Tuesday 22 January 2013

சமூகநீதிப் பார்வைகள்


சமூகநீதிப் பார்வைகள்

சமூகநீதி பற்றிய சிந்தனை உலகெங்கிலும் மனிதன் பிறந்து சிந்திக்கத் தொடங்கி நாகரிகம் அடைந்த  நாள் முதல் கிளர்ந்து எழத்தொடங்கி விட்டது.மதங்கள் ஒருவகையில் சமூக நீதி பற்றிய கருத்தோட்டத்தை
தெய்வ பயத்திற்குப்பின்னணியாக வைத்தன. அத்தனை  தெய்வ  பயம் ஒரேயடியாக இல்லாத கிரேக்க சிந்தனை ஒரு விதம் இருந்தது.  கிறிஸ்தவ , இஸ்லாமிய பாரம்பரிய மனப்போக்கிலும்  சமூகநீதி பற்றிய சிந்தனைப் பார்வை தெளிவாகக் காணப்படுகிறது.ஒவ்வொன்றாக அவற்றைக் காண்போம்
கிரேக்க ரோமானிய பாரம்பரியம்
கிரேக்க தத்துவஞானிகள் நீதிக்கு ஒரு முக்கிய இடம் வழங்கினார்கள். பிளாட்டோ நீதியும் ஒழுக்கமும் ஒன்றே என்று மதித்தார். நல்ல பண்பின் முழு வடிவமே நீதிதான் என்பார்.
ஒவ்வொரு நல்ல பண்பும் நீதியிலிருந்துதான் தோன்றியது. மனித உயிர்களின் மொத்த நடத்தையிலும் எது சரி, எது தவறு என்ற கேள்விக்கு நீதியும் ஒழுக்கத்தைப் போன்றே ஒரே பதிலைக் கூறும். அரிஸ்டாட்டில் `ஒட்டுமொத்தமாக நல்ல பண்பு என்பதே நீதிதான்; அநீதி என்பது தீய பண்பின் பகுதி அல்ல; அதுதான் ஒட்டுமொத்தமான தீமை' என்கிறார்.
தனி மனிதர்களிடையே உள்ள உறவுகளும், சமூக உறவுகளுமே நீதியின் சரியான அடித்தளம் என்ற பிதகோரஸின் உள்ளுணர்வுகளை அவர் ஏற்கிறார். அவரைப் பொருத்தவரை மனித உறவுகளில் உள்ள ஒழுங்கும் ஒற்றுமையும்தான் நீதி ஆகும்.
மேற்கண்ட சிந்தனை ரோமானியர்களிடம் நிலவி வந்தது. ஆனால் அவர்கள் நீதியைச் சட்டமுறையோடு இணைத்துக் கூறினர்.`நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதுதான் நீதி' என்று ரோமானியர்கள் கருதினார்கள்.
 யூத  கிறிஸ்துவ பாரம்பரியம்
பழைய ஏற்பாட்டில் நீதி என்பது வெறும் ஒழுக்கம் மட்டுமல்ல; அது ஒரு மதக் கொள்கையாகவும் மதிக்கப்பட்டது.
`நீதி என்பது கடவுளின் ஓர் அம்சமாகும். தெய்வீகப் பண்பின் முழுச்சாரமும் அதுதான். நீதி என்பது கடவுள் சித்தத்தின் பிரிக்கமுடியாத அம்சம்; இயற்கையான ஒற்றுமை' என்று பழைய ஏற்பாடு குறிப்பிட்டது.
இயேசு, கடவுளின் சாம்ராஜ்யம் குறித்து அறிவிக்கையில், ``எங்கே நீதியும் சமாதானமும் சகோதரத்துவமும் அன்பும் நிலவுகிறதோ அதுவே கடவுளின் அரசு'' என்றார்.
கடவுளை நேசிப்பதற்கும் அண்டை அயலானை நேசிப்பதற்கும் இடையே ஒரு பிரிக்கமுடியாத பிணைப்பு உண்டு என்று இயேசு நிலைநாட்டினார்.கடவுளின் சித்தத்திற்கு இணங்கி நீதியாக வாழ்வது என்பதே அன்பின் வழியில் செல்வதுதான் என்று இயேசு தெளிவுபடுத்தினார்.
``எனது சகோதரர்களின் மிகவும் ஏழையான ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்கிறீர்களோ, அதையே எனக்கும் செய்தவர்கள் ஆவீர்கள்''
- மத்தேயு 25:40
 இஸ்லாமிய பாரம்பரியம்
நீதி என்பது இஸ்லாமிய பாரம்பரியத்தின் இதயமாகும்.
இஸ்லாமின் தோற்றத்தை வைத்து மதிப்பிட்டால் அது ஒரு மத இயக்கமும் ஒரு சமுதாயப் புரட்சியுமாகும்.நபிகள் நாயகம் `நீதியின்றி, உண்மை, மதம் நிலைத்து நிற்கமுடியாது' என்று இடைவிடாது கூறிவந்தார்.
பலவீனமானவர்களையும், வறுமையில் வாடுவோரையும் அடக்கி ஒடுக்கும் எந்தச் சமுதாயமும் ஓர் இஸ்லாமிய சமுதாயமாகக் கருதப்பட முடியாது.
எனவே, இஸ்லாமிய சமுதாயத்தின் அடிப்படையும் உலக சகோதரத்துவம், சமத்துவம், சமூக நீதி இவற்றைச் சுற்றியே இயங்குவதாகும்.
`சொல்லுங்கள், எனது இறைவன் நீதியோடு சேர்ந்திருக்கிறார், ஆம் அல்லாஹ் நீதியோடு செயல்படுகிறவரையே நேசிக்கிறார், நீதியான செயலைச் செய்யுங்கள், அது பக்திக்கு நெருக்கமானதாகும்.'
- குர்ஆன் 7:29, 49:9, 5, 8

No comments:

Post a Comment