Monday 28 January 2013

அன்பும் நீதியும்


அன்பும் நீதியும்

அன்பு நீதிக்கு உயிரூட்டுகிறது. நீதியைத் தூண்டுவதாக இருக்கிறது. நீதியைக் கண்டுபிடிக்கிறது, சீர்படுத்துகிறது, எளிமையை உயர்த்துகிறது. அதைக் கடந்து நிற்கிறது.அன்பு நீதியைத் தவிர்ப்பதில்லை. அதை உறிஞ்சிக் கொள்வதில்லை. அவ்வாறே அன்பு நீதியை வேறொன்றால் இட்டு நிரப்புவதில்லை. மாறாக அதற்கு முதலிடம் தருகிறது. நீதிக்கு அன்பு குரல் கொடுக்கிறது.ஏனெனில், அன்பு, உண்மை, தர்ம சிந்தனை என்பவை நீதியின்றி நிலைத்திருக்காது.
- இரண்டாவது போப் ஜான்பால்

ஒவ்வொரு சமூக அமைப்பின் நாடியாகவும் நீதியே இருக்கவேண்டும் என்று கண்டோம். அதற்கும் மேலே சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஒருவரோடு ஒருவரை நாம் அன்பினால் பிணைக்க வேண்டும். அப்போதுதான் உலகம் ஓர் உண்மையான மனிதகுடும்பமாக மாறும்.
எல்லா மனித உறவுகளையும் மிக ஆழமாக ஊடுருவி இருக்கும் சக்தி அன்பே.
இதை நாம் கட்டாயம் உணரவேண்டும். அன்புதான் எல்லா ஒழுக்கத்திற்கும் முழுமையான அஸ்திவாரம். அதுவே நீதியின் அடிப்படைக் கொள்கை.
கிரேக்கர்கள் மாபெரும் அறிவாளிகளாக இருந்தும் அதை உணரவில்லை. அவர்கள் எல்லா நற்பண்புகளுக்கும் நீதியே அரசி என்று கருதினார். மனிதனின் உணர்வுகளில் அன்பும் ஒன்று என்று கணக்கிட்டனர்.
அன்பு, நீதி இரண்டுமே மனித உறவுகளோடு தொடர்புள்ளவை. ஆனால் அன்புதான் உண்மையிலேயே நெருக்கமானது.
தனி நபர்களும், சமுதாயங்களும் வைத்திருக்கும் உடமைகளையும் அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் என்றும் நீதி பேசுகிறது.
ஆனால் அன்புதான் நெருக்கமான முறையில் உறவுகளைப் பற்றிப் பேசுகிறது. மனங்களும் இதயங்களும் ஒன்றுசேர்வதைப் பற்றி அது குறிப்பிடுகிறது.
தனி நபர்களிடையே உள்ள உறவு அன்பினால்தான் முதலில் மிகவும் ஆழமாகத் தொடப்படுகிறது. அதற்கு அப்புறம்தான் நீதி வருகிறது.
நீதியும் அன்பும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. அதில் சந்தேகமில்லை. நீதி நியாயமான அன்பு காட்டுவது என்பது முடியாது.
நீதி என்பது அன்பின் விதியை அமலாக்கத் தேவையான குறைந்தபட்ச அளவைச் சுட்டிக்காட்டுகிறது. நீதியின் கோரிக்கை ஒருவர் செய்கிற தர்மத்தின் அளவினால் நிறைந்துவிடாது.
எது ஒருவருக்கு நியாயமாக உரியது என்று நீதி கருதுகிறதோ, அதை ஒருவர் அன்பினால் மற்றவருக்கு மனமுவந்து அளிப்பதற்கு இணையாக்க முடியாது.
எங்கே நீதி இல்லையே, அங்கே உண்மை அன்பும் இருக்கமுடியாது. ஆனால் அன்பு நீதியையும் கடந்து செல்கிறது. அன்பினால்தான் நீதி தன் உள்ளார்ந்த முழுமையை அடைகிறது.
அன்பு இல்லாத நீதி வறண்டது, மாமூலானது. அது விலகி நின்றுவிடும். எனவே, அன்பும் நீதியும் ஒருங்கிணைந்து செல்லவேண்டும்.
அன்பு நீதிக்குத் தூண்டுகோலாக வேண்டும். நீதி அன்புக்கு வழிகாட்ட வேண்டும்.
அன்பும் நீதியும்
*மனிதர்களுக்கு நீதியைவிட அடிப்படைத் தேவையானது அன்புதான்.
*நீதி நிறைவேறியுள்ளது என்று அன்புதான் முழு உத்தரவாதம் அளிக்கிறது. அவ்வாறே நீதியின் தோல்வி, அன்பின் தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறது.
*நீதியின் குறிக்கோள்கள், அன்பு என்ற உள்ளுணர்வால்தான் எட்டக் கூடியவை.
*அன்பே நீதிக்குத் தெளிவான பார்வை அளிக்கிறது. முழு விரிவாக்கம் தருகிறது.
*அன்போடு செயலாற்றும் ஒருவன், நீதியின் குறைந்தபட்சத் தேவைகளை முதன்மையாகக் கொள்ளாமல், சமுதாயத்தில் தம்முடன் வாழ்பவரின் உண்மைத் தேவைகளையே முதன்மையாகக் கொள்கிறான்.
*மற்றொருவரின் நலனுக்காகத் தன் சொந்த உரிமைகளை விட்டுக் கொடுக்க அன்பு எப்போதும் தயாராக இருக்கிறது. அவை சமுதாயத்திற்கோ, ஒரு தனி நபருக்கோ எந்தப் பாதகமுமின்றி விட்டுக் கொடுக்க வேண்டியவை என்றே அன்பு கருதுகிறது.

. நீதியும் மனித உரிமையும்

சமூக நீதியின் முதலாவது கொள்கையே ஒரு மனிதருக்கு அவர் மனிதர் என்ற முறையில் மதிப்புக் கொடுப்பதுதான்.
அதற்குத் தெளிவான பொருள் - மனித உயிர் என்ற வகையில் ஒருவருக்குரிய வேறுபடுத்த முடியாத உரிமைகளை இனம் காண்பதும், அதைப் பாதுகாப்பதும்தான்.
எனவே, சமூக நீதி என்பதை மனித உயிர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது என்ற கோணத்தில்தான் அணுகவேண்டும்.
மனித உரிமைகள் என்பவை இன்று பெரிதும் அலசப்படும் விஷயம் ஆகிவிட்டது. சமூக வாழ்வில் மனித உரிமைகளுக்கு அளிக்கப்படும் மதிப்புதான் மையமாக இருக்கவேண்டும். இப்படி இன்று வாழ்வின் எல்லாத் துறை மக்களிடமிருந்தும் முழக்கங்கள் எழத் தொடங்கிவிட்டன.
ஆனால், என்றும் உலகின் எல்லா நாடுகளிலும் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றன, மீறப்படுகின்றன.
மனித உரிமைகள் மீறப்படுவதை எவ்வாறு தடுப்பது?
தங்களுடைய அடிப்படை உரிமைகள் என்னவென்று மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தாமல், அவர்களுக்கு அதைக் கற்பிக்காமல் அது எப்படிச் சாத்தியம்? முதலில் செய்யவேண்டிய கடமை அதுவே.
அந்த உரிமைகள் மறுக்கப்படும்போது எதிர்த்துப் போராடும் வலிமையை அவர்களிடையே உருவாக்கவேண்டும்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதுதான் இன்றைய முக்கியமான சமூகப் பிரச்சனை.
மனித உரிமைகள் என்ற கருத்து எவ்வகையிலும் எளிமையான ஒன்றோ, நேரடியாகச் சொல்லக்கூடிய ஒன்றோ அல்ல. மனித உரிமைகள் என்னவென்று புரிந்துகொள்ளும் உணர்வு படிப்படியாக மாறி வந்திருக்கிறது, மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. இன்றும்கூட அது, சமுதாயத்திற்குச் சமுதாயம், குழுவுக்குக் குழு வேறுபடுகிறது.
சில நேரங்களில் மனித உரிமைகள் என்ற கருத்தே சுதந்திரமாகத் திரித்துக் கூறப்படுகிறது. சர்வாதிகாரிகள் தாங்களே தொடர்ந்து பதவியில் இருக்கவேண்டும் என்பதற்காக அதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
சில அரசாங்கங்கள் ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை, மனித உரிமைகளின் பேரால் ஒழித்துக் கட்டியுள்ளன, சித்திரவதை செய்திருக்கின்றன.
பண பலம் படைத்தவர்கள் தங்கள் சுயநலங்களைப் பாதுகாக்கவும், ஏழைகளைச் சுரண்டவும் மனித உரிமைகளை வஞ்சித்து இருக்கிறார்கள்.வஞ்சித்தும் வருகிறார்கள்.

No comments:

Post a Comment