Sunday 23 December 2012

எல்லையொன்றின்மை

எல்லையொன்றின்மை
அந்த மனிதன் பிறந்தது இந்தியாவின் தென்கோடி மூலையில், நூற்றுக்கணக்கான சிதறுண்டிருந்த குட்டி சமஸ்தானங்களில் ஒன்றான எட்டயபுரத்தில் அவ்வூரின் சிறுபான்மை சமூகமான பிராமணர் குலத்தில் ஓர் ஓட்டு வீட்டில், அந்த மனிதன் பிறந்தான். முறையான பள்ளிப் படிப்போ பத்தாவது கூட இல்லை. உடலோ மிகவும் பூஞ்சை.
அவன் உலக நாடுகளைச் சுற்றிப் பார்த்தவன் அல்ல. கடல் கடந்தவனே அல்ல. மிச்சம் மிச்சமாக அவன் போக முடிந்தது வடக்கே காசி வரையில். அவன் உலவித் திரிந்து அனுபவங்களை நுகர்ந்த ஒரே ஒரு பெருநகரம் சென்னை மட்டுமே. மீதி இடங்கள் அந்த அளவிற்குக் கூட அனுபவ விரிவு கிடைக்க முடியாத நகரங்கள். திருநெல்வேலி, மதுரை, புதுச்சேரி, காசி இப்படி வாழ்வின் அந்திமகாலம் வரை அவன் அனுபவித்தது வறுமை மட்டுமே. செய்த தொழிலோ கொஞ்ச காலம் சமஸ்தானப் புலவர். கொஞ்சகாலம் தமிழாசிரியர் கொஞ்ச காலம் பத்திரிகையாளர். சொந்த நூல்களை வெளியிடப் பண வசதியற்ற பதிப்பாளர். பெரும்பாலான காலம் புத்தகங்களோ பத்திரிகையோ மிகவும் சிறு அளவில் விற்பனையான ஒரு காலத்தில் தமிழில் வெறும் எழுத்தை மட்டுமே நம்பிய சுயேச்சைக் கவிஞன், எழுத்தாளன்.
வாழ்ந்த காலமோ பிரிட்டிஷ் அடக்கு முறைக்கு அஞ்சி எந்தச் சிறுமையையும் ஏற்று உயிர் பிழைத்தால் போதும் என்ற மனோபாவமுள்ளோர் பெரும்பான்மையாக இருந்த காலம். நண்பர்களோ கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, அராஜகவாதியென வங்காளத்தில் முத்திரை குத்தப்பட்டு அரசியல் புகலிடத்திற்காக ப் புதுச்சேரிக்கு  வந்த அரவிந்தகோஷ். இருவர் தவிரப் பெரும் புகழ் பெற்றோர் எவருமில்லை. மற்றவர் பலர் இளையவர்கள் சிலர் புரட்சிக்காரர்கள். அவர்களில் வ.வெ.ஸு ஐயர் ஒருவர் தவிர வேறெவரும் கடல் கடந்து அன்னிய நாடுகளைச் சென்று அறியாதவர்கள். அவருக்கு விவேகாந்தரைப் போன்று முறையான குரு என்று எவருமில்லை. உயிர் வாழ்ந்த காலமோ வெறும் 39 ஆண்டுகள்.
இப்படி எல்லா வகையிலும் அந்த மனிதரின் விதி அவருக்கு எதிராக இருந்தது. மனித உள்ளம் விரிவடைவதற்குப் பௌதீகத் தேவையான புறக்காரணங்கள் என்று எதையெல்லாம் நாகரீக உலகம் வற்புறுத்துகின்றதோ அவற்றில் பெரும்பாலானவை அவருக்குக் கிடைக்கவில்லை.அவரை தேச விடுதலை இயக்கம் உருவாக்கியது என்று முழு உரிமை கொண்டாடுவதில்லை. அந்த இயக்கத்தின் வரையறைகளை அவர் பரந்துபட்ட அளவில் கடந்திருந்தார். அவர் உலகு தழுவிய மனித விடுதலையை, அதற்கு மேலே சென்று பஞ்ச பூதங்களின் கட்டமைப்பை நொறுக்கிய ஆன்மீக விடுதலையை அவர் கவிதைகள் பாடின. அவரே ஓர் இயக்கமாயிருந்தார். ஒரு மொழியின் இயக்கம் என்ற எல்லையை மீறி மானுட சிந்தனையின் இயக்கம் என்று விரிவடைந்தார்.
இத்தனைக்கும் அவர் வேலை வெறும் பேனாவால் நடந்த வேலை. அவர் செய்ததெல்லாம் கவிதை, கதை, கட்டுரை என்ற இலக்கிய முயற்சிகள்தான்.
தமது தாய்மொழி குறித்து என்னதான் (யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்) என்று அவர் அடித்துச் சொன்ன போதிலும், தமிழிலேயே பேசுவேன், தமிழிலேயே எழுதுவேன் என்று அசைக்க முடியாத மொழிப் பற்றோடு அவர் முரசறைந்த போதிலும், அவர் ஒரு மொழிக்கு மட்டுமே சொந்தமென்ற நிலையை மகத்தான முறையில் கடந்து நின்றார். இதற்கு வலிந்து சான்று தேடத் தேவையில்லை. நூற்றாண்டு விழா போதும்.
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. மாஸ்கோ, பாரீஸ், லண்டன், நியூயார்க் இப்படி ஒரு பட்டியல் போடலாம். எல்லா உலக நாடுகளின் பல முக்கிய நகரங்களில் பாரதிக்கு நூற்றாண்டு விழா நடந்தது.
இங்கெல்லாம் குடியிருக்கிற தமிழர்கள் திட்டமிட்டு முனைந்து தமது அருமந்தச் செல்வமான பாரதியின் விழாவைக் கொண்டாடியே தீர்க்க வேண்டுமென்ற ஆவேசத்தின் விளைவே இவ்விழாக்கள் என்றே கூட வைத்துக் கொள்வோம். 
எங்கே பாரதி கொண்டாடப்படுகிறானோ அந்த இடத்துக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தத்தை கருதி அந்தத் தமிழர்கள் இத்தகைய விழாக்களை ஏற்பாடு செய்ய முடியும்?
அது மாஸ்கோவோ, பாரிஸோ, கல்கத்தாவோ, ஜெய்ப்பூரோ, குக்கிராமமோ, மாநகரமோ எதுவானால் என்ன? அந்த இடங்களில் எங்கே மனிதன் வசிக்கிறானோ எங்கே உயிர்கள் துடித்து இயங்கி இன்புற்றுக் குலாவி மகிழ்ந்து துன்பத்தோடு சமர் செய்து கொடுங்கோன்மைக்கு எதிரே கொடி பிடித்து எந்தச் சிமிழ் தன்னை அடைத்து வைக்கிறதோ அதனோடு உதைத்துப் போராடி விடுதலைக்கு முயல்கின்றதோ அங்கெல்லாம் பாரதிக்கு ஏற்கெனவே ஓர் உறவு உண்டு. அவற்றோடு மனிதநேயமும் ஆழ்ந்த பற்றும் உண்டு.
இந்த பகைப்புலம் தான் புவியெங்கும் சிதறியுள்ள தமிழ் கூறும் நல்லுலகிற்கு தாங்கள் வாழ்கின்ற இடங்களில் எல்லாம் நமது மகாகவியின் நூற்றாண்டைக் கொண்டாடுகின்ற ஒரு தார்மீக பலத்தை அளித்திருக்கிறது. எல்லைகளைக் கடக்க வைத்திருக்கிறது.
பாரதி ஒருவனைத் தவிரவேறு எவருக்கு இவ்வளவு ஏகோபித்த மனத்தீயுடன் உலகெல்லாம் விழாக் கொண்டாட முடியும்?
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று தொடங்கிய ஒரு நாகரிகத்தின் சிந்தனைக் களத்தில் ஆழ்ந்து வேரோடிய ஒரு பெரும் மரம் தான் பாரதி. எல்லையொன்றின்மை என்ற திகட்டாத் தீஞ்சுவைக் கனிதான், பாரதி உலகிற்கு வழங்கிய மன விகாசம்.
சாதி, மதம், இனம், மொழி, நாடு, வர்க்கம் என்று நூறு கூறுகளாக மனித குலம் சிதறுண்டு சின்னச் சின்னத் துண்டுகளாக்கி, அப்படிக் குறுகி விடுவதிலே ஒரு பாதுகாப்பு இருப்பதாக துரதிர்ஷ்டவசமாக நம்பி முரண்பட்டுப் போர் செய்து ஒன்றையொன்று அழித்து விடுவதனால் தான் நாம் நிலை நிற்க முடியும் என்ற பரிதாபமான அறியாமையில் எப்போதும் போல மூழ்கியிருக்கின்ற இந்தக் காலத்திற்கு எப்போதையும் விடப் பெரிய அளவில் அதன் தேவை இருப்பதைத் தான் ஆண்டாண்டு தோறும் நாம் கொண்டாடும் பாரதி விழா நமக்கு உணர்த்துகிறது.
அவனது விழா எவ்வாறு எல்லைகளைக் கடந்ததோ அதைவிடப் பன்மடங்கு பேரளவில் அவன் மனம் எல்லைகளைக் கடந்திருக்கிறது. எல்லையொன்றின்மை என்ற சொற் புழக்கமே (coinage) பாரதி பிரபலமாக்கியது.
“எல்லையொன் றின்மை எனும் பொருள் அதனைக் கம்பன்
குறிகளாற் காட்டிட முயலும்...”
ஒரு ஞானப்பாடலாகத் தோற்றமளிக்கும் ‘நான்’ பாடல் அமானுஷ்யக் குறியீடுகள் (Mystic Symbols) கொண்டது. வானில் பறக்கும் புள், மண்ணில் திரியும் விலங்கு, கானில் வளரும் மரம், காற்று, புனல், கடல், விண்மீன், புழு, உயிர் என்று ஒவ்வொரு பொருளிலும் தான் இருப்பதாக அடையாளம் கண்டு கொண்டே வந்த பாரதி குறிப்பிட்ட ஒரு கவியின் பெயர் சொல்லி ஒரு சொற்றொடர் இசைக்கிறான். அந்தப் பாடலில் அந்த ஒரு பெயர் தவிர வேறு பெயர்கள் அல்லது பொருள்கள் திட்டவட்டமாகக் குறிக்கப்படவில்லை.
கம்பனிசைத்த கவியெலாம் நான்.
இப்படி இரண்டு முறை கம்பன் பெயரைக் குறிப்பிடும்பொழுது, எல்லையொன்றின்மை என்ற ஞானம் கவிச்சக்கரவர்த்தியின் வாயிலாக பாரதியை எட்டியிருக்கிறது என்பது நமக்கு ஊர்ஜிதமாகிறது.மனிதகுலம் மட்டுமின்றி சகல உயிர்க் குலத்தையும் மேலே சென்று பிரபஞ்சம் காலம் விண்வெளி என்ற பிரம்மாண்ட அளவுகளையும் தழுவி அணைக்கின்ற அவனது மனோ விசாலத்தை, ஏதோ நாம் தமிழராய்ப் பிறந்திருகிறோமே என்ப தற்காக நாம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.
நம்மிடையே அவன் மகாகவியா இல்லையா, உலக மகா கவிகளுள் ஒருவனா இல்லையா என்ற தர்க்கம் நிலவி வந்ததுண்டு.
ஹோமர், தாந்தே, கதே, புஷ்கின் ஷேக்ஸ்பியர், மில்டன், வால்மீகி, வியாசர் என்ற எந்த உலக மகாகவிகளும் தொட்டறிந்திராத உணர்வுகளின், உண்மைகளின் உச்சத்தை பாரதி தொட்டிருக்கிறான். அவன் உலக மகாகவியல்ல. 
அதற்கும் மேலே அவன் அண்டப் பிரபஞ்சங்களின் மகாகவி.
எவன் கவியோ, எவனது கவித்துவம் மொழி, இனம், நாடு, கண்டம், உலகம், உயிர்த்துவம், சடத்துவம், விண்வெளி, காலம் என்று எல்லாவற்றையும் கடந்ததோ எல்லாவற்றையும் நேசித்து எதிலும் பந்தமுறாமல் அந்தந்த எல்லைகளைக் கிழித்துக் கொண்டு சகலத்திற்கும் தன் அன்பை வழங்கியவாறு கடந்து செல்கிறதோ,
 கவிதை என்ற தொழில் ஏற்பட்டதன் உத்தம நோக்கம் எதுவோ அதுதான் அவன்! 
அதுதான் நம் பாரதி.
அவன் தாய்மொழி உணர்வு பெற்றிருந்தான், தாய்நாடு என்ற தவிர்க்கவியலாத காதல் கொண்டிருந்தான். இவை அவனுக்கு எல்லைகள் அல்ல, 
 மரத்தின் எல்லை வேர்களில் இல்லை. பிரதேச எல்லைகளைப் பெயர் சொல்லிக் கடந்து அறிந்திராத தமிழ் மொழியில் எங்கள் பாரத நாடு என்று புதிய எல்லையை முதலில் சிருஷ்டித்தவன் பாரதி.[தொடரும்]

No comments:

Post a Comment