Sunday 27 January 2013

சமூக நீதியின் இன்றைய பிரச்சனை


சமூக நீதியின் இன்றைய பிரச்சனை

சார்பு நிலை
மக்களுள் சிலர் முற்றிலும் பிறரையே சார்ந்தும், பிறரால் கட்டுப்படுத்தப்பட்டும் உள்ளனர். இதன் விளைவாக அவர்களுக்குச் சுதந்திரம் இல்லை. சுயமாய் முடிவெடுக்கும் உரிமை இல்லை.
ஒதுக்கப்படுதல்
பொதுவாழ்வில் முழுமையாகப் பங்கேற்கும் உரிமை சிலருக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் வாய்ப்பே அவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் சுரண்டப்படுகிறார்கள்.
வஞ்சிக்கப்படுதல்
சிலர் கடும் வறுமையால் வாடுகின்றனர். பணக்காரர்கள் தங்கள் தேவைக்குமேல் ஏராளமான செல்வம் வைத்திருக்கின்றனர். இதன் விளைவுதான் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் முடியாத வறுமை.
அலட்சியம்
பணக்காரர்கள் பெரும்பாலும் ஏழைகளின் பரிதவிப்பைக் குறித்து அலட்சியமாகவே உள்ளனர். ஈவிரக்கமற்ற இந்தச் சூழலில் சமூக நீதி என்பது பிரம்மாண்ட சோதனையாகியுள்ளது.
வாய்ப்பூட்டு
சமூக அநீதிகளைக் கண்டித்துப் பேசுவோர் மிரட்டப்படுகிறார்க,. சித்திரவதை செய்யப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள்.  போராடுவோரும் மிகக் குறைந்துவிட்டனர்.
இச்சூழலில் சமூக நீதிக்கு முதல் தேவை என்ன? மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுதான்.
நமது உலகில் ஏன் இவ்வளவு வறுமை உள்ளது? ஏன் கொடூரமான அநீதி நிலவுகிறது? இருபதாம் நூற்றாண்டில் ஏன் ஏராளமானோர் பசியினால் சாகிறார்கள்?
நமது நவீன உலகில் ஏன் லட்சோபலட்சம் மக்கள்நம்பமுடியாத அழுக்கிலும் புழுதியிலும் வசிக்கிறார்கள்?
இது அவர்கள் சோம்பேறிகள் என்பதாலா? அடிப்படையில் மக்கள் சமமானவர்கள் அல்ல என்பதாலா?
வறுமை தவிர்க்க முடியாததா? அதற்குக் காரணம் அவர்கள் தலைவிதியா?
மேற்கூறிய கேள்விகளில் எந்த அளவு உண்மையாவது இருந்துவிட்டுப் போகட்டும். இருப்பினும் சற்றும் மனிதத் தன்மையற்ற வறுமை, நம் சமூகத்தில் நிலவுவதற்குத் தலையாய காரணம் எது? இதைத்தான் நாம் ஆராயப் போகிறோம்.
மிக எளிதாகப் பதில் கூறி விடலாம். இந்தச் சமூகம் அமைந்திருக்கும் முறைதான் எல்லாவற்றுக்கும் தலையாய காரணம்.
வேறுவகையில் சொல்லப்போனால் சமுதாயத்தில் ஒவ்வொருவரோடும் நாம் கொண்டுள்ள தொடர்புகள் மற்றும் மரபுவழி மனப்போக்கு, நமது சமுதாய வாழ்வின் மீது ஆட்சி செலுத்தும் சட்டங்கள் ஆகியவை மிகவும் அநீதியானவை.
இந்தச் சூழ்நிலையை நம்மில் சிலர் தெரிந்து வைத்திருக்கிறோம். பலருக்கு மேலெழுந்தவாரியாகத் தெரியும். பெரும்பாலோருக்கு அது தெரியவே தெரியாது.
சமூக நீதியின் இதய நாடி எதுவெனில், நீதி எதுவென்று எங்கும் அறிவிப்பது, அநீதி எங்கிருந்தாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும் அதைக் கண்டிப்பது.
அநீதியும் வறுமையும் சமூக அமைப்பினால் ஏற்படுவன என்றால் அவற்றை அகற்றும் வழி எது?
முதலில் அவற்றை இனம் காணவேண்டும். அவற்றை மாற்றியமைத்து, நியாயமானவற்றை அங்கே இடம்பெறச் செய்யவேண்டும்.
சமூக நீதி என்பது ஒரு நியாயமான சமூக அமைப்பை நிறுவுவதால்தான் சாத்தியமாகும். அந்த ஒழுங்கான சமூக அமைப்பில்தான் ஒவ்வொரு தனிநபருடைய கண்ணியமும் தூய்மையும் முழுமையாக மதிக்கப்படும்.
சில பேரின் பேராசையை ஒதுக்கிவிட்டு, நம் அனைவரது முன்னணியில் நிற்கும் அந்தச் சமூக அமைப்பு ஒரு புதிய சமுதாயத்திற்கான பார்வையையும் குரலையும் வழங்கும்.
அந்தச் சமூகம்தான் அனைவருக்கும் பெருளாதாரம், சமூகம், அரசியல் மற்றும் பண்பாட்டுச் சூழல்களில் ஒரு முழு மனித வாழ்வை வாழ வாய்ப்பளிக்கும்.
சரி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டும் போதுமா? போதாது. அவர்களைச் செயல்படத் தூண்டவேண்டும். சமூக நீதி, தனிநபர்களுக்கு விடுக்கும் அழைப்பு இதுதான்.
மனித வாழ்வில் சமூகக் கோணங்களைப் பற்றிச் சிந்தியுங்கள். பூமியில் உள்ள பொருள்களின் சமூக நோக்கத்தைக் குறித்துச் சிந்தியுங்கள்
இதன் மூலம் சமூக நீதி உரத்த குரலில் முழங்குவது என்ன?
பொருள்களைவிட மனிதர்களே மிகவும் முக்கியம். தனிநபர்களின் நலன்களைவிட, அனைவரது நலன்களே முதன்மை பெற வேண்டும். உயிர் வாழும் உரிமை சொத்துரிமையைவிட முதலானது.
 அது நமது சமூக மனச்சாட்சியை நோக்கி வேண்டுகோள் விடுக்கிறது. நமது திறமைகள், நமது  உடமைகள் இவை நமது தனியுரிமை  மட்டுமல்ல. இவற்றுக்கு ஒரு சமூக உரிமையும் உண்டு.
அடிப்படையில் ஒவ்வொருவரும் தம் சகோதர, சகோதரிகளைக் காப்பாற்ற வேண்டியவர்களே.
தர்மம் செய்வது அத்தியாவசியம்தான். ஆனால் வறுமையின் பிரச்சனையைத் தீர்க்க அது போதாது. ஏன்?
நீதியின் தேவை மகத்தானது. செய்யப்படும் தர்மமோ சொற்பமானது. மேலும் இது நீதி கோரி எழும் கண்டனக் குரல்களைத் திசை திருப்புவதற்கே பயன்படுகிறது. 
அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்குமாறு சமூக நீதி அரசுகளுக்குக் கோரிக்கை விடுக்கிறது. குறிப்பாக நலிவுற்றவர்களையும் ஒதுக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கக் கோருகிறது.
அனைவருக்கும்  சமவாய்ப்பை வழங்கவேண்டும். குறிப்பாக வறுமையில் வாடுவோருக்கு அதில் முன்னுரிமை வேண்டும்.
சமுதாய முன்னேற்றம் என்பதே சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் சரிசமமான அளவில் வளர்ச்சி பெறுவதுதான். சமூக நீதி அரசுகளுக்கு நினைவூட்டுவதும் இதுவே.
சமூக நீதி என்பது வெறும் தேசியப் பிரச்சனையல்ல. நமது உலக சமுதாயத்தில் தெளிவானதொரு சர்வதேசப் பிரச்சனையாகியுள்ளது.
பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவ முன்வந்தாக வேண்டும். அது ஒரு தார்மீகக் கட்டளை.
ஏராளமான மனிதர்கள் வறுமையில் வாடும்போது, உண்மையில் யாருமே பணக்காரர்களாக இருக்கமுடியாது.
இது மனித குலத்தில் எதிர்காலம் குறித்து எழுந்துள்ள கேள்வியும் கூட. நமது பூமியின் உயிர்வாழ்வு, அதில் நிலவவேண்டிய சமாதானம், இவை சமூக நீதியைச் சார்ந்தே உள்ளன.
நீதி என்பது சமாதானத்தின் புதுப் பெயராகிவிட்டது.
4. நீதியின் உறுப்புகள்
நீதி என்றால் ஒவ்வொருவருக்கும் உரியதைக் கொடுப்பது என்று நாம் அறிந்தோம். இப்போது அடுத்த கேள்விகள் எழுகின்றன.
ஒவ்வொரு நபருக்கும் உரியது எது? ஒவ்வொரு நபருக்கும் பெறும் உரிமையுள்ள பொருள்கள் எவை? எதை எதை அவர் நியாயமாகக் கோரலாம்?
பொதுவாகக் கூறினால் ஒரு நபருக்குத் தனது மனிதக் கண்ணியம் குறையாமல் உயிர் வாழ மிகமிகத் தேவையான அனைத்தையும் பெறுவதற்கு உரிமையுண்டு.
காதலின், ஜேம்ஸ் மக்கினிஸ் என்ற இரு அறிஞர்கள்பின்வரும் விதத்தில் ஒரு நபர் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை விளக்கி யுள்ளார்கள்.

No comments:

Post a Comment