Sunday 23 December 2012

எனது வாசகர்

எனது வாசகர்
தொடர்ந்து நாட்குறிப்பு எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால் எல்லாரையும் போல நாட்குறிப்பு எழுதலாமென அடிக்கடி தோன்றிவிடும்.
ரொம்பச் சோம்பல் வாழ்க்கை நடத்துகிறோம் என்ற வெட்கம் ஏற்படும். புத்தாண்டாக இருந்தால் ஒரு நாட்குறிப்பு வாங்கி வருவேன். இல்லையென்றால் பேசாது ஒரு ‘பைண்ட் நோட்’ வாங்கி, தேதி குறித்து எழுதத் தொடங்கி விடுவேன்.
இப்படி அடிக்கடி தோன்றும்; அடிக்கடி எழுதுவேன். இந்த ‘அடிக்கடி’யிலேயே ஓர் எகத்தாளக் குறிப்பு உள்ளதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
தொடர்ந்து எழுத முடியாத குட்டு வெளியாகி இருப்பதே அது! சரி, தொடர்ந்து எழுத முடியாது போய்விட்டாலும், எப்போதாவது எழுதி வைத்த குறிப்புக்களைப் புரட்டிப் பார்க்கத் தோன்றும்.
அப்படி சமீபத்தில் 1974ம் ஆண்டு நான் எழுதி வைத்த நாட்குறிப்பைப் புரட்டினேன். அதில் அந்தரங்க விவகாரம் எதுவுமில்லை. அதனால் அதை அப்படியே கீழே தந்திருந்தேன்.
“எனது வாசகரை நான் ஒரு ‘கனவான் தன் நெருக்கமான நண்பனையோ, பிரியமான உறவினரையோ எப்படி பாவிப்பாரோ அவ்விதமே கருதி அவருக்காக நான் எழுதும் கதை கவிதை கட்டுரைகளில் அந்த பாவனையைக் கடைப்பிடிப்பேன்.
அவர் தப்பித் தவறியும் சிறுமை உணர்வு கொள்ளவோ, அவரைச் சாணம் மி தித்தது போன்ற உணர்வு பெறச் செய்யவோ அவர் முகத்தில் அறையவோ, அவர் தலையில் நறுக்கென்று குட்டவோ மாட்டேன்.
அவரைக் கிள்ளி அழவைக்கவோ, கிச்சு கிச்சு மூட்டி மரியாதைக் குறைவாக சிரிக்கச் செய்யவோ, ஏதேனும் ஓர் ஆபாசமான ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளும் பாத்திரமாகவோ அவரைக் கருதவோ மாட்டேன்.
அவரிடம் நான் தான் சுக்ராச்சாரியர் போலவும் அவர் வெறும் ஒரு சிஷ்யர் போலவும் நான்  ஒரு தோரணை காட்ட மாட்டேன்.
அவரைப் பயமுறுத்துவது, குரூரக் கதைகளைச் சொல்லி அவரைக் கிலி பிடிக்கச் செய்து அதிர்ச்சியூட்டுவது நான் முற்றிலும் தவிர்க்க வேண்டிய முதலாவது விவகாரம்.
எனது வாசகரிடம் நான் என் அசிங்கமான ஆசைகளையோ அபத்தமான கருத்துக்களையோ வெளியிடுவது அற்பத்தனமாகும்.”
குறிப்பு இத்தோடு நின்று வேறு தேதியில் வேறு மொழியான ஆங்கிலத்துக்குத் தாவியது .
எனது வாசகரை, நான் நேருக்கு நேர் இதுவரை சந்திக்க நேர்ந்ததில்லை. அம்பலங்களுக்கு வந்து மேடை வெளிச்சம் பெற்று சுமை எதற்கு என்று ஒதுங்கியே பழகிவிட்டேன்.
அவரை நேருக்கு நேர் சந்திக்க முடிந்ததில்லையே தவிர, பேனாவைத் திறந்தவுடன் மானசீகமாக அவர் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்வார்.
அவர் பக்கத்தில் இருக்கிற பொறுப்புணர்வுடன் நான் என்றோ எழுதி வைத்த குறிப்பின்படி நான் எழுதிச் செல்வேன். கூடுமானவரை எனக்கு நானே விதித்துக் கொண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முயலுவேன்.
அதில் எவ்வளவு வெற்றியடைந்தேன்?
தெரியாது.
நான் விளையாட்டாகவும் .பொழுது போக்காகவும், பொழுது போக்குவிப்பதற்கும் தான் எழுதத் தொடங்கினேன். எனவே இன்னின்ன பத்திரிகைகளின் வாசகரை என் வாசகர் என்று உரிமை கொண்டாட வழியில்லாமல் போயிற்று.
போகப் போக, என் மனப்போக்கு எழுத்து என்பது வெறும் பொழுது போக்கு விவகாரம் அல்ல என்று உணர்ந்து கொண்டது.
பொழுதுபோக்காக எழுதுவது தவறு என்றோ, குற்றம் என்றோ நான் கருதவில்லை.
ஆனால் எழுத்தே, எழுதுவதே  பொழுது போக்கிற்காகத்தான் என்ற கருத்து எனக்கு மாறுபட்டது.
எழுத்து மனங்களை உருவாக்குகிறது. ஒரு பண்பாட்டை வழி நடத்திச் செல்கிறது; மனித சிந்தனையை ஒரு கால கட்டத்தின் சீரான வார்ப்பில் இயக்குகிறது. என்றெல்லாம் பெரியவர்கள் எழுதிய பெரிய பெரிய வார்த்தைகளைப் படித்து நான் பயந்திருக்கிறேன்.
ஒருவேளை அந்த அச்சம்தான் என் பாதையில் சில திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கலாம்.
மேலும் ஒன்று முகம் தெரியாத, ஆனால் மானசீகமாக என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிற வாசகர்தான், இப்போது நான் போகும் பாதையில் என்னை நடத்திச் செல்கிறவர்.
என் வாசகரைத் திருப்தி செய்யும் நோக்கம் எனக்கு எப்போதும் இல்லை. அதனாலேயே எழுதி முடித்த எந்தப் படைப்பின் மீதும் எனக்கு முழு நிறைவு வருவதில்லை. ஆனால் என் வாசகரோடு, நான் பல செய்திகளை ஒளிவு மறைவின்றி, அதே சமயம் நாகரீகமாகப் பகிர்ந்து கொள்ள முனைந்திருக்கிறேன்.
கூடுமானவரை கண்ணியமாக அவரிடம் நடந்து கொள்ள முயற்சித்திருக்கிறேன். அவர் ஒரு தனி நபர் அல்ல; அவர் ஒரு பெரிய கூட்டுத் தொகுதி (Amalgamation) என்பது போன்ற உணர்வு அடிக்கடி எனக்கு வரும்.
எழுத முடியாத சமயங்களில், எழுத விரும்பினாலும் நேரம் கிடையாத சந்தர்ப்பங்களில், மிக மிக நெருக்கமான அவரை, சந்திக்கத் தவறிட்ட வேதனை மனசைக் குதறும்.
அதே சமயம் ரயிலிலோ, பஸ்ஸிலோ எவரோ ஒருவர் நான் எழுதியதைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க நேரும் என் முதுகு நெளியும். நீங்கள் எழுதிய இதை நான் படித்திருக்கிறேன் என்று எவராவது முகத்திற்கு நேரே சொல்வார்.
இந்த இரண்டும் சொல்ல வராத ஒரு கூச்சத்தை ஏற்படுத்தும். ஏதாவது பேசி அவர் கவனத்தை மாற்றி விடவே முயலுவேன். இதெல்லாம் கூட என் வாசகர் மீது நான் வைத்திருக்கும் ஆழ்ந்த மரியாதையின் விளைவுதான் என்ற உணர்வு எனக்குள் வலுப்படுகிறது.

No comments:

Post a Comment