Monday 9 September 2019

எதற்காக எழுதுகிறார்கள்?


தற்காக  எழுதுகிறார்கள்?

     மகனோடு புணர்ச்சி கொள்ளும் தாய்,கைம்பெண்ணாக ஒரு பள்ளியில் பணிபுரியவந்து ஒருவனிடம் சிக்கி அவனைப் பித்துப்பிடிக்க வைத்துவிட்டு ஆள்மாற்றும் இப்பெண்களின் தாய்,பெண்ணுரிமை பேசி,உறுப்புப்பெயர்கள் எழுதி கவனம் கவரும் கவித்துவம், சிக்கினான் ஆண் என்று ஆணினத்தைக் கிழி கிழி -என்று கிழிக்கிற சாக்கில் ஆபாசங்களுக்கு இடம் தேடும் பெண்முழக்கம், பிள்ளை இல்லாக்குறையைபோக்கிக்கொள்ள  ஒரு குறிப்பிட்ட திருநாளில் கூடும் கும்பலில் எவனோ ஒருவனோடு வெளிப்படையாகக் கூடி, அதன் பின் ஏற்படும் மகத்தான சமூக மாற்றங்களை விவரித்து
வந்தவன் வந்துகொண்டே இருந்தான்,
போனவன் போய்க்கொண்டே இருந்தான்.
வந்தவன் நிழல் போனவன் நிழலைத்
துரத்திக்கொண்டே போகையில் புழல்..
நிழல் மறைந்து விட்டது
-என்ற ரீதியில் செங்கல் அடுக்கிக் காட்டி அதற்கு ஒரு இயத்தின் பெயர் சூட்டி இலக்கியம் எனக்கொண்டாடி, ஒரு குழு சேர்த்துக்கொண்டு அடிக்கும் தம்பட்டம், போதாக்குறைக்கு  ஒளி பரவ உதித்த ஒரு இலக்கிய ஏந்தல் நினைவைப்போற்றி புகழ ஒரு படக்கண்காட்சி, ஒரு போற்றித் திருவகவல்  என்ற கதிக்கு வந்து சேர்ந்திருக்கிற நவீன தமிழ்ப் புத்திலக்கியத்திற்கு என்ன நேர்ந்தது என்று கவலை உதிக்கிறது.      ஒருவேளை இலக்கியம் என்பதே இதற்காகத்தானோ என்று ஐயுறும் அளவு இவற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்போது நமக்கு அறிவிக்கப்பட்ட ஞானோபதேசம் குறுக்கிடுகிறது வாழ்க்கை எப்படிப் பல முகங்கள் கொண்டதோ அவ்வாறே வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இலக்கியமும் பல முகங்கள் கொண்டதாகிறது. இப்படி இப்படி சொல்லிக்கொண்டிருந்தோமே ! சிந்தித்தோமே!
            அறிவும் உணர்வும் கற்பனையும் பெறுகின்ற அனுபவங்கள் பல. இந்த அனுபவப் பங்கீட்டுக்கு இலக்கியமே ஒரு பிரதான வடிகால். என்று ஆசான்கள் வேறு கற்பித்தார்கள்! இப்போது இப்படி நடக்கிறதே! என்ன செய்வது?
            இலக்கியம் ஏன் படைக்கப்படுகிறது? எதற்காக எழுதுகிறார்கள்? இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டியது தான்.பல விடைகள் எழுத்தாளரின் மனப்போக்கிற்கேற்பக் கிடைக்கலாம்.
            சுருக்கமான பதில் ஒன்றுதான்.
            படிப்பதற்காக.
            எதற்காகப் படிக்கிறோம்?
            ஒரு கோணத்தில் இந்தக் கேள்வி அர்த்தமற்றது; மற்றொரு கோணத்தில் அர்த்த புஷ்டியானது. பல நினைவலைகளை எழுப்புவது. நமது பழக்கங்கள். சுவைகள் பற்றிய விவரங்களை நாமே அறிய வாய்ப்பளிப்பது.
            ஏன் வாழ்கிறோம் என்ற கேள்வி எழுந்தால் எத்தனை பதில்கள் வரும்?
            பிறந்து விட்டதற்காக-
            உயிர் வாழ்வு அடிப்படை உணர்வூக்கி-
            பிறர் வாழ்வதைப் பார்த்து-
            ஒரு நோக்கம் கருதி-
            ஒரு வேட்கை காரணமாய்-
            பதில்கள் வேறுபடலாம். அலசினால் மிஞ்சுவது ஒரே முடிவு. நாம் அனைவரும் வாழ்வதை நேகிச்சிறோம். இதே பதில் முந்தையக் கேள்விக்கும் பொருத்தம்.
            படிப்பதை நாம் நேசிக்கிறோம். படிக்கிறோம், இன்பம் அதில் உண்டு. ஒளியும் உண்டு.
            வாழ்வில் நாம் பெறும் துன்ப அனுபவங்களை-எண்ணற்ற தொல்லைகளை-வாழ்க்கை வழங்கும் இன்ற அனுபவங்களுக்காகச் சகித்துக் கொள்கிறோம்.
            இன்பமும் உண்டு. இன்பமும் வரும்; அப்போது குறைகள் தீர்ந்த ஒரு நிறைவு நிச்சயம். இந்த நம்பிக்கையில் தான் மனித குலத்தின் இடையறாத பயணம் தொடர்கிறது.
            அந்தப் பயண அனுபவங்களை ஒருவர் பங்கிட பிறர் கேட்பது ஓர் பேரனுபவமாகிறது. மக்கள் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். கல், சுவர், ஓலைச்சுவடி, காகிதம், திரை எதில் எழுதினாலும் படித்துக்கொண்டே வருகிறார்கள். காலம் காலமாக.

No comments:

Post a Comment