Friday 21 December 2012

பைபிளிலே தமிழ் உரைநடை

.
  பைபிளிலே தமிழ் உரைநடை
தமிழில் உரைநடை வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்கள் பலர். தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், சேனாவரையர், இளம்பூரணர் ஆகிய பெரும்புலவர்களிலிருந்து இப்பணி தொடங்கி யிருக்கிறது.
அதற்கு முன்பும் உரைநடைத் தமிழ் இருந்திருக்கலாம். சங்க காலச் செய்யுட்கள் பல, அக்காலத்திய உரைநடைக்கு வெகு நெருக்கமாகவும் இருந்திருக்கலாம். அக்காலத்தில் அச்சு யந்திரமோ, அதுபோன்ற பிற வசதிகளோ இல்லாததால், நமக்குத் திட்டவட்டமான சான்று, இது பற்றிக் கிடைக்கவில்லை.
அச்சு யந்திரம், தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு மிகப் பெரிய தொண்டாற்றி யிருக்கிறது. அதே போல் அச்சு யந்திரத்தை தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்த ஆங்கிலேயர்களும் ஒரு மறைமுக உதவியைச் செய்திருக்கிறார்கள். கிறிஸ்தவ மதத்தை இந்தியாவில் பரப்ப வந்த பாதிரிமார்கள் பல இந்திய மொழிகளைப் போலவே, தமிழிலும் பல மொழி வளப் பணிகளுக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.
அகராதி தொகுத்தல், இலக்கண ஆய்வு, புதிய படைப்புகளைத் தோற்றுவித்தல், இவற்றோடு தமிழ் உரைநடை வளத்துக்கும் அவர்கள் பேருதவி செய்திருக்கிறார்கள்.
பைபிள் தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட போது அது ஓர் அந்நிய நாட்டினரின் அந்நிய பாவமான மொழிபெயர்ப்பாக அமையவில்லை. தமிழ் மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த அக்கிறிஸ்தவச் சான்றோர்கள், கருத்து வேகத்துக்கும், உணர்ச்சி வெள்ளத்துக்கும் வழிவிடும் அகன்ற கரைகளும் உயிர்த்துடிப்பும் உள்ள தமிழின் வசதியைப் புரிந்து கொண்டார்கள். புரிந்து கொண்டதோடு நில்லாமல், தங்கச் சுரங்கத்திலிருந்து வெட்டியெடுத்த தங்கத்தைக் கொண்டு, தாமே உருக்கி, புதிய ஆபரணங்களைத் தாமே செய்து, தமிழுக்கு வழங்கினார்கள். பைபிளின் உரைநடைத் தமிழ் தனிப்பெரும் அழகுடையது. அது கம்பீரம், சொல்லாட்சி, நெஞ்சை அள்ளும் லாகவம், உணர்ச்சி ததும்பும் வெளிப்பாடு கொண்டது.
எடுத்துக்காட்டாக பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டிலிருந்தும் சில துளிகள்:
* “அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து ஆபிரகாமே ஆபிரகாமே” என்ற கூப்பிட்டார். அவன் “இதோ, அடியேன்” என்றான் (ஆதியாகமம் 23:11)
அப்பொழுது அவர் “பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும் உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்” என்றார் (ஆதியாகமம் 22:12)
* அதற்கு தேவன் “இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடன் சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக” என்கிறார் (யாத்திராகமம் 3:14)
* அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி “தடவிக் கொண்டிருக்கத் தக்கதான இருள் எகிப்து தேசத்தின் மேல் உண்டாகும்படிக்கு உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு”! என்கிறார் (யாத்திராகமம் 11:20)
* வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும், முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக் கூடு உனக்குத் தென்படும்போது, தாயானது குஞ்சுகளின் மேலாவது முட்டைகளின் மேலாவது அடைகாத்துக் கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது (உபாகமம் 22:6).
* நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன், கர்த்தர் கொடுத்தார்; கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான் (யோபு 2:21)
* என் ஜனமே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன், இஸ்ரவேலா, நீ எனக்குச் செவி கொடுத்தால் நலமாயிருக்கும் (சங்கீதம் 81:8)
* அடைக்கலான் குருவி அலைந்து போவது போலும், தகைவிலான் குருவி பறந்து போவது போலும் காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது (நீதிமொழிகள் 26:2)
* வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும் உன் கண்ணின் காட்சிகளிலும் நட; அனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும், தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி (பிரவங்கி 12:9)
* பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகின்றன. குருவிகள் பாடுங்காலம் வந்தது. காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்திலே கேட்கப்படுகிறது. (உன்னதப்பாட்டு 2:12)
* வாரும் என் நேசரே! வயல் வெளிகளிலே போய் கிராமங்களில் தங்குவோம். அதிகாலையிலே திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சைக் கொடி துளிர்த்து அதில் பூ மலர்ந்ததோ என்றும் மாதுளஞ்செடி பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம், அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உனக்குத் தருவேன் (உன்னதப்பாட்டு 7:1,22).
* பிரவாகம் போல் புரண்டு வருகிற இவள் யார்? அலைகள் மோதியடிக்கிற நதிகள் போல் எழும்பி வருகிற இவள் யார்? (எரேமியா 46:7)
* கர்த்தாவே எங்களை உம்மிடத்தில் திருப்பிக் கொள்ளும். அப்பொழுது திரும்புவோம், பூர்வ காலத்திலிருந்தது போல் எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும் (எசேக்கியேல் 1:21)
* பின்னும், அவர் என்னை நோக்கி இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்க தரிசன வசனங்களை முத்திரை போட வேண்டாம். காலம் சமீபமாயிருக்கிறது (வெளியாகமம் 22:10).
பைபிள் முழுவதிலும் மாணிக்கக் கற்கள் போல் ஒளி வீசும் உரைநடையின் பெருமையைக் குறிக்க இடச்சுருக்கம் கருதி இவ்வளவு மட்டுமே தரமுடிகிறது. எனினும் அந்த உரையின் நெஞ்சை அள்ளும் மாண்பிற்கு ஒருசுருக்கமான அறிமுகமாக இவை அமையக்கூடும்.





















No comments:

Post a Comment