Monday 28 January 2013

நீதிக்கான பல்வகைத் தேவைகள்


பொருளாதாரத் தேவைகள் 
(பாதுகாப்பு, உயிர் வாழ்வது தொடர்பானது)
ஒவ்வொரு மனித ஜீவனுக்கும், எவை இல்லாமல் மனித வாழ்க்கை சாத்தியமில்லையோ, அந்த அடிப்படைப் பொருள்களைப் பெறுவதற்கு முழு உரிமையுண்டு. அவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1) உணவு, உடை, வீடு - தனிப்பட்ட பயனுக்குத் தேவையானவை.
2) உடல் நலம் மற்றும் திறன் வளர்ச்சி - சமுதாயத்தினால் சமுதாய உறுப்பினர் அனைவருக்கும் வழங்கப்பட  வேண்டியவை.
3) வேலை செய்வதற்கான உரிமையும் தேவையும் - இது ஆக்கப்பூர்வமான தகுதியுள்ள உழைப்பை சமூகத்திற்கு வழங்கவும்  ஒரு சிறப்பான வாழ்வு வாழவும் அவசியமானது. பிற தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒரு வழியாகவும், அடையவேண்டிய லட்சியம் என்ற அளவிலும் இந்த வேலை செய்யும் உரிமை இரு வகையில் தேவைப்படுகிறது.
சமூகத் தேவைகள் 
(சுய மதிப்பு தனிச்சிறப்பு தொடர்பானது)
தங்கள் சுயமதிப்பு, தனிச்சிறப்பு, தமது பண்புகள்இவை மதிக்கப்பட்டு மரியாதைச் செய்யப்பட வேண்டும் என்றும் எல்லா மக்களுக்கும் ஓர் உரிமையுண்டு. 
இது இரு அம்சங்களைக் கொண்டது.
1) எவருமே ஒதுக்கப்படுவதற்கில்லை. உடல் ஊனமுற்றோர், மன ஊனமுற்றோர், சிறையில் இருப்போர், பசியால் வாடுவோர் ஆகிய எல்லோருமே கடவுளின் பார்வையில் சமமானவர்களே. எந்த ஒருவரையும் ஒதுக்கி வைப்பதற்கில்லை.
2) நீதி வழங்குவது என்பது அவர்களுக்கு வெறுமனே எதையோ கொடுப்பது மட்டுமல்ல. அவர்கள் வளர்ச்சியடையும் வழிவகை பெறவும் மனிதக் குடும்பத்திற்கு தமக்கே உரிய சிறப்பான வகையில் தமது பணியைச் செய்யவும் உதவுவதே. அதுதான் நீதியின் கடமை.
இங்கே ஓர் உண்மை அடங்கியிருப்பதைக் காணலாம். ஏழைகள், அவர்கள் வெறும் ஏழைகள் என்பதைவிட மேலானவர்கள் என்பதே அது.
ஏழைகளின் எல்லாச் சிறப்பும் அவர்களுடைய வறுமைக்குள்ளேயே முடங்கிவிடாது. பசித்தவர்களும் காசில்லாதவர்களும் பலவகையில் பெருமை உள்ளவர்களாக இருப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.
ஏழைகளைச் சுய முயற்சியோடு வாழ நாம் அனுமதித்தால் அவர்கள் தம் உணவைத் தாமே தேடி உண்பார்கள். 
அரசியல் தேவைகள் 
(சுய தீர்மானம், தம் வாழ்வின்மீது ஒருவருக்குரிய கட்டுப்பாடு தொடர்பானது)
தமது சொந்தத் தலைவிதியைத் தாமே வடிவமைப்பதற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் ஏன் எல்லா மக்களுக்குமே உண்டு.
நமது வாழ்வை வடிவமைக்க அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சக்திகளின் மீது சில அர்த்தமுள்ள கட்டுப்பாடுகளை விதிக்க நமக்கு உரிமையுண்டு.
மனித ஜீவன்கள் என்ற முறையில் பிறர் தானம் கொடுப்பதைப் பேசாமல் வாங்கிக் கொண்டிருக்கவோ, முற்றிலும் பிறரையே சார்ந்திருப்பதற்கோ, பிறரால் அதிகாரம் செய்யப்படவோ நாம் பிறக்கவில்லை.
சமூக நீதியைப் பற்றிப் பேச வரும்போது ஒன்றை நாம் முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
யாரோ ஒருவருடைய தயவினால் கிடைக்கும் வசதிகளைப் பெறுகிறவர்களாக மக்களை மாற்றுவதல்ல அது.
தமது சொந்த வளர்ச்சிக்குத் தாமே பொறுப்பு ஏற்கும் தகுதியை அவர்களுக்கு  அளிப்பதுதான் நீதி.
நம்மை யாராவது பராமரித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எவரும் விரும்புவதில்லை.
தானே தன் வளர்ச்சி அல்லது முன்னேற்றத்திற்காகத் திட்டமிடுவது, அதைக் கட்டியமைப்பது, அல்லது ஒன்றை உருவாக்குவது.
இதில் கிடைக்கும் திருப்தி, பலனை மட்டும் அனுபவி என்றும் பிறர் தரும் வசதியில் கிடைக்காது.
இன்று பொருள்களின் மறுபங்கீடு என்பது அடிக்கடி நடைபெறுகிறது. காரணம் ஏழைகள் ஒன்றுபடத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் ஆற்றலை உணரத் தொடங்கி விட்டார்கள்.
எனினும், மனித ஆற்றலை மறுபங்கீடு செய்யாமல், பொருள்களை மறுபங்கீடு செய்வது சரியானதல்ல.இதற்கு பித்ருத்வம் என்று பெயர்.
தந்தை நிலையில் நின்று, கொடுக்கிறவன் ஒன்றைக் கொடுப்பது. மீதிபேர் கைகட்டித் தலைகுனிந்து கொடுப்பதை வாங்கிக்கொள்வது, இதுதான் பித்ருத்வம்.
கிராம மக்களிடையே ஓர் இயலாமை உணர்வு காணப்படுகிறது. தாங்கள் சக்தியற்றவர்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள். அது நிஜமல்ல. தங்கள் சொந்த பலமும், உரிமைகளும் அவர்களுக்குத் தெரியாது.
அவர்களுக்கு எஜமானர்கள் என்று எவரும் இல்லை. அவர்களே தமது சொந்த எஜமானர்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்தால் தங்கள் சொந்தப் பிரச்சனைகளுக்குத் தாமே தீர்வு காணலாம், நினைத்ததைச் சாதிக்கலாம்.
அவர்களே கேள்வி கேட்கத் தொடங்கினால் தேசியப் பிரச்சனைகளில் ஏன் இந்தச் சிக்கல் என்று புரிந்துக்கொள்வார்கள். மறைந்திருக்கும் தமது சக்தியை அவர்கள் உணர்வார்கள்
ஒற்றுமையுணர்வு 
(ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தல் - பிறரோடு தொடர்புள்ளது)
நம் அனைவருக்கும் உரிமைகளும் உண்டு, கடமைகளும் உண்டு. நாம் இயல்பாகவே சமூக ஜீவிகள்.
நம் உரிமைகiள்ப் பெறுவதில் நமக்கு  உள்ள பொறுப்பைப் போலவே பிறர் உரிமையில் குறுக்கிடாத பொறுப்பும் நமக்கு உண்டு.
மனித ஒற்றுமை ஒன்றையே கோருகிறது. நீதிக்காகப் போராடு. அநீதிக்குப் பலியானோர் பசியோடு இருந்தாலும், வேலையின்றி இருந்தாலும், சிறையில் இருந்தாலும், அவர்கள் தோளோடு தோள் நின்று, பணியாற்று. அதுதான் ஒற்றுமையுணர்வு!
ஒற்றுமையுணர்விற்கு ஒரே நோக்கம்தான் உண்டு. முதலில் அவர்களைப் பலியாடு ஆக்கும் அரசியல் பொருளாதாரப் பண்பாட்டு அமைப்புக்களையும், நிறுவனங்களையும் மாற்றியமைக்க வேண்டும்.
அதற்காக அனைவரையும்  ஒன்றுசேர்க்க வேண்டும். மனிதக் குடும்பத்தில் நாமும் ஒருவர். இந்த உணர்வு வளருமானால் அநீதிக்குப் பலியாகும் அநேகரோடு நாம் நம்மை இனங்காண முடியும்.
நம்மில் யார் உண்மையில் ஏழை இல்லையோ, அவர்கள் மிகவும் எளிமையான வாழ்விற்குத் தம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டால், ஏழையின்துயர் என்னவென்று நமக்குப் புரியும்.
இதற்கு அர்த்தம், வெறும் ஏழை போன்று நாம் நடிப்பதில்லை.
ஏழைகளின் வியர்வையால் நமக்குக் கிடைத்துள்ள சலுகைகளில் பலவற்றை உண்மையிலேயே இழக்கச் சித்தமாக இருப்பதே ஆகும்.
இன்னொன்று. ஏழைகளுக்காகப் போராடுவது என்பதற்கு அர்த்தம் அவர்களை ஏழைகளாகவே நீடிக்கச் செய்வதோ, அவர்களுக்குப் பக்கத்தில் தொடர்ந்து நின்று கைதூக்கிக் கொண்டிருப்பதோ அல்ல.
அது அவர்களைச் சிறுமைப்படுத்துவதாகும். தமது வடிவிலேயே நம்மைப் படைத்த கடவுள் வழங்கிய மனிதக் கண்ணியத்திற்கு அது பொருந்தாது.
அறஞ்செய விரும்பு என்கிறார்கள். பலர் அப்படியே ஏராளமாகத் தான தர்மம் செய்கிறார்கள். யோசித்தால் இதுகாறும் நடந்த தர்மப் பணிகள்எத்தகையவை? தேக்கநிலையிலும், வெறும் தற்காப்பாகவும் அவை இருந்து வருகின்றன. அவை நிறுவனங்களோடு மட்டுமே பிணைந்துள்ளன.
ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு நாம் சிகிச்சை அளிக்கிறோம். அதேசமயம் சிகிச்சைக்குப் பிறகு அவர்களை மீண்டும் சுகாதாரமற்றச் சூழ்நிலைக்கே திருப்பி அனுப்புகிறோம். அங்கே தொற்றும் நோய்கள் மீண்டும் அவர்களை அடித்து வீழ்த்துகின்றன. செய்த சிகிச்சையால், போராட்டம் என்ன பயன்? நோய் முற்றிலும் நீங்க ஒரு திட்டமிட்ட போராட்டம் நமக்கு அவசியம் தனிநபர்களுக்கு மட்டும் அல்ல. கிராமங்கள் முழுவதற்குமே நாம் சிகிச்சை அளிக்கவேண்டும்.
நோயின் அறிகுறிகளை மட்டுமல்ல அதன் காரணங்களையும் நாம் எதிர்த்துப் போராடவேண்டும்.

மருந்துகளுக்காகச் செலவிடப்பட்ட பணம் ஒரு நோயாளியைச் சிறிது காலம் குணப்படுத்தலாம். பாதுகாப்பான குடிநீருக்காக அதே பணம் செலவிடப்படுமேயானால், சமுதாயம் முழுவதையுமே நோயிலிருந்து பாதுகாக்கலாம்.      - வால்பெர்ட் புல்மான்

 நீதியின் அஸ்திவாரங்கள்
சமூக நீதிக்காகப் போராடுவதில் ஈடுபட்டுள்ள பலர் முன்னே பின்வரும் கேள்விகள் எழுகின்றன.
*நான் மட்டும் ஏன் நீதியாக நடந்துகொள்ள வேண்டும்.?
*எல்லோருக்கும் நியாயமான வாய்ப்பு கிட்டக்கூடிய ஒரு சமுதாயத்தை நான் ஏன் தோற்றுவிக்க முயலவேண்டும்?
*வறுமையில் வாடும் ஒருவருக்கு உதவிபுரிய எனக்கு என்ன தலையெழுத்து? மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு நான் எப்படிப் பொறுப்பு?
*பிறர் படுகின்ற பாடுகளைப் பற்றித் துளிகூடக் கவலைப்படாமல் நிம்மதியாக லட்சோபலட்சம் பேர் வாழ்கிறார்களே?
*ஒரு சமுதாயம் எந்த அளவுக்குச் சுயநலமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிக வளர்ச்சி பெறுகிறது?
இந்தக் கேள்விகளுக்கு எளிதில் பதில் கூற முடியாது.
எனினும், இவற்றுக்குப் பொதுவான பதில்களை நாம் வரிசைப்படுத்தலாம்.
இவற்றிற்கு பதில் தரும் ஸ்தாபனங்கள் பல. அதில் தலைமைப் பொறுப்பேற்று நிற்பது மதம். மதம் எனும்போது எல்லா மதங்களும் இதில் அடங்கும்.
மதம்
சிலர் தமது கடவுள் நம்பிக்கை, நீதிக்காகத்தான் ஆற்றும் பணி இவற்றிடையே ஒரு நெருக்கமான உறவைக் காண்கின்றனர்.
நீதியாக இருப்பதும் நீதிக்காகப் போராடுவதும் இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவதே என்று அவர்கள் கருதுகின்றனர்.
பொதுப்படையான அளவில் ஒழுக்கத்திற்கும் மதத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதியானது. நீதிக்கும் மதத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்போ தனிச்சிறப்பானது. இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
மக்களின் சொந்த நடத்தையிலும், சமூக நடத்தையிலும் மத நம்பிக்கை  களுக்கு  ஒரு செல்வாக்கு உண்டு.
உலகில் நீதி நிலவுவதற்கு மதங்கள்சந்தேகமிலலாமல் தொண்டு புரிந்துள்ளன. 
எனினும், ஒரு கேள்வி எழுகிறது. மத நம்பிக்கை என்பது நீதியின் அஸ்திவார மாகுமா? இதற்கான பதில் தெள்ளத் தெளிவானது.
மதங்களில் நம்பிக்கையே இல்லாதவர்கள் அநேகர். வேறு பலர் மதங்களை கொஞ்சம் கூட லட்சியம் செய்வதில்லை.
சமுதாய நடத்தையின் அடிப்படையில் பார்த்தால் நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு ஏதும் இல்லை. நம்பிக்கை உள்ளவர்களிடையும் நீதி உள்ளவர்கள், நீதி இல்லாதவர்கள் உண்டு. நம்பாதவர் மத்தியிலும் அப்படியே.
அது மட்டுமன்றி, இன்று முக்கியச் செல்வாக்குள்ள மதங்களைக் கவனித்தால், அவை பழங்கால நம்பிக்கைகளோடும், சடங்குகளோடும் மட்டுமே கட்டுண்டிருக்கின்றன. அவை நீதியின் பொருட்டு உண்மையாகப் போராட முடியாத விதத்தில் தம் சொந்த மத அனுஷ்டானங்களோடு கட்டுண்டிருக்கின்றன.
மதங்களுக்கு இருக்கும் ஆற்றல் மிகப்பெரியது. எனினும், நமது மதச் சார்பற்ற உலகில் மதங்களின் மீதான ஈடுபாடு கவர்ச்சியை தற்போது இழந்துவிட்டது. அதற்கு அவசியமும் குறைந்துவிட்டது.

No comments:

Post a Comment