Friday 21 December 2012

வாசகர் மனசில் சிறிது வெளிச்சம்

 (தொடர்ச்சி)
எழுதவும் வேண்டும். அப்படி ஒரு வேலை எது ? ஒரு தேடலும் இல்லாமல் தான் முடிவு கிட்டியது.
சுதந்திரமாகச் சிந்திக்கிற வாய்ப்பும் உள்ளபடியே நாட்டிற்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் வாய்ப்பும் எழுதவும் படிக்கவும் நேரமும் இருக்கிற வாய்ப்பும் உள்ள ஒரு பணி எதுவென யோசித்துத் தான் நான் ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்தேன். வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்று இளக்காரம் செய்யும் காலம் அது. காரணம் சம்பளம் கம்மி.
அப்போதும் செகண்டரி கிரேடு என்று யாரும் மதிப்பாக ஏற்க முடியாத ஒரு வேலை தான்.  ஏசுபெருமானின் மலைப்பிரசங்கம் ஆசிரியர் பயிற்சிக்குப் பாடப்பகுதியாக வைக்கப் பட்டிருந்தது. வாசித்ததுமே சட்டென்று தீப்பற்றியது போல் என்னை அது பற்றிக் கொண்டது.
நான் பைபிள் வாசிக்கத் தொடங்கினேன். அந்த பைபிள் வாசிப்பும் ஏசுநாதரின் வாழ்க்கையும்  என்னை மற்றோர் முறை மாற்றியமைத்தது. யாருக்காகவும் நான் வாழவில்லை. நான் பிறந்து மறைந்து போகிற வரை உள்ள வரலாற்றில் என் பாத்திரம் என்னவென்று நான் தீர்மானிக்கிற வாழ்க்கை தான் எனக்குச் சரி என்று உணர்த்தியது.
அதில் ஒரு மன உறுதி தோன்றி ஒரு கிராமத்திலே அதே செகண்டரி கிரேடு ஆசிரியராகப் பணியாற்றியபடியே படிக்கவும் எழுதவும் தொடங்கினேன்.
 வாங்கிய அரசாங்கச் சம்பளத்துக்கோ என்னிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவச் செல்வங்களின் எதிர்காலத்திற்கோ எந்த விதமான துரோகமும் செய்யாதவாறு பணியாற்றியவாறு ஓய்வின்றி இரவும் பகலும் படித்தேன்.  எழுதினேன். நிறையப் படித்தால் மூளை கலங்கிவிடும் என்று சொன்ன உறவினர் மத்தியில்.இதன் விளைவுகளை, நான் பெற்ற படிப்பினைகளை, எட்டிய ரசனையை என் மாணவர்களிடம் பகிர்ந்துகொள்வேன்.இன்று நான் பணியாற்றிய கிராமங்களுக்குச்சென்றால் நான் அங்கு ஆற்றிய ஆசிரியப் பணிக்காக மட்டும் தான் அவர்கள் என்னை மதிக்கிறார்கள். பலருக்கு நான் எழுத்தாளன் என்பதே தெரியாது.
தெரிவிக்கிற வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் நான் அதை வெற்றிகரமாக விலக்கி இருக்கிறேன். திருப்தியாக இருக்கிறது. ஒரு போர்வையில் ஒளிந்து கொண்டு வேறு சுய லாபங்களுக்கு அந்தப் போர்வையைப் பயன் படுத்திக் குற்ற உணர்விலிருந்து நிம்மதியான விடுதலை கிடைக்கிறது. இதை ஒரு வாக்குமூலம் போலவே கூறுகிறேன்
எழுதி எழுதியும் படித்துப் படித்தும் மொழிகள் மொழிகளாகப் பயின்று பயின்றும் தேர்வு தேர்வுகளாக எழுதப் பல்கலைக் கழகங்கள் பல்கலைக் கழங்களாக நடந்து நடந்தும் காலம் போயிற்று.
நகரத்திலிருந்த பத்திரிகைகள் என் கதைகளைக் கேட்டு வாங்கிப் பரசுரித்தன. குறுநாவல் எழுதச் சொல்லி நாவல் எழுதச் சொல்லி கவிதை  எழுதச் சொல்லி கட்டுரைகள் எழுதச் சொல்லி அழைப்புக்கள் வந்த பன் தான் எதையுமே நான் எழுதினேன். வெறும் பணத்திற்காகவோ பணத்தாசையை மூட்டும் பரிசுப் போட்டிகளுக்காகவோ நான் எழுதியதே இல்லை. டி.கே. சி .நூற்றாண்டுக்காக கல்கி நடத்திய கட்டுரைப்போட்டி பாரதி நூற்றாண்டிற்காக தினமணி கதிர் நடத்திய கட்டுரைப் போட்டி தவிர வேறு போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்ற முன்னுணர்வு ஏனோ என்னுள் ஏற்பட்டிருந்தது.
ஆயிரம்  ஐந்தாயிரம் பத்தாயிரம் லட்சம் என்று கவர்ச்சி காட்டிய எந்த இலக்கியப் போட்டியிலும் நான் ஈடுபாடு காட்டியதே இல்லை.
எனக்குக் கிடைத்த பரிசுகள் வாய்ப்புக்கள் என எல்லாமே நான் ஒன்றுக்கு இரண்டு முறை மறுத்து மறுத்து ஒதுக்கிய பன் தான் என்னைப் பலவந்தமாக ஏற்க வைத்தன. காரணம் ஆத்ம கௌரவம் என்பது எல்லாவற்றையும் மேல் என்று ஓர் ஒளி என்னுள் சுடர் விட்டபடி இருந்தது. . சோழா கிரியேஷன் என்ற திரைப்படக் கம்பெனியிலிருந்து பஞ்சாயத்துத் தலைமையில் பெண் தலைமைத்துவம் தொனிக்க வைக்க வேண்டிய ஒரு குறும்படத்திற்கு வந்த ஒரு கதை வசன வாய்ப்பையே கூட இரு முறை மறுத்து தொடர்பானவர்கள் வீடு தேடி வந்து வலியுறுத்த மனைவி ஒரு பக்கம் வற்புறுத்த ஏற்றேன்.
’வாசற்படி கடந்து வாராத பிச்சைக்கு ஆசைப்படுவதில்லை அண்ணலே !’ என்ற பட்டினத்துப் பிள்ளையின் மனப் பக்குவமும் ஈடின் மானிகளாய் இளைத்தவர் தம் மனக் கருத்தறிந்து உளம் இளைத்த வடலூர் வள்ளலின் அருளுணர்வும் எனக்குப் போதித்துக் கொண்டே வந்தன. எழுதினேன்.
எந்தக் கதையும் எந்த ஒரு படைப்பும் ஒரு தீக்குச்சி கிழிக்கிற அளவு வெளிச்சமேனும் தராவிடில் எழுதாமல் இருப்பது மேல் என்ற கொள்கை வகுத்துக் கொண்டு எழுதினேன். வாசகர் ஒருவர் மனசில் ஒரு சிறு ஒளி கிடைத்த பரவச வெளியீட்டின் முன்பு  உங்கள் படைப்பு என் வாழ்க்கையை மாற்றியது என்று யாரோ முகம் தெரியாத ஒருவர் சொன்னாலோ எழுதினாலோ அதில் ஒரு திருப்தி கிடைத்தது.
பெருமை அல்ல.
திருப்தி.
எங்கோ உருப்படியாக சமுதாயத்திற்கு சிறிதளவேனும் இந்த மகா யந்திரத்தின் இயக்கத்திற்கு ஒரு சின்ன நட்டையோ  போல்ட்டையோ போன்ற அளவிலாவது எந்த விதமான விலையுமின்றி பயன்பட்டதால் கிடைக்கிற அந்த திருப்தி விலை மதிக்க முடியாதது.
அப்படி அடிக்கடி அனேகமாக ஆண்டிற்கு ஓரிருமுறை என் எழுத்திற்கு எதிரொலிகள் வருவது காலம் கடந்து கூட வருவது நான் பெற்ற அனுபவம்.
கோவை மதுரை பாண்டிச்சேரி சென்னை என்று முகமறியாத மனிதர்கள் நேரிலும் கடிதத்திலும் பாராட்டியிருக்கிறார்கள். ஒரு சிறு புன்முறுவலுடன் நாணத்தோடு அவற்றைக் கடந்து விடுவேன்.
ஒரு பக்கம் மேலை நாட்டு இலக்கிய வார்ப்புக்களுக்கு
நகல் போல எழுதியும் விமர்சித்தும் வரும் விமர்சகப் பெரும்புலவர்கள் பலர் என் படைப்புக்களில் கலா பரிபக்குவம் இல்லை. பாத்திரப்படைப்பு இல்லை அது இது எல்லாம் இல்லை. அதுவும் இதெல்லாம் வியாபாரப் பத்திரிகை எழுத்து ..மீடியாக்ரிடி என்று தீண்டாமை அனுஷ்டித்தபடி வாய் சப்புவதைப் பல முறை கேட்டிருக்கிறேன. பாதிக்கப் பட்டதில்லை.
கேரளத்திலே தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தவர்கள்  ஈழவர்கள். அவர்களுக்காக அவர்கள் தொழுவதற்காகவென்று ஈழவ சமுதாயத்தின் மகானான நாராயண குரு ஒரு சிவன் கோயில் கட்டினார். உடனே உயர் ஜாதியாரிடையே பெரும் ஆட்சேபமும் கொந்தளிப்பும் கிளம்பன. நாராயண குரு அமைதியாக சிரித்து விட்டு அடடா நீங்கள் ஏன் அவஸ்தைப் படுகிறீர்கள் ? உங்கள் சிவனுக்கு இல்லை மக்களே! ஒரு ஈழவ சிவனுக்குத் தானே நான் கோயில் கட்டினேன் ? என்றார்.
அதைப் போலவே நான் விமர்சகப் பெருமக்களுக்காகவோ இலக்கிய உத்தாரணத்திற்காகவே வடிவ உத்தியில் சித்திபெற்று ஜீவன் முக்தியடையவோ எழுத முயற்சிக்கவில்லை.வாசிக்கிறவர் மனசில் சிறிது வெளிச்சத்தையும் சிறு நெகிழ்ச்சியையும் வரவழைக்க அல்லவா எழுதுகிறேன் என்று திருப்தி அடைந்தேன்.
வந்த பாராட்டுகள் ஒரே ஒரு ஞானத்தை ஏற்படுத்தின. மெச்சிமெச்சிப் புகழ்ந்தால் புகழக் கேட்டால் மமதையே மிஞ்சுகிறது என்ற ஞானம் அது.
இதில் மாட்டிக்கொள்ளாமல் விடுபட எப்போதும் முயன்று வரும் நான் தமிழக அரசு பரிசுபெற்றதற்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் பரிசு பெற்றதற்குக் கூறிய அதே வாக்கியத்தை 1984ல் 15 ஆண்டுகளுக்கு முன் திருப்பத்தூரிலே  எனக்குத் தமிழக அரசு பரிசு கிடைத்ததற்காக நண்பர்கள் நடந்திய விழா ஏற்புரையிலே அன்றே கூறினேன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
என்ன செய்வது? எதைச் சொன்னாலும் ஒரு சினிமா மேற்கோள்  தேவையான காலமாகி விட்டது இது.
இதைக் கேட்டுவிட்டு எந்தக் கிரீடம் தலையில் ஏறினாலும் கழற்றி வைத்து விடுகிறீர்கள் என்று அந்த விழாவிலே பாராட்டிப் பேசிய நண்பர் கூறினார். தலை கனத்துவிடும். தலை இருப்பது கனம் சுமப்பதற்காக அல்ல  என்று பதில் சொன்னேன்.
நான் எழுதியானதும் கையெழுத்துப் பிரதியை என் மனைவியிடமும் என் மகளிடமும் வாசித்துக் காட்டும் வழக்கம் இருந்தது. நான் எழுதிய குஷ்கா என்ற சிறுகதையை அவர்களிடம் வாசித்துக் காட்டியபோது நல்ல ரசனையுள்ள அவர்கள் விம்மி விம்மி அழ ஆரம்பித்தார்கள். எனக்கும் கண்ணீர் வந்தது.
பின்னாளில் என் சிறுகதைகளைத் தமது எம்.பில் ஆய்வு செய்த ஒரு பெண்மணி தமக்கு அந்தக் கதையால் கண்ணீர் வந்தது என்று கடிதம் எழுதினார். (தொடரும்)

No comments:

Post a Comment