Tuesday 22 January 2013

சமூகநீதி

சமூகநீதி
நீதி என்ற சொல் நமக்கு நன்றாய் தெரிந்ததுதான். அதை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். அடிக்கடி அது நம் காதில் வந்து விழுகிறது. பல சமயங்களில் அந்த வார்த்தையை நாம் படிக்கிறோம்.
நீதி உணர்வு என்பது என்ன?
நீதி நம் வாழ்க்கையை விட்டுப் பிரிக்கமுடியாத ஒன்று. அது நம் இயல்பு. பெரும் வலிமையோடு அது நம்மை ஆளுகிறது.
நாம் முதலில் அதன் குரலை அலட்சியம் செய்யலாம். அதன் முறையீட்டைத் தடுக்க முயற்சிக்கலாம். ஆனால் நம்மால் அதன் குரலை ஒரேயடியாக அடக்கி ஒடுக்கிவிட முடியாது.
நீதி என்பது ஒரு தனிப்பெரும் சமூகப் பண்பு. எந்த ஒரு சமுதாயமும் தன்னை நீதியுடையது என்றும், நியாயமானது என்றும் கூறிக்கொள்ளவே விரும்புகிறது.
நீதியைக் குறித்த கருத்துக்கள் மாறலாம். நீதியின் தரங்கள் வேறுபடலாம். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எது நீதி என்று தீர்மானிப்பது கடினமாகலாம்.
என்றாலும், உண்மையான நீதியோடு நாம் இல்லையெனில் மனிதத் தன்மையோடு வாழமுடியாது. இதை எந்த சமுதாயமும் ஒப்புக்கொள்ளத் தயங்காது.
வரலாற்றுச் சாட்சியம்
இன்று நீதியைக் குறித்து இந்தியாவில் நிறைய வாதங்கள் நடக்கின்றன. இது சிறிதும் விந்தையானதல்ல!
மனிதனை, அவனின் மனிதத் தன்மையை இழக்கச் செய்யும் வறுமை, ஏற்றத்தாழ்வின் கோரப்பிடி, ஈவிரக்கமற்ற சுரண்டல் இவைதான் இன்றைய நடைமுறை.
எனவே, இந்தியாவில் நீதியைக் குறித்த முழக்கம் தவிர்க்க முடியாதபடி இடைவிடாது எழுந்துகொண்டேதான் இருக்கும்.
மனிதனின் சொந்த வாழ்விலும், சமுதாய வாழ்விலும் நீதிக்கு எப்போதுமே முதலிடம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதை வரலாற்றுச் சான்றுகள் நிரூபிக்கின்றன.
நீதியைப் புரிந்துகொள்ளும் விதம் பலவகையானது. வெவ்வேறு வகையான சமுதாயங்களில் நீதியின் தோற்றங்கள் வெவ்வேறு வகையாக ஒளிவீசி இருக்கின்றன. எனினும் நீதியின் தேவை மட்டும் எப்போதும் நிலையாக இருந்து வந்திருக்கிறது.
இந்த உண்மையை நான்கு வகை பண்பாட்டு மரபுகளிலிருந்து முதலில் நாம் பார்ப்போம் :
 இந்திய பாரம்பரியம்
இந்திய பாரம்பரியத்தில் நீதி என்ற வார்த்தை அதிகம் இல்லை. எனினும் நீதி உணர்வு மட்டும் எப்போதும் இருந்து வந்திருக்கிறது.
`தர்மம்' என்ற கருத்து இந்து சிந்தனையின் உள்ளது. இது உலகனைத்தும் ஒன்று என்று ஏற்கிறது. சமூகத்தில் ஒற்றுமையும் உறுதியும் வேண்டும் என வலியுறுத்துகிறது.
ஒருவர் வாழ்வில் எந்த நிலையில் வசிக்கிறாரோ அதற்கு இணங்க சமூகத்தில் வாழும் பிறருக்குத் தன் கடமைகளைச் செய்யவேண்டும் என்று இந்து சிந்தனை ஒவ்வொருவரையும் வலியுறுத்துகிறது.
``அந்தக் கடமையைச் செய்வது உலகில் ஒரு சரியான ஒழுங்கை உறுதி செய்யும். (அர்தா) மனித சமுதாயத்தின் நலனை வளர்க்கும்.''
- லோக சங்கிரகா
``எல்லா ஜீவன்களிடமும் நேசம் பூண்டு, அவற்றின் நலன்களைச் சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் கடைப்பிடிப்பவன் எவனோ அவனே ஒழுக்கம் அல்லது நேர்மை என்றால் என்னவென்று அறிந்தவன் ஆவான்.''
- மகாபாரதம் 12.524.4

No comments:

Post a Comment