Friday 21 December 2012

தான் தேடும் பொருள் தானே தான்

 (தொடர்ச்சி)
சரி நம் உத்தேசம் பலன் பெற்றது என்று எண்ணினேன்.
இப்படி ஒவ்வொரு கதைக்கும் ஒரு மனச்சிலிர்ப்புள்ள
எதிரொலிகள் வந்திருக்கின்றன.
நல்லது.
மகிழ்ச்சி.
சரி.
இவ்வளவோடு நிற்காமல் நானே உணரும்  என் குறைகள் என்னென்ன என்று தேடித் தேடிக் களைவதல்லவா என் கவலை என்று கருதி அதைக்  களையும் முயற்சி நடந்தபடி இருக்கும். இன்று வரை என்  குறைகள் மட்டுமே எனக்குப் புலப்பட்டு வருகின்றன.
மனிதன் ஒரு முழுமையற்ற படைப்பு. மனிதனாகப் பிறந்த இந்த வாய்ப்பு முழுமையைத் தேடி நடக்கும் யாத்திரை என்ற அசைக்க முடியாத உள்ளுணர்விலே வளர்ந்து வருபவன் நான், எனவே என் கதைகளில் மட்டுமல்ல ... நான் வாழ்ந்து வரும் சொந்த வாழ்விலும் கூட என் குறைகள் மட்டுமே மனசில் அடிக்கடி நினைத்து நினைத்துக் குன்றிப்போகும் அளவில் எனக்குள் சுட்டப்பட்டு வருகிறேன். அது ஒரு வகையில் என் வளர்ச்சிக்கு ஆதார பலமாக இருந்து வருகிறது.
இனி மற்றொரு விஷயம்,,உங்கள் கதைகள் பிறந்த கதையைச் சொல்வது உகந்தது என்று அகாடமி நிர்வாகிகள் அறிவுறுத்தினார்கள்.
என் ஆசிரியப் பணி ஜவ்வாது மலைக் காடுகளில் பஸ் போக்குவரத்து கூட இன்று வரை கூட இல்லாத புலியூர் என்ற ஆதிவாசி ஊரின் வனத்துறைப் பள்ளியில் ஓராசிரியப் பள்ளியில் தான் தொடங்கியது. என்னைச் சென்னைக்குப் போகச் சொன்னவர்கள் நான் வனவாசம் போனதைப் பார்த்து வருத்தப் பட்டார்கள்.
அங்கு வாழ்ந்த ஓராண்டில் அந்த கானக வாசம் தந்த அனுபவக் கற்பனை தான் இன்று புதிதாய்ப் பறந்தோம் என்ற தமிழக அரசின் இரு ஆண்டுகளுக்குமான நாவல்பரிசினைப் பெற்றது. 1967ல் மலேசியா தமிழ் நேசன் இதழில் வெளியான அந்த நாவலுக்கு வருடா வருடம் ஒரு வாசகர் கடிதமாவது வந்து கொண்டே இருக்கும்.
எங்கள் ஊரிலே என் ஆப்த நண்பர் ஒருவர் நடத்திய ஹோட்டலில் அடிக்கடி சென்று அவரோடு காலம் கழித்த நாட்கள் ஏராளம்.
அந்த ஹோட்டல் ஒரு குடும்பமாக விளங்கியதையும் அந்தக் காலத்தில் மனித மதிப்பீடுகளுக்கு இருந்த மரியாதையும் ஆனந்த விகடனில் தொடராக வந்த என் ஜமுனா நாவலில் வடிவம் பெற்றன.
என்னை வளர்த்த திருப்பத்தூருக்கு 8 கிலோ மீட்டர் தொலைவில் ஜோலார் பேட்டை ஜங்ஷன். இந்தப் பரந்த பாரத நாட்டின் வடக்கையும் தெற்கையும் கிழக்கையும் மேற்கையும்  இணைக்கிற அந்தத் தண்டவாளங்களில் ஓடுகிற ரயில்களின் கவிதை என்னை வாரத்துக்கு ஒரு முறையாவது ஒரு காரணமுமின்றி ஏதோ ஒரு காரணம் கற்பத்துக் கொண்டு வந்து பார்க்க வைக்கும்.
அங்கே ஒரு மேம்பாலம். அது எனக்குள் சொன்ன கதை தான் கல்கியில் தொடர்கதையாக வந்த ஜங்ஷனிலே ஒரு மேம்பாலம் நாவல்
எட்டு ஆண்டுகள் பள்ளிகொண்டா என்ற பெரிய கிராமம் ஒன்றில் பணியாற்றியபோது சுற்றியிருந்த ஊர்களின் தோல் ஷாப்புகளால் ஆற்றங்கரையும் விவசாயமும் அழிந்து கொண்டு வரும் காட்சியைக் கண்டு மனம் நொந்த அனுபவம் 'கன்னியராகி நிலவினிலாடி' என்ற நாவலாக வெளிப்பட்டது. அங்கு சந்திக்க நேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் மணல்வெளி மான்கள் நாவலில் கதாபாத்திரமானார்.  பி.எஸ்ஸி .பி.எட். படித்து விட்டு கணித ஆசிரியர் வேலை கிடைக்காததால் கிணறுகளில் இறங்கி பம்ப் ஷெட் ரிப்பேர் செய்த ஓர் இளைஞர் கதாபாத்திரமானார்.
மைசூர் சென்ட்ரல் இன்ஸ்ட்யூட் ஆப் இண்டியன் லாங்குவேஜஸுக்கு ஓராண்டு தங்கி மலையாளம் கற்பதற்காக மனைவி மக்களை ஊரில் விட்டுவிட்டுச் சென்றேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று மகாகவி சொன்னதை மொழிகளை அறிந்து கொண்ட பிறகே  சொல்கிற ஆசை தான் ஒரு காரணம்.
என் அதிருஷ்டம் முதலாவது மலையாள மாநாடு அப்போது நடக்கவும் கேரளத்திற்கு 15 நாள் நேர்முகப்பயிற்சி பெறுவதற்காகச் சுற்றுப்பயணம் செய்ய வேண்டிய அவசியம் நேரவும் வாய்த்தது. வைக்கம் முகமது பஷீர் தகழி சிவசங்கரப் பள்ளை என்று மலையாள மொழியின் பிதாமகர்களை நேரில்  சந்தித்துக் கை குலுக்கி சச்சிதானந்தனின் கவிதையை கேட்டு மனங்குளிர்ந்து  அன்று கேரள முதல்வராயிருந்த  ஏ.கே.ஆண்டனியின் சொற்பொழிவை ரசிக்கும் வாய்ப்பும் கிட்டியது. மலையாள மொழியின் ஈர்ப்புக்கு நான் வசமாகி பஷீரை வாசித்ததின் விளைவு தான் அவரது 'ஒரு காமுகண்டே டயரி‘ நாவலை நான் தமிழில் ஒரு காதல் டயரி என்று மொழி பெயர்த்த கதை.
இப்படி ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் உள்ள  கதை எனக்கு அடிக்கடி ஒன்றை மட்டும் சொல்லிக் கொண்டே வந்தது.
புகழ் தேடியோ பணம் தேடியோ எழுதாதே.
புழுதியோடு புழுதியாக அடையாளமின்றிக் கரைந்து போவாய் என்பதே அது
அது சத்தியமான வாக்கு என்று வர வர உணர்கிறேன்.
புகழ் பொருளற்றுப் போகிறது. போட்டி பொறாமையை வளர்த்து மாய பம்பங்களை வித்தூன்ற வைத்துப் பொல்லாங்குகளையே அறுவடை யாக்குகிறது. நான் கண்ட அனுபவம் இது.
பணம் அர்த்தமிழக்கிறது. மதிப்பை இழக்கிறது. அழிக்கிறது. மனித மதிப்பீடுகளை மண்ணுக்குள் வீழ்த்தித் தேய்த்து  மாய்த்து விடுகிறது.
இதுவும் கண்ணார நான் கண்ட அனுபவம். இதையெல்லாம் வெளியே வாய்விட்டுச் சொன்னால் பைத்தியக்காரன் என்றோ போலிப் பாசாங்குக் காரன் என்றோ கெட்ட பெயர் தான் மிஞ்சுகிறது. எல்லா அர்த்தங்களும் சமாதியாகி மிஞ்சியவை  சுடுகாட்டுத் தீயிலே வெந்து கொண்டிருக்கிற காலம் இது.
கருத்துக்களுக்கும் மனித மதிப்பீடுகளுக்கும் மரியாதையே இல்லாமல் ஆக்கி விட்ட நவீனக் கருவிகளும் தேவையே அற்ற நுகர் பொருள்களின் மீது பொய்த் தேவைகளை உருவாக்கி மனித உழைப்பை வீணாக்கும் போக்கும் வளர்ந்து வரும் காலம் இது.
நீங்கள் வேண்டுமானால் எதையாவது போற்றிக் கொண்டு ,பேத்திப் புலம்பிக் கொண்டு இருங்கள். சரும அழ கிற்கும் முடி அழகிற்கும் புதியபுதிய ஐட்டங்களை நாங்கள் தேடிக் கொண்டு போகிறோம் என்று ஒரு புதிய தலைமுறை உருவாகிவருகிறது.
ஆனால் என்ன  இவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு  மெய்ப் பொருள் என்னவென்று தேடும் சில பைத்தியக்காரர்கள் எல்லாக் காலத்திலும் இருந்து கொண்டு தான் வருகிறார்கள். ஏதோ வயசான பின்பு வயசாகி விட்டதால் தேடுகிறவர்கள் அல்ல அவர்கள். அவர்களுக்கு வயசாவதே இல்லை.
அவர்கள் பிறந்ததே மெய்ப் பொருளைத் தேடத்தான். காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. இருக்கிற காலத்தில் உனக்குத் தோன்றுவதை வெளியிட்டு மன ஈடுபாட்டோடு உழைத்து விட்டுப் போ.
இது தான் உனக்கு விதிக்கப்பட்ட பணி. நெடிய அனுபவங்களுக்குப் பின் அவர்களிடமிருந்து எனக்கு விளங்கியது இது தான் .
வேதனைகளை வெளியேற்று.
பரவசங்களைப் பகிர்ந்து கொள்.
வெளிச்சத்தைச் சுட்டிக்காட்டு
மௌனமாக வேலையைப் பார்த்துக் கொண்டு போ.
இவை தான் உனக்கு வகுத்துத் தரும் சாலைத் திருப்பங்கள்.
ஆத்ம கௌரவம் என்ற இலக்கை நோக்கியதே  உன் பயணம்.
இப்படி விவேகானந்தரும் அவர் உள்ளுக்குள் மிகவும் போற்றிய கௌதம புத்தரும் என்னுள் கட்டளையிட்டுக் கொண்டே வருகிறார்கள்.
ஆத்மகௌரவம் என்பது மனித மதிப்பீட்டின் உச்சிப் படிக்கட்டு.
அதுவே பதினெட்டாம் படி.
சபரிமலைக்குச் சென்று அந்த பதினெட்டாம் படியைக் கடந்து ஏறியவர்கள் காண்பது ஒரு திருவாசகம். தத்வமஸி. உங்களில் பலர் அதை அறிந்திருப்பீர்கள்
நீ தான் அது.
இது தான் அதன் பொருள் .வாழ்க்கைக்கு அதாவது உயிர்வாழ்வுக்கு ...அர்த்தம் தேடி மனித மனம் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து முயன்று கொண்டே வருகிறது. பணம் புகழ் பதவி என்று அலையோ அலை என்று அலைந்தாலும் அந்த முயற்சி நிற்க வில்லை.
எல்லா மேல் நாடுகளிலும் இன்றும் யோகா என்றும் தியானம் என்றும் மனித மனம் அர்த்தம் தேடி அலைந்து கொண்டேதான் இருக்கிறது.
விரக்தி யடைந்து வெறுப்புற்றுச் சலிப்படைந்தவர்கள் அப்படி ஒரு அர்த்தமும் இல்லை என்று அடித்துச் சொல்லி வேறெதையோ நிலை நாட்ட முயன்றாலும் பறகும் எதுவோ மிஞ்சி நிற்கிற சூன்யத்தைச் சந்திக்கிறார்கள். தோற்கிறார்கள். இருக்கட்டும்.
தெய்வ நிலை எய்தல் என்பது வாழ்க்கையின் முடிவாக மகான்கள் ஏற்றுக் கொண்ட அர்த்தத்தின் இறுதி . அது காளிகட்டம் போன்ற யாத்திரைக் கட்டமாகும் ஒரு சிந்தனைப் போக்கு.
அந்தச் சிந்தனைப் போக்கு தன்னைத் தன்னுள் கண்டுபடிக்கச் செய்கிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்தில் வைக்கப் படும் என்று சூசகமாகச் சொன்னார் வள்ளுவப் பெருமான்.
 அதன் ஒரு வெளிப்பாடு தான் தத்வமஸி என்ற மகா வாக்கியம்.
தான் தேடிக் கொண்டிருக்கும் பொருள் தானே தான் , என்று அது உறுதி செய்ய முயல்கிறது.  அது தான் முடிந்த வாக்கியம். அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று நாம் முடிவு கட்டிவிடுவதற்கில்லை. 
அதுவும் மனித சிந்தனையிலே உதித்த வாக்கு தான். அதற்கு மேல் தேடுதல் இல்லை என்று பொருளல்ல.
மனிதன் தெய்வ நிலையை நோக்கிய இடை விடாப் பயணத்தில் ஈடுபட்டிருப்பவனாகவே  நம் இந்திய சிந்தனைப் போக்கு நமக்குக் கற்பித்திருக்கிறது. எவ்வளவு சீர்கேடுகளும் அவநம்பிக்கைகளும் நம்மைச் சூழ்ந்து வந்தாலும் நமது பயணம் நின்று விடவில்லை. அந்த ஆத்ம கௌரவத்தை உணர்த்துவதற்கு அந்த வாக்கியம் உரைகல். (தொடரும்)

No comments:

Post a Comment