரிக்க இலக்கியத்தில் ஏராளம்.
டென்னஸ்ஸி வில்லியம்ஸ் எழுதிய “ஆசை என்னும் தெருவண்டி” A Streetcar named desire" ஆர்தர் மில்லர் எழுதிய “ஒரு விற்பனையாளரின் மரணம்” Death of a salesman  ஆகிய இரண்டுநாடகங்களும் காலத்தால் அழிக்க முடியாத அமர சிருஷ்டிகள்.
இவ்விரண்டு நாடகங்களில் ஆர்தர்மில்லரின் “ஒரு விற்பனையாளரின் மரணம்” தான், மாறி வருகின்ற நவீன யுகத்திற்கு என்றென்றும் பொருந்தும் நாடகம்.
ஒரு பிரபலமான வணிக நிறுவனத்தின் வெற்றிகரமான விற்பனையாளராக இருந்த வில்லிலோமன் தனக்கு வயது அதிகமாய் விட்ட காரணத்தால், தான் பணியாற்றும் நிறுவனம் தன்னை வேலையிலிருந்து நீக்க  முனையும் அதிர்ச்சியில் தான் நாடகம் தொடங்குகிறது. அந்த வீழ்ச்சியை அவர் மனம் லேசில் ஏற்க மறுக்கிறது.
அவர் அளவற்ற அன்பு வைத்திருக்கும் மகன் பிஃப், கற்பனையில் மிதக்கும் உதவாக்கரை என்பதை அறியாது அவனை வெற்றிகரமாக உருவாக்கித்தான் தன் வீழ்ச்சியை ஈடுகட்டிக் கொள்ளலாம் என்று அவர் முயற்சிக்கிறார்.
அவனோ புஸ்வாணமாகி, அவர் கனவுகளைச் சிதைக்கிறான். இறுதியில் தற்கொலை என்று பிறர் எளிதில் சொல்லி விடாத முறையில், வில்லியம் லோமன் தற்கொலை செய்து கொள்கிறார்.
இரண்டு அங்கங்களில், இதயத்தை உலுக்கும் முறையில் ஆர்தர் மில்லர் இந்த நாடகத்தை எழுதியிருக்கிறார்.
கத்தி வீச்சு போல் பாயும் சொற்செட்டுள்ள கூர்மையான வசனம், ஆங்காங்கே ஷேக்ஸ்பியரின் கவித்வப் பண்புக்கு இணையாகச் சால்லத்தக்க மொழிநயம்.
தன் தோல்வியை ஏற்க முடியாத, அதே சமயம் ஏற்பதை தவிர வேறு விதியறியாத கதாநாயகனாக வில்லியம் லோமனை உருவாக்கி பழைய கிரேக்க நாடகங்களின் துன்பியல் (Tragedy hero) தலைவனை நினைவூட்டுகிறார்.
வில்லியம் லோமன், ஒரு நல்ல மனிதர். மதிப்பு வாய்ந்த மனிதர் ஆனால் அடிப்படையில் அவர் ஒரு விற்பனையாளன். அந்த விற்பனையாளனின் தத்துவத்திலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.
அண்டை வீட்டுக்காரர் சார்லி ஏறக்குறைய வில்லியம் லோமன் அவரது நிறுவனத்தால், விரட்டப்பட்ட சூழ்நிலையை அறிந்து அவருக்கு தான் தொடங்கிய ஒரு சுமாரான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதி கூறுகிறார்.
ஆனால் வில்லி லோமனால் அதை ஏற்பது தாழ்ந்துவிட்ட மாதிரி இருக்கிறது. தன்னைப் போலவே ஒரு விற்பனையாளனாக வாழ்க்கையைத் தொடங்கி, தற்போது ஒரு நிறுவன அதிபராகிவிட்ட அடுத்த வீட்டுக்காரனிடம் வேலை செய்வதோ? அதுவும் வெறும் ஒருசுமாரான நிறுவனத்தில்?
இல்லை, முடியாது. வில்லி லோமனுக்கு எல்லாம் பெரிதாய் இருக்க வேண்டும். மிகப்பெரியது, மிக மிகப் பெரியது, மிகச்சிறந்தது. அடுத்த ஆளை, அடித்து நொறுக்கக்கூடிய அளவு வலிமை வாய்ந்த நிறுவனம். அதுதான் அவர் பணி செய்ய உகந்தது.
பாவம் வில்லியம் லோமன்! அவர்ஓர் அற்புதமான, மென்மையான, தகுதியுள்ள இன்னும் ஆற்றலும் உபயோகமும் உள்ள மனிதர்தான். ஆனால் சமுதாயம் அவரை வேறுவிதமான மாற்றியமைத்து விட்டது. அவரது விற்பனையாளர் தொழில் அவரது அரும் பாண்புகளைச் சீர்குலைத்து  விட்டது.
உள்ளபடியே வில்லியம் லோமனால் எவரையும் உண்மையாக நேசிக்கவும் முடியவில்லை; வெறுக்கவும் முடியவில்லை. அவர் மகத்தானவர் என்று அவர்கள் ஒப்புக் கொண்டால், அவர்கள் நேசிக்கத் தக்கவர்கள், அப்படி இல்லையென்றால் அவர்கள் அவருடைய எதிரிகள்.
ஒரு போட்டி போடும் சமுதாயத்தில், மனித மதிப்பீடுகளை அப்பால் தள்ளி வைத்து, மாய பிம்பங்களில் சிக்குண்டு அவஸ்தைப்படுகின்ற மனித ஆன்மாவின் துயர வீழ்ச்சிதான் வில்லியம் லோமனின் வீழ்ச்சி. வில்லியம் லோமன் அற்புதமான மனிதர்தான் ஆனால் சாதாரண சோட்டா பேர் வழியாக இருக்க மனம் ஒப்பாதவர்.
அவர் லட்சியம் இந்த உலகத்திற்கு ஏதாவது சாமான்களை விற்றுக் கொண்டே, அதி உன்னதமானவனாக இந்த உலகை ஆட்சி புரிவது. வேறு வழியே இல்லை என்ற கட்டம் வரும்போது தற்கொலை ஒன்றுதான் அவரது இறுதி உச்சக்கட்டமாகிறது.
தன் சுயமதிப்பைக் கோரிய தன் முதலாளியின் மகன், சார்லி எல்லாரையும் பழி தீர்க்க அவருக்குக் கிட்டிய ஒரே ஆயுதம் தற்கொலை.
அவரது மகத்தான பிழை ஒன்றே ஒன்றுதான். எல்லா கிரேக்க, துன்பியல் நாடகங்களிலும் காணப்படுவதைப் போன்று ஒரே ஒரு தவறான மதிப்பீடுதான் இந் கதாநாயகனின் பிழைக்கும் காரணமாகிறது.
அவர் அடுத்த நபர் மெச்ச வேண்டும் என்பதையே தன் வாழ்வின் குறிக்கோளாக வைத்துக் கொண்டவர்.
இது நமது சமுதாயம் முழுவதின் பிழை. நமது சுயமதிப்பை நாம் நம்மை வைத்து அளப்பதில்லை அடுத்தவரை வீழ்த்தி, அதே சமயம் இடைவிடாமல் அவர்களது பரிபூரண ஒப்புதலை வாங்கிக் கொண்டு நம் மதிப்பை நிலைநாட்ட விரும்புகிறோம்.
தன் மகன் பிஃப் விஷயத்தில் கூட அவன் அப்படி இருக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறார். அவன் எல்லோரையும் தகர்த்து வீழ்த்த வேண்டும்; அதே சமயம் எல்லோராலும் விரும்பப்படவும் வேண்டும். நடக்கிற கதையா இது?
இதன் விளைவாக வில்லியம் லோமன், சார்லி போன்ற அண்டை வீட்டு மனிதர் போன்றவர்களையே விரும்புவது விரும்புகிறார்; வெறுக்கவும் வெறுக்கிறார்.
நவீன மனிதன் எப்பொழுதும் கவலை பொருந்தியவனாக இருக்கிறான். இரண்டு ஈர்ப்பு சக்திகள் அவனை இழுத்த வண்ணம் இருக்கின்றன.
தன் பக்கத்து வீட்டுக்காரனை, தன் சகோதரனை அடித்து வீழ்த்த வேண்டும்; அவனை எப்படியாவது மிஞ்சி விட வேண்டும். அதே சமயம் அவனால் நேசிக்கப்படவும் வேண்டும்.
இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று, எதிரான முரண்பாடுகள். வேறு வழியின்றி அவை வீழ்ச்சியில்தான் முடிவுற வேண்டும். தன் மனப்போக்கிற்கு ஏற்ப மகன் பிஃப்பை மாற்றியமைத்தாவது அவனை போக அனுமதித்திருக்கலாம் அதிலும் தோல்வி.
அன்பும் போட்டியும் என்ற எதிரெதிர் சக்திகளுக்கு இடையே நடந்த இந்த யுத்தத்தில், தீமையும், நன்மையும் மோதிக் கொண்ட களத்தில் வில்லியம் லோமனின் ஆத்மா இருகூறாகப் பிளந்தது போன்று, தற்கொலையே முடிவாகிறது.
அமெரிக்க நாடக இலக்கியத்தில் அழியாது நிலை நின்று , மணிச்சுடர் வீசும் நாடகம் இது

பாவம் பள்ளி ஆசிரியர்

பாவம் பள்ளி ஆசிரியர்

நம் நாட்டுக் கல்வித் திட்டம் என்பதை போன்ற ஒட்டுப் போட்ட கம்பளிக்கு இணையாக வேறு ஒரு பொருளை நம்மால் சொல்ல முடியாது. நம் நாட்டில் சமூக அளவில் செய்யப்படும் பரிசோதனைகளில் பெரும்பகுதி கல்வியில்தான் செய்யப்படுகிறது.
அரசியல்வாதிகள் அடிக்கடி கை வைக்கத் துடிக்கும் சமுதாய விஷயம் கல்வியாகவே இருந்து வருகிறது.
இந்தக் கல்வித் திட்டத்தை ஏன் வைத்திருக்கிறோம்?
விளங்கவில்லை.
வேறு எதுவும் மாற்று இல்லை என்பதால் வைத்திருக்கிறோம். இதுவே உண்மை.
இதனால் ஏதாவது உருப்படியாக நடந்திருக்கிறதா? பட்டப் படிப்பும் முதுகலைப் பட்டப் படிப்புகள் பெருகியிருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகி இருக்கின்றது . அவ்வளவுதான்.
மாணவர் ஒழுக்கத்திற்கும் சமூகக் கட்டுக்கோப்பிற்கும் இந்த கல்வித் திட்டம் உதவுகிறதா? நிச்சயமாக இல்லை. இந்தச் சூழலில் அதைக் கற்பிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர் என்ன செய்வார்? தான் நம்பாத கல்வியை, தன்னை மதிக்காத மாணவர்களுக்கு, உண்மை நிலவரங்களோடு நேரடித் தொடர்பில்லாதவர்களால் தயாரிக்கப்பட்ட கல்வித் திட்டத்தின் கீழ் அவர் போதிக்க வேண்டும்.
அவரது ஊதியம் ஆசிரியர் செய்த கடுமையான போராட்டத்தால் சமுதாயம் மதிக்கிற விதத்தில் உயர்ந்ததென்னமோ உண்மை!
அதனோடு சேர்ந்து, ஏதோ நாற்காலியில் உட்கார்ந்து பொழுதை ஒட்டிக் கொண்டு, மானவரை மேய்துக் கொண்டு தண்டச்சம்பளம் வாங்குகிறார் என்ற எதிர்மறைக் கண்ணோட்டம் சமுதாயத்தில் நிலவவும் அதுவே காரணமாயிற்று.
மனப்பாடம் செய்து வினாத்தாளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு பதில் எழுதி, மதிப்பெண் வாங்கினால் போதும். ஒருவனுக்கு வாழ்க்கைத் தகுதி வந்துவிடும் என்பது சமுதாய நிலை இந்தக் கல்வித் திட்டத்தின் கீழ், வரையறுக்கப்பட்ட இந்த பாடப் பகுதியுள்ள பாடப் புத்தகத்தை முடி, அதுவே உன் கடமை என்று நிர்வாகம் நிர்ப்பந்திக்கிறது.
அந்த மதிப்பெண்ணை, சலிப்பூட்டும் பாடங்களைப் படிக்காமலேயே பெற, வெவ்வேறு வழிகளை சமுதாயமே நோட்ஸ் வடிவிலும், காப்பி அடிக்கும் வடிவிலும் வளர்த்து விட்டிருக்கிறது.
இரண்டு கைகளிலும் விலங்கு மாட்டி, கால் விலங்குமிட்டு சொன்னதை, ஒப்பிக்க வேண்டிய கிளிப்பிளை மாதிரி மாற்றப்பட்டிருக்கும் ஆசிரியர் எந்த சமுதாயத்தை உருவாக்குவார்?
நாளைத் தள்ளி, பொழுதை ஒட்டி மாதச் சம்பளம் வாங்குவதைத் தவிர வேறு  விதியில்லை என்று அவர் கீழே இறங்குகிறார்.
நாட்டின் எதிர்காலம் வகுப்பறையிலே உருவாக்கப்படுகிறது என்பது அலங்கார வாக்கியம். நாட்டின் எதிர்காலம் வகுப்பறையிலே சீரழிகிறது என்பது அவரது அனுபவம்.
[மேலும் இதுபற்றிய விவரமான குறிப்புகளை 'எழுததோசை' என்ற எனது மற்றொரு ப்ளாகில் காணலாம்]

இரண்டு விசித்திரக் கலவைகள்


இரண்டு விசித்திரக் கலவைகள்

நமது இந்தியப் பண்பாட்டிலும், வாழ்க்கை முறையிலும் இரண்டு விசித்திரக் கலவைகள் இன்று தென்படுகின்றன.
ஒரு பக்கம் பழமை, மரபு இவற்றில் ஊறிவிட்ட மனோபாவம். அதிவேகமாக மாறிவரும் உலகிற்கு ஏற்ப இசைந்து செல்ல முடியாத தன்மை, முதியோர், மத்திய வயதினர் இதன் பிரதிநிதிகள்.
மறுபக்கம், காட்டுத்தீ பரவுவது போன்ற வேகத்துடன் மேற்கத்திய கலாச்சாரத்தின் மீது கொள்ளும் மோகம். இளைய தலைமுறை இதன் பிரதிநிதி.
உடை, உணவு, கற்கும் மொழி கடைப்பிடிக்கும் அன்றாட நடைமுறை எல்லாம் இன்று அறிவியல் கருவிகளின் வேகத்தால் அச்சு அசல் அப்படியே மேற்கத்திய பாணிக்கு மாறிக் கொண்டு வருகின்றன.
இது நல்லதா கெட்டதா என்று ஆராய்ந்து ஒரு பலனுமில்லை எந்த மாற்றத்தையும் ஓர் ஆராய்ச்சி தடுத்து நிறுத்திவிட முடியாது.
ஆனால் நாம் ஏன் மாற வேண்டும்? நாம் எதற்கு ஒன்றைப் பார்த்து காப்பி அடிக்க வேண்டும்? இந்தக் கேள்விகள், ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி ஒரு தனிநபர் வளர்ச்சிக்கும் முக்கியமானவை.
பெரும்பாலும் விரும்பி ஏற்கும் மாற்றங்களின் காரணம் அடுத்தவர் நம்மைப் பற்றித் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதே.
அமெரிக்க அறிஞர் மெர்ஸன் எழுதினார் “என்னுடைய வாழ்க்கைக்கு நோக்கம், வாழ்க்கையே ஒழிய ஊரார் பார்த்து மெச்ச வேண்டும் என்பது அல்ல. வாழ்க்கை பார்வைக்குப் பளபளப்பாயிருந்து திடத்தன்மை இல்லாமல் இருப்பதைக் காட்டிலும் சாதாரணமாய் இருப்பது மேல்.”
நமது செய்தி வெளியீட்டுச் சாதனங்களும் அறிவியல் கருவிகளும் இடைவிடாது பளபளப்பானவை பற்றியே வலியுறுத்துகின்றன.
இன்னின்ன சௌகரியங்களை அடைவது, இன்னின்ன கருவிகள், வசதிகள் இவற்றை அடைவது இதுதான் வாழ்வின் பொற்காலக் கனவுகள் என்று எல்லா முனையிலும் நமக்கு வலியுறுத்தப்படுகிறது.
இளைய தலைமுறை பாப் மியூஸிக், மேற்கத்திய பண்பாடு இவற்றில் ஒரு கவர்ச்சி காரணமாக வேகமாய் ஈடுபடுகிறது.
நமது பழம் பெருமைகளைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் நமக்கு எந்தப் பெருமையும் இல்லை என்று எதிர் வீட்டுப் பெருமைக்குக் கொடி பிடிக்க வேண்டிய மோகம் அவசியமில்லை.
‘எல்லாம் வயசுக் காலத்தில் இப்படித்தான்’ என்று ஒரு கல்யாணம் நடந்து, ஒரு குழந்தை பிறக்கிற வரையில் ஒரு கலாச்சாரப் பிரமையில் இருந்து, வாழ்க்கையின் கனம் புரிந்தும் பலர், பழமையில் போய் கண்ணை மூடிச் சரணடைவது கண்கூடு.
இரண்டுமே தன்மதிப்புள்ள செயல்களாக முடியாது.
மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
அதிவேகமாகப் பழமை அழிந்து வருகிறது. அதிவேகமாக தர நிர்ணயம் செய்யப்படாத புதுமை வளர்ந்து வருகிறது.
இந்த இரு பார்வைகளுக்கும் இடைப்பட்ட ஒரு பாலம் போன்ற ஒரு புதிய பார்வை நமக்குத் தேவை.
“மகான்களின் சாதியான் யார் என்றால் அவர்களுடைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அனுசரிக்காமல் தனக்குத்தானே குருவாக இருந்து ஒரு சமயத்தை ஸ்தாபிக்கிறவன் தான்” என்று எமர்ஸன் சொன்ன மாதிரி நமது பெருமைகளையும் சிறுமைகளையும் மிகவும் சரியாகப் புரிந்து கொள்ளும் பார்வை நமக்கு வேண்டும்.
நமக்கு நாமே குருவாக இருந்து எதையும் பார்த்து நகல் செய்யாத கம்பீரத்துடன் நாம் நம் வழியைத் தேட வேண்டும்.
வேற்று நாகரிகங்களிடமிருந்தோ வேற்று மனிதர்களிடமிருந்தோ எதையும் எதிர்பார்க்காத மனோபலம் வந்துவிட்டால் இந்தப் பார்வை நமக்கு வந்துவிடும்.
பல நூறு ஆண்டுக்காலம் சார்ந்து சார்ந்து வாழ்ந்தே, பழக்கப்பட்டு விட்ட நமது நாடு, சுய சார்பை நோக்கிப் படிப்படியாக முன்னேறி வரும் இந்தக் கால கட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும், இந்தப் பார்வையை ஒருங்கிணைந்து உருவாக்க வேண்டியவர்களாகிறோம். எதைச் சொன்னாலும் எந்தச் சிந்தனையை அமுல்செய்ய முயன்றாலும் (அதுக்கெல்லாம் இது காலமில்லே; இதெல்லாம் உதவாது) என்றுதான் நாம் தைரியமூட்டப்படுகிறோம்.
உண்மையில், காலம் என்பது எதிர்த்து நிற்கும் வலிமையுள்ள மனிதர்களால் தான் உருவாக்கப்படுகிறது.
இரண்டு உலக மகா யுத்தங்களுக்கு இடையே உருண்ட உலகில்தான் அஹிம்சை என்ற தத்துவம் நடைமுறைக்கு வந்து ஒரு நாட்டின் விடுதலைக்கு வழிகாட்டிற்று.
அப்போதும் கூட அதற்குக் காலமில்லை.
பார்வையைக் காலம் உருவாக்குவதில்லை, பார்வை தான் காலத்தை உருவாக்குகிறது.அஞ்சாத, அகம்பாவமில்லாத, பணிவுள்ள, புரிந்து கொள்கிற, சுயமான பார்வை நமது இளைய தலைமுறைக்குத் தேவை.
அவை ஒன்றுக்கொன்று வேறுபடலாம்; ஆனால் ஒன்றையொன்று அழித்து விட வேண்டும் என்ற வேகம் பெறக் கூடாது. தேசம் தான் நமது பிரதான லட்சியம் நாடு இருந்தால், வளர்ந்தால் நாம் வளர்கிறோம். நமது பண்பாடு, நமது வளர்ச்சி இவை நமது முயற்சிகளின்பால், நமது கருத்தோட்டங்களின் துணையுடன் கட்டப்படுவது தான் நிலைத்திருக்க முடியும். அப்போது தான் அது ஒரு புதிய பார்வை ஆகும்.

மிகயீல் ஷோலகவ்

மிகயீல் ஷோலகவ்
இருபதாம் நூற்றாண்டு மனித குலத்தைப் பொறுத்தவரையில் மகத்தான வெற்றிகளையும் மாபெரும் தோல்விகளையும் பெற்ற நூற்றாண்டு என்று கூறலாம்.
அறிவியல், தொழில் முன்னேற்றம் இவற்றில் மனிதன் பல கொடுமுடிச் சிகரங்களைத் தொட்டு விட்டான். ஆனால் மன அமைதி, கலைகளின் ஆழ்ந்து தோய்ந்து ஈடுபடும் ஓய்வு, இவற்றில் அவன் பெரிய தோல்விகளையே சந்திக்கிறான்.
மனிதன் முடுக்கிவிட்ட யந்திரம், அவனை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறது. எதிலும் ஆழ்ந்து தோய்ந்து ஈடுபட முடியாமல், அவன் யந்திர வேகத்துக்கு ஈடு கொடுக்கச் சிறுகச் சிறுக யந்திர மயமாகி வருகிறான்.
இந்த யந்திர மயமாதல் எல்லாத் துறைகளையும் போலக் கலைத் துளையிலும் நுழைந்துவிட்டது.
நல்ல சங்கீதம், நல்ல ஓவியம், நல்ல திரைப்படம், நல்ல சிற்பம், நல்ல நாவல் என்பது தேடித் தேடி அலைந்து கண்டுபிடிக்கப்பட வேண்டிய அரிய பொருளாகி விட்டது.
இந்த அருமை, நம் உள்ளத்தில் நாளுக்கு நாள் அதிருப்தியையும், நம்பிக்கை இன்மையையும் வளர்த்துச் செல்கிறது. நல்லனவற்றிற்குப் பதில் போலிகளைக் கொண்டே திருப்தியடைய வேண்டிய நிர்ப்பந்தம், நம்மை எல்லா வெளியீட்டு சாதனங்களின் மூலமும் நெருக்கிக் கொண்டு வருகிறது.
சோவியத் நாவல்கள் இந்த நெருக்கடியிலிருந்து சற்றேனும் விடுபட்டவை என்ற நம்பிக்கையை வழங்கின. எண்பதுகளில் காலமான மிகயீல் ஷோலகவ் டால்ஸ்டாய்க்கு இணையான எழுத்துலக ஜாம்பவான்களில் கடைசிக் கொழுந்தாக இருந்தவர்.
டான் நதி அமைதியாகப் பாய்கிறது. பண்படுத்தப்பட்ட கன்னி நிலம் அவர்கள் தங்கள் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள் என்ற மூன்று மகத்தான நாவல்கள் மூலம், உலக நாவல் இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்தவர் மிகயீல் ஷோலகவ். ஷோலகவ் டால்ஸ்டாயைப் போலவே தம் கலை விஷயத்தில் அப்பழுக்கற்ற நேர்மைக்கு முதலிடம் கொடுத்தவர்.
ஒரு கதாபாத்திரத்தை அவர் உருவாக்கும்பொழுது வாழ்க்கையிலிருந்தே அதை எடுத்தார். அதன் புற வெளியீடுகளையும், உள்ளுணர்வுகளையும் டால்ஸ்டாயின் மரபுக்கேற்ற நேர்மையுடன் படைத்தார்.
இந்த ஒரு மகத்தான எழுத்தாளர்களுக்கும் இடையில் இருந்த பொதுவான கடமை ஒன்றுதான்.
சம காலத்திய மனித ஆன்மாவைச் சித்தரிப்பது.
ஆனால் இதில் இருவரும் கடைப்பிடித்த முறைகள் வெவ்வேறானவை.
டால்ஸ்டாய், மனிதனை பண்பாட்டு இயல் பார்வையோடு தீர்ப்பிட்டார். தன் சொந்தப் பார்வையில் கண்டிக்கத்தக்கது எது, அங்கீகரிக்கத் தக்கது எது என்று தோன்றியதோ, அதை வைத்து அவர் தீர்மானித்தார்.
ஆனால் ஷோலகவ், வரலாற்று பூர்வமான மாற்றத்தில் மனிதன் எந்த நிலையை எட்டியிருக்கிறானோ அதைக் கொண்டு அவனைத் தீர்ப்பிட்டார்.
ஷோலகவ், அடிப்படையில் டால்ஸ்டாயிடமிருந்து மாறுபட்டவர். அவருக்குத் தணியாத வாழ்க்கைத் தாகம் இருந்தது. அவரது விதவிதமான கதாபாத்திரங்களில் பல, வாழ வேண்டுமென்ற தணியாத தாகம் கொண்டவை.
காதல், துயரம், மகிழ்ச்சி, துன்புறுதல் என்ற அழுத்தமான மனோ உணர்வுகளை, தனிச் சிறப்பான வடிவம் கொடுத்துத் தெட்டத் தெளிவாக, அவர் பாத்திரங்களைப் படைத்திருக்கிறார்.
டால்ஸ்டாயின் பாத்திரங்கள் வாழ்க்கையை ஒரு நீதிபதி ஒதுங்கி நின்று வாழ்க்கையை ஒரு வழக்காகக் கூர்ந்து கவனிக்கின்றவை. நிலைத்த சத்தியம் எதுவென்று, இருளிலிருந்து ஒளியை நோக்கி நடக்கும் இடைவிடாத பயணம் போன்று, அவரது கதைப் போக்கும் பாத்திரங்களும் நம்மை அழைத்துச் செல்லும்.
பாத்திரப் படைப்பு என்பது ஷோலகவ்வின் நாவல்களில், ஒரு பிரித்துச் சொல்லக் கூடிய அம்சமாக இராது. ஒட்டு மொத்தமான ஓர் ஒருங்கிணைந்த சித்தரிப்பின் ஊடே ஆங்காங்கே அது வெளிப்படும்.
அவர் நிலப்பிரபுவையோ அல்லது ஒரு விவசாயியையோ, ஒரு வியாபாரியையோ சித்தரிக்கிறார் என்றால் அந்தந்த வர்க்கத்தின் மேன்மையும் தாழ்வும் கலந்தாகவே அவர் பாத்திரங்கள், உள்ளத உள்ளவாறே வெளிப்படும்.
குடும்ப உறவுகள், காதல், வெறுப்பு, நட்பு முதலியவற்றை வெளிக்கொணர்வதன் மூலம் அந்தக் கதாபாத்திரங்கள் தமது வர்க்க குணங்களிலிருந்து மாறுபடாத அச்சு அசல் மனிதர்களாகப் படைக்கப்பட்டார்கள்.
ஷோலகவ்வின் எழுத்துத் திறனில், மிகவும் பெரிய சாதனை ஒன்று உண்டு. ஒரு கால கட்டத்தின் வாழ்க்கையை அதன் கதாபாத்திரங்கள் யாவும் உண்மையான ஆனந்தத்தை அடைய இடைவிடாது போராடுகின்றவை.
உண்மையான ஓர் மாபெரும் எழுத்தாளர் ஒரு கால கட்டத்தின் மனிதன் எப்படி இருந்தான் என்று காட்டுவதோடு நின்று விடுவதில்லை.
ஒரு லட்சியத்தை நோக்கி, அவன் எவ்வாறு வீறு நடை போட்டான். என்பதையும் காட்டியாக வேண்டும் அப்படிக் காட்டினால் ஒழிய, அவனது எழுத்து எந்த மகத்துவத்தையும் பெறுவதற்கில்லை.
இந்த விஷயத்தில், ஷோலகவ்வின் மூன்று நாவல்களிலும் வருகிற கதாநாயகர்களாகட்டும், கதாநாயகிகளாகட்டும், தம் பணியை செவ்வனே நிறைவேற்றி இருக்கின்றனர்.
இதன் தொடர்பாக ரஷ்ய இலக்கிய மேதைகள் இருவரது கருத்தை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்.
[ஒரு நாவலை ஓர் எழுத்தாளன் எழுதும்போது தன்னைப் பொறுத்த அளவில் வாழ்க்கையில் எது நல்லது எது கெட்டது என்ற விஷயத்தில் ஒரு தெளிவான உறுதியான கருத்து வைத்திருக்க வேண்டும். இதைப் பற்றி அவனுக்கு ஒரு நிச்சயம் இல்லை என்றால் அவனால் நல்ல தன்மையுள்ள ஒரு கதாபாத்திரத்தின் மூலம் வெளியிடுவது இயலாது.- டால்ஸ்டாய்

நல்ல எழுத்தாளர் அல்லது சர்வதேசத் தன்மை கொண்ட எழுத்தாளர் என்று நாம் மதிக்கும் எந்த எழுத்தாளரிடமும் ஒரு பொதுப் படையான தனிப்பண்பு உள்ளது. அவர்கள் ஏதோ ஒரு மையத்தை நோக்கி நகர்கின்றனர். தம்மைப் பின்பற்றி வரச்சொல்லி விரல் அசைக்கின்றனர். அவர்கள் காட்டும் வாழ்க்கை உள்ளது உள்ளபடியே இருப்பது மட்டுமல்ல. அது எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படுத்துகிறது. இதுதான் நம்மைக் கவரும் அம்சம் - ஆண்டன் செகாவ்.
இந்தப் பெரிய பணியில் அவர் பெற்ற வெற்றி டான் நதி அமைதியாகப் பாய்கிறது. நாவலில் “கிரகரி மெலெகோவ்” என்ற மையப் பாத்திரத்தின் ஒவ்வொரு அசைவிலும் தெளிவாகப் புலனாகும்.
ஓர் உண்மை மனிதன் யார் என்ற விஷயத்தில் ஷோலகவ்வுக்கு அசைக்க முடியாத உறுதி உண்டு, அவன் சுறுசுறுப்பானவன். வெல்ல முடியாத தனித்தன்மை கொண்டவன், நன்மை, சத்தியம், அழகு முதலிய உயர்ந்த லட்சியங்களுக்காக அவன் இடைவிடாது போராடுபவன்.
ஷோலகவ்வின் கதாநாயகர்கள் இந்த உன்னதப் பண்புகளைப் பெற்றவர்கள் அல்லது அதைப் பெற பாடுபட்டவர்கள்.
பிரபல ரஷ்ய எழுத்தாளர் கொரொலெங்கோ ஒருமுறை “மனிதன் ஆனந்தமாயிருக்கவே பிறப்பிக்கப்பட்டவன்; ஒரு பறவை எப்படி பறப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்டதோ அதைப் போன்று” என்று குறிப்பிட்டார்.
உலக நாவல் இலக்கியத்துக்கும் பெருமை சேர்த்த மூன்று நாவல்களை எழுதிய ஷோலகவ், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார்.
மனித உழைப்பின் பெருமை, தீமைக்கு எதிராக மனித ஆன்மா இடைவிடாது நடத்தி வரும் போராட்டம் இவற்றை அவரது நாவல்கள் ஒலிம்பிக் தீப்பந்தம் போல் உயர்த்திப் பிடித்தன.
அவர் காலமானபோது, சர்வதேச நாவல் வாசகர்கள் ஒரு மாபெரும் தனிப்பட்ட இழப்பை அனுபவித்து வருந்தினார்கள். ஷோலகவ் முகமறியாத பலரால் அவ்வளவு நேசிக்கப்பட்டவராயிருந்தார். அவர் மனித குலத்தின் சொத்து.