Monday 28 January 2013

சட்டம்,நாடு, உபயோகத்துவம்


சட்டம்,நாடு, உபயோகத்துவம்
சென்ற பதிவில் நீதியின் அஸ்திவாரம் பற்றி ஒரு பார்வையைக்கண்டோம் 
இனி பிற பார்வைகளைக் காண்போம் 

சட்டம்
சிலர் சட்டம்தான் நீதியின் அஸ்திவாரம் என்கிறார்கள். நீதி என்பதே சட்ட நடவடிக்கைதான் என்று சில சமயம் கூறப்படுகிறது.
சில சமயம் சட்ட நடவடிக்கை இயங்கத் துணையாக நிற்கும் கருவியாக நீதி வர்ணிக்கப்படுகிறது.
உண்மையில் நீதி என்பது சட்டங்களோடு சம்பந்தப்படாதது. அவற்றின் அமலாக்கத்தோடு மட்டுமே சம்பந்தப்படுவது என்றும் கூறப்படுகிறது.
சட்டம் என்பது முடிவான அலகாக மட்டும் இருந்து வருகிறது.
ஆனால், இந்த வாதத்தை ஏற்க இயலாது. ஏனெனில், நாம் ஏற்கெனவே அறிந்தபடி நீதி எல்லாக் காலத்துக்கும் பொருந்துவது. இது சட்டத்தைக் காட்டிலும் அடிப்படையான கருத்து.
நீதி என்பது ஓர் ஒழுக்கக் கட்டுப்பாடு, சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு.
எல்லா சமூக ஏற்பாடுகளுக்கும் முடிவான நியாயத்தை வழங்குவது ஒழுக்கம்தான்.
ஒழுக்க விதிகளோடு எந்த அளவு தொடர்புள்ளவையாக இருக்கின்றதோ அதுவரைதான் சமூக ஏற்பாடுகள் அல்லது ஒரு நிறுவனம் நீடித்திருக்க முடியும்.
நீதி என்பதுதான் சமுதாயத்தின் உச்சப் பண்பு, மீதி எல்லாப் பண்புகளும் அதைச் சுற்றிச் சூழ்ந்திருப்பவைதான். சட்டம் என்பது நீதியின் சேவகனே!
சட்டத்தின் நோக்கம் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதுபோன்ற தெளிவான சூழ்நிலைகள் ஏற்படும்போது நீதியை வடிவமைத்துத் தருவது மட்டுமே!
சட்டங்கள் நியாயமாகவும் இருக்கலாம், அநியாயமாகவும் இருக்கலாம், அது நீதியின் லட்சம் எதுவென்று அவை தீர்மானிக்கும் தீர்மானத்தின் அடிப்படையைச் சார்ந்தது.
நீதியைத்தான் சட்டம் சார்ந்திருக்கிறது. சட்டத்தை நீதி சார்ந்திருக்கவில்லை.
இதனால் சட்டம் நீதியின் அஸ்திவாரமாகச் செயலாற்ற இயலாது என்றே முடிவு செய்யவேண்டியுள்ளது.

நாடு
சில புகழ்பெற்ற சிந்தனையாளர்கள், `நாடே ஒழுக்கத்தின் அஸ்திவாரம். அதனால் நீதிக்கும் அதுவே அஸ்திவாரம்' என்று கூறுகின்றனர்.
ஜெர்மன் தத்துவ அறிஞர் ஹெகெல், `சமூக வாழ்வின் எல்லா அம்சங்களிலும் அரசே முழு அதிகாரம் உடையது' என்று வாதாடுகிறார்.
`ஒழுக்கம், நியாயம், நீதி உள்ளிட்ட பிற பண்புநெறிகள் அனைத்திற்கும் நடே ஒட்டுமொத்தப் பிரதிநிதி' என்கிறார்.
அரசுக்கும் சட்டங்களுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. சட்டங்கள் நாட்டின் உள்ளுணர்வைப் பிரதிபலிக்கின்றன என்பது அவர் கருத்து. எனவே, ஒருவன் நியாய உணர்வோடு இருக்கவேண்டுமானால் நாட்டின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து விடவேண்டும்.
அவ்வாறு கீழ்ப்படிவதின் மூலம் நாம் வேறு யாருக்கோ கீழ்ப்படியவில்லை. நமக்கு நாமேதான் கீழ்ப்படிந்து கொள்கிறோம். ஏனெனில் நமது எண்ணமும், சட்டங்களும் உண்மையில் மாறானவை அல்ல.
இந்தச் சிந்தனைப் போக்கில் நாட்டிற்கு என்று தனியே ஓர் எண்ணம், ஒரு வாழ்க்கை இருப்பதுபோன்ற உருவகப்படுத்தப்படுகிறது.
தேசம்தான் முழுமையானது, அதுவே லட்சியம். தனி நபர்கள் தேச வளர்ச்சிக்கு உதவும் வெறும் கருவிகள். ஒவ்வொன்றையும் தேச நலன் என்ற அடிப்படையில்தான் மதிப்பிடவேண்டும்.
மனித உரிமைகள், அவர்களுக்குள்ள பிற சுதந்திரங்கள் எல்லாம் நாட்டின் எண்ணத்திற்கு இசைய, அதற்கு ஒத்துப்போனால் மட்டுமே சாத்தியமானவை.
தேசிய உணர்வோடு செயல்படுவதே நீதி என்று கருதப்படும் நாட்டின் கொள்கைக்கு, நிபந்தனையின்றிக் கீழ்ப்படிகிறவர்கள்தான் நியாயமானவர்கள் ஆவர். எவ்வளவு உயர்ந்தவர்களாயினும் கீழ்ப்படியாதவர்கள் அநியாயக்காரர்கள்.
இந்த வகைக் கண்ணோட்டம் தவறானது என்பது தெளிவு. நீதிதான் நாட்டின் செயல்களை நெறிப்படுத்தவேண்டுமே ஒழிய, நாடு நீதிகளைக் கட்டுப்படுத்தக்கூடாது.
நீதியைப் போற்றுவதும் சமாதானத்தைக் காப்பதும்தான் நாட்டின் முயற்சியாக அமையவேண்டும்.
மேலும், இவ்வகைக் கண்ணோட்டம் அபாயகரமானதும் ஆகும். நாட்டையே பிரதானமாக்கிவிடக்கூடாது.
அந்த மனப்போக்கு வளர்ந்து நாசிசமும், பாசிசமும் ஆகி லட்சக்கணக்கான அப்பாவி மக்களுக்குச் செய்த கொடுமைகளை நாம் மறந்துவிட முடியாது.
லத்தீன், அமெரிக்காவில் உள்ள பல நாடுகளில் தேசிய பாதுகாப்பு என்ற வாதம் பெரும் தீங்கை விளைவித்திருக்கிறது.
ஒவ்வொரு நாடும் தன் மக்களுக்குப் பணியாற்றவே அமைந்துள்ளது. தனி நபர்களின் கண்ணியத்தையும் அவர்களது உரிமைகளையும் அது பாதுகாத்தே தீரவேண்டும்.
மக்களின் சுதந்திரங்கள் அடிப்படையானவை. அவற்றை நாட்டு நலனுக்காகத் தியாகம் செய்துவிட இயலாது.

 உபயோகத்துவம்
எல்லா ஒழுக்கத்தரத்திற்கும் அதன் பயன்பாடே முடிவான நிர்ணயம் என்று சிலர் கூறுகின்றனர்.
அதிகமான பேருக்கு எது அதிக மகிழ்ச்சி தருமோ அந்தச் செயல் ஒழுக்கமானது என்ற அளவுகோல் கொண்டது.
செய்யும் செயல்களை நியாயம் அல்லது அநியாயம் மதிப்பிடுவதே அது பொது மகிழ்ச்சிக்கு உதவுகிறதா என்பதைக்கொண்டே இங்கு அமையும்.
இவர்கள் வாதம் என்ன?
லட்சியத்தை அடைவதை வைத்து மட்டுமே செய்யும் செயல்கள் நியாயமா, நியாயமில்லையா என்று மதிக்கவேண்டும் என்று இவர்கள் கூறுகின்றனர்.
லட்சியத்தை அடையும் பாதைகளை தார்மீகக் கண்ணோட்டத்திலோ, சட்டபூர்வக் கண்ணோட்டத்திலோ பார்க்கத் தேவையில்லை.
எவ்வளவு மோசமான பாதையாயினும் பொது மகிழ்ச்சியை வளர்க்குமானால் அது நியாயமானது. அவ்வாறே எவ்வளவு மேன்மையான பாதை எனினும் அது பொது மகிழ்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்குமானால் அது அநீதியானது, ஒழுக்கக் கேடானது.
எனவே, நீதி என்பது சமூகத்திலிருந்தே உருவானது. அது சமூக நன்மையை வளர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. இது இவர்கள் வாதம். இது சரியாகுமா? அல்ல.
நீதியைப் பயன்பாட்டோடு இணைப்பது சரியாகாது. சமூகத்துக்கு எது பயன்படுமோ அதையே உயர்ந்த மதிப்பீடாகக் கொடுப்பது ஒழுக்கபூர்வமாகத் தவறு.
ஒருவர் எவ்வளவு பயன்படுவார் என்பதை வைத்து ஒருவரை மதிப்பிடுவது சரியில்லை.
மக்களிடம் அவர்களுக்கே உரிய மதிப்பீடுகள் உண்டு. அவர்களது சுதந்திரங்களைச் சமூக நன்மைக்குப் பணியச் செய்வது இயலாது.
ஒரு செயலின் ஒழுக்கத்தை முற்றிலும் அது தருகின்ற மகிழ்ச்சியின் அடிப்படையில் தீர்மானிக்க இயலாது.

No comments:

Post a Comment