Monday 28 January 2013

நடைமுறை வாதமும் நியாய உணர்வும்


நடைமுறை வாதமும்  நியாய உணர்வும்

சென்ற பதிவில்  கண்ட கருத்தோட்டங்களுடன்  புதிய சில கருத்தோட்டங்களைக் காண்போம் .அவற்றில் முக்கியமானது நடைமுறைவாதம்.
நடைமுறை வாதம்
`ஒழுக்கம் என்பதை எங்கும் எப்போதும் எல்லோருக்கும் ஒரே விதமாகப் பொருந்துவது என்று பார்க்கக்கூடாது' என்று நடைமுறைவாதிகள் கூறுகின்றனர்.
அது காலத்திற்கேற்ப வளரும், மாறும். எந்தக் காலத்திற்கு எது பொருந்துதோ அதுதான் சரியான ஒழுக்கம்.
சௌகரியமானது, காலத்திற்கு ஏற்றது இவைதான் நீதியின் அஸ்திவாரம் என்கிறார்கள் இவர்கள்.
ஒரு தனி நபரோ, நாடோ செய்யும் செயல்கள் சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றுகின்றனவா? அதனால் மனித உயிர்களின் துன்பம் குறைகின்றதா? ஆம் என்றால்  அவைதான் நியாயமானவை.
நீதி, அநீதி என்பது எல்லாம் ஒரு சமுதாயம் தீர்மானிப்பதுதான். ஒரு காலத்தில் ஒரு சமுதாயத்திற்கு நியாயமாகத் தோன்றுகிறது  அதே சமுதாயத்திற்கு மற்றொரு சமயம் நியாயமற்றதாக மாறுகிறது .
நீதியின் அர்த்தங்கள் இடத்திற்கு இடம், காலத்திற்குக் காலம் மாறும். பழைய ஆடைகள் போலவும் கிழிந்தவை போலவும் அவை அகற்றப்படும்.
எனவே, நீதி என்பதே முழுமைபெற்ற லட்சியம் அல்ல. தெளிவான நிர்ணயம் ஆகாது. மிக உயர்ந்த பண்பும் ஆகிவிடாது.
நடைமுறை வாதம் இப்படி வளர்கிறது. இந்த வகையான சிந்தனை நீதியை மிகவும் கொச்சைப்படுத்துவதாகும் . நீதி என்பது பச்சோந்தித் தன்மை கொண்டது அல்ல.அது தொடர்ந்து நிறம் மாற்றிக் கொள்வதில்லை. நீதி என்பது உலகில் என்றென்றும் நின்று நிலவி வரும் ஒரு நிலையான ஒழுங்கைக் குறிப்பிடுகிறது.
உலக மதிப்பீடு என்ற ஒன்று உண்டு. அந்த மதிப்பீடு எந்த அளவு காரிய சாத்தியமானது, எவ்வளவு உபயோகமானது என்ற எல்லைக்கும் அப்பால் தன்னளவில் அது அர்த்தமுடையது.
மனித ஜீவன்கள் என்ற முறையில் எது சௌகரியமானதோ, அதை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டு மற்றதை வேலைக்கு உதவாது என்று தள்ளி வைத்து விடு வதில்லை.
ஒரு போக்கினால்  எவ்வளவு பாதகம் நேர்ந்தாலும் நீதிக்காக நாம் எதிர்நீச்சல் போடுகிறோம்.அதுவே மனித சுபாவத்தின் அடிப்படையாகும். அதைக்கொண்டே எல்லா மதிப்பீடுகளும் உருவாகின்றன.
அவை முற்றிலும் மாறாதவை. உலகு தழுவியதுமான மதிப்பீடுகள் . நிச்சயம் அவற்றுள் நீதியும் ஒன்று.
 நியாய உணர்வே நீதி
ஜான் ரால்ஸ் என்பவரால் முன்வைக்கப்பட்ட கருத்து இது. எல்லா மனித உயிர்களும் சமம் என்ற கொள்கைகளோடு இது தொடங்குகிறது.
எல்லோருக்கும் பேச்சுரிமை உண்டு. ஒழுக்கமும் பகுத்தறிவும் உள்ள ஜீவன்கள் என்ற அடிப்படையில் எது நல்லது, எது நீதி என்று தீர்மானிக்கும் சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு.
ஆனால் அதே சமயம் சமூகத்தில் நிச்சயம் சில ஏற்றத்தாழ்வுகளும் உண்டு. சிலருக்கு அதிகத் திறமைகள் உள்ளன. சிலருக்கு அவை இல்லை.
சிலர் அதிகப் பணம், சொத்துக்கள், அந்தஸ்து, ஆற்றல் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அவற்றுக்கு ஒரே காரணம் அந்தச் சலுகைகளோடு அவர்கள் பிறந்துள்ளனர்.
இந்த ஏற்றத்தாழ்வுகள் இயற்கையான உண்மைகள். எந்தச் சமுதாயத்திலும் எப்போதும் அவை இருந்து வரும். அவற்றை அகற்றவேண்டியது அவசியமில்லை.
இந்த ஏற்றத்தாழ்வுகளை எல்லோருக்கும் உகந்த விதத்தில், குறிப்பாக வசதியற்றவர்களுக்கு ஏற்றவாறு ஒழுங்குபடுத்துவதே நீதியாகும்.
வாய்ப்புகளில்கூட சமத்துவம் தேவை. சமூகத்தில் உள்ள அலுவலகங்களில் நுழையும் அந்தஸ்துகள் அனைவருக்கும் திறந்துவிடப்படவேண்டும். தகுதி ஒன்றை மட்டுமே அதற்காகக் கணக்கில் எடுக்கவேண்டும். இதுவே ஜா ரால்ஸின் கருத்து.
இந்தக் கண்ணோட்டம் கவர்ச்சிகரமாக உள்ளது. ஆனால் இது மக்களின் இயற்கை உரிமைகளை ஒதுக்கிவிட்டு சட்டம் இயற்றுவோரின் சட்டமுறைக்கு ஏற்ப நீதி அமைய வேண்டும் என்கிறது.
நீதி என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கான சட்டத்தின் பொறுப்பாகிறது. சட்டம் இயற்றுவோரின் திறமையில்தான் நீதி அடங்கியுள்ளது.
ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க முடியாதவைதான். ஆனால் சரிப்படுத்தக் கூடியவை. ஏன் அப்படிச் செய்யவேண்டும்? ஏன் ஒருவர் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும்? இந்தக் கேள்விகளையே இவர் பொருட்படுத்த வில்லை.
 மனித மதிப்பீடு
இன்று பெரும்பாலான மக்கள் முழுமனதோடு ஏற்கும் நீதியின் மற்றொரு அஸ்திவாரத்தை இனி காணலாம்.
எல்லா மனிதர்களையும் நாம் நியாயமாக நடத்தவேண்டியது அவசியம். காரணம் ஒவ்வொரு மனித ஜீவனும் ஒரு தனி நபர்.
ஒரு மனிதர் என்ற முறையில் அவருக்கு அழிக்கமுடியாத ஒரு பெருமை உண்டு. எனவே அவர் மரியாதைக்குரியவர். நீதி என்பது ஒவ்வொருவரது பிறப்புரிமை.
மனித மதிப்பீடு என்பதில் தனித்துவம், சுயேச்சை இவை இரண்டும் அடங்கம். எனவே அந்த அடிப்படையில் ஒரு மனிதருக்குரிய மரியாதை என்பது அவருக்குரிய சுதந்திரத்தை மதிப்பதாகும்.
தன் வாழ்வை எப்படி உருவாக்கிக் கொள்வது? எப்படித் தன் மகிழ்ச்சியைத் தேடிச் செல்வது என்று தீர்மானிக்கும் ஆற்றலே சுதந்திரம் என்படும்.
அது சுய தீர்மானத்துக்கு ஒருவர் வரும் ஆற்றலைக் குறிக்கிறது. ஆனால் மனித சுதந்திரம் என்பது முழுமையானதல்ல. அது பிறரைச் சார்ந்தது. அது பொதுநலத்தால் வரையறுக்கப்படுவது.
இந்த மதிப்பீட்டில் தனி நபருக்குரிய சுதந்திரம் முற்றிலும் ஒதுக்கிவிடப்படுவதில்லை. அத்தியாவசியமாகத் தேவையென்றால் ஒழிய முடிவெடுக்கும் உரிமையைச் சிலரிடமே விட்டுவிடக்கூடாது.
தங்கள் சொந்த வாழ்க்கைக்கு முடிந்த அளவு மக்களையே பொறுப்பேற்க அனுமதிக்க வேண்டும்.
பிறரையே மையமாகக்கொள்வது இதன் இரண்டாவது குறிக்கோள். இயற்கையிலேயே நாம் சமூக ஜீவிகள்.
பிறருக்காகவும் பிறரோடும் வாழவே நாம் விதிக்கப்பட்டிருக்கிறோம். தனி நபர் என்ற முறையில் ஒருவர் பெற்றுள்ள அழிக்கமுடியாத மதிப்பு பிறர் ஏற்பவை. எனவே பிறரால் வரையறுக்கப்படுபவை.
எனவே, தனி நபர் வாதம் என்பது ஒழுக்க ரீதியாகப் பார்த்தால் பொறுப்பு வாய்ந்தது. அதாவது ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும் பெருமையானது, நான் பிறருடைய பெருமைகளை மதிக்கிறேனா, அதில் அக்கறை காட்டுகிறனா என்ற கேள்விக்கான பதிலைச் சார்ந்தது.
இது எல்லா மக்களும் அடிப்படையில் சமம் என்ற கொள்கையை நிறுவுகிறது.
தனி நபர்கள் என்ற முறையில் இங்கு எஜமானர்களும் இல்லை; அடிமைகளும் இல்லை;. ஏழைகளும் இல்லை; பணக்காரர்களும் இல்லை; உயர்ந்த சாதியும் இல்லை; தாழ்ந்த சாதியும் இல்லை.
அதே சமயம் சமத்துவம் என்றால் அனைவரும் ஒரே தன்மை உடையவர்கள் என்று பொருளல்ல. இது முற்றிலும் இயலாதது.
நாம் அனைவரும் தனி நபர்கள். நாம் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள்.
சமத்துவம் தனிப்பட்ட வேற்றுமைகளை மதிக்கிறது. அவை பிறப்பினால் தோன்றும் இயற்கையான வேறுபாடுகள். தொழில் மற்றும் ஆர்வங்களால் தோன்றும் சமூக வேறுபாடுகள்; இடம், காலம் ஆகியவற்றில் தோன்றும் கலாச்சார வேறுபாடுகள்; மதிப்புகள், விருப்பங்களினால் தோன்றும் மனவியல் வேறுபாடுகள்என்று வேறுபடும்.
ஆனால், அவை ஒருவரது செயல்பாடுகளில் வெளிப்படுபவை, இரண்டாம் பட்சமானவை. பிறப்பினால் நாம் அனைவரும் சமமானவர்களே.
எல்லா மக்களும் அடிப்படையில் சமம் என்ற கொள்கைக்குப் பல அர்த்தங்கள் உண்டு.
முதலாவதாக, மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களானாலும், எம்மொழியைப் பேசினாலும், எந்தக் கருத்தை வெளியிட்டாலும், எந்த நம்பிக்கை வைத்திருந்தாலும் அவர்கள் எந்த இடத்திலும் எப்போதும் சமமானவர்களே.
மக்கள் பிறரோடு கொள்ளும் உறவுகளில் இதை உணர்ந்து மதித்து நடக்கவேண்டும்.
இரண்டாவதாக, வாய்ப்புகளில் சமத்துவம் கொடுக்கவேண்டும். ஒருவருக்கு ஒருவர் இடையே உள்ள வேறுபாடுகளை இது மறக்கவில்லை. ஆனால் மக்கள் தங்களை வாழ்வித்துக் கொள்வதற்கான உரிமையை இது வலியுறுத்துகிறது.
சமுதாய அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்களில் தங்கள் திறமைக்கேற்ற அளவு பணியாற்றவும், அவற்றில் பங்கேற்கவும் மக்களுக்குச் சுதந்திரம் வேண்டும்.
மூன்றாவதாக, சமுதாயத்தில் பங்கீட்டுச் சமத்துவம் வேண்டும். சமூகத்தின் செல்வ வளங்களிலும், கிடைக்கும் சேவைகளிலும் எல்லோருக்கும் சமமான பங்கீடு இருக்கவேண்டும்.
ஊனமுற்றோர், வசதி குறைவானோர் இவர்களுக்கு முன்னுரிமை உண்டு.
குறிப்பாக ஏழை, பணக்காரர் இடையே உள்ள வேற்றுமை ஏற்கமுடியாத அளவு அதிகரித்திருந்தால் அப்போது இதற்குச் சிறப்புக் கவனம் வேண்டும்.
இறுதியாக சமத்துவம் என்பது சலுகைகள் மட்டுமல்ல, பொறுப்புகளும் கூட. ஒவ்வொருவரும் தமது திறமைக்கு ஏற்ற விதத்தில் பொது நன்மைக்குப் பாடுபடுவது அவரது தார்மீகக் கடமையாகிறது.

No comments:

Post a Comment