Friday 21 December 2012

சாகித்திய அகாடமி இலக்கியச் சந்திப்பில் வையவன்

சாகித்திய அகாடமி இலக்கியச் சந்திப்பில்   வையவன்

ஆந்திரப் பிரதேச அரசு ஆண்டு தோறும் ஆத்ம கௌரவ புரஸ்கார் என்று ஒரு பரிசு அளிப்பதாக அண்மையில் நான் கேள்விப் பட்டேன். எதற்கு அளிக்கப் படுகிறது. யாருக்கு அளிக்கப் படுகிறது என்று தெளிவாக அறிய இயலவில்லை. எனினும் ஆத்ம கௌரவம் என்று ஒரு பரிசுக்கான அந்த அடைமொழி என்னை மிகவும் கவர்ந்தது. -நினைத்துப் பார்த்தால் அதற்காகவே - அந்தப் பரிசை அல்ல-  ஆத்ம கௌரவம் என்ற  அந்தப் பண்பைப் பெறுவதற்காகவே என் வாழ்நாள் முழுதும் செலவழிந் திருப்பதாக எனக்கு அப்போது எண்ணத் தோன்றியது.
13 வயதில் எழுத ஆரம்பித்த நான் வெளிச்சத்திற்கு வந்தது 1959 மே மாதம் 10 தேதியிட்ட  குமுதம் இதழில் வெளிவந்த என்  'வெளிச்சம் விரட்டுகிறது 'என்ற சிறுகதையின் முலம் தான்.
அப்போது எனக்கு 19 வயது. அதற்குள் வாழ்க்கை என்பது என்னவென்று நன்றாகவே விளங்கி விட்டிருந்தது. கொடிது கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவையார். இனிது இனிது இளமையில் வறுமை என்று நான் கருதுகிறேன் .
வாழ்க்கையின் மதிப்பை வறுமை நன்கு உணர்த்துகிறது. அதைப் பற்றிய விசாலப் பார்வையை வழங்குகிறது.
வியர்வையின் அருமையை ... உழைப்பின் பெருமையை ... போராட்ட உணர்வுகளை மனிதர்களின் மதிப்பை அவர்கள் வகுத்துள்ள மதிப்பீடுகளின்
நன்மையை மற்றும்  அவற்றின் புன்மையையும் விரிவாகப் புலப்படுத்தி வறுமை நேர்முகமாக அனுபவிக்க  வைக்கிறது. அதுவும் உறவினர் நண்பர்கள் என எல்லோராலும் ஏழ்மை காரணமாக இகழ்ச்சியாக ஒதுக்கி வைக்கப் பட்டால் ஒரு தனி பலம் பெற்ற  ஆத்ம கௌரவத்தை நம்முள் ஏற்படுத்துகிறது.
ஒரு வேளை நபருக்கு நபர் அது மாறுபடலாம். எனக்குள் ஏற்படுத்தியதையே நான் குறிப்படுகிறேன்.
வாய்த்த வறுமையைக் கொண்டாடவும் வேண்டாம். அதைக்  குறித்து மனம் சலித்தோ விதியைச் சபித்தோ உழலவும் வேண்டாம். அது வீண் வேலை. ஆழ்ந்து பார்த்தால் அது ஒரு சுய இரக்கத்தின் வெளிப்பாடே. எனினும் நம் வாழ்வில் எங்கிருந்து எல்லாம் தொடங்கின? இதை மறந்துவிடாமல் இருப்பது  அறிவு  வளர வளர வந்த ஞானமாய் முகிழ்க்கும். மாற்றியமைக்கத் தான் வாழ்க்கை. எல்லா உயிர்களுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.    இது என் இளமைப் பருவத்தில் நான் கொண்டிருந்த கருத்து.
எப்படி மாற்றியமைப்பது ? என்னைச் சுற்றிலும் எல்லோரும் அவரவர் மன ஈர்ப்புகளுக்கு ஏற்ப அல்லது சிவசிவசம்போ என்று ஆற்றில் அடித்துச் செல்லும் தன் முனைப்பின்றி  மாறுதலே அற்ற ஒரு போக்கிலும் போய்க்கொண்டிருந்தார்கள். சரி  இது நபருக்கு நபர் வேறுபடும் விஷயம். நான் என்ன செய்வது?
எஸ்.எஸ்.எல்.சியை முடித்து விட்டு என்னென்ன வேலைகள் செய்ய முடியும் என்று பரீட்சார்த்தமாக அலைந்து கொண்டிருந்த ஒரு பருவம் அது.
என் ஏழு வயதிலேயே திராவிட இயக்கப் பற்றுள்ள என் தந்தையார் வாசிப்புப் பழக்கத்தை என்னுள் ஏற்படுத்தி இருந்தார். வாசிக்கும் ஆர்வம் வளர்ந்தோங்கிக்கொழுந்து விட்டெரிந்து கொண்டது.
இன்றைய வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் அன்று ஓரிரண்டு வாடகை நூலகங்களும் ஒரு பெரியநூலகமும் இருந்தன. அவற்றில் விவேகானந்தர் முதல் டர்ஜனீவ் டால்ஸ்டாய் டாஸ்டாவ்ஸ்கி கார்ல் மார்க்ஸின் டாஸ் காபிடல் பகவத் கீதை என  ஏராளமான புத்தகங்கள். பீரோ பீரோவாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த புத்தகங்கள்.
பல நாட்கள் அந்த நூலகம் திறக்கப் படும் முன்பே வாசலில் காத்திருந்து நூலகர் பூட்டப் போகிறேன் என்று எச்சரிக்கும் வரை வாசித்த நாட்கள் எத்தனையோ. ஆயினும் என் மனம் ஒரு நூலினை ஒரே ஒரு நூலினை முற்றிலும் என் மனசையும் அறிவையும் உருக்கி வார்த்து மாற்றியமைக்கக் கூடிய ஒரு நூலைத் தேடி அலைந்தது.
புத்தகத்தை மனிதர்கள் தான் உருவாக்குகிறார்கள்.
பிறகு புத்தகம் மனிதனை உருவாக்கித் தொடங்கி விடுகிறது.
இதற்கு ருக்ணவணி வடடிண் டூச்ண்வ புத்தகத்தைப் படித்துவிட்டு உருவான காந்திஜியும் ஈச்ண் இச்ணீடிவச்டூபுத்தகத்தைப் படித்துவிட்டு உருவான லெனினும் என  ஏராளமான சான்றுகளைச் சொல்லலாம். தேடிப்பார்த்தால் உங்களுக்குள்ளே காற்றோட்டமாக நுழைந்து உங்கள் உயிர் மூச்சோடு இணைந்து விட்ட ஒரு புத்தகம் நிச்சயம் இருக்கும். அது கந்தர் சஷ்டிக் கவசமாகவோ பெரிய திருமொழியாகவோ கூட இருக்கலாம். நான் தேடியலைந்த புத்தகம் தானாகவே ஒரு நண்பர்வழியே என்னை வந்தடைந்தது.
விவேகானந்தரின் சம்பாஷணைகள் என்ற புத்தகம்.வாசிக்க வாசிக்க அதன் பரந்த ஞான வெளியாத்திரை என்னை  உயர்த்தி விட்டுக் கொண்டு சென்றது.
இந்த மனித குலம் முழுவதற்கும் நானே ஒரு தந்தை போன்றும் சகோதரன் போன்றும் தாய் போன்றும் மகன் போன்றும் மகள் போன்றும் பால் வேற்றுமை கடந்த ஒரு மனப் பெருமிதத்தை என்னுள் அந்த நூல் தீ மூட்டி வளர்த்தது. அடுத்து வாசிக்கக் கிடைத்தது நமது மகாகவியின் ஒரு மலிவுப் பதிப்புக் கவிதைத் தொகுதி. காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்க நோக்க களியாட்டம் என்று எல்லாத் துன்ப நினைவுகளையும் துச்ச உணர்வுகளையும் விட்டு விடுதலையாக்கி என்னை ஒரு சிட்டுக் குருவியென பாரதி சிறகடித்துப் பறக்க விட்டார்.
எல்லையற்ற விடுதலைஎதுஎன்று எனக்குச் சுட்டிக் காட்டினார்.அந்த இரு நூல்களும்  நீ ஏழையோ கோழையோ அல்ல என்று உணர்த்தின. வாழ்க்கை என்பது பணம் சம்பாதித்துக் குவிப்பது மட்டுமில்லை. ஒரு பதவி அதைவிட்டு மற்றொரு பதவி என்று அலைவதில் இல்லை என்று அவை உணர்த்தின .
ஆத்ம கௌரவத்தின் சம்மட்டி அடிகள் என்னை உருவாக்கின. வாசித்துக் கொண்டே இருந்த நான் சிறுவயசுப் பழக்கத்தைத் தொடர விளையாட்டாகத் தான் எழுத ஆரம்பத்தேன். விளையாட்டாக எழுதி அனுப்பிய கதை பரசுரிக்கப் பட்டு அதற்குச் சன்மானமாகப் பணமும் வந்தது. வெறும் முப்பது ரூபாய் தான். ஆனால் 1959ல் அது ஒரு பெரிய தொகை. குடும்ப கௌரவத்தை நிலை நாட்ட அந்தத் தொகை சற்று உதவியது, குமுதத்தில் வெளிவந்த அந்த சிறுகதையை அண்மையில் காலமான என் நண்பர், இரா.மாணிக்கம் மிகவும் பாராட்டி ஒரு மணி நேரத்திற்கு மேல் எனக்குத் தந்த ஊக்குவிப்பு தான் என்னை மென்மேலும் எழுதத்தூண்டியது, என் எழுத்துக்கள் குமுதம், ஆனந்தவிகடன், கல்கி என்று எல்லாப்பிரபல பத்திரிகைகளிலும் வெளிவந்தன.
உடனே சென்னைக்கு ஓடி வந்து பத்திரிகை பத்திரிகையாகப் படையெடுத்து ஓயாமல் எழுதிப் பரபரவென்று நாடகம் சினிமா என்று அலைந்து பணம் பணமாகக் குவித்து விடவேண்டும் என்று ஏனோ தோன்றவில்லை. புகழில் வருகிற போதையின் அபாயமும் நல்வினைப்பயனாக எனது இளமைப் பருவத்திலேயே எனக்குப் புலப்பட்டுவிட்டது
வசதியாக இருப்பது ஒரு வாழ்க்கை முறை என்றால் வசதி இன்றி இருப்பது கூட ஒரு வாழ்க்கை முறை தான். இந்த சிந்தனையை எனது முத்தாத்தா முருகையனின் உழுதுவாழ்ந்த வாழ்க்கைப் போக்கிலிருந்து அவர் மறைந்து நாற்பது ஆண்டுகள் கழித்து நான் பெற்றேன்.ஒன்றில் ஒரு சுகம். அதை ஒட்டிய பல சுகக் கேடுகள். மற்றொன்றில் ஒரு சுகம். அதை ஒட்டிய சுகக்கேடுகள். சிக்கல்கள்.
இவை எனக்கு விவேகானந்தரும் பாரதியும் உணர்த்திய மனப் பக்குவம். சிந்திக்கிறவனுக்கு  பெரிய வித்தியாசம் தென்படுவதில்லை. என்ன பெரிய வித்தியாசம் என்ற வேதனைச் சிரிப்பு வரும்.
எழுதினால் பணம் வரும். சினிமா வாய்ப்பு வரும். பெரிய சினிமாடைரக்டர் கூட ஆகலாம். சென்னைக்குப் போ என்று நண்பர்கள் வற்புறுத்தினார்கள். பணம் எனக்கு மயக்கம் தரவில்லை. வறுமையில் ஒரு மெய்ம்மை தெரிந்தது. எனது நண்பர்களும் உறவினர்களும் பணம் சம்பாதிக்கப் பெரும்பாடு படுவதும் பணம் வந்ததும் அதல பாதாளச் சீர்கேடுகளில் வீழ்ந்து சிறுகச் சிறுகச் சிறுக அழிந்து வருவதும் விலகி நின்று பார்க்கும் விவேகத்தை எனக்கு வழங்கி இருந்தன.
1955ல் சென்னையை விட்டுச் சென்ற நான் மீண்டும் 1987ல் தான் சென்னைக்கு வந்தேன் அப்போதும் வாய்ப்பு தேடியோ வசதி  நாடியோ வரவில்லை. என் மகளும் என் மகனும் சென்னைக் கல்லூரிகளில் எனது பொருளாதார வசதிக்கு மேம்பட்ட படிப்புகள் படிக்க விதிக்கப் பட்டதால் பெற்றோருடன் இருந்து பழகிவிட்ட அவர்களின் கல்விக்கு  உறுதுணையாக இருக்கவே நான் மீண்டும் சென்னைக்கு வந்தேன்
புலவர்கள் அதுவும் காலத்தால் என்றென்றும் அழிக்க முடியாத அமரத்துவம் பெற்ற படைப்புக்களைச் செய்த திருவள்ளுவர் உள்ளிட்ட பெரும் புலவர்கள் எழுதியோ பாடியோ மட்டும் வாழ்க்கையைக் கழித்து விடாமல்  உடல் பூர்வமாக சமூகத்திற்குஉழைக்க வேண்டுமென்று மௌனமாக உணர்த்தியதாக எனக்குப் பட்டது. முழுநேர எழுத்தாளராகப் பலர் இருக்கிறார்கள். நான் அப்படி ஆகி விடவில்லை. ஆக முயன்றதுமில்லை. எழுதி மட்டுமே வாழ முடியும் என்ற தைரியம் இருந்தது. ஆனால்.....
இந்தச் சமூகத்திற்கும் என்னை வளர்த்து உருவாக்கிய பெற்றோருக்கும் அந்தக் காலத்தில் மொழி என்றும் நாடு என்றும் நெஞ்சில் நிலவிய பற்றுக்களுக்கும் நான் பதில் கூறவும்  பட்ட கடனைத் திருப்பச் செலுத்தவும்  கடமைப்பட்டிருப்பதாகவும் கருதினேன். இதெல்லாம் பித்துக்குளித்தனம் என்று எல்லோரும் சிரித்தார்கள். சரி பித்துக்குளியாக வாழ்ந்தால் தான் என்ன கெட்டுப்போயிற்று ? இப்படி நினைத்தேன். கிடைக்கிற எந்தப் பணியையும் உழைப்பையும் மறுக்கும் வழக்கம் எனக்கு இல்லை.
என் தாய் என்னை அப்படி வளர்த்திருந்தார்கள்.
டிக்னிடி ஆப் லேபர் என்று ஒரு மதிப்பீடு  உண்டு. எந்த உழைப்பும் கௌரவமானது தான். எந்த வேலையைச்செய்யவும் தயாராகு.  ‘த யூனிவர்ஸ் ஈஸ் ட்ரையிங் டு க்ரோ யூ  அப் இன் ஆல் ஆஸ்பெக்ட்ஸ்‘  என்று தோன்றும். அப்படி மலேரியா ஒழிப்புத் திட்டத்தில் சர்வேலன்ஸ் இன்ஸ்பெக்டராக எந்த சிபாரிசுமின்றி தானாய் ஒரு வேலை தேடி வந்தது.
     இதனிடையே மளிகைக்கடை ஊழியன், ஜெனரல் ஸ்டோர்ஸ் ஊழியன், துணிக்கடை ஊழியன், வெல்ல மண்டி ஊழியன், செக்ஷன் ரைட்டர், பத்திரிகை ஏஜெண்ட், சைக்கிளில் பேப்பர் போடும் பணி, மாம்பழ வியாபாரம், பயிற்சி பெறாத ஆசிரியப்பணி என்று நான் செய்திருந்த பல பணிகளில் சுதந்திர மனப்பான்மை தானே எனக்குள் வளர்ந்திருந்தது, எனினும் ஒருவகையில் அந்த மலேரியா ஒழிப்புத்திட்டப்பணி மேலென்று கருதினேன்
கிராமம் கிராமமாக சைக்கிளில் போய் மலேரியாக் காய்ச்சல் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டிய சர்வேலன்ஸ் ஊழியர்களை அவர்கள் சோதித்தார்களா என்று பரிசோதிக்கிற வேலை.அந்த வேலையில் இரண்டு லாபங்கள். கிராமம் கிராமமாக மக்களைச் சந்திப்பது. சைக்கிளில் சாலை சாலையாகச் சுற்றி வரும் ஆனந்தம்.
அப்போது யூனிட் ஆபிஸர் ஆக இருந்த மலையாளி ஒருவர் நான் கதை எழுதுவதைக் கேள்விப்பட்டு இந்த வேலை செய்வதாக இருந்தால் கதை எல்லாம் எழுதக் கூடாது என்றார். சற்று கூட யோசிக்காமல் மடமடவென்று அவரிடமே ஒரு காகிதம் வாங்கி ராஜினாமாக் கடிதத்தை எழுதி அவரிடம் நீட்டினேன்
என்ன இது என்று கேட்டார். ராஜிநாமா. கதை எழுதாமல் என்னால் இருக்க முடியாது என்று கூறிவிட்டு அலுவலகத்தை விட்டுத்திரும்பியே பார்க்காமல் வெளியேறினேன்லை செய்ய வேண்டும். படிக்கவும் வேண்டும்.(தொடரும்)











No comments:

Post a Comment