Monday, 28 January 2013

சட்டம்,நாடு, உபயோகத்துவம்


சட்டம்,நாடு, உபயோகத்துவம்
சென்ற பதிவில் நீதியின் அஸ்திவாரம் பற்றி ஒரு பார்வையைக்கண்டோம் 
இனி பிற பார்வைகளைக் காண்போம் 

சட்டம்
சிலர் சட்டம்தான் நீதியின் அஸ்திவாரம் என்கிறார்கள். நீதி என்பதே சட்ட நடவடிக்கைதான் என்று சில சமயம் கூறப்படுகிறது.
சில சமயம் சட்ட நடவடிக்கை இயங்கத் துணையாக நிற்கும் கருவியாக நீதி வர்ணிக்கப்படுகிறது.
உண்மையில் நீதி என்பது சட்டங்களோடு சம்பந்தப்படாதது. அவற்றின் அமலாக்கத்தோடு மட்டுமே சம்பந்தப்படுவது என்றும் கூறப்படுகிறது.
சட்டம் என்பது முடிவான அலகாக மட்டும் இருந்து வருகிறது.
ஆனால், இந்த வாதத்தை ஏற்க இயலாது. ஏனெனில், நாம் ஏற்கெனவே அறிந்தபடி நீதி எல்லாக் காலத்துக்கும் பொருந்துவது. இது சட்டத்தைக் காட்டிலும் அடிப்படையான கருத்து.
நீதி என்பது ஓர் ஒழுக்கக் கட்டுப்பாடு, சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு.
எல்லா சமூக ஏற்பாடுகளுக்கும் முடிவான நியாயத்தை வழங்குவது ஒழுக்கம்தான்.
ஒழுக்க விதிகளோடு எந்த அளவு தொடர்புள்ளவையாக இருக்கின்றதோ அதுவரைதான் சமூக ஏற்பாடுகள் அல்லது ஒரு நிறுவனம் நீடித்திருக்க முடியும்.
நீதி என்பதுதான் சமுதாயத்தின் உச்சப் பண்பு, மீதி எல்லாப் பண்புகளும் அதைச் சுற்றிச் சூழ்ந்திருப்பவைதான். சட்டம் என்பது நீதியின் சேவகனே!
சட்டத்தின் நோக்கம் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதுபோன்ற தெளிவான சூழ்நிலைகள் ஏற்படும்போது நீதியை வடிவமைத்துத் தருவது மட்டுமே!
சட்டங்கள் நியாயமாகவும் இருக்கலாம், அநியாயமாகவும் இருக்கலாம், அது நீதியின் லட்சம் எதுவென்று அவை தீர்மானிக்கும் தீர்மானத்தின் அடிப்படையைச் சார்ந்தது.
நீதியைத்தான் சட்டம் சார்ந்திருக்கிறது. சட்டத்தை நீதி சார்ந்திருக்கவில்லை.
இதனால் சட்டம் நீதியின் அஸ்திவாரமாகச் செயலாற்ற இயலாது என்றே முடிவு செய்யவேண்டியுள்ளது.

நாடு
சில புகழ்பெற்ற சிந்தனையாளர்கள், `நாடே ஒழுக்கத்தின் அஸ்திவாரம். அதனால் நீதிக்கும் அதுவே அஸ்திவாரம்' என்று கூறுகின்றனர்.
ஜெர்மன் தத்துவ அறிஞர் ஹெகெல், `சமூக வாழ்வின் எல்லா அம்சங்களிலும் அரசே முழு அதிகாரம் உடையது' என்று வாதாடுகிறார்.
`ஒழுக்கம், நியாயம், நீதி உள்ளிட்ட பிற பண்புநெறிகள் அனைத்திற்கும் நடே ஒட்டுமொத்தப் பிரதிநிதி' என்கிறார்.
அரசுக்கும் சட்டங்களுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. சட்டங்கள் நாட்டின் உள்ளுணர்வைப் பிரதிபலிக்கின்றன என்பது அவர் கருத்து. எனவே, ஒருவன் நியாய உணர்வோடு இருக்கவேண்டுமானால் நாட்டின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து விடவேண்டும்.
அவ்வாறு கீழ்ப்படிவதின் மூலம் நாம் வேறு யாருக்கோ கீழ்ப்படியவில்லை. நமக்கு நாமேதான் கீழ்ப்படிந்து கொள்கிறோம். ஏனெனில் நமது எண்ணமும், சட்டங்களும் உண்மையில் மாறானவை அல்ல.
இந்தச் சிந்தனைப் போக்கில் நாட்டிற்கு என்று தனியே ஓர் எண்ணம், ஒரு வாழ்க்கை இருப்பதுபோன்ற உருவகப்படுத்தப்படுகிறது.
தேசம்தான் முழுமையானது, அதுவே லட்சியம். தனி நபர்கள் தேச வளர்ச்சிக்கு உதவும் வெறும் கருவிகள். ஒவ்வொன்றையும் தேச நலன் என்ற அடிப்படையில்தான் மதிப்பிடவேண்டும்.
மனித உரிமைகள், அவர்களுக்குள்ள பிற சுதந்திரங்கள் எல்லாம் நாட்டின் எண்ணத்திற்கு இசைய, அதற்கு ஒத்துப்போனால் மட்டுமே சாத்தியமானவை.
தேசிய உணர்வோடு செயல்படுவதே நீதி என்று கருதப்படும் நாட்டின் கொள்கைக்கு, நிபந்தனையின்றிக் கீழ்ப்படிகிறவர்கள்தான் நியாயமானவர்கள் ஆவர். எவ்வளவு உயர்ந்தவர்களாயினும் கீழ்ப்படியாதவர்கள் அநியாயக்காரர்கள்.
இந்த வகைக் கண்ணோட்டம் தவறானது என்பது தெளிவு. நீதிதான் நாட்டின் செயல்களை நெறிப்படுத்தவேண்டுமே ஒழிய, நாடு நீதிகளைக் கட்டுப்படுத்தக்கூடாது.
நீதியைப் போற்றுவதும் சமாதானத்தைக் காப்பதும்தான் நாட்டின் முயற்சியாக அமையவேண்டும்.
மேலும், இவ்வகைக் கண்ணோட்டம் அபாயகரமானதும் ஆகும். நாட்டையே பிரதானமாக்கிவிடக்கூடாது.
அந்த மனப்போக்கு வளர்ந்து நாசிசமும், பாசிசமும் ஆகி லட்சக்கணக்கான அப்பாவி மக்களுக்குச் செய்த கொடுமைகளை நாம் மறந்துவிட முடியாது.
லத்தீன், அமெரிக்காவில் உள்ள பல நாடுகளில் தேசிய பாதுகாப்பு என்ற வாதம் பெரும் தீங்கை விளைவித்திருக்கிறது.
ஒவ்வொரு நாடும் தன் மக்களுக்குப் பணியாற்றவே அமைந்துள்ளது. தனி நபர்களின் கண்ணியத்தையும் அவர்களது உரிமைகளையும் அது பாதுகாத்தே தீரவேண்டும்.
மக்களின் சுதந்திரங்கள் அடிப்படையானவை. அவற்றை நாட்டு நலனுக்காகத் தியாகம் செய்துவிட இயலாது.

 உபயோகத்துவம்
எல்லா ஒழுக்கத்தரத்திற்கும் அதன் பயன்பாடே முடிவான நிர்ணயம் என்று சிலர் கூறுகின்றனர்.
அதிகமான பேருக்கு எது அதிக மகிழ்ச்சி தருமோ அந்தச் செயல் ஒழுக்கமானது என்ற அளவுகோல் கொண்டது.
செய்யும் செயல்களை நியாயம் அல்லது அநியாயம் மதிப்பிடுவதே அது பொது மகிழ்ச்சிக்கு உதவுகிறதா என்பதைக்கொண்டே இங்கு அமையும்.
இவர்கள் வாதம் என்ன?
லட்சியத்தை அடைவதை வைத்து மட்டுமே செய்யும் செயல்கள் நியாயமா, நியாயமில்லையா என்று மதிக்கவேண்டும் என்று இவர்கள் கூறுகின்றனர்.
லட்சியத்தை அடையும் பாதைகளை தார்மீகக் கண்ணோட்டத்திலோ, சட்டபூர்வக் கண்ணோட்டத்திலோ பார்க்கத் தேவையில்லை.
எவ்வளவு மோசமான பாதையாயினும் பொது மகிழ்ச்சியை வளர்க்குமானால் அது நியாயமானது. அவ்வாறே எவ்வளவு மேன்மையான பாதை எனினும் அது பொது மகிழ்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்குமானால் அது அநீதியானது, ஒழுக்கக் கேடானது.
எனவே, நீதி என்பது சமூகத்திலிருந்தே உருவானது. அது சமூக நன்மையை வளர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. இது இவர்கள் வாதம். இது சரியாகுமா? அல்ல.
நீதியைப் பயன்பாட்டோடு இணைப்பது சரியாகாது. சமூகத்துக்கு எது பயன்படுமோ அதையே உயர்ந்த மதிப்பீடாகக் கொடுப்பது ஒழுக்கபூர்வமாகத் தவறு.
ஒருவர் எவ்வளவு பயன்படுவார் என்பதை வைத்து ஒருவரை மதிப்பிடுவது சரியில்லை.
மக்களிடம் அவர்களுக்கே உரிய மதிப்பீடுகள் உண்டு. அவர்களது சுதந்திரங்களைச் சமூக நன்மைக்குப் பணியச் செய்வது இயலாது.
ஒரு செயலின் ஒழுக்கத்தை முற்றிலும் அது தருகின்ற மகிழ்ச்சியின் அடிப்படையில் தீர்மானிக்க இயலாது.

நீதிக்கான பல்வகைத் தேவைகள்


பொருளாதாரத் தேவைகள் 
(பாதுகாப்பு, உயிர் வாழ்வது தொடர்பானது)
ஒவ்வொரு மனித ஜீவனுக்கும், எவை இல்லாமல் மனித வாழ்க்கை சாத்தியமில்லையோ, அந்த அடிப்படைப் பொருள்களைப் பெறுவதற்கு முழு உரிமையுண்டு. அவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1) உணவு, உடை, வீடு - தனிப்பட்ட பயனுக்குத் தேவையானவை.
2) உடல் நலம் மற்றும் திறன் வளர்ச்சி - சமுதாயத்தினால் சமுதாய உறுப்பினர் அனைவருக்கும் வழங்கப்பட  வேண்டியவை.
3) வேலை செய்வதற்கான உரிமையும் தேவையும் - இது ஆக்கப்பூர்வமான தகுதியுள்ள உழைப்பை சமூகத்திற்கு வழங்கவும்  ஒரு சிறப்பான வாழ்வு வாழவும் அவசியமானது. பிற தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒரு வழியாகவும், அடையவேண்டிய லட்சியம் என்ற அளவிலும் இந்த வேலை செய்யும் உரிமை இரு வகையில் தேவைப்படுகிறது.
சமூகத் தேவைகள் 
(சுய மதிப்பு தனிச்சிறப்பு தொடர்பானது)
தங்கள் சுயமதிப்பு, தனிச்சிறப்பு, தமது பண்புகள்இவை மதிக்கப்பட்டு மரியாதைச் செய்யப்பட வேண்டும் என்றும் எல்லா மக்களுக்கும் ஓர் உரிமையுண்டு. 
இது இரு அம்சங்களைக் கொண்டது.
1) எவருமே ஒதுக்கப்படுவதற்கில்லை. உடல் ஊனமுற்றோர், மன ஊனமுற்றோர், சிறையில் இருப்போர், பசியால் வாடுவோர் ஆகிய எல்லோருமே கடவுளின் பார்வையில் சமமானவர்களே. எந்த ஒருவரையும் ஒதுக்கி வைப்பதற்கில்லை.
2) நீதி வழங்குவது என்பது அவர்களுக்கு வெறுமனே எதையோ கொடுப்பது மட்டுமல்ல. அவர்கள் வளர்ச்சியடையும் வழிவகை பெறவும் மனிதக் குடும்பத்திற்கு தமக்கே உரிய சிறப்பான வகையில் தமது பணியைச் செய்யவும் உதவுவதே. அதுதான் நீதியின் கடமை.
இங்கே ஓர் உண்மை அடங்கியிருப்பதைக் காணலாம். ஏழைகள், அவர்கள் வெறும் ஏழைகள் என்பதைவிட மேலானவர்கள் என்பதே அது.
ஏழைகளின் எல்லாச் சிறப்பும் அவர்களுடைய வறுமைக்குள்ளேயே முடங்கிவிடாது. பசித்தவர்களும் காசில்லாதவர்களும் பலவகையில் பெருமை உள்ளவர்களாக இருப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.
ஏழைகளைச் சுய முயற்சியோடு வாழ நாம் அனுமதித்தால் அவர்கள் தம் உணவைத் தாமே தேடி உண்பார்கள். 
அரசியல் தேவைகள் 
(சுய தீர்மானம், தம் வாழ்வின்மீது ஒருவருக்குரிய கட்டுப்பாடு தொடர்பானது)
தமது சொந்தத் தலைவிதியைத் தாமே வடிவமைப்பதற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் ஏன் எல்லா மக்களுக்குமே உண்டு.
நமது வாழ்வை வடிவமைக்க அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சக்திகளின் மீது சில அர்த்தமுள்ள கட்டுப்பாடுகளை விதிக்க நமக்கு உரிமையுண்டு.
மனித ஜீவன்கள் என்ற முறையில் பிறர் தானம் கொடுப்பதைப் பேசாமல் வாங்கிக் கொண்டிருக்கவோ, முற்றிலும் பிறரையே சார்ந்திருப்பதற்கோ, பிறரால் அதிகாரம் செய்யப்படவோ நாம் பிறக்கவில்லை.
சமூக நீதியைப் பற்றிப் பேச வரும்போது ஒன்றை நாம் முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
யாரோ ஒருவருடைய தயவினால் கிடைக்கும் வசதிகளைப் பெறுகிறவர்களாக மக்களை மாற்றுவதல்ல அது.
தமது சொந்த வளர்ச்சிக்குத் தாமே பொறுப்பு ஏற்கும் தகுதியை அவர்களுக்கு  அளிப்பதுதான் நீதி.
நம்மை யாராவது பராமரித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எவரும் விரும்புவதில்லை.
தானே தன் வளர்ச்சி அல்லது முன்னேற்றத்திற்காகத் திட்டமிடுவது, அதைக் கட்டியமைப்பது, அல்லது ஒன்றை உருவாக்குவது.
இதில் கிடைக்கும் திருப்தி, பலனை மட்டும் அனுபவி என்றும் பிறர் தரும் வசதியில் கிடைக்காது.
இன்று பொருள்களின் மறுபங்கீடு என்பது அடிக்கடி நடைபெறுகிறது. காரணம் ஏழைகள் ஒன்றுபடத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் ஆற்றலை உணரத் தொடங்கி விட்டார்கள்.
எனினும், மனித ஆற்றலை மறுபங்கீடு செய்யாமல், பொருள்களை மறுபங்கீடு செய்வது சரியானதல்ல.இதற்கு பித்ருத்வம் என்று பெயர்.
தந்தை நிலையில் நின்று, கொடுக்கிறவன் ஒன்றைக் கொடுப்பது. மீதிபேர் கைகட்டித் தலைகுனிந்து கொடுப்பதை வாங்கிக்கொள்வது, இதுதான் பித்ருத்வம்.
கிராம மக்களிடையே ஓர் இயலாமை உணர்வு காணப்படுகிறது. தாங்கள் சக்தியற்றவர்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள். அது நிஜமல்ல. தங்கள் சொந்த பலமும், உரிமைகளும் அவர்களுக்குத் தெரியாது.
அவர்களுக்கு எஜமானர்கள் என்று எவரும் இல்லை. அவர்களே தமது சொந்த எஜமானர்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்தால் தங்கள் சொந்தப் பிரச்சனைகளுக்குத் தாமே தீர்வு காணலாம், நினைத்ததைச் சாதிக்கலாம்.
அவர்களே கேள்வி கேட்கத் தொடங்கினால் தேசியப் பிரச்சனைகளில் ஏன் இந்தச் சிக்கல் என்று புரிந்துக்கொள்வார்கள். மறைந்திருக்கும் தமது சக்தியை அவர்கள் உணர்வார்கள்
ஒற்றுமையுணர்வு 
(ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தல் - பிறரோடு தொடர்புள்ளது)
நம் அனைவருக்கும் உரிமைகளும் உண்டு, கடமைகளும் உண்டு. நாம் இயல்பாகவே சமூக ஜீவிகள்.
நம் உரிமைகiள்ப் பெறுவதில் நமக்கு  உள்ள பொறுப்பைப் போலவே பிறர் உரிமையில் குறுக்கிடாத பொறுப்பும் நமக்கு உண்டு.
மனித ஒற்றுமை ஒன்றையே கோருகிறது. நீதிக்காகப் போராடு. அநீதிக்குப் பலியானோர் பசியோடு இருந்தாலும், வேலையின்றி இருந்தாலும், சிறையில் இருந்தாலும், அவர்கள் தோளோடு தோள் நின்று, பணியாற்று. அதுதான் ஒற்றுமையுணர்வு!
ஒற்றுமையுணர்விற்கு ஒரே நோக்கம்தான் உண்டு. முதலில் அவர்களைப் பலியாடு ஆக்கும் அரசியல் பொருளாதாரப் பண்பாட்டு அமைப்புக்களையும், நிறுவனங்களையும் மாற்றியமைக்க வேண்டும்.
அதற்காக அனைவரையும்  ஒன்றுசேர்க்க வேண்டும். மனிதக் குடும்பத்தில் நாமும் ஒருவர். இந்த உணர்வு வளருமானால் அநீதிக்குப் பலியாகும் அநேகரோடு நாம் நம்மை இனங்காண முடியும்.
நம்மில் யார் உண்மையில் ஏழை இல்லையோ, அவர்கள் மிகவும் எளிமையான வாழ்விற்குத் தம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டால், ஏழையின்துயர் என்னவென்று நமக்குப் புரியும்.
இதற்கு அர்த்தம், வெறும் ஏழை போன்று நாம் நடிப்பதில்லை.
ஏழைகளின் வியர்வையால் நமக்குக் கிடைத்துள்ள சலுகைகளில் பலவற்றை உண்மையிலேயே இழக்கச் சித்தமாக இருப்பதே ஆகும்.
இன்னொன்று. ஏழைகளுக்காகப் போராடுவது என்பதற்கு அர்த்தம் அவர்களை ஏழைகளாகவே நீடிக்கச் செய்வதோ, அவர்களுக்குப் பக்கத்தில் தொடர்ந்து நின்று கைதூக்கிக் கொண்டிருப்பதோ அல்ல.
அது அவர்களைச் சிறுமைப்படுத்துவதாகும். தமது வடிவிலேயே நம்மைப் படைத்த கடவுள் வழங்கிய மனிதக் கண்ணியத்திற்கு அது பொருந்தாது.
அறஞ்செய விரும்பு என்கிறார்கள். பலர் அப்படியே ஏராளமாகத் தான தர்மம் செய்கிறார்கள். யோசித்தால் இதுகாறும் நடந்த தர்மப் பணிகள்எத்தகையவை? தேக்கநிலையிலும், வெறும் தற்காப்பாகவும் அவை இருந்து வருகின்றன. அவை நிறுவனங்களோடு மட்டுமே பிணைந்துள்ளன.
ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு நாம் சிகிச்சை அளிக்கிறோம். அதேசமயம் சிகிச்சைக்குப் பிறகு அவர்களை மீண்டும் சுகாதாரமற்றச் சூழ்நிலைக்கே திருப்பி அனுப்புகிறோம். அங்கே தொற்றும் நோய்கள் மீண்டும் அவர்களை அடித்து வீழ்த்துகின்றன. செய்த சிகிச்சையால், போராட்டம் என்ன பயன்? நோய் முற்றிலும் நீங்க ஒரு திட்டமிட்ட போராட்டம் நமக்கு அவசியம் தனிநபர்களுக்கு மட்டும் அல்ல. கிராமங்கள் முழுவதற்குமே நாம் சிகிச்சை அளிக்கவேண்டும்.
நோயின் அறிகுறிகளை மட்டுமல்ல அதன் காரணங்களையும் நாம் எதிர்த்துப் போராடவேண்டும்.

மருந்துகளுக்காகச் செலவிடப்பட்ட பணம் ஒரு நோயாளியைச் சிறிது காலம் குணப்படுத்தலாம். பாதுகாப்பான குடிநீருக்காக அதே பணம் செலவிடப்படுமேயானால், சமுதாயம் முழுவதையுமே நோயிலிருந்து பாதுகாக்கலாம்.      - வால்பெர்ட் புல்மான்

 நீதியின் அஸ்திவாரங்கள்
சமூக நீதிக்காகப் போராடுவதில் ஈடுபட்டுள்ள பலர் முன்னே பின்வரும் கேள்விகள் எழுகின்றன.
*நான் மட்டும் ஏன் நீதியாக நடந்துகொள்ள வேண்டும்.?
*எல்லோருக்கும் நியாயமான வாய்ப்பு கிட்டக்கூடிய ஒரு சமுதாயத்தை நான் ஏன் தோற்றுவிக்க முயலவேண்டும்?
*வறுமையில் வாடும் ஒருவருக்கு உதவிபுரிய எனக்கு என்ன தலையெழுத்து? மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு நான் எப்படிப் பொறுப்பு?
*பிறர் படுகின்ற பாடுகளைப் பற்றித் துளிகூடக் கவலைப்படாமல் நிம்மதியாக லட்சோபலட்சம் பேர் வாழ்கிறார்களே?
*ஒரு சமுதாயம் எந்த அளவுக்குச் சுயநலமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிக வளர்ச்சி பெறுகிறது?
இந்தக் கேள்விகளுக்கு எளிதில் பதில் கூற முடியாது.
எனினும், இவற்றுக்குப் பொதுவான பதில்களை நாம் வரிசைப்படுத்தலாம்.
இவற்றிற்கு பதில் தரும் ஸ்தாபனங்கள் பல. அதில் தலைமைப் பொறுப்பேற்று நிற்பது மதம். மதம் எனும்போது எல்லா மதங்களும் இதில் அடங்கும்.
மதம்
சிலர் தமது கடவுள் நம்பிக்கை, நீதிக்காகத்தான் ஆற்றும் பணி இவற்றிடையே ஒரு நெருக்கமான உறவைக் காண்கின்றனர்.
நீதியாக இருப்பதும் நீதிக்காகப் போராடுவதும் இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவதே என்று அவர்கள் கருதுகின்றனர்.
பொதுப்படையான அளவில் ஒழுக்கத்திற்கும் மதத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதியானது. நீதிக்கும் மதத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்போ தனிச்சிறப்பானது. இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
மக்களின் சொந்த நடத்தையிலும், சமூக நடத்தையிலும் மத நம்பிக்கை  களுக்கு  ஒரு செல்வாக்கு உண்டு.
உலகில் நீதி நிலவுவதற்கு மதங்கள்சந்தேகமிலலாமல் தொண்டு புரிந்துள்ளன. 
எனினும், ஒரு கேள்வி எழுகிறது. மத நம்பிக்கை என்பது நீதியின் அஸ்திவார மாகுமா? இதற்கான பதில் தெள்ளத் தெளிவானது.
மதங்களில் நம்பிக்கையே இல்லாதவர்கள் அநேகர். வேறு பலர் மதங்களை கொஞ்சம் கூட லட்சியம் செய்வதில்லை.
சமுதாய நடத்தையின் அடிப்படையில் பார்த்தால் நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு ஏதும் இல்லை. நம்பிக்கை உள்ளவர்களிடையும் நீதி உள்ளவர்கள், நீதி இல்லாதவர்கள் உண்டு. நம்பாதவர் மத்தியிலும் அப்படியே.
அது மட்டுமன்றி, இன்று முக்கியச் செல்வாக்குள்ள மதங்களைக் கவனித்தால், அவை பழங்கால நம்பிக்கைகளோடும், சடங்குகளோடும் மட்டுமே கட்டுண்டிருக்கின்றன. அவை நீதியின் பொருட்டு உண்மையாகப் போராட முடியாத விதத்தில் தம் சொந்த மத அனுஷ்டானங்களோடு கட்டுண்டிருக்கின்றன.
மதங்களுக்கு இருக்கும் ஆற்றல் மிகப்பெரியது. எனினும், நமது மதச் சார்பற்ற உலகில் மதங்களின் மீதான ஈடுபாடு கவர்ச்சியை தற்போது இழந்துவிட்டது. அதற்கு அவசியமும் குறைந்துவிட்டது.

Sunday, 27 January 2013

சமூக நீதியின் இன்றைய பிரச்சனை


சமூக நீதியின் இன்றைய பிரச்சனை

சார்பு நிலை
மக்களுள் சிலர் முற்றிலும் பிறரையே சார்ந்தும், பிறரால் கட்டுப்படுத்தப்பட்டும் உள்ளனர். இதன் விளைவாக அவர்களுக்குச் சுதந்திரம் இல்லை. சுயமாய் முடிவெடுக்கும் உரிமை இல்லை.
ஒதுக்கப்படுதல்
பொதுவாழ்வில் முழுமையாகப் பங்கேற்கும் உரிமை சிலருக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் வாய்ப்பே அவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் சுரண்டப்படுகிறார்கள்.
வஞ்சிக்கப்படுதல்
சிலர் கடும் வறுமையால் வாடுகின்றனர். பணக்காரர்கள் தங்கள் தேவைக்குமேல் ஏராளமான செல்வம் வைத்திருக்கின்றனர். இதன் விளைவுதான் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் முடியாத வறுமை.
அலட்சியம்
பணக்காரர்கள் பெரும்பாலும் ஏழைகளின் பரிதவிப்பைக் குறித்து அலட்சியமாகவே உள்ளனர். ஈவிரக்கமற்ற இந்தச் சூழலில் சமூக நீதி என்பது பிரம்மாண்ட சோதனையாகியுள்ளது.
வாய்ப்பூட்டு
சமூக அநீதிகளைக் கண்டித்துப் பேசுவோர் மிரட்டப்படுகிறார்க,. சித்திரவதை செய்யப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள்.  போராடுவோரும் மிகக் குறைந்துவிட்டனர்.
இச்சூழலில் சமூக நீதிக்கு முதல் தேவை என்ன? மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுதான்.
நமது உலகில் ஏன் இவ்வளவு வறுமை உள்ளது? ஏன் கொடூரமான அநீதி நிலவுகிறது? இருபதாம் நூற்றாண்டில் ஏன் ஏராளமானோர் பசியினால் சாகிறார்கள்?
நமது நவீன உலகில் ஏன் லட்சோபலட்சம் மக்கள்நம்பமுடியாத அழுக்கிலும் புழுதியிலும் வசிக்கிறார்கள்?
இது அவர்கள் சோம்பேறிகள் என்பதாலா? அடிப்படையில் மக்கள் சமமானவர்கள் அல்ல என்பதாலா?
வறுமை தவிர்க்க முடியாததா? அதற்குக் காரணம் அவர்கள் தலைவிதியா?
மேற்கூறிய கேள்விகளில் எந்த அளவு உண்மையாவது இருந்துவிட்டுப் போகட்டும். இருப்பினும் சற்றும் மனிதத் தன்மையற்ற வறுமை, நம் சமூகத்தில் நிலவுவதற்குத் தலையாய காரணம் எது? இதைத்தான் நாம் ஆராயப் போகிறோம்.
மிக எளிதாகப் பதில் கூறி விடலாம். இந்தச் சமூகம் அமைந்திருக்கும் முறைதான் எல்லாவற்றுக்கும் தலையாய காரணம்.
வேறுவகையில் சொல்லப்போனால் சமுதாயத்தில் ஒவ்வொருவரோடும் நாம் கொண்டுள்ள தொடர்புகள் மற்றும் மரபுவழி மனப்போக்கு, நமது சமுதாய வாழ்வின் மீது ஆட்சி செலுத்தும் சட்டங்கள் ஆகியவை மிகவும் அநீதியானவை.
இந்தச் சூழ்நிலையை நம்மில் சிலர் தெரிந்து வைத்திருக்கிறோம். பலருக்கு மேலெழுந்தவாரியாகத் தெரியும். பெரும்பாலோருக்கு அது தெரியவே தெரியாது.
சமூக நீதியின் இதய நாடி எதுவெனில், நீதி எதுவென்று எங்கும் அறிவிப்பது, அநீதி எங்கிருந்தாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும் அதைக் கண்டிப்பது.
அநீதியும் வறுமையும் சமூக அமைப்பினால் ஏற்படுவன என்றால் அவற்றை அகற்றும் வழி எது?
முதலில் அவற்றை இனம் காணவேண்டும். அவற்றை மாற்றியமைத்து, நியாயமானவற்றை அங்கே இடம்பெறச் செய்யவேண்டும்.
சமூக நீதி என்பது ஒரு நியாயமான சமூக அமைப்பை நிறுவுவதால்தான் சாத்தியமாகும். அந்த ஒழுங்கான சமூக அமைப்பில்தான் ஒவ்வொரு தனிநபருடைய கண்ணியமும் தூய்மையும் முழுமையாக மதிக்கப்படும்.
சில பேரின் பேராசையை ஒதுக்கிவிட்டு, நம் அனைவரது முன்னணியில் நிற்கும் அந்தச் சமூக அமைப்பு ஒரு புதிய சமுதாயத்திற்கான பார்வையையும் குரலையும் வழங்கும்.
அந்தச் சமூகம்தான் அனைவருக்கும் பெருளாதாரம், சமூகம், அரசியல் மற்றும் பண்பாட்டுச் சூழல்களில் ஒரு முழு மனித வாழ்வை வாழ வாய்ப்பளிக்கும்.
சரி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டும் போதுமா? போதாது. அவர்களைச் செயல்படத் தூண்டவேண்டும். சமூக நீதி, தனிநபர்களுக்கு விடுக்கும் அழைப்பு இதுதான்.
மனித வாழ்வில் சமூகக் கோணங்களைப் பற்றிச் சிந்தியுங்கள். பூமியில் உள்ள பொருள்களின் சமூக நோக்கத்தைக் குறித்துச் சிந்தியுங்கள்
இதன் மூலம் சமூக நீதி உரத்த குரலில் முழங்குவது என்ன?
பொருள்களைவிட மனிதர்களே மிகவும் முக்கியம். தனிநபர்களின் நலன்களைவிட, அனைவரது நலன்களே முதன்மை பெற வேண்டும். உயிர் வாழும் உரிமை சொத்துரிமையைவிட முதலானது.
 அது நமது சமூக மனச்சாட்சியை நோக்கி வேண்டுகோள் விடுக்கிறது. நமது திறமைகள், நமது  உடமைகள் இவை நமது தனியுரிமை  மட்டுமல்ல. இவற்றுக்கு ஒரு சமூக உரிமையும் உண்டு.
அடிப்படையில் ஒவ்வொருவரும் தம் சகோதர, சகோதரிகளைக் காப்பாற்ற வேண்டியவர்களே.
தர்மம் செய்வது அத்தியாவசியம்தான். ஆனால் வறுமையின் பிரச்சனையைத் தீர்க்க அது போதாது. ஏன்?
நீதியின் தேவை மகத்தானது. செய்யப்படும் தர்மமோ சொற்பமானது. மேலும் இது நீதி கோரி எழும் கண்டனக் குரல்களைத் திசை திருப்புவதற்கே பயன்படுகிறது. 
அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்குமாறு சமூக நீதி அரசுகளுக்குக் கோரிக்கை விடுக்கிறது. குறிப்பாக நலிவுற்றவர்களையும் ஒதுக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கக் கோருகிறது.
அனைவருக்கும்  சமவாய்ப்பை வழங்கவேண்டும். குறிப்பாக வறுமையில் வாடுவோருக்கு அதில் முன்னுரிமை வேண்டும்.
சமுதாய முன்னேற்றம் என்பதே சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் சரிசமமான அளவில் வளர்ச்சி பெறுவதுதான். சமூக நீதி அரசுகளுக்கு நினைவூட்டுவதும் இதுவே.
சமூக நீதி என்பது வெறும் தேசியப் பிரச்சனையல்ல. நமது உலக சமுதாயத்தில் தெளிவானதொரு சர்வதேசப் பிரச்சனையாகியுள்ளது.
பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவ முன்வந்தாக வேண்டும். அது ஒரு தார்மீகக் கட்டளை.
ஏராளமான மனிதர்கள் வறுமையில் வாடும்போது, உண்மையில் யாருமே பணக்காரர்களாக இருக்கமுடியாது.
இது மனித குலத்தில் எதிர்காலம் குறித்து எழுந்துள்ள கேள்வியும் கூட. நமது பூமியின் உயிர்வாழ்வு, அதில் நிலவவேண்டிய சமாதானம், இவை சமூக நீதியைச் சார்ந்தே உள்ளன.
நீதி என்பது சமாதானத்தின் புதுப் பெயராகிவிட்டது.
4. நீதியின் உறுப்புகள்
நீதி என்றால் ஒவ்வொருவருக்கும் உரியதைக் கொடுப்பது என்று நாம் அறிந்தோம். இப்போது அடுத்த கேள்விகள் எழுகின்றன.
ஒவ்வொரு நபருக்கும் உரியது எது? ஒவ்வொரு நபருக்கும் பெறும் உரிமையுள்ள பொருள்கள் எவை? எதை எதை அவர் நியாயமாகக் கோரலாம்?
பொதுவாகக் கூறினால் ஒரு நபருக்குத் தனது மனிதக் கண்ணியம் குறையாமல் உயிர் வாழ மிகமிகத் தேவையான அனைத்தையும் பெறுவதற்கு உரிமையுண்டு.
காதலின், ஜேம்ஸ் மக்கினிஸ் என்ற இரு அறிஞர்கள்பின்வரும் விதத்தில் ஒரு நபர் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை விளக்கி யுள்ளார்கள்.

Saturday, 26 January 2013

நீதியின் வகைகள்


நீதியின் வகைகளும் அவற்றின் வழிகாட்டிக் கொள்கைகளும்
நீதியின் வகைகள்                                                  வழிகாட்டிக் கொள்கைகள்

பொதுப்படை நீதி 
                                            பொதுவான மனித உறவுகள் ஒவ்வொரு மனிதனுக்கும் 
                                                                                       சேரவேண்டியதைக் கொடு
பொது நீதி                                            சமுதாயத்தோடு தனிநபருக்கு உள்ள உறவு
                                                                                           பொது      நன்மையை வளர்த்தல்
பங்கீட்டு நீதி                                   தனிநபர்களுக்குச்சமுதாயத்தோடு உள்ள 
                                                                                            உறவு தனிநபரின் நலம்  ஒருவரோடு ஒருவருக்கான நீதி    சமமான தனிநபர்கள் அல்லது 
                                                                          நிறுவனங்களுக்கிடையே உள்ள   
                                                                                உறவு  மதிப்பீட்டில் சமத்துவம்   

சட்ட நீதி
குற்றம் இழைக்கும் தனி நபருக்கும் பொது நன்மையைப் பாதுகாத்தல்,
சமுதாயத்திற்கும் இடையிலுள்ள உறவு குற்றம் இழைத்தவரத் திருத்துதல்
சமூக நீதி
தனிநபர்கள்,  சமுதாயங்கள், நாடுகள் மற்றும்
ஏழைகளுக்கு இடையில்உள்ள உறவு ஒரு நியாயமான சமுதாய அமைப்பு
3. ஒவ்வொருக் கொருவரான நீதி
இந்த நீதி சமமான தனிநபர்களுக்கு இடையிலோ, குழுக்களுக்கு இடையிலோ உள்ள நீதியாகும். வழிவழியாக மக்கள் பெரும்பாலும் இந்த வகை நீதியைத்தான் நீதி என்று கருதுகிறார்கள்.
ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ளும் சூழ்நிலைகளில் இது அமலாகிறது. தனிநபர்கள், குழுக்கள், நிறுவனங்கள் இவர்களிடையே உற்பத்திப் பொருள்கள் ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கைமாறும். அவ்வாறே சேவைகளும் கைமாறும்.
அப்போது இருவரிடையே உள்ள திறமை. பொருள்களின் மதிப்பு இவற்றிற்கு ஏற்றபடி இந்த வகை நீதி நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த உறவு தனிநபர்கள் சார்ந்தது. எனவே ஒருவர் மற்றவர் உரிமைகளை மதிக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
எனவே, ஒரு சக மனிதரின் உரிமைகளை வஞ்சிப்பதோ, அதில் குறுக்கிடுவதோ ஒழுங்கீனமாகும். பொருள்களையோ, சேவைகளையோ ஒருவர் மற்றொருவருக்கு வழங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது ஒருவர் தாமாகவே தம் உரிமையை வேறு ஒருவருக்கு விட்டுக்கொடுத்தபோது, தவிர மற்ற சமயங்களில் முழுமையான முறையில் சமத்துவத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.
உதாரணமாக ஒரு முதலாளி தன் ஊழியருக்கு நியாயமான சம்பளத்தைக் கொடுக்கத் தவறும்போதோ அல்லது  ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் போதோ இந்த நீதி மீறப்படுகிறது.
.4. சட்ட நீதி
மேற்சொன்ன நீதிகள் உரிமைகளைப் பற்றிப் பேசுகின்றன. சட்ட நீதியோ பொறுப்புகளைப் பேசுகிறது.
தனிநபர்கள் என்ற முறையில் நமக்கு வெறும் உரிமைகள் மட்டுமல்ல, கடமைகளும் உண்டு. நம்மில் ஒவ்வொருவரும் நமது செய்கைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அதனால் நேரும் விளைவுகளுக்குச் சம்மதிக்க வேண்டும்.
சமுதாயத்தின் நலனுக்கோ, அதில் வாழும் உறுப்பினர் நலனுக்கோ ஒருவர் தீங்கு விளைவிக்கும்போது என்ன நடக்கிறது? சமுதாயம் அந்த நபரை எப்படி நடத்துகிறது?  நடந்த தீங்கிற்கு எந்த வழிகளில் ஈடு  செய்வது?
இந்தக் கேள்விகளுக்குச் சட்ட நீதி பதிலளிக்க முனைகிறது. நீதிக்கு ஒருவர் தீங்கு விளைவித்தால் சட்ட அதிகாரம் நிர்ணயிக்கிற, உரிய நியாயமான தண்டணையை அவர் ஏற்கவேண்டும். இதுவேநீதியின் குறிக்கோள்.
தண்டனையின் நோக்கம் பொதுநல வளச்சிதான், குற்றம் புரிந்தவர் திருந்துவதுதான்.
ஆனால், மனித ஆளுமையின் அடிப்படையைத் தகர்க்கும் தண்டனைகள் தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில், எவர்மீது தண்டனை விதிக்கப்படுகிறதோ அவரை மட்டுமன்றி, தண்டனை விதிப்பவரையும் அது சிறுமைப்படுத்துகிறது.

5.
சமுதாய ரீதியில் நியாயமாக இல்லாத, இருக்க விரும்பாத ஒரு சமுதாயம் தன் எதிர்காலத்தைத் தானே அபாயத்துக்கு உள்ளாக்கிக் கொள்ளும்.    - போப் ஜான்பால்- 2

இதுவரை நாம் கண்ட நான்கு வகை நீதிகளும் உறுதியான சமுதாயப் பின்னணியில் சமூக உறவுகளை நிலைநிறுத்தப் பயன்படுகின்றன.
ஒரு விஷயத்தை நாம் மிக நன்றாய் அறிவோம். அதாவது கடந்த 200 ஆண்டுகளில் சமுதாயம் தீவிரமான மாற்றத்திற்கு ஆளாகியுள்ளது.
நவீன உலகத்தின் பிறப்பு ஏராளமான அதிசயங்களைத் தோற்றுவித்திருக்கிறது. அதே சமயம் அவற்றோடு கூடவே எண்ணிக்கையற்ற பிரச்சனைகளையும் உருவாக்கி விட்டிருக்கிறது.
நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள், பணக்காரர்களால் ஏழைகள் சுரண்டப்படுவது, வலிமையானவர்கள் வலிமையற்றவர்களைச் சுரண்டுவது,
உலகின் சில பகுதிகளின் அபரிமிதமான வளம் குவிந்திருப்பது, மற்ற பகுதிகளில் நம்பவே முடியாத வறுமை,
சாதி, நிறம், இனம், மதம், வகுப்பு முதலிய அம்சங்களை வைத்து ஏற்பட்ட பிரிவினைகள். இவை எல்லாம் கண்கூடான நிஜங்களாக உள்ளன.
வழிவழியாகப் பயன்படும் வார்த்தைகளுக்குக் கூட நம்மிடையே தென்படும் பிரம்மாண்டமான அநீதிகளை விவரிக்கிற சக்தி இல்லை.
எனவேதான், `சமூக நீதி' என்ற வார்த்தை பிறந்துள்ளது. இது உறுதியற்ற சொல்தான், மாறக்கூடியதுதான். அதன் பொருள் இடத்திற்கு ஏற்ப வேறுபடுவதுதான்.
எனினும், ஒரு சிறப்பான விதத்தில் அது ஏழைகள், சுரண்டப்படுவோர், நசுக்கப்படும் மக்கள் மற்றும் நாடுகளுக்கு உரிய நீதியையே குறிக்கிறது.
ஏழைகள் மற்றும் கேட்க நாதியற்றோரின் பிரச்சனைகள் பரிதாபகரமானவை, அவசரமானவை. எனவேதான் இன்று நீதி என்பதே சமூக நீதிக்கு மாற்றுச் சொல்லாக விளங்குகிறது.





Friday, 25 January 2013

பங்கீட்டு நீதி


 பங்கீட்டு நீதி
இந்தப் பங்கீட்டு நீதி என்ற வார்த்தை ஒரு சமுதாயத்திற்கும் ஒரு தனி நபருக்கும் இடையே நிச்சயம் இருந்தாகவேண்டிய உறவுகளைக் குறிக்கிறது.
இங்கே முக்கிய கவனம் பெறுவது தனி நபர். பொது நீதி, பொது நலன்களைக் குறிக்கும்.
பங்கீட்டு நீதியோ வெறும் தனி நபர்களுக்கு மாத்திரம் பொருந்துவது அல்ல. நாடுகளின் அளவிலும், அந்த நாடுகளின் சமுதாயங்கள் அளவிலும் பொருந்தக்கூடியது.
ஒவ்வாரு தனி நபருக்கும் அவர் மனிதர் என்ற அந்தஸ்தின் விளைவாகச் சமுதாயத்தில் சில மறுக்கமுடியாத உரிமைகள் உண்டு. அந்த உரிமைகளின் அடிப்படையில் அவர் சில கோரிக்கைகளை வைக்கலாம்.
சமுதாயமும் அதன் ஒவ்வோர் உறுப்பினரும், அந்தக் கோரிக்கைகளை ஏற்று மதிக்கவேண்டும். பங்கீட்டு நீதி இதை உறுதிசெய்கிறது.
ஒரு சமுதாயம் கௌரவம், செல்வம் மற்றும் பிற பிரிக்கக்கூடிய உடமைகளைப் பங்கீடு செய்வது குறித்ததே பங்கீட்டு நீதி ஆகும்.
ஒரு சமுதாயத்தில் வாழும் உறுப்பினர்களின் நியாயமான தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் அந்தச் சமுதயாத்தின் வளங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா? இதை முதலில் கவனிப்பதையே இந்த நீதி குறிக்கோளாய்க் கொண்டுள்ளது.
சமுதாய உறுப்பினருக்கு இடையே ஒன்றுக்கொன்று முரணான சொந்த விருப்பங்கள் எழலாம். அதைச் சீரமைத்து சமுதாயத்தில் ஒரு சமநிலையைக் கொண்டுவரவே பங்கீட்டு நீதி பாடுபடுகிறது.
மேலும், ஒரு தேசத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் பங்கேற்கவும், அவற்றில் ஒரு பாத்திரமாய் வகிக்கவும் எல்லாக் குடிமக்களுக்கும் சமமான வாய்ப்பளிக்க வேண்டுமென்று அது வலியுறுத்துகிறது.
ஆனால் ஒன்று, திறமைகள், தகுதிகள், சூழ்நிலைகள் இவற்றில் தனி நபர்கள் அனைவரும் சமமானவர்கள் அல்ல. அப்போது எப்படி ஒரு நியாயமான பங்கீட்டை உறுதி செய்வது?
ஒரு சமுதாயத்தின் சுய வளர்ச்சிக்கும், தன் சக்தியைத் தானே ஒருவர் உணர்வதற்கும் ஒவ்வாருவருக்கும் உள்ள உரிமை போதுமான அளவு உள்ளதா என்பதை எப்படி நிச்சயிப்பது?
ஒரு சமுதாயத்தில் உள்ள செல்வ வளங்களை ஒதுக்குவதற்கு வழிவழியாக நான்கு அடிப்படையிலிருந்து வருகின்றன.
1. வாரிசு அடிப்படை
இதை நாம் தனியுரிமை முறை என்று அழைக்கலாம். இங்கே பங்கீட்டின் அடிப்படை இரண்டு அம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவர் எந்தக் குடும்பத்தில் பிறந்தார்? அவர் ஏழை, பணக்காரன், நடுத்தரம் என்ற சமூகப் பிரிவுகளில் எதைச் சேர்ந்தவர்?
இந்த அடிப்படையில் பங்கீடு நடப்பதற்கு இரண்டு நியாயங்கள் கூறப்படுகின்றன. அது கடவுளின் விருப்பம். அதுதான் உலக இயற்கை நியதி. இந்த வகை பங்கீட்டுப் பிரிவு பலவித பிரச்சனைகளை எழுப்புகின்றன.
முதலாவது எல்லா நபர்களுக்கும் சம மதிப்பு என்ற கொள்கைக்கு இது எதிராகிறது. நமது ஜனநாயக சமுதாயம் இதைப் பொருட்படுத்துவதில்லை.
இது சட்டபூர்வமாக இருந்தாலும் சரி, ஒரு கோரிக்கையாக இருந்தாலும் சரி, இதற்கு இன்று ஆதரவு இல்லை. எடுத்துக்காட்டு சுதந்திர இந்தியாவில் மன்னர் மானிய ஒழிப்பு.
2. தகுதி அடிப்படை
இதைத் `தகுதி உரிமை முறை' எனலாம். இதில் பங்கீட்டின் அடிப்படை தனிநபர்களின் தகுதி அல்லது திறமையை  வைத்து அமைகிறது.
மிகுந்த திறமைசாலிகள், மிச்சிறப்பானவர்களுக்கு அதிக வாய்ப்புகள் பெற உரிமையுண்டு என்று சொல்லப்படுகிறது.
ஏனெனில் அவர்கள் அதிக பயன் அளிப்பார்கள். சமுதாயத்திற்குச் சிறந்த முறையில் பணியாற்றுவார்கள்.
இது எதிர்பார்ப்பு. இதில் உண்னையின் ஓர் அம்சம் மட்டுமே உள்ளது. ஆனால், ஒன்றை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எது பயன்மிக்கதோ அது எப்போதுமே நியாயமானதாக இருக்கவேண்டிய அவசியமில்லை.
மேலும், திறமை வாய்ந்த தனிநபர்களுக்குக் கூட சமுதாயப் பொறுப்புகள் உண்டு. அவர்களிடமிருந்து சமுதாயம், என்ன பயன்களைப் பெறுகிறது என்பதை அலசிப் பார்க்கவேண்டும். ஏனெனில் சிறப்பானது என்பது சமூக நன்னைக்கு நேர் எதிராகவும் அமையலாம்.
3. முன்னுரிமை அடிப்படை
இதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தின் அடிப்படையில் அமைந்த உரிமை என்று அழைக்கலாம். இங்கே பங்கீடு என்பது முன்னுரிமை பெற்ற தனிநபர் அடிப்படையில் நடைபெறுகிறது.
சமுதாயத்திடமிருந்து ஒருவர் என்ன பெறுகிறார் என்பது அவரது ஊக்கம், செயலார்வம் என்ற அடிப்படையில் அமைகிறது. 
ஒவ்வொருவருக்கும் தம் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைக் கட்டாயம் வழங்கவேண்டும். அதில் ஐயமில்லை.
தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் என்பது ஒரு கவர்ச்சிகரமான கருத்துதான். எனினும், சமுதாயத்தின் பொதுநலம் வைக்கும் கோரிக்கைகளை இங்கே நினைவுகூற வேண்டும். அவையே முக்கியம். அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைத் திருத்தவேண்டும்.
4. தேவை அடிப்படை
இந்த முறையைத் தேவைகளின் அடிப்டையில் அமைந்தது என்று நாம் அழைக்கலாம். இங்கே பங்கீட்டின் அடிப்படை, சம்பந்தப்பட்ட தனிநபர்களின் சட்டபூர்வமான, அத்தியாவசியத் தேவைகளைப் பொறுத்து அமைகிறது.
தேவைகள் உள்ள எந்த நபரையும் அவர் இல்லாதவர் என்ற காரணத்திற்காக ஒதுக்கிவிடக்கூடாது. அல்லது அவரைச் சோம்பேறி என்று கண்டிக்கவும் கூடாது. ஏனெனில் தனிநபர்களின் திறமைக் குறைவுக்குச் சோம்பல் மட்டுமே காரணமாகிவிட முடியாது.
அவரது வயது, உடல் நலம், சமூகப் பின்னணி, தம்மைத் தாமே கவனிக்க இயலாமை, இப்படி வேறு பல காரணங்கள் உண்டு.
ஒரு தனி நபருக்கு, அவர் ஒரு மனிதர் என்ற அடிப்படையில் சில அடிப்படை உரிமைகள் உண்டு. அவை கட்டாயம் மதிக்கப்பட வேண்டியவை ஆகும்.
இப்போது இந்த நான்கையும், இவற்றிற்குரிய நியாய ஒழுங்கின் அடிப்படையில் முதலில் எது என்று வரிசைப்படுத்தினால், அவை தேவை, முன்னுரிமை, தகுதி, வாரிசுரிமை என்று அமையும்.

Tuesday, 22 January 2013

நீதி என்பது எது?

நீதி என்பது எது?
நீதி என்பது எது?
அதைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
 நீதியைப் பற்றி பலர் பலவிதமாகக் கூறுகிறார்கள். மக்களும் அதை பல வழிகளில் புரிந்துகொள்கிறார்கள். 
நீதி எந்த அடிப்படைகளின்மீது அமைந்துள்ளது? மனித உரிமைகளோடு அவை எவ்வாறு நெருங்கிய தொடர்புகொண்டது?
நீதி என்பது நீக்குப் போக்குள்ள ஒரு கருத்து. அதை இதுதான் என்று அடித்துச் சொல்வது முடியாத செயல்.
சென்ற கட்டுரையில் கண்ட பல்வேறுவகை நீதியின் பாரம்பரியப் பார்வைகளால்நீதியே ஒவ்வொரு பண்பாட்டிற்கும் மையம் என்று அறிகிறோம்.
ஆனால் நீதியின் அடிப்படை என்பது ஒரே மாதிரியானது, தெளிவானது, சுருக்கமாகச் சொல்லக்கூடியது என்றோ அர்த்தமில்லை.
காலம் மாறிக்கொண்டே வருவது.பல மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டும் அதனால் புதிய மதிப்பீடுகளை உருவாக்கிக் கொண்டும் வருவது.
தேவைகளும் அப்படியே. நீதியைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் முயற்சிகளை அவை பாதிக்கின்றன.
வெவ்வேறு சமுதாய அமைப்புகளில் நீதி வெவ்வேறு விதமாக உள்ளது.
உதாரணமாக நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பில் ஒரு நீதி இருந்தது.முதலாளித்துவ சமுதாய அமைப்பில் ஒரு நீதி இருக்கிறது. கம்யூனிசச்சமுதாய அமைப்பில் ஒரு நீதி இருக்கிறது
சில சமயம் ஒன்றுக்கொன்று நேர்முரணாகக்கூட அமைகின்றது.
எது நீதி என்பதில் சந்தேகங்களும், திரித்துக் கூறுவதும் எப்போதுமே ஏற்படுகின்றன.
பொதுவாக அந்தச் சொல் மனித உறவுகளின் பின்னணியில் பயன்படுவது. தனிமனித உறவுகள் மற்றும் சமூக உறவுகள் இரண்டிற்கும் பொதுவானது.
மக்கள் ஒருவரோடு ஒருவர் எப்படி உறவுகொண்டிருக்கின்றனர் என்பதையே அந்தச் சொல் சுட்டிக்காட்டுகிறது.
ஒரு நபர் பிறரோடு சரியான உறவை வைத்திருக்கிறார் என்பது அவர் பிறரையும் மனிதர்களாக உணர்ந்து அவர்களது உரிமைகளை மதித்து நடக்கிறார் என்கிற சமயத்தில்தான் பொருந்தும்.
வேறு வகையில் சொல்வதென்றால், ஒரு மனிதன் என்ற முறையில் ஒவ்வொருவருக்கும் உரியது எதுவோ அதை அவருக்குக் கொடுப்பவரே, நீதியும் நியாயமும் உள்ள மனிதர் ஆவார்.
 நீதியின் வகைகள்
ஒரு நபருக்கு உரியதைக் கொடு என்ற கருத்தை மேலும் தெளிவாக்குவது அவசியம். காரணம் மக்கள் எவரும் அந்தரத்தில் வசிக்கவில்லை.
அவர்கள் ஒரு சமுதாயத்தில் வசிக்கிறார்கள். உறவுகளின் நெருக்கமான பின்னல் என்ற பின்னணியில் வாழ்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் உரியது வழங்கப்படவேண்டும் என்றால் என்ன அர்த்தம்? அதை அந்தச் சமுதாயப் பின்னணியில்தான் பார்க்கவேண்டும்.
கி.மு. 4ஆம் நூற்றாண்டிலேயே நீதியின் வகைகள் பற்றி அரிஸ்டாட்டில் குறிப்பிட்டுள்ளார். அவரது சிந்தனை நம் காலத்திற்கும் சில மாறுதலுடன் பொருந்தும்.
நீதியைக் குறித்த நமது உணர்வுகளை அவற்றின் பல வகைகளை அறிவதன் மூலமே நாம் தெளிவாக்கிக் கொள்ளவேண்டும்.
அவை பொது நீதி, பங்கிட்டு நீதி, ஒருவருக்கொருவரான நீதி, சட்ட நீதி, சமூக நீதி என்று பிரிக்கலாம்.
1. பொது நீதி
ஒரு தனி நபருக்கும் ஒரு சமுதாயத்திற்கும் மத்தியில் இருக்கவேண்டிய உறவுகளைக் கூறவே, `பொது நீதி' என்ற வார்த்தைப் பயன்படுகிறது.
இங்கே முக்கியத்துவம் பெறுவது சமுதாயம்தான். தனி நபர்களின் நலத்தைவிட சமுதாய நலமே இதில் முதலிடம் வகிக்கிறது.
தனி நபர்கள் சமுதாய நலன்களைச் சீரழித்துவிடக்கூடாது என்ற கண்ணோட்டத்தில் இது சரியே.
தனி நபரின் சுயநலத்தைத் தடுக்கவும், பொது நலன்களைப் பாதுகாக்கவும் பொது நீதி முயல்கிறது. ஒரு சமுதாயச் சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் நியாயமாக அமையவேண்டும் என்பதே இதன் நோக்கம்.
அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிட்டவும், எந்த வகையிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படாமல் தடுக்கவுமே பொது நீதி பாடுபடுகிறது.
பொது நீதி எவ்வாறு வெளிப்படுகிறது? ஒரு நாட்டின் சட்டத்தின் மூலமே. எனவே அதை சட்டங்களோடு தொடர்புடையது என்று கூறலாம்.
ஒரு சமுதாயத்தின் சட்டங்கள், அதை அமலாக்கவேண்டிய அதிகாரமுள்ள அலுவலர்கள், அந்தச் சட்டங்களை மக்கள் மதிக்கும் விதம் என்பன அந்தத் தொடர்பில் அடங்கும்.
சட்டங்கள் என்பவை எவை? மனிதர்களைத் தனி நபர்களாகவும், சமுதாய உறுப்பினர்களாகவும் இருப்பதற்கு வழிகாட்டும் கொள்கைகள்தான் சட்டங்கள்.
சட்டங்கள் இயற்கையாக அமையலாம். மனித இயல்பில் அவை வேரூன்றி இருக்கலாம். அல்லது சமூகத்தினரால் உண்டாக்கவும் படலாம்.
இயற்கைச் சட்டங்கள் பரிபூரணமானவை. வெளித் தூண்டுதலோ, நிர்ணயங்களோ இன்றி அவை தனக்குத்தானே செயல் புரியும். மேலும் அவை உலகு தழுவியவை. எல்லாக் காலங்களிலும் எப்போதும் அவை பொருந்தக்கூடியவை.
இயற்றப்படும் சட்டங்களோ அவற்றுக்கு நேர்மாறானவை. இயற்கைச் சட்டங்களிடமிருந்தே தன் சொல்லுபடி பண்பினை அவை பெறுகின்றன. இயற்கைச் சட்டங்களையே அவை சார்ந்து நிற்கவேண்டியதாகின்றன.
இதற்கு மாறுபட்டால், அவை அநீதியாக மாறுகின்றன. மேலும் அவை சார்புத்தன்மை கொண்டவையாகின்றன. காரணம் வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு இடங்களிலும் உள்ள வேறுபட்ட சமூக அமைப்புகளோடு அவை கட்டுண்டவை.
ஆனாலும் சட்டங்கள் அவசியமானவை. அவையின்றி எந்தச் சமுதாயமும் உயிர் வாழமுடியாது. சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதும், அவற்றைப் பாதுகாப்பதுமே சட்டங்களின் நோக்கம்.
ஆகவே சமுதாய நன்மைக்காகத் தனி நபர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அவசியம் அந்தச் சட்டங்களுக்கு நேரிடுகிறது.
இது ஒரு கடினமான வேலை. அதே சமயம் எச்சரிக்கையோடு செய்யவேண்டிய நுட்பமான பணி. இதற்கு அதிக படைப்பாற்றலும் தொலைநோக்குப் பார்வையும் தேவை.
எந்த ஒரு சமூகமும் தனது குடிமக்களின்மீது ஏராளமான சட்டங்களைச் சுமத்தக்கூடாது. குறிப்பாகச் சொல்வதென்றால், அந்தச் சமுதாய மக்களின் இயல்புக்கே விரோதமான சட்டங்களைச் சமுதாயத்தின்மீது சுமத்தலாகாது.
நீதியும் சட்டமும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய கருத்துக்கள். பெரும்பாலான மக்கள் நீதியைச் சட்ட நீதியாகக் கருதிவிடுகிறார்கள். அது சரியல்ல.
சமுதாய வாழ்க்கைக்குச் சட்டங்கள் மிகமிக அவசியம்தான். தெளிவான சூழ்நிலைகளில் சட்டங்கள் நீதியைப் பிரதிபலிக்கின்றன.குறித்த விதத்தில் சட்டத்தை மதிப்பது சட்டத்திற்குள்ளேயே அடங்கிவிடக் கூடியதல்ல.
நீதியை நிலைநாட்டும் வெளிப்பாடுகளில் சட்டமும் ஒன்று. ஆனால் அது ஒன்றே ஒன்று மட்டுமல்ல. நிறுவப்பட்ட சட்டமே நியாயம் என்று உணரும் உணர்வுக்கேற்ப அவை தொடர்ந்து மதிப்பீடு பெறவேண்டும்.
அதாவது மூலமான, அடக்கி ஒடுக்கமுடியாத மனித உள்ளுணர்வு என்று ஒன்று உண்டு. அது சமூக உறவுகள் உருவாகவும் மாற்றம் பெறவும் வழிவகுக்கிறது.
அதுமட்டுமல்ல, தன்னை ஆளும் விதிகளையும் அதுவே உருவாக்குகிறது. அந்த மனித உள்ளுணர்விற்கு ஏற்பவே, சட்டங்கள் தொடர்ச்சியாக மறுபரிசீலனையும் மதிப்பீடும் பெறவேண்டும்.

சமூகநீதிப் பார்வைகள்


சமூகநீதிப் பார்வைகள்

சமூகநீதி பற்றிய சிந்தனை உலகெங்கிலும் மனிதன் பிறந்து சிந்திக்கத் தொடங்கி நாகரிகம் அடைந்த  நாள் முதல் கிளர்ந்து எழத்தொடங்கி விட்டது.மதங்கள் ஒருவகையில் சமூக நீதி பற்றிய கருத்தோட்டத்தை
தெய்வ பயத்திற்குப்பின்னணியாக வைத்தன. அத்தனை  தெய்வ  பயம் ஒரேயடியாக இல்லாத கிரேக்க சிந்தனை ஒரு விதம் இருந்தது.  கிறிஸ்தவ , இஸ்லாமிய பாரம்பரிய மனப்போக்கிலும்  சமூகநீதி பற்றிய சிந்தனைப் பார்வை தெளிவாகக் காணப்படுகிறது.ஒவ்வொன்றாக அவற்றைக் காண்போம்
கிரேக்க ரோமானிய பாரம்பரியம்
கிரேக்க தத்துவஞானிகள் நீதிக்கு ஒரு முக்கிய இடம் வழங்கினார்கள். பிளாட்டோ நீதியும் ஒழுக்கமும் ஒன்றே என்று மதித்தார். நல்ல பண்பின் முழு வடிவமே நீதிதான் என்பார்.
ஒவ்வொரு நல்ல பண்பும் நீதியிலிருந்துதான் தோன்றியது. மனித உயிர்களின் மொத்த நடத்தையிலும் எது சரி, எது தவறு என்ற கேள்விக்கு நீதியும் ஒழுக்கத்தைப் போன்றே ஒரே பதிலைக் கூறும். அரிஸ்டாட்டில் `ஒட்டுமொத்தமாக நல்ல பண்பு என்பதே நீதிதான்; அநீதி என்பது தீய பண்பின் பகுதி அல்ல; அதுதான் ஒட்டுமொத்தமான தீமை' என்கிறார்.
தனி மனிதர்களிடையே உள்ள உறவுகளும், சமூக உறவுகளுமே நீதியின் சரியான அடித்தளம் என்ற பிதகோரஸின் உள்ளுணர்வுகளை அவர் ஏற்கிறார். அவரைப் பொருத்தவரை மனித உறவுகளில் உள்ள ஒழுங்கும் ஒற்றுமையும்தான் நீதி ஆகும்.
மேற்கண்ட சிந்தனை ரோமானியர்களிடம் நிலவி வந்தது. ஆனால் அவர்கள் நீதியைச் சட்டமுறையோடு இணைத்துக் கூறினர்.`நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதுதான் நீதி' என்று ரோமானியர்கள் கருதினார்கள்.
 யூத  கிறிஸ்துவ பாரம்பரியம்
பழைய ஏற்பாட்டில் நீதி என்பது வெறும் ஒழுக்கம் மட்டுமல்ல; அது ஒரு மதக் கொள்கையாகவும் மதிக்கப்பட்டது.
`நீதி என்பது கடவுளின் ஓர் அம்சமாகும். தெய்வீகப் பண்பின் முழுச்சாரமும் அதுதான். நீதி என்பது கடவுள் சித்தத்தின் பிரிக்கமுடியாத அம்சம்; இயற்கையான ஒற்றுமை' என்று பழைய ஏற்பாடு குறிப்பிட்டது.
இயேசு, கடவுளின் சாம்ராஜ்யம் குறித்து அறிவிக்கையில், ``எங்கே நீதியும் சமாதானமும் சகோதரத்துவமும் அன்பும் நிலவுகிறதோ அதுவே கடவுளின் அரசு'' என்றார்.
கடவுளை நேசிப்பதற்கும் அண்டை அயலானை நேசிப்பதற்கும் இடையே ஒரு பிரிக்கமுடியாத பிணைப்பு உண்டு என்று இயேசு நிலைநாட்டினார்.கடவுளின் சித்தத்திற்கு இணங்கி நீதியாக வாழ்வது என்பதே அன்பின் வழியில் செல்வதுதான் என்று இயேசு தெளிவுபடுத்தினார்.
``எனது சகோதரர்களின் மிகவும் ஏழையான ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்கிறீர்களோ, அதையே எனக்கும் செய்தவர்கள் ஆவீர்கள்''
- மத்தேயு 25:40
 இஸ்லாமிய பாரம்பரியம்
நீதி என்பது இஸ்லாமிய பாரம்பரியத்தின் இதயமாகும்.
இஸ்லாமின் தோற்றத்தை வைத்து மதிப்பிட்டால் அது ஒரு மத இயக்கமும் ஒரு சமுதாயப் புரட்சியுமாகும்.நபிகள் நாயகம் `நீதியின்றி, உண்மை, மதம் நிலைத்து நிற்கமுடியாது' என்று இடைவிடாது கூறிவந்தார்.
பலவீனமானவர்களையும், வறுமையில் வாடுவோரையும் அடக்கி ஒடுக்கும் எந்தச் சமுதாயமும் ஓர் இஸ்லாமிய சமுதாயமாகக் கருதப்பட முடியாது.
எனவே, இஸ்லாமிய சமுதாயத்தின் அடிப்படையும் உலக சகோதரத்துவம், சமத்துவம், சமூக நீதி இவற்றைச் சுற்றியே இயங்குவதாகும்.
`சொல்லுங்கள், எனது இறைவன் நீதியோடு சேர்ந்திருக்கிறார், ஆம் அல்லாஹ் நீதியோடு செயல்படுகிறவரையே நேசிக்கிறார், நீதியான செயலைச் செய்யுங்கள், அது பக்திக்கு நெருக்கமானதாகும்.'
- குர்ஆன் 7:29, 49:9, 5, 8