Friday, 25 January 2013

பங்கீட்டு நீதி


 பங்கீட்டு நீதி
இந்தப் பங்கீட்டு நீதி என்ற வார்த்தை ஒரு சமுதாயத்திற்கும் ஒரு தனி நபருக்கும் இடையே நிச்சயம் இருந்தாகவேண்டிய உறவுகளைக் குறிக்கிறது.
இங்கே முக்கிய கவனம் பெறுவது தனி நபர். பொது நீதி, பொது நலன்களைக் குறிக்கும்.
பங்கீட்டு நீதியோ வெறும் தனி நபர்களுக்கு மாத்திரம் பொருந்துவது அல்ல. நாடுகளின் அளவிலும், அந்த நாடுகளின் சமுதாயங்கள் அளவிலும் பொருந்தக்கூடியது.
ஒவ்வாரு தனி நபருக்கும் அவர் மனிதர் என்ற அந்தஸ்தின் விளைவாகச் சமுதாயத்தில் சில மறுக்கமுடியாத உரிமைகள் உண்டு. அந்த உரிமைகளின் அடிப்படையில் அவர் சில கோரிக்கைகளை வைக்கலாம்.
சமுதாயமும் அதன் ஒவ்வோர் உறுப்பினரும், அந்தக் கோரிக்கைகளை ஏற்று மதிக்கவேண்டும். பங்கீட்டு நீதி இதை உறுதிசெய்கிறது.
ஒரு சமுதாயம் கௌரவம், செல்வம் மற்றும் பிற பிரிக்கக்கூடிய உடமைகளைப் பங்கீடு செய்வது குறித்ததே பங்கீட்டு நீதி ஆகும்.
ஒரு சமுதாயத்தில் வாழும் உறுப்பினர்களின் நியாயமான தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் அந்தச் சமுதயாத்தின் வளங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா? இதை முதலில் கவனிப்பதையே இந்த நீதி குறிக்கோளாய்க் கொண்டுள்ளது.
சமுதாய உறுப்பினருக்கு இடையே ஒன்றுக்கொன்று முரணான சொந்த விருப்பங்கள் எழலாம். அதைச் சீரமைத்து சமுதாயத்தில் ஒரு சமநிலையைக் கொண்டுவரவே பங்கீட்டு நீதி பாடுபடுகிறது.
மேலும், ஒரு தேசத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் பங்கேற்கவும், அவற்றில் ஒரு பாத்திரமாய் வகிக்கவும் எல்லாக் குடிமக்களுக்கும் சமமான வாய்ப்பளிக்க வேண்டுமென்று அது வலியுறுத்துகிறது.
ஆனால் ஒன்று, திறமைகள், தகுதிகள், சூழ்நிலைகள் இவற்றில் தனி நபர்கள் அனைவரும் சமமானவர்கள் அல்ல. அப்போது எப்படி ஒரு நியாயமான பங்கீட்டை உறுதி செய்வது?
ஒரு சமுதாயத்தின் சுய வளர்ச்சிக்கும், தன் சக்தியைத் தானே ஒருவர் உணர்வதற்கும் ஒவ்வாருவருக்கும் உள்ள உரிமை போதுமான அளவு உள்ளதா என்பதை எப்படி நிச்சயிப்பது?
ஒரு சமுதாயத்தில் உள்ள செல்வ வளங்களை ஒதுக்குவதற்கு வழிவழியாக நான்கு அடிப்படையிலிருந்து வருகின்றன.
1. வாரிசு அடிப்படை
இதை நாம் தனியுரிமை முறை என்று அழைக்கலாம். இங்கே பங்கீட்டின் அடிப்படை இரண்டு அம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவர் எந்தக் குடும்பத்தில் பிறந்தார்? அவர் ஏழை, பணக்காரன், நடுத்தரம் என்ற சமூகப் பிரிவுகளில் எதைச் சேர்ந்தவர்?
இந்த அடிப்படையில் பங்கீடு நடப்பதற்கு இரண்டு நியாயங்கள் கூறப்படுகின்றன. அது கடவுளின் விருப்பம். அதுதான் உலக இயற்கை நியதி. இந்த வகை பங்கீட்டுப் பிரிவு பலவித பிரச்சனைகளை எழுப்புகின்றன.
முதலாவது எல்லா நபர்களுக்கும் சம மதிப்பு என்ற கொள்கைக்கு இது எதிராகிறது. நமது ஜனநாயக சமுதாயம் இதைப் பொருட்படுத்துவதில்லை.
இது சட்டபூர்வமாக இருந்தாலும் சரி, ஒரு கோரிக்கையாக இருந்தாலும் சரி, இதற்கு இன்று ஆதரவு இல்லை. எடுத்துக்காட்டு சுதந்திர இந்தியாவில் மன்னர் மானிய ஒழிப்பு.
2. தகுதி அடிப்படை
இதைத் `தகுதி உரிமை முறை' எனலாம். இதில் பங்கீட்டின் அடிப்படை தனிநபர்களின் தகுதி அல்லது திறமையை  வைத்து அமைகிறது.
மிகுந்த திறமைசாலிகள், மிச்சிறப்பானவர்களுக்கு அதிக வாய்ப்புகள் பெற உரிமையுண்டு என்று சொல்லப்படுகிறது.
ஏனெனில் அவர்கள் அதிக பயன் அளிப்பார்கள். சமுதாயத்திற்குச் சிறந்த முறையில் பணியாற்றுவார்கள்.
இது எதிர்பார்ப்பு. இதில் உண்னையின் ஓர் அம்சம் மட்டுமே உள்ளது. ஆனால், ஒன்றை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எது பயன்மிக்கதோ அது எப்போதுமே நியாயமானதாக இருக்கவேண்டிய அவசியமில்லை.
மேலும், திறமை வாய்ந்த தனிநபர்களுக்குக் கூட சமுதாயப் பொறுப்புகள் உண்டு. அவர்களிடமிருந்து சமுதாயம், என்ன பயன்களைப் பெறுகிறது என்பதை அலசிப் பார்க்கவேண்டும். ஏனெனில் சிறப்பானது என்பது சமூக நன்னைக்கு நேர் எதிராகவும் அமையலாம்.
3. முன்னுரிமை அடிப்படை
இதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தின் அடிப்படையில் அமைந்த உரிமை என்று அழைக்கலாம். இங்கே பங்கீடு என்பது முன்னுரிமை பெற்ற தனிநபர் அடிப்படையில் நடைபெறுகிறது.
சமுதாயத்திடமிருந்து ஒருவர் என்ன பெறுகிறார் என்பது அவரது ஊக்கம், செயலார்வம் என்ற அடிப்படையில் அமைகிறது. 
ஒவ்வொருவருக்கும் தம் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைக் கட்டாயம் வழங்கவேண்டும். அதில் ஐயமில்லை.
தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் என்பது ஒரு கவர்ச்சிகரமான கருத்துதான். எனினும், சமுதாயத்தின் பொதுநலம் வைக்கும் கோரிக்கைகளை இங்கே நினைவுகூற வேண்டும். அவையே முக்கியம். அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைத் திருத்தவேண்டும்.
4. தேவை அடிப்படை
இந்த முறையைத் தேவைகளின் அடிப்டையில் அமைந்தது என்று நாம் அழைக்கலாம். இங்கே பங்கீட்டின் அடிப்படை, சம்பந்தப்பட்ட தனிநபர்களின் சட்டபூர்வமான, அத்தியாவசியத் தேவைகளைப் பொறுத்து அமைகிறது.
தேவைகள் உள்ள எந்த நபரையும் அவர் இல்லாதவர் என்ற காரணத்திற்காக ஒதுக்கிவிடக்கூடாது. அல்லது அவரைச் சோம்பேறி என்று கண்டிக்கவும் கூடாது. ஏனெனில் தனிநபர்களின் திறமைக் குறைவுக்குச் சோம்பல் மட்டுமே காரணமாகிவிட முடியாது.
அவரது வயது, உடல் நலம், சமூகப் பின்னணி, தம்மைத் தாமே கவனிக்க இயலாமை, இப்படி வேறு பல காரணங்கள் உண்டு.
ஒரு தனி நபருக்கு, அவர் ஒரு மனிதர் என்ற அடிப்படையில் சில அடிப்படை உரிமைகள் உண்டு. அவை கட்டாயம் மதிக்கப்பட வேண்டியவை ஆகும்.
இப்போது இந்த நான்கையும், இவற்றிற்குரிய நியாய ஒழுங்கின் அடிப்படையில் முதலில் எது என்று வரிசைப்படுத்தினால், அவை தேவை, முன்னுரிமை, தகுதி, வாரிசுரிமை என்று அமையும்.

No comments:

Post a Comment