Sunday 23 December 2012

எல்லைகள் இல்லாத விண்வெளி விமானி.

[தொடர்ச்சி]
எல்லைகள் இல்லாத விண்வெளி விமானி
நம் அன்னையர் கன்னியராகி நிலவினிலாடி இன்னுயிர் தந்து நமை ஈன்று வளர்த்த கதை நடந்த நாடு நமது பாரத நாடு என்று தமிழில் முதலில் சொன்னவன் பாரதி. 
சிந்துநதியின் மிசை தோணியில் அவன் சிந்தனை செய்த யாத்திரையும், மன்னும் இமயமலை எங்கள் மலையென்று அவன் வந்தனை செய்த மாட்சிமையும் நொறுங்கித் தகர்ந்த தமிழின் எல்லைகள்.
அவன் எந்த எல்லைகளுக்கும் கட்டுப்படாது வேண்டுமடி எப்போதும் விடுதலை என்று விரும்பியவன். வேறு எந்த நாடு எங்கே மண்டையை உடைத்துக் கொண்டு மாண்டாலும் கவலையில்லை, என் பாரத தேசம் எனக்குப் போதும் என்று ஒதுங்கியவன் அல்ல. பெல்ஜியம் தோற்றால் அவனது கவியுளம் பதைத்தது. யுகசூரியன் போன்று ரஷ்யாவில் புரட்சி உதித்தால் அவன் மனவிலாசம் ஆர்ப்பரித்தது.
இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்து விட்டான்
ஜாரரசன் இவனைச் சூழ்ந்து
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்.
என்று ஆரவாரித்த பாரதிக்கு புதிய ரஷ்யாவின் எழுச்சியில் புலப்பட்ட வெளிச்சம் என்ன? எல்லையொன்றின்மையின் புறவெளிப்பாடான விடுதலைதான்.
அடிமைக்குத் தளை யில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்பது இத்தாலியின் ஐக்கியத்திற்கு மாஜினி செய்த புரட்சி, ஏதோ இவன் செய்கிற புரட்சி போன்று சபதம் செய்ய வைத்தது. எல்லா உலக இயக்கங்களையும் தன் தாய் நாட்டு விடுதலை ஆர்வத்தை வெளியிடும் உருவகமாகவே அவன் கற்பித்துக் கொண்டான். ஆனால் சொந்த நாட்டின் துயர்களைப் பிற நாட்டின் துயர்களோடு அடையாளம் காணக்கூடிய மன விரிவு, பிற நாட்டின் வெற்றி தோல்விகளால் பாதித்த உணர்ச்சிப் பெருக்கு இவையெல்லாம் நமது மகாகவியின் எல்லையொன்றின்மை என்ற விசேஷ முத்திரைகள்.
பாரதியின் கவிதை சத்ரபதி சிவாஜியாகித் தன் சைனியத்துடன் பேசியதுண்டு. கள்ளர் பயமிருக்கும் காட்டு வழிதனில் வண்டியோட்டிச் செல்கையில்,
‘நிறுத்து வண்டியென்றே - கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே’
என்ன செய்வது என்ற வண்டிக்காரனின் கவலையாகவும் மாறியதுண்டு.
‘மண்வெட்டிக் கூலிதின்ன லாச்சே! எங்கள்
வாள் வலியும் வேல் வலியும் போச்சே’
என்று நிலைதாழ்ந்து போன போர் மறவனின் துயர்களைப் பங்கிட்டுக் கொண்டதுண்டு.
‘பூ மண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக; துன்பமும், மிடிமையும் நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் இன்புற்று வாழ்க’ என்று ‘ஸர்வே ஜனா சுகினோ பவந்து’ என உலக சமாதானத்திற்குக் குரல் கொடுத்தது முண்டு.
இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!
யந்திரங்கள் வகுத்திடுஆயிரந் தொழில் செய்திடுவீரே
என்று வியர்வைத் துளிகளின் வெற்றியை வாழ்த்தி வரவேற்றது முண்டு.
செம்புக்கும் கொம்பும் அஞ்சி - மக்கள்
சிற்றடிமைப் படலாமோ
என்று வீர உரை ஆற்றியது முண்டு.
பாரதியின் கவிப்பொருள் எந்த எல்லைக்குள்ளும் சிக்காதது. குடுகுடுப்பாண்டி, பண்டாரம், அம்மாக்கண்ணு என்று சாமான்ய மனிதர் முதல் வேல்ஸ் இளவரசர் வரை அது பாகுபாடின்றி விரிந்தது.
தெய்வங்களைத் தோழன், குரு, சேவகன், சீடன், காதலி என்று இந்திய பக்திச் சிந்தனையின் எல்லைகளை நொறுக்கி புதிய உணர்வு முறைகளில் தெய்வத் தன்மையை தரிசிக்கும் துணிச்சல் பாரதிக்கு இருந்தது.
எல்லைகளை விஸ்தரிக்கும் முயற்சியில் பெண் விடுதலைக்கு பாரதி உயர்த்திய போர்க் கொடியை இந்திய இலக்கியத்தில் அதற்கு முன்னும் ஏன் இன்றும் கூட அவ்வளவு உணர்ச்சிக் கொதிப்புடன் ஏந்திப் பிடித்தவர் உண்டா என்று நமக்கு ஐயம் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கும் பாரதி பாட்டு சொன்னான். யோகி, போகி, ஞானி என்ற மூவகை மனப் போக்கினரின் வாழ்க்கை நெறியையும் பாட்டுக்களாக்கினான்.
‘தேசுறு விவேகானந்தப் பெருஞ்சோதி’ என்று விவேகானந்தரை நினைத்து மெய் சிலிர்த்தான்.
சிறிய திட்டையிலே உளதோர் தென்னஞ் சிறுதோப்பு, வறியவனுடைமை அதனை வாயு பொடிக்கவில்லை என்று புயலில் தப்பிய ஓர் ஏழையின் சிறிய தென்னந் தோப்பிற்கு மகிழ்ந்து மிருக்கிறான்.
ஊழிக்கூற்று கவிதையில் பாரதி எட்டிய சிகரங்கள் உலகக் கவிதைக் கற்பனை எட்டிய உச்ச கட்டங்கள்தானே!
ஐந்துறு பூதம் சிந்திப் போயொன்றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப்போக
என்று எண்ணத்தின் எல்லைகளை தகர்க்கும் முயற்சி.
‘எத்திக்கினிலும் நின்வழியனல் போய் எட்டித் தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்’ - என்ற வரிகளிலும் ‘பாழாம் வெளியும் பதறிப் போய் மெய் குலையச் சலனம் பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலையக யுக முடிவிற்கு அப்பால் நின்றும் கற்பனையின் அனுமான வேகத்தில் அவன் காட்டிய பேராற்றல் பிரபஞ்சம் முழுமையும் தழுவும்போது.
‘காயிலே புளிப்பதென்னே, கனியிலே இனிப்பதென்னே, சேற்றிலே குழம்பலென்னே, திக்கிலே தெளிந்ததென்னே’ என்று இயற்கையின் மாறுபாட்டு அமைப்புக்களில் எந்தக் குழப்பமுமின்றி நீந்தித் தெளிவு பெறும்போது
காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்
என்று உலக இலக்கிய ஏடுகளில் கண்டறிய முடியாத ஓர் அபேத பாவத்தை எட்டும் போதும் எல்லையொன்றின்மை என்றால் என்னவென்று பாரதி நிரூபிக்கிறான்.
ஈசன், ஏசு, அல்லா, குரு கோவிந்த சிங், புத்தர் என சகல மதங்களையும் சம திருஷ்டியில் காண்கின்ற பாரதிக்கு மாயாவாதத்திற்கு மகத்தான அதிரடி கொடுத்து மண்ணிலே நிறுத்தம் வல்லமையும் உண்டு.
‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம் சொற்பனந்தானோ - பல தோற்ற மயக்கங்களோ?’ என்று உலுக்கிக் கேட்ட பாரதி.
‘காண்ப வெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?’ என்று எதிர்வாதம் செய்து நடத்திக் காண்பதுவே உறுதி கண்டோம். ‘காண்பதல்லால் உறுதியில்லை. காண்பது சத்தியமாம். இந்தக் காட்சி நித்தியமாம்’ என்று உலக வாழ்வின் நிஜத் தன்மைக்கு உறுதியுரைக்கின்றான்.
பாரதியின் வசனத்தேர், உருண்டோடிய எல்லைகளை இடவிரிவுக்கு அஞ்சி முற்றிலும் ஒதுக்க வேண்டி வருகிறது. ஜப்பான் தொழிற் கல்வி, ரஷ்யாவில் விவாக விதிகள், பெல்ஜியத்தில் நடந்த தொழிலாளர் கிளர்ச்சி, அயர்லாந்துக்கு சுதந்திரம் மறுத்தது குறித்து சீற்றம் என்று சமகாலத்தில் நடந்த சர்வதேச விவகாரங்களில் நுட்பமான ஈடுபாட்டோடு அவன் பார்வை விரிவு பெற்றிருந்தது.
பெண் விடுதலை, விதவா விவாகம், தேசீயக் கல்வி, சங்கீத விஷயம், நூலாசிரியர் படும்பாடு என்று எத்தனை விஷயங்களை அவன் தொட்டிருக்கிறான்! என்ன கிண்டல்! என்ன ஒரு மேதைமை! எவ்வளவு இதய பரிசுத்தம்! உண்மையின் மீதும் நேர்மையின் அணியிலும் எத்தனை பேரன்பு கொண்டு அவன் நின்றிருக்கிறான்!
பாரதிக்கு அனைத்தையும் அணைத்துக் கொள்ளும் அகன்ற கரம் உண்டு. தீமையை, கொடுங்கோன்மையை, சுரண்டலை, அடிமைத்தனத்தை அவன் வரிக்கு வரி எதிர்த்திருக்கிறான். அச்சத்தையும் அறியாமையையும் சீறிச் சாடியிருக்கிறான். எல்லைகளை நிறுவியவை அவையே என்பது அவனது உட்கிடக்கையாக இருந்திருக்கும் போலும்.
பழமையும் புதுமையும் வேதாந்த சிந்தனையும் யந்திர நாகரீகம் சந்திக்கும் முக்கியமான காலகட்டத்தில் பாரதியின் பணி நடந்தது. இரு துருவங்கள் போன்று எதிர் எதிர் நின்ற சிந்தனைப் போக்குகளுக்கு மத்தியிலே பாலமிடுகின்ற மகத்தான பணி பாரதியின் பணி.
அவன் செய்த யாத்திரை பெரியது. உலகு தழுவிய மனித சமுதாயம் முழுவதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அந்த மனிதனுக்கு எல்லை எப்படி இருக்க முடியும்? பாரதியிடம் முரண்பாடுகள் காண்போர் அவன் எல்லை கடந்தவன் என்பதை உணர்வது தான் நியாயமாகும்.
அவனது வாக்கின்படி அவன்
‘மூன்றிலில் ஓடுமோர் வண்டியை போலன்று
மூன்றுலகுஞ் சூழ்ந்தே
நன்று திரியும் விமானத்தைப் போலொரு
நல்ல மனம் படைத்தோன்.
பாரதி  எல்லைகள் இல்லாத விண்வெளி விமானி.




No comments:

Post a Comment