Monday 28 January 2013

சுதந்திரக் கொள்கை,சோஷலிச சிந்தனை,மூன்றாவது உலகச் சிந்தனை


சுதந்திரக் கொள்கை,சோஷலிச சிந்தனை,மூன்றாவது உலகச் சிந்தனை
சுதந்திரக் கொள்கை
சுதந்திரக் கொள்கை உருவானது மேற்கித்திய நாடுகளில்தான். அது படிப்படியாகப் பல கட்ட வளர்ச்சி பெற்றது.
பண்டைய ஐரோப்பாவிலும், இடைக்கால ஐரோப்பாவிலும் நீதியும் உரிமைகளும் சில விசேஷப் பிரிவினருக்கு மட்டுமே என்று ஒதுக்கப்பட்டிருந்தன.
நிலப் பிரபுக்கள்,  குறுநில மன்னர்கள், அடிமைகளை வைத்திருந்த சுதந்திரக் குடிமக்கள் இவர்கள்தான் நீதியும் உரிமைகளும் கோரக் தகுதி உள்ளவர்கள் என்று மதிக்கப்பட்டனர்.
சாதாரணப் பொதுமக்களுக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது. அவர்கள் தங்கள் எஜமானர்களின் விருப்பு வெறுப்பிற்கு அடிபணிந்து, சார்ந்து வாழ்பவர்களாகவே இருந்தனர்.
தனி நபர் சுதந்திரத்தை ஏற்றுக்கொண்ட முதலாவது சட்ட விதிகள் லியான் அரசின் மன்னன் ஒன்பதாவது அல்போன்ஸாவின் காலத்தில்தான் தோன்றியது.
பிரபுக்கள் சபையில் இளவரசர்களுக்கும் நிலப் பிரபுக்களுக்கும் இடையே ஏற்பட்ட சமரச ஒப்பந்தம்தான் அது.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஒழுங்கான நீதி விசாரணை நடத்தவேண்டும். ஒருவரது உயிர், மானம், வீடு, சொத்து இவற்றைப் பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இவை உள்ளிட்ட வரிசையான உரிமைகள் சட்ட விதிகளாயின.
இத்தகைய ஒப்பந்தங்களில் மிகவும் புகழ் வாய்ந்தது, `மாக்ன கார்டா' என்று அழைக்கப்பட்ட `மகா சாசனம்'தான்.
இது 1215இல் இங்கிலாந்தில் மன்னர் ஜான், தம் நிலப் பிரபுக்களின் நிர்ப்பந்தத்தால் வழங்கிய ஒப்பந்த உரிமை.
உரிமைகள், சுதந்திரங்கள் இப்படி எல்லாவற்றையும் உறுதிசெய்யும் நோக்கத்தினால் அது தோன்றவில்லை. என்றாலும் தனி நபர் சுதந்திரம் என்ற கருத்திற்கு அதுவே முதல் வடிவம் தந்தது. அடுத்த பல நூற்றாண்டுகளுக்குத் தனி நபர் சுதந்திரத்தின் சின்னமாக அதுவே விளங்கியது.
மகா சாசனத்தின் 39வது பிரிவு, எந்தச் சுதந்திர மனிதனும் அவனது சமகால மக்களின் சட்டபூர்வமான தீர்ப்பு மற்றும் நாட்டின் சட்டத்தினால் தவிர, வேறு எவராலும் சிறையில் அடைக்கப்படவோ, நாடு கடத்தப்படவோ, எந்த வகையிலும் அழிக்கப்படவோ கூடாது என்று அறிவிக்கிறது.
மனித உரிமைகளின் வரலாற்றில் ஒரு புதிய கட்டம் 17வது நூற்றாண்டில்தான் தொடங்கிற்று. தாமஸ் ஹாப்பென், ஜான் லாக், ழீன் ழக்கே ரூஸ்ஸோ முதலிய தத்துவ அறிஞர்களும் அரசியல்வாதிகளும்தான் அதைத் தோற்றுவித்தனர்.
எல்லா வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கும் மனித உரிமைகள் உண்டு என்று அவர்கள் நிலைநாட்டினர்.
அதன் பின்தான் தனி நபருக்கும், மனித உரிமைகளுக்கும் இடையே ஒரு புதிய பார்வை எழுந்தது.
சுதந்திரத்திற்கான உரிமை, மனச்சாட்சி சுதந்திரம். பேச்சுரிமை முதலிய உரிமைகள் வெள்ளோட்டம் விடப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில்தான் முக்கிய விளைவுகள் குறித்த பல பிரகடனங்கள் தோன்றின.
1689இல் ஆங்கிலேய உரிமை மசோதா அமலுக்கு வந்தது. இது சுதந்திரமானதும் அடிக்கடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டியதுமான பாராளுமன்றத்தின் சட்ட ஆட்சியை வலிபுறுத்தியது.
  1776இல் சுதந்திரத்திற்கான அமெரிக்கப் பிரகடனம் மனிதனின் அடிப்படை உரிமைகளை வகுத்தது. இதில் சுயாட்சியும் அடங்கும்.
மாறுபட முடியாத சில உண்மைகள்
எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டவர்கள்
இறைவனால் அவர்களுக்குச் சில நீக்கமுடியாத உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றில் வாழ்க்கை, சுதந்திரம், மகிழ்ச்சியைத் தேடுதல் ஆகியன அடங்கும்.
இந்த உரிமைகளைப் பாதுகாக்கவே ஆளப்படுவோரின் இசைவின் பேரில் நியாயமான அதிகாரம் பெற்று அரசாங்கங்கள் அமைகின்றன.
1789இல் மனிதனின் உரிமைகள் குறித்து பிரான்ஸில் வெளியான பிரகடனம் மனிதனின் இயற்கையான, பிரிக்க முடியாத புனித உரிமைகள் எனச் சிலவற்றை வகுத்தது.
அவை சுதந்திரம், சொத்துரிமை, பாதுகாப்பு, அடக்குமுறைக்கு எதிர்ப்பு என்பனவாகும்.
 சோஷலிச சிந்தனை
இந்தச் சிந்தனை மரபு, சோஷலிச நாடுகளில்தான் முக்கியமாக உருவாகியது. இது தனி மனிதன் மற்றும் சமுதாயத்தின் சுதந்திரப் பார்வைக்கும் சவால் விட்டது.
இதனால் மனித உரிமைகளைப் புரிந்துகொள்வதில் ஒரு மாபெரும் மாற்றம் தோன்றியது.
சுதந்திரச் சிந்தனை என்பது தனி மனிதர்களையே மையமாகக்கொண்டது. அது அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை வலியுறுத்தியது.
ஆனால், சோஷலிச சிந்தனை தனி நபரின் சுதந்திரத்திற்குப் பதில் எல்லோருடைய சமத்துவத்திலும் கவனம் திருப்பியது.
மக்களின் சமுதாய உரிமைகளோ, பொருளாதார உரிமைகளோ பாதிக்கப்படுமேயானால், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் நிலைநிற்க முடியாது என்ற சோஷலிச சிந்தனை வாதாடியது.
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிகளுக்குத் தனி நபர் சுதந்திரம் பங்கம் விளைவிக்கக்கூடாது, பசித்த வயிறுகளோடு மக்கள் தெரு ஓரங்களில் வசிக்கும்போது தனிநபர் சுதந்திரத்தைப் பற்றிப் பேசி என்ன பயன்?
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு, செய்ய ஒரு வேலை, சுகாதாரத் தேவை, கல்வி முதலிய அடிப்படை யதார்த்தங்களோடு ஒப்பிடுகையில், அந்தச் சுதந்திரம் ஓர் ஆடம்பரம்போல் காணப்படுகிறது.
இவற்றைச் சாதிக்க சமத்துவ சிந்தனைக்கே கவனம் திரும்பவேண்டும். எந்த அரசும் தன் மக்களின் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கைமீது மேலும் அதிகமாக ஆக்கபூர்வமான பங்கு ஏற்கவேண்டும்.
 இதையே சோஷலிச சிந்தனை வலியுறுத்துகிறது.
 மூன்றாவது உலகச் சிந்தனை
சோஷலிச அணி, முதலாளித்துவ அணி என்ற இரு பிரிவுகளிலும் சேராத இந்தியா போன்ற கோஷ்டி சேராத நாடுகளை மூன்றாவது உலகம் என்று அழைக்கிறோம்.
இவை சோஷலிச சிந்தனை வலியுறுத்தும் சமூகப் பொருளாதார உரிமைகளோடு, கலாச்சார உரிமைகளுக்கே முதலிடம் வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அந்நிய ஆதிக்கத்தின் பிடியில்  சிக்கியிருந்து விடுபட்ட இவை, இப்படிக் கோருவதற்கு ஒரு மூலக் காரணம் உண்டு.
ஆட்சி உரிமை மட்டுமே அந்நியர் கையிலிருந்து மாறியது. ஆனால் சமூகப் போக்கிலும், பொருளாதாரத் துறையிலும் அவர்கள் மறைமுகமாகவும் தந்திரமாகவும் தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றனர்.
இந்த மூன்றாம் உலக நாடுகள் சுய வளர்ச்சி, சுய தீர்மானம் இவற்றை மேற்கொள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் ஆற்றல் வழங்கவேண்டும் என்று வாதிடுகின்றன.
எந்த ஒரு நாட்டு மக்களின் மீதும் அந்நிய கலாச்சாரமோ, அதன் வாழ்க்கை முறையோ சுமத்தப்படுவது, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். இவ்வாறே அவை கணக்கிடப்பட வேண்டும். இதுவே மூன்றாம் உலகின் வாதமாகும்.
7.21. ஐ.நா.வின் மனித உரிமைப் பிரகடனம்
1948இல் ஐ.நா. சபை வெளியிட்ட பிரகடனம் இது. நவீன உலக வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையை இது அறிவிக்கிறது.
இது மனித உரிமைகளைப் பற்றி முதலாளித்துவ நாடுகள், சோஷலிச நாடுகள், மூன்றாம்  உலக நாடுகள் ஆகிய யாவும் கூறும் கருத்துக்களையும் இணைக்கும் சமரச முயற்சிதான்.
இருந்தாலும் இது ஒரு புதிய மனித சமுதாயத்திற்கான பார்வையை அளிக்கிறது. எனவே, எல்லாக் காலத்திற்குமான மனித உரிமைச் சாசனம் என இதை அழைக்கலாம்.
இதற்கு முன்பாக 1945இல் ஐ.நா. வெளியிட்ட சாசனம் மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் பாதுகாத்து வளர்ப்பதையே ஜ.நா.வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என அறிவித்தது.
அது அடிப்படை மனித உரிமைகளில் நம்பிக்கை., தனி நபரின் கௌரவம் மற்றும் தகுதியில் நம்பிக்கைகளை வெளியிட்டது.
ஆண்களும் பெண்களும் சமம்; நாடுகள் பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும் சமம் என்று ஏற்றுக்கொண்டது
அதன்பின் 1948 டிசம்பர் 10ஆம் தேதி ஐ.நா.வின் பொதுக்குழுவில் மனித உரிமைகள் பற்றிய பிரகடனம் வெளியிடப்பட்டது. அதற்கு இன்றைய அளவும் உலகம் முழுவதும் விரிவான செல்வாக்கு உள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச அரசியல் அமைப்புகள், சட்டங்கள் மற்றும் குறிப்பிட்ட பலவகை உரிமைகள் குறித்த சம்பிரதாயங்கள் இவற்றில் எல்லாம் மனித உரிமைப் பிரகடனம் வெளியிட்ட கருத்துக்கள் நீக்கமற நிறைந்துள்ளன.
ஒரு புதிய உலகை அமைக்க விரும்புவோர் ஒவ்வொருவருக்கும் இது பயன்படும். இந்த நம்பிக்கையில் அவற்றின் முழு வடிவத்தையும் தொடரந்து தருகிறோம்.

No comments:

Post a Comment