Monday 28 January 2013

விதிகளின் தொடர்ச்சி


விதிகளின் தொடர்ச்சி 
விதி : 25
1) இதில் ஒவ்வொருவருக்கும் தம்முடைய மற்றும் தம் குடும்பத்தின் சுகாதாரத்துக்கும் நலவாழ்விற்கும் தேவையான வாழ்க்கைத் தரத்தை அமைத்துக்கொள்ளும் உரிமை உண்டு.
இதில் உணவு, உடை, வீட்டுவசதி, மருத்துவ வசதி மற்றும் தேவையான சமூக வேலைகள் இவை அடங்கும்.
மேலும் வேலை இல்லாமல் போகும் காலத்திற்கு வேண்டிய பாதுகாப்பு, நோய், உடல் ஊனம், வைத்தியம் முதிர் வயது அல்லது இவை போன்ற தம் கட்டுப்பாட்டை மீற வேரிடும் சூழல்களால் வாழ வழி அற்றுப்போகும் நிலை ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு பெற உரிமையும் உண்டு.
2) தாய்மைப் பருவமும், குழந்தைப் பருவமும் விசேஷ கவனத்திற்கு உரியனவாகும். திருமண பந்தத்தினாலோ அல்லது அதை மீறியோ பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளும் ஒரே விதமான சமூகப் பாதுகாப்பைப் பெறவேண்டும்.
விதி : 26
1) ஒவ்வொருவருக்கும் கல்விபெறும் உரிமை உண்டு. கல்வி, குறைந்தபட்சம் தொடக்க நிலைகளிலோ அடிப்படைக் கட்டங்களிலோ இலவசமாக்கப்படவேண்டும்.
தொழில் நுட்பம் மற்றும் தொழில் துறைக் கல்வி பொதுவாக அனைவருக்கும் கிட்டுவதாக அமையவேண்டும். உயர் மட்டக் கல்வித்தகுதி அடிப்படையில் சமமான முறையில் அனைவருக்கும் கிட்டவேண்டும்.
2) மனித ஆளுமையை வளர்க்கவும், மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் மதிக்கும்படியான முறையில் கல்விநெறிப்படுத்தப்பட வேண்டும். அனைத்து நாடுகள், இனங்கள் அல்லது மதக் குழுக்களிடையே புரிந்துகொள்ளுதல், பொறுமை, நட்பு ஆகிய பண்புகளைக் கல்வி வளர்க்கவேண்டும். சமாதானத்தை நிலைநிறுத்த ஐ.நா. சபை மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்குக் கல்வி உறுதுணையாக இருக்கவேண்டும்.
3) தங்கள் குழந்தைகளுக்கு எந்த வகையான கல்வியைத் தரவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் முன்னுரிமை பெற்றோர்களுக்கு உண்டு.
விதி : 27
1) சமுதாயத்தில் கலாச்சார வாழ்வில் பங்குபெறவும், கலைகளை அனுபவிக்கவும் அறிவியல் முன்னேற்றங்களில் பங்கேற்கவும் அதன் பலன்களை அனுபவிக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
2) ஏதேனும் ஓர் அறிவியல், இலக்கியம் அல்லது கலைப் படைப்பிற்கு ஒருவர் உரியவராகும் பட்சத்தில் அவருக்கு அதிலிருந்து கிடைக்கும் தார்மீக மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு.
விதி : 28
இந்தப் பிரகடனத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட உரிமைகளையும் சுதந்திரங்களையும் சமுதாய அளவிலும் சர்வதேச அளவிலும் பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
விதி : 29
1) ஒவ்வொருவருக்கும் சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள் உண்டு. அவரது சுதந்திரமான ஆளுமை வளர்ச்சி அவற்றை நிறைவேற்றவதன் மூலமே சாத்தியமாகும்.
2) தம் உரிமைகளையும், சுதந்திரங்களையும் நுகர முனையும் ஒவ்வொருவருக்கும் சட்டத்தினால் தீர்மானிக்கப்பட்ட சில எல்லைகள் உண்டு. அவை ஒரு ஜனநாயக சமுதாயத்தின் பொது நலத்திற்கும், நீதிநெறி, பொது ஒழுங்கு ஆகியவற்றின் நியாயமான தேவைகளை ஏற்கவும் அமைந்தவை.
3) இந்த உரிமைகளையும், சுதந்திரங்களையும் எக்காரணத்தை முன்னிட்டும் ஐ.நா. சபையின் நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் மாறானவற்றுக்குப் பயன்படுத்தக்கூடாது.
விதி : 30
இந்தப் பிரகடனம் வெளியிட்டுள்ள உரிமைகள் மற்றும் சுதந்திரங்களில் ஏதாவது ஒன்றினை அழிக்கும் நோக்கமுள்ள செயலைப் புரியவோ, அல்லது ஒரு நாடு, குழு அல்லது தனி நபர் அத்தகைய அழிவு நடவடிக்கையில் ஈடுபடத் தமக்கு உரிமை இருப்பதாகவோ இதைத் தமக்குச் சாதகமான முறையில் திரித்து உரைக்கக்கூடாது.
மேற்கண்ட இந்தப் பிரகடனம் `மனித உரிமைகளுக்கான சர்வதேச சட்டம்' ஒன்றை இயற்றுவதற்கான முதல்படியாகவே காணப்பட்டது.
1976இல் இந்தச் சட்டம் மூன்று குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களை ஏற்று அமலுக்கு வந்தது. அவை வருமாறு :
1) பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம்.
2) சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம்.
3) இரண்டாவதாகக் கூறப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்கும் சுயவிருப்பமுள்ள அரசியல் அறிக்கை.
முதலாவது ஒப்பந்தத்தை ஏற்கும் எந்த நாடும் தன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறது.
அது வேலை செய்யும் உரிமை, நியாயமான கூலி, சமூகப் பாதுகாப்பு, உகந்த வாழ்க்கைத் தரம், பசி பட்டினியிலிருந்து விடுதலை, சுகாதார வசதி, கல்வி ஆகியவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமையை அங்கீகரிக்கிறது.
மேலும், தொழிற் சங்கங்களில் சேரவோ அல்லது அவற்றை அமைக்கவோ ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்பதையும் அந்த நாடு அங்கீகரிக்கிறது.
இரண்டாவது ஒப்பந்தத்தை ஏற்கும் எந்த நாடும் தன் மக்களை எந்த ஒரு குரூரமான, மனிதத் தன்மையற்ற, இழிவாக்கும் செயல்களிலிருந்தும் சட்டத்தின்மூலம் கட்டாயம் காப்பாற்ற வேண்டும்.
மேலும், அந்த நாடு ஒவ்வொரு தனி நபருக்கும் உயிர் வாழ்க்கை, சுதந்திரம் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் ஆகியவற்றுக்கு உரிமை உண்டு என்பதையும் தெரிவிக்கிறது.
அடிமைத்தனத்தைச் சட்டவிரோதமாக்கல்; நியாயமான நீதி விசாரணைக்கான உரிமைக்கு உத்தரவாதம் அளித்தல், தன்னிச்சையாக ஒருவரைக் கைதுசெய்தல், காவலில் வைத்தல் ஆகியவை நடந்தால் அவரைப் பாதுகாத்தல் போன்ற அம்சங்களையும் அது ஏற்கிறது.
மூன்றாவதாக சுய விருப்பத்தோடு கூடிய அரசியல் அறிக்கை. ஐ.நா. சபை வெளியிட்ட உரிமைப் பட்டியலிற்கு எதிரான நடவடிக்கைகளில் எவரேனும் ஈடுபட்டால், அதற்கு எதிராகக் குற்றம் சாட்டும் உரிமை தனி நபர்களுக்கும் நாடுகளுக்கும் உண்டு என்பதை நிச்சயிக்கிறது.
மேற்கண்ட ஒப்பந்தங்களை மிகச் சிறந்தவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதில் பல சங்கடங்கள் உள்ளன.
முதலில் இதை அமலாக்க ஐ.நா.வால் முடியுமா? தார்மீக ரீதியாக வற்புறத்துவதைத் தவிர வேறு நடவடிக்கைகளில் ஈடுபட ஐ.நா.வுக்கு அதிகாரம் இல்லை.
ஒரு நாட்டின் தலைவர் முரட்டுத்தனமாகவும் விடாப்பிடியாகவும் மனித உரிமைகளைச் சிதைத்து வரலாம். ஆனால், அதற்கு எதிராகச் சர்வதேச சமுதாயம் எதையும் செய்ய இயலாது.
ஏனெனில், ஐ.நா. சாசனத்தின் முக்கிய அம்சமே அந்தந்த நாடுகளில் அமைந்துள்ள அரசுகளை மதிக்கவேண்டும் என்பதே. உரிமை கோரும் எந்த ஒரு செயலையும் `அது உள்நாட்டு விஷயத்தில் தலையீடு' என்று எளிதில் திரித்துக் கூறி விடலாம்.
எனவே எது தேவையெனில், சூழ்நிலைக்கு ஏற்ப விரைந்து, ஆற்றலோடு நடவடிக்கை எடுக்கும் வகையில் ஐ.நா. சபையை மாற்றி அமைத்தலே!
மேலும் தேவையாவது ஒன்று, அதிக ஜனநாயகப் பண்புள்ள ஐ.நா. சபை. அது சிறியது, பெரியது, வலியமையானது, பலவீனமானது, பணக்காரர், ஏழை என்ற பாகுபாடின்றி, அடிப்படை மனித உரிமைகளுக்கான முழு ஈடுபாட்டை அனைத்து நாடுகளிடையிலும் ஏற்படுத்த அந்த ஐ.நா. பணியாற்ற வேண்டும்.
ஆக, இவை தேவையெனில் ஐ.நா. சபையையே அடிப்படையில் மாற்றியாக வேண்டும். மாறிவரும் இன்றைய உலகச் சூழலில் இதை ஓர் அவசரப் பணியாகக் கொள்ளவேண்டும்.

1 comment:

  1. வணக்கம்
    இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மானதற்கு எனது வாழ்த்துக்கள் சென்று பார்க்கhttp://blogintamil.blogspot.com/2013/10/blog-post_5.html?showComment=1380987582845#c7291770155566061232

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete