Friday 21 December 2012

லியோ டால்ஸ்டாய்

     லியோ டால்ஸ்டாய்
உலக நாவல் இலக்கியத்தின் தரத்தை ஆதி மகா கவிகளின் உன்னதப் படைப்புகளுக்கு ஏற்ப உயர்த்தியவர் லியோ  டால்ஸ்டாய். போரும் அமைதியும், அன்னா கரீனினா, புத்துயிர் என்ற காலத்தினால் அழிக்க முடியாத மூன்று நாவல்களில் தமது மேதைமையையும், மனோ விசாலத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
அவற்றுள் ‘போரும் அமைதியும்’ நாவல் அளவு, பாத்திரப் படைப்பு, செய்திகள் இவற்றுள் பிரம்மாண்டமானது.
ஹோமரின் இலியதுக்கும், கம்பரின் இராமாயணத்துக்கும், வியாசரின் மகாபாரதத்துக்கும் உள்ள காவியச் சிறப்பை உரைநடையில் அவர் கிட்டத்தட்ட எட்டியிருக்கிறார்என்று துணிவாகக் கூறலாம்.. இந்த மூன்று கவிச்சக்கரவர்த்திகளிடமிருந்தும் அவர் வேறுபட்டு நிற்பது ஒரே ஓர் அம்சத்தில்தான். அதுதான் அவருக்குப் பெரிய பலமாக அமைந்தது.
‘யதார்த்தம்’ எனப்படுகிற உண்மை நடப்புதான் அந்த பலம்.
அவர் கற்பனை செய்வதில்லை.
கற்பனை என்ற சொல்லுக்கு எந்த வழக்கமான பொருள் உண்டோ அதைச் சொல்கிறேன்.
சுவிசேஷத்தைப் படிக்கும்பொழுது எப்படி எந்தக் கற்பனையுமின்றி, உள்ளது உள்ளபடி படித்தாரோ, அதே விதமாக மனித உயிர்களைப் படித்தறியும்போது அதே நேர்மையைக் கடைப்பிடித்தார்.
அவரது சமகால நாவலாசிரியரான டாஸ்டாயெவ்ஸ்கி மனித உள்ளத்தைப் படித்த விதம் வேறு. வெளியிட்ட விதம் வேறு. அவரது சிக்கலான பார்வையின் மூலம், மனிதர்களின் உள்ளத்தினுள் சென்று அவர்களின் புறச்செயல்களை வெளியிட்டார்.
டால்ஸ்டாய் மனிதர்களின் புறத்தோற்றத்தின் மூலம் அவர்களது உள்ளத்துக்குள் சென்று பார்த்தார். பொதுவாக மனிதர்கள் ஒருவரை ஒருவர் இப்படி நடந்து கொள்வதை வைத்துத்தான், புரிந்து கொள்ள முயலுகிறோம்.
இந்தக் கடினமான பணியை நிறைவேற்றுகையில், அதாவது ஒரு மனித பாத்திரத்தை உருவாக்குகையில், பரிபூரணமான திடநம்பிக்கையோடு டால்ஸ்டாய் செயல்பட்டார்.
அவர் படைத்த மனிதர்கள் ஒருவர்கூட கற்பனைப் பாத்திரங்கள் இல்லை, அவர் படைத்த அளவில் முழுமையோடு இல்லையெனினும், நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் அவர்கள் எங்கோ ரத்தமும் சதையுமாக உயிர் வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர் பார்த்த மனிதர்கள் அப்படியே அச்சு அசலாக அவரது நாவல்களின் பக்கங்களில் வந்திருக்கிறார்கள்.
அந்தக் கதாபாத்திரங்கள் ஆத்ம பரிசீலனை செய்வது போல் சில சமயம் நினைவோட்டத்தில் லயிப்பது உண்டு. சுய பரிசோதனை, மனசாட்சி, கவலை, நம்பிக்கை ஆகிய வாய்ப்புகளில் ஒரு பாத்திரம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள டால்ஸ்டாய் தாமே விரும்பித் தந்த ஒரு வாய்ப்புதான் அது. ஓர் எளிய மனிதர் எவ்வாறு இருப்பாரோ அவ்வளவு தெளிவு, அவ்வளவு யதார்த்தம் இவற்றுடன் ஒரு மகத்தான எழுத்தாளன் அவரைப் படைப்பது சிரமம் அதில் டால்ஸ்டாய் பெரு வெற்றி பெற்றார்.
அதனால்தான் ‘போரும் சமாதானமும்’ நாவலில் வெளிப்படும் பல கதாபாத்திரங்கள் நமக்கு நெருங்கிய பரிச்சயமுள்ள, எவரோ ஒருவரை நினைவூட்டுகின்றன. டால்ஸ்டாய் தமது காவிய கம்பீரம் உள்ள அந்த நாவலை எழுத மேற்கொண்ட தயாரிப்புகள் பிரம்மாண்டமானவை. கடின உழைப்புடன் எவ்வளவு தகவல்கள் அந்த எழுதிய நாவலின் காலத்திற்கும், களத்திற்கும் தேவையோ, எவ்வளவு அவருக்குக் கிடைத்ததோ, அத்தனையையும் அவர் திரட்டிச் சேகரித்தார். பொறுப்புணர்ச்சியோடு அவற்றைத் தொகுத்து, மகத்தான நேர்மையோடு அவற்றைச் சித்தரித்துக் காட்டினார். தனது கலை தொடர்பாக டால்ஸ்டாய் தமக்குத்தாமே விதித்துக் கொண்ட முதலாவது நிபந்தனை ஒன்றுதான்.
“எதையும் கற்பனை செய்து கண்டுபிடிப்பதில்லை”
மகத்தான எழுத்துக் கலைஞர்களிடம் மட்டுமின்றி சாதாரண எழுத்தாளரிடமும் கூட அவர் இதையே எதிர்பார்த்தார்.
தன் அதிநுட்பமான சொந்தப் பார்வையின் மூலம் அவர் கொண்ட முடிவு, கற்பனையில் நம்பிக்கை வைக்கக் கூடாது என்பதே.
ஒரு பூஞ்சை மனத்தால் உருவாக்கப்படும் ஒரு பாத்திரம் அல்லது கதையைவிட, அதிக சக்தி வாய்ந்ததும் அற்புதமானதுமாக, உண்மை வாழ்க்கை அமைந்திருப்பதை அவர் உணர்ந்தார்.
அந்த வாழ்க்கையின் அதிசயத்தை ஆராயவோ, அதைப் புரிந்து கொள்ளவோ ஒரு கதாசிரியருக்கு வாய்ப்பு உண்டு என்பதை அவர் மறுக்கவில்லை.
கலைச் சுதந்திரம் என்ற விஷயத்தில் அவர் தமக்குத் தாமே அளித்துக் கொண்ட சுதந்திரம் அதுதான்.

1 comment:

  1. i need a softcopy of war and peace
    maranthemass@gmail.com

    ReplyDelete