Tuesday 22 January 2013

நீதி என்பது எது?

நீதி என்பது எது?
நீதி என்பது எது?
அதைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
 நீதியைப் பற்றி பலர் பலவிதமாகக் கூறுகிறார்கள். மக்களும் அதை பல வழிகளில் புரிந்துகொள்கிறார்கள். 
நீதி எந்த அடிப்படைகளின்மீது அமைந்துள்ளது? மனித உரிமைகளோடு அவை எவ்வாறு நெருங்கிய தொடர்புகொண்டது?
நீதி என்பது நீக்குப் போக்குள்ள ஒரு கருத்து. அதை இதுதான் என்று அடித்துச் சொல்வது முடியாத செயல்.
சென்ற கட்டுரையில் கண்ட பல்வேறுவகை நீதியின் பாரம்பரியப் பார்வைகளால்நீதியே ஒவ்வொரு பண்பாட்டிற்கும் மையம் என்று அறிகிறோம்.
ஆனால் நீதியின் அடிப்படை என்பது ஒரே மாதிரியானது, தெளிவானது, சுருக்கமாகச் சொல்லக்கூடியது என்றோ அர்த்தமில்லை.
காலம் மாறிக்கொண்டே வருவது.பல மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டும் அதனால் புதிய மதிப்பீடுகளை உருவாக்கிக் கொண்டும் வருவது.
தேவைகளும் அப்படியே. நீதியைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் முயற்சிகளை அவை பாதிக்கின்றன.
வெவ்வேறு சமுதாய அமைப்புகளில் நீதி வெவ்வேறு விதமாக உள்ளது.
உதாரணமாக நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பில் ஒரு நீதி இருந்தது.முதலாளித்துவ சமுதாய அமைப்பில் ஒரு நீதி இருக்கிறது. கம்யூனிசச்சமுதாய அமைப்பில் ஒரு நீதி இருக்கிறது
சில சமயம் ஒன்றுக்கொன்று நேர்முரணாகக்கூட அமைகின்றது.
எது நீதி என்பதில் சந்தேகங்களும், திரித்துக் கூறுவதும் எப்போதுமே ஏற்படுகின்றன.
பொதுவாக அந்தச் சொல் மனித உறவுகளின் பின்னணியில் பயன்படுவது. தனிமனித உறவுகள் மற்றும் சமூக உறவுகள் இரண்டிற்கும் பொதுவானது.
மக்கள் ஒருவரோடு ஒருவர் எப்படி உறவுகொண்டிருக்கின்றனர் என்பதையே அந்தச் சொல் சுட்டிக்காட்டுகிறது.
ஒரு நபர் பிறரோடு சரியான உறவை வைத்திருக்கிறார் என்பது அவர் பிறரையும் மனிதர்களாக உணர்ந்து அவர்களது உரிமைகளை மதித்து நடக்கிறார் என்கிற சமயத்தில்தான் பொருந்தும்.
வேறு வகையில் சொல்வதென்றால், ஒரு மனிதன் என்ற முறையில் ஒவ்வொருவருக்கும் உரியது எதுவோ அதை அவருக்குக் கொடுப்பவரே, நீதியும் நியாயமும் உள்ள மனிதர் ஆவார்.
 நீதியின் வகைகள்
ஒரு நபருக்கு உரியதைக் கொடு என்ற கருத்தை மேலும் தெளிவாக்குவது அவசியம். காரணம் மக்கள் எவரும் அந்தரத்தில் வசிக்கவில்லை.
அவர்கள் ஒரு சமுதாயத்தில் வசிக்கிறார்கள். உறவுகளின் நெருக்கமான பின்னல் என்ற பின்னணியில் வாழ்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் உரியது வழங்கப்படவேண்டும் என்றால் என்ன அர்த்தம்? அதை அந்தச் சமுதாயப் பின்னணியில்தான் பார்க்கவேண்டும்.
கி.மு. 4ஆம் நூற்றாண்டிலேயே நீதியின் வகைகள் பற்றி அரிஸ்டாட்டில் குறிப்பிட்டுள்ளார். அவரது சிந்தனை நம் காலத்திற்கும் சில மாறுதலுடன் பொருந்தும்.
நீதியைக் குறித்த நமது உணர்வுகளை அவற்றின் பல வகைகளை அறிவதன் மூலமே நாம் தெளிவாக்கிக் கொள்ளவேண்டும்.
அவை பொது நீதி, பங்கிட்டு நீதி, ஒருவருக்கொருவரான நீதி, சட்ட நீதி, சமூக நீதி என்று பிரிக்கலாம்.
1. பொது நீதி
ஒரு தனி நபருக்கும் ஒரு சமுதாயத்திற்கும் மத்தியில் இருக்கவேண்டிய உறவுகளைக் கூறவே, `பொது நீதி' என்ற வார்த்தைப் பயன்படுகிறது.
இங்கே முக்கியத்துவம் பெறுவது சமுதாயம்தான். தனி நபர்களின் நலத்தைவிட சமுதாய நலமே இதில் முதலிடம் வகிக்கிறது.
தனி நபர்கள் சமுதாய நலன்களைச் சீரழித்துவிடக்கூடாது என்ற கண்ணோட்டத்தில் இது சரியே.
தனி நபரின் சுயநலத்தைத் தடுக்கவும், பொது நலன்களைப் பாதுகாக்கவும் பொது நீதி முயல்கிறது. ஒரு சமுதாயச் சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் நியாயமாக அமையவேண்டும் என்பதே இதன் நோக்கம்.
அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிட்டவும், எந்த வகையிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படாமல் தடுக்கவுமே பொது நீதி பாடுபடுகிறது.
பொது நீதி எவ்வாறு வெளிப்படுகிறது? ஒரு நாட்டின் சட்டத்தின் மூலமே. எனவே அதை சட்டங்களோடு தொடர்புடையது என்று கூறலாம்.
ஒரு சமுதாயத்தின் சட்டங்கள், அதை அமலாக்கவேண்டிய அதிகாரமுள்ள அலுவலர்கள், அந்தச் சட்டங்களை மக்கள் மதிக்கும் விதம் என்பன அந்தத் தொடர்பில் அடங்கும்.
சட்டங்கள் என்பவை எவை? மனிதர்களைத் தனி நபர்களாகவும், சமுதாய உறுப்பினர்களாகவும் இருப்பதற்கு வழிகாட்டும் கொள்கைகள்தான் சட்டங்கள்.
சட்டங்கள் இயற்கையாக அமையலாம். மனித இயல்பில் அவை வேரூன்றி இருக்கலாம். அல்லது சமூகத்தினரால் உண்டாக்கவும் படலாம்.
இயற்கைச் சட்டங்கள் பரிபூரணமானவை. வெளித் தூண்டுதலோ, நிர்ணயங்களோ இன்றி அவை தனக்குத்தானே செயல் புரியும். மேலும் அவை உலகு தழுவியவை. எல்லாக் காலங்களிலும் எப்போதும் அவை பொருந்தக்கூடியவை.
இயற்றப்படும் சட்டங்களோ அவற்றுக்கு நேர்மாறானவை. இயற்கைச் சட்டங்களிடமிருந்தே தன் சொல்லுபடி பண்பினை அவை பெறுகின்றன. இயற்கைச் சட்டங்களையே அவை சார்ந்து நிற்கவேண்டியதாகின்றன.
இதற்கு மாறுபட்டால், அவை அநீதியாக மாறுகின்றன. மேலும் அவை சார்புத்தன்மை கொண்டவையாகின்றன. காரணம் வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு இடங்களிலும் உள்ள வேறுபட்ட சமூக அமைப்புகளோடு அவை கட்டுண்டவை.
ஆனாலும் சட்டங்கள் அவசியமானவை. அவையின்றி எந்தச் சமுதாயமும் உயிர் வாழமுடியாது. சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதும், அவற்றைப் பாதுகாப்பதுமே சட்டங்களின் நோக்கம்.
ஆகவே சமுதாய நன்மைக்காகத் தனி நபர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அவசியம் அந்தச் சட்டங்களுக்கு நேரிடுகிறது.
இது ஒரு கடினமான வேலை. அதே சமயம் எச்சரிக்கையோடு செய்யவேண்டிய நுட்பமான பணி. இதற்கு அதிக படைப்பாற்றலும் தொலைநோக்குப் பார்வையும் தேவை.
எந்த ஒரு சமூகமும் தனது குடிமக்களின்மீது ஏராளமான சட்டங்களைச் சுமத்தக்கூடாது. குறிப்பாகச் சொல்வதென்றால், அந்தச் சமுதாய மக்களின் இயல்புக்கே விரோதமான சட்டங்களைச் சமுதாயத்தின்மீது சுமத்தலாகாது.
நீதியும் சட்டமும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய கருத்துக்கள். பெரும்பாலான மக்கள் நீதியைச் சட்ட நீதியாகக் கருதிவிடுகிறார்கள். அது சரியல்ல.
சமுதாய வாழ்க்கைக்குச் சட்டங்கள் மிகமிக அவசியம்தான். தெளிவான சூழ்நிலைகளில் சட்டங்கள் நீதியைப் பிரதிபலிக்கின்றன.குறித்த விதத்தில் சட்டத்தை மதிப்பது சட்டத்திற்குள்ளேயே அடங்கிவிடக் கூடியதல்ல.
நீதியை நிலைநாட்டும் வெளிப்பாடுகளில் சட்டமும் ஒன்று. ஆனால் அது ஒன்றே ஒன்று மட்டுமல்ல. நிறுவப்பட்ட சட்டமே நியாயம் என்று உணரும் உணர்வுக்கேற்ப அவை தொடர்ந்து மதிப்பீடு பெறவேண்டும்.
அதாவது மூலமான, அடக்கி ஒடுக்கமுடியாத மனித உள்ளுணர்வு என்று ஒன்று உண்டு. அது சமூக உறவுகள் உருவாகவும் மாற்றம் பெறவும் வழிவகுக்கிறது.
அதுமட்டுமல்ல, தன்னை ஆளும் விதிகளையும் அதுவே உருவாக்குகிறது. அந்த மனித உள்ளுணர்விற்கு ஏற்பவே, சட்டங்கள் தொடர்ச்சியாக மறுபரிசீலனையும் மதிப்பீடும் பெறவேண்டும்.

No comments:

Post a Comment